இனிய நந்தவனம் - கனடா இதழ்




இனிய நந்தவனம் - கனடா இதழ்





தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் இதழ் தனது மார்ச் மாதம் 2019 ஆண்டு இதழைக் கனடா மலராக வெளியிட்டிருக்கின்றது. கனடிய இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிலரின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, நேர்காணல், விமர்சனம் போன்ற ஆக்கங்கள் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன.

சர்வதேசம் அறிந்த கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50 ஆண்டுகள் இலக்கிய சேவையைப் பாராட்டி, அவரைக் கௌரவிக்கும் முகமாக அவரது படத்தை தனது இதழில் அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்திருக்கின்றார் நந்தவனம் ஆசிரியர் திரு. த. சந்திரசேகரன் அவர்கள்.

இதேபோல இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் படத்தை ஏற்கனவே அட்டைப்படமாகப் பிரசுரித்து 'ஆச்சரியம் தரும் எழுத்தாளர்' என்றுஅவரைக் கௌரவித்திருந்தார் ஞானம் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள்.



'கனடிய தமிழ் இலக்கிய வானில் ஒளிவீசும் நட்சத்திரங்கள்' 

என்ற தலைப்பில் சுலோச்சனா அருண் என்பவர் நந்தவனம் இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகின்றோம்.

கனடிய தமிழ் படைப்பிலக்கியத்தில் இன்று புகழ் மிக்கவர்களாக இருக்கும் எழுத்தாளர்களில் இருவர் முக்கியமாக இனங்காணப்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் மூத்த எழுத்தாளரான அ. முத்துலிங்கம், மற்றவர் அடுத்த தலைமுறை எழுத்தாளரான குரு அரவிந்தன் ஆகும். இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் இவர்கள் இருவரும் தங்கள் எழுத்தாற்றலால் இன்று சர்வதேசப்புகழ் பெற்ற எழுத்தாளர்களாக, இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றார்கள்.

இவர்களிடம் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் இருவரும் இலங்கையில் கணக்காளர்களாகப் படித்து வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் பணிபுரிபவர்கள். இவர்களில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவராகவும், எழுத்தாளர் குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகவும் இருக்கின்றார்கள்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அறுபது ஆண்டுகால இலக்கிய சேவையையும், எழுத்தாளர் குரு அரவிந்தன் ஐம்பது ஆண்டுகால இலக்கிய வேவையையும் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை ஆற்றிப் புகழ் பெற்றிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமே தேவையில்லாத இவர்கள் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அவ்வப்போது குறிப்பிட்டுச் சுவாரஸ்யமாக எழுதிய சில வரிகளை இங்கே தருகின்றேன்:

இதோ எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் இலங்கையில் இருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தார்: ‘சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம், அமெரிக்காவில் இருந்து கடிதம் ஒன்று எனக்கு வந்திருந்தது. அந்தக் கடிதம்தான் எனக்கும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்குமான இலக்கியத் தொடர்பை எங்களுக்குள் முதலில் ஆரம்பித்து வைத்தது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தி வைத்த அவருடைய மகள் எழுதிய கடிதத்தை தமிழ் மொழிக்கு மொழி மாற்றித் தருகின்றேன். ‘நீங்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் உதவிக்கு நன்றி. எனது தந்தை வெளி நாடுகளில் இருந்ததால், என்னால் எனது தாய் மொழியான தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெறமுடியவில்லை. அந்தக் குறை எனது மனதில் எப்பொழுதும் இருக்கிறது. எனது மகளுக்கும் அந்தக் குறை இருக்கக் கூடாது என்பதால் அவர் தமிழ் மொழி கற்பதற்குத் தேவையான சரியான சாதனங்களைப் பல இடங்களிலும்  தேடிக் களைத்துப் போனேன். கனடாவில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் தங்களின் ‘தமிழ் ஆரம்’ பாடல்கள் அடங்கிய குறுந்தட்டுக் கிடைத்தது. அருகே உள்ள கனடாவில் தயாரிக்கப் பட்டது என்று தெரியாமல், இது போன்ற  பாடல்கள் அடங்கிய குறுந்தட்டிற்காக எங்கோ எல்லாம் நாங்கள் இதுவரை தேடினோம். இப்போதெல்லாம் எனது மகள் தினமும் தாங்கள் தயாரித்த இந்தப் பாடல்களையே கேட்டு மகிழ்ந்து போகிறாள். இசை மூலம் மொழியைப் புகுத்துவதில் தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. அதுமட்டுமல்ல, தங்கள் குறிக்கோள் வெற்றியும் அடைந்திருக்கிறது என்பதற்கு, இந்தப் பாடல்களை மிகவும் விருப்போடு கேட்கும் எனது மகளே சாட்சி. மீண்டும் தங்களுக்கும், இந்த முயற்சியில் துணை நிற்றவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.’

அந்தக் கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. எழுதியது வேறுயாருமல்ல பிரபல ஈழத்து எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கத்தின் அருமைப் புதல்வி தான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அவருடைய தமிழ் உணர்வைப் பாராட்டி, நன்றி கூறி அந்தக் கடிதத்திற்குப் பதில் அனுப்பியிருந்தேன். எனது நண்பர் டாக்டர் கதிர் துரைசிங்கத்தின் மூலம் அந்தக் குறுந்தட்டு அங்கே சென்றடைந்ததாகப் பின்பு அறிந்தேன். சந்தோஷமிகுதியால் இதைப்பற்றி அதிபர் கனகசபாபதியிடம் குறிப்பிட்டபோது அவர் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தியையும் சொன்னார். அதாவது நண்பர் வ. ந. கிரிதரன் ஆசிரியராக இருக்கும் ‘பதிவுகள்’ என்ற இணையத்தளத்தில் ‘தமிழ் ஆரம்’ குறுந்தட்டைப் பற்றி திரு. அ. முத்துலிங்கம் அவர்கள்  எழுதியிருப்பதாகவும் அதை வாசித்துப் பார்க்கும் படியும் குறிப்பிட்டிருந்தார். ‘மூன்று குருட்டு எலி’ என்ற தலைப்பில் அதைப் பற்றி அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதியிருந்தார். கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு உலகமெல்லாம் இப்படியான ஒரு குறுந்தட்டுக்காகத் தாங்கள் தேடியலைந்த கதையை அவர் மிகவும் அருமையாக நகைச்சுவை உணர்வோடு அங்கே குறிப்பிட்டிருந்தார்.

குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவைப் பாராட்டில் திரு. அ. முத்துலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தனின் தமிழ் மழலைப் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் பாருங்கள்:

 ‘2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ் மழலைப் பாடல்களைத் தேடி நான் ரொறொன்ரோவில் பல கடைகளில் ஏறி இறங்குகிறேன். இந்தியாவில் எழுத்தாள நண்பர்களுக்கும் எழுதுகிறேன். அங்கேயும் தமிழ் மழலைப் பாடல்கள் இல்லை என்ற விடை கிடைக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் பல குழந்தைப் பாடல்கள் வன்முறையை தூண்டுபவையாக இருக்கின்றன. ‘மூன்று குருட்டு எலி’ என்ற குழந்தைப் பாடலில் ‘கமக்காரன் மனைவி எலியின் வாலை கத்தியால் வெட்டினாள்’ என்று வருகிறது. என்னை அதுதான் தமிழ் பாடல்களைத் தேடி அலைய வைத்தது. குழந்தைக்கு எலி, பூனை, நாய், யானை, வண்டு எல்லாமே பிடிக்கும். குழந்தை கேட்கிறது ’ஏன் வாலை வெட்டினார்?’ என்று. எப்படி பதில் சொல்வது? அப்பொழுதுதான் தற்செயலாக குரு அரவிந்தனின் மழலைப் பாடல் குறுந்தகடு கையில் கிடைக்கிறது. அழகிய பொருள் பொதிந்த பாடல்கள். இன்னும் அழகான மெட்டுகள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அவற்றினால் ஈர்க்கப்பட்டனர். தமிழ் நாட்டின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தக் குறுந்தகடு பற்றி வியந்து எனக்கு எழுதியிருக்கிறார். கடும் உழைப்பின் பின்னால் இந்த மழலைப்பாடலை எழுதிக் குறும்தட்டாக வெளியிட்ட குரு அரவிந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.’

அ. முத்துலிங்கம் அவர்கள் கனடாவிற்கு வந்தபின்தான் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு பல தடவைகள் தனக்குக் கிடைத்ததாகவும், சிறுவர்களுக்கான தனது புத்தகங்கள் வெளியிடப்படும் போது, ஒவ்வொரு முறையும் தானே நேரில் வந்து பாராட்டிப் புத்தகங்களைப் பெற்று, பின் அதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகம் பற்றிய விமர்சனங்களையும் தொலைபேசி மூலம் எடுத்துச் சொல்லுவார் என்றும், கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பற்றியும் குரு அரவிந்தன் குறிப்பிட்டிருந்தார்.

‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற குரு அரவிந்தனின் நாவல் பற்றிக் ‘கனடா தமிழர் இலக்கியம்’ என்ற நூலில் உள்ள கட்டுரையில் அ. முத்துலிங்கம் குறிப்பிடும் போது, ‘குரு அரவிந்தனின் நாவல் ஒன்றில் வரும் பாத்திரம் சாந்தி. அவள் பள்ளிக்கூடம் சென்று வரும் மாணவி. ஒருநாள் பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது நேரமாகிவிடுகிறது. சிங்கள ராணுவத்தின் காவல் அரணைக் கடந்தபோது அவள் காணாமல் போய்விடுகிறாள். அவளைத் தேடிச் சென்று அவளுடைய தகப்பன் பொறுப்பான ராணுவ அதிகாரியை சந்தித்து தன் மகளைப்பற்றி கேட்கிறார். அவர்களிடம் பதில் இல்லை. திடீரென தகப்பனும் காணாமல் போய்விடுகிறார். இப்படி நாவல் விறுவிறுப்பாகப் போகிறது. ஒரு காலகட்டத்து யாழ்ப்பாண வாழ்கையின் ஒரு கூறு வரலாறாக மாறிவிடுகிறது. நூறு வருடம் கழிந்த நிலையில் ’உறங்குமோ காதல் நெஞ்சம்?’ என்ற இவரது இந்நாவலைப் படிக்கும் ஒருவர் கண் முன்னே போர்க்கால யாழ்ப்பாணமும், மக்களும், அவர்கள் வாழ்வும், வலியும் நிதர்சனமாக விரியும். குரு அரவிந்தனின் புனைவு சரித்திரமாக மாறும் தருணம் அது.’

உண்மைச் சம்பவங்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் புனைவு எப்படி சரித்திரமாக மாறுகிறது என்பதை எவ்வளவு சிறப்பாக அ. முத்துலிங்கம் எடுத்துச் சொல்லியிருந்தார்.
பாருங்கள், அவர் மேலும் குரு அரவிந்தனின் படைப்பிலக்கியம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘நான் சிறுவனாய் வளர்ந்த கிராமத்தில் ஐஸ்கிரீம் அபூர்வமாக எப்போதாவது சாப்பிடக் கிடைக்கும்.  விருந்துகளில் அல்லது திருவிழாக்களில் இதைச் சாப்பிடும் சந்தர்ப்பம் அமையும். கூம்புகளின் மேல் உருண்டையாக மென்சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் கிடைப்பதை உருகி வழிய வழிய சாப்பிட்டு முடிக்கவேண்டும். இதன் சுவையையும் சுகத்தையும் தாண்டி இது சாப்பிடும்போது ஒர் பதற்றம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் முடிந்துபோகும். சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்துவிடும்.

சுவை இன்பத்தை நீடிக்க முடியாது. அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும். எனக்குக் கிடைத்த குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்தபோது எனக்கும் இந்த அனுபவம் கிடைத்தது, அதாவது  முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்துவிடும், ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பியிருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன.’

இதோ, அ. முத்துலிங்கம் பற்றி குரு அரவிந்தன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

திரு. அ. முத்துலிங்கம் அவர்களிடம் எனக்குப் பிடித்த விடையம் என்னவென்றால் ஒருவருடைய திறமையைப் பாராட்ட அவர் என்றும் பின் நின்றதில்லை. முக்கியமாக கனடிய இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் முன்னிற்பார். என்னுடைய கதைகளோ அல்லது கட்டுரைகளோ தனக்குப் பிடித்ததாக இருந்தால் உடனே தொலைபேசி எடுத்துப் பாராட்டுவார். குறிப்பாக ஆனந்தவிடனில் வெளிவரும் எனது கதைகளை உடனே வாசித்துவிட்டு அதைப் பற்றி பாராட்டுவார்.

கலைமகள் இதழின் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்தபோதும் தொலைபேசி மூலம் பாராட்டியிருந்தார். ஈழத்து நெய்தலும் மருதமும் என்ற தொடர் கட்டுரையில் சோமசுந்தரப் புலவர் பற்றிக் கனடா உதயன் பத்திரிகையில் குறிப்பிடும் போது, ‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை’ என்ற பாடல் பற்றியும், ‘கத்தரித் தோட்டத்தில் காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடல் பற்றியும் அந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன். ‘கத்தரித் தோட்டத்தில் காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடல் வரிகளுக்கு நான் எமது மண்ணைக் காக்கும் போராளிகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு அவர் என்னைப் பாராட்டியது மட்டுமல்ல, ஈழத்துப் புலவர்களின் திறமைகளை நாங்கள்தான் வெளிக்கொண்டு வந்து காட்டவேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் அப்போது வெளிப்படுத்தினார். ஈழத்து தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய கட்டுரைத்தொடரை இப்போது நான் எழுதிக் கொண்டிருப்தற்கு அவரது தூண்டுதலும் ஒரு காரணமாகும்.’

அ. முத்துலிங்கம் தனது வாழ்த்துரையில் குரு அரவிந்தன் பற்றி மேலும் இப்டிக் குறிப்பிடுகின்றார்.

‘குரு அரவிந்தன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளர். 25 வருடங்களுக்கு மேலாக கனடாவில் எழுதிவருகிறார். நான்கு சிறுகதை தொகுப்புகள், ஆறு நாவல்கள், ஓலிப்புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கதை, வசனம், சிறுவர் இலக்கியம் என இதுவரை நிறையவே படைத்திருக்கிறார். இலங்கை, இந்தியா, கனடா, ஐரோப்பா நாடுகளில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. அவருடைய வாசக வட்டம் உலகளாவியது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வருடாந்த மலர்களில் இவருடைய புனைவுகள் பலதடவை வெளிவந்திருக்கின்றன. புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றிருக்கின்றன.

தமிழர் தகவல் விருது, யுகமாயினி பரிசு, கலைமகள் பரிசு, விகடன் பரிசு, உதயன் பரிசு, சி.டி.ஆர் வானொலி பரிசு, ஜனகன் பிக்சேஸ் விருது, போன்ற பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ஓர் அரசன் தன் நினைவாக சிலை எழுப்பலாம். ஒரு ஜனாதிபதி தன் பெயரால் நெடுஞ்சாலை அமைக்கலாம். ஒரு நகரபிதா ஒருவர் பெயரால் பூங்கா உண்டாக்கலாம். ஓர் எழுத்தாளர் என்ன செய்வார்?

அவர் தன் படைப்புகளை உலகத்துக்கு விட்டுச் செல்வார். எழுத்தாளரருடைய ஆயுளையும் தாண்டி அந்தப் படைப்புகள் நிலைத்து நிற்கும். அவர் பெயரைச் சொல்லும். எழுத்தாளருக்கு அவருடைய எழுத்தைவிட சிறந்த நினைவுச் சின்னம் என்ன இருக்கமுடியும்?

கனடாவில் ஆக்க இலக்கியம் படைக்கும் குரு அரவிந்தன் சோர்வடையும் நேரம் இதுவல்ல. இந்த வேகம் குறையாமல் இன்னும் பல வருடங்கள் அவர் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.’

தமிழ் இலக்கிய உலகில் தங்கள் திறமையால் அரிய பல சாதனைகளைக் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் படைப்பிலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்  அ. முத்துலிங்கம், மற்றும் ஐம்பது ஆண்டுகாலமாகப் படைப்பிலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோரது சாதனைகளை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இவர்கள் பெற்ற பரிசுகளும், விருதுகளும், பாராட்டுகளும் மிகவும் பெறுமதியானவை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பனவாகவும் இருக்கின்றன.

எனவே ஆக்க இலக்கியம் படைக்கும் இவர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுவது மட்டுமல்ல, இவர்களது இலக்கியப் பணிக்குப் பின்னின்று உழைக்கும் இவர்களது குடும்பத்தினருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறி, இவர்களது தமிழ் இலக்கியப்பணி மேலும் பரந்து விரிந்து இன்னும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று கனடிய தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் சார்பில் வேண்டிக் கொள்வது மட்டுமல்ல, வாழ்க வளமுடன் என மீண்டும் வாழ்த்துகின்றோம்.

..........................................................................................................................

சர்வதேச இதழ்களை அலங்கரிக்கும் 
கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள்.

(மணிமாலா)

கனடிய உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் கிடைத்த தங்கப் பதக்கத்துடன் கனடிய இலக்கிப் பயணத்தை ஆரம்பித்த குரு அரவிந்தனின் இலக்கியப் பயணம் ஆனந்தவிகடனில் வெளிவந்த முதற் கதையான ‘காதல் என்பது..’ என்ற சிறுகதையோடு தமிழகத்திலும் தொடர்ந்தது. விகடன் இதழின் தற்போதைய அதிபர் திரு. ப. சிறினிவாசன் அவர்களும் ஆசிரியர் ரா. கண்ணன் அவர்களும் ‘சந்திரஹாசம்’ என்ற கிராபிக் நூலைக் கனடாவில் அறிமுகம் செய்ய வந்திருந்த போது, விகடன் எழுத்தாளர் குரு அரவிந்தனைச் சந்தித்திருந்தார்கள்.

நூல்  அறிமுக விழாவின்போது 10 இலட்சம் பிரதிகளுக்குமேல் விகடன் இதழ் பிரசுரமாவதாகத் தெரிவித்திருந்தனர். விகடன் தமிழகத்தில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகவும் அதிக வாசகர்களைக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு குரு அரவிந்தனின் முதற்கதையான ‘காதல் என்பது’ விகடனில் வெளிவந்த போது கனடாவிற்குப் புலம் பெயர்ந்த, ஈழத்தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கனடியத் தமிழர் எடுத்துக் கொண்டனர். அப்போது விகடனின் நிர்வாக அதிபராக திரு. பாலசுப்ரமணியன் அவர்களும், விகடன் ஆசிரியராக இருந்த வீயெஸ்வி அவர்களும் இந்த சமூகக் கதையைத் தெரிந்து எடுத்திருந்தார்கள். அப்போது ரா. கண்ணன் அவர்கள் விகடன் உதவி ஆசிரியராக இருந்தார். வித்தியாசமான நடையில் பலரையும் கவரக்கூடியதாகக் குரு அரவிந்தனின் சிறுகதை இருந்ததால், வாசகர்களின் நாடி பிடித்துப் பார்த்த நிர்வாகத்தினர் குரு அரவிந்தனின் கதைகளை விருப்பத்தோடு தொடர்ந்தும் விகடனில் வெளியிடத் தொடங்கினர்.

குரு அரவிந்தனின் கதைகள் தமிழக வாசகர்களைக் கவரத் தொடங்கவே வாசகர்களின் விருப்பத்தை அறிந்த தமிழகத்தின் முன்னணி இதழ்களான கல்கி, குமுதம் கலைமகள் போன்ற இதழ்களும் குரு அரவிந்தனின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடத் தொடங்கின.

போர்க்கால சூழலில் ஈழத்தமிழ் மக்கள் அகப்பட்டுப் போயிருந்ததால் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து வந்த குரு அரவிந்தன் தனது அனுபவங்களையே கருப் பொருளாகக் கொண்டு இலகு நடையில் கதைகளாக்கத் தொடங்கினார். சர்வதேச ரீதியாக இலட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்த, ஈழத்தமிழரின் அவலத்தை எடுத்துச் சொன்ன கதைகளாகவும், புலம்பெயர்ந்த இலக்கிய ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்பட்ட கதைகளாகவும் அவை கவனத்தில் கொள்ளப்பட்டன.

குரு அரவிந்தன் அந்த சூழலில் வளர்ந்ததால், அந்தக் கதைகள் யதார்த்தமாகவும், உண்மைத் தன்மை கொண்டனவாகவும் இருந்ததால் பலரின் கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பில்லை. தமிழகத்தின் மூத்த இதழான கலைமகள் இதழ் நடத்திய ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ என்ற குறுநாவல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியாகப் பரந்த வாசகவியாபகத்தை குரு அரவிந்தனின் கதைகள் ஏற்படுத்தி இருந்தன. ஈழத்தில் இருக்கும் தேவாரப்பாடல் பெற்ற, சரித்திரப் புகழ்பெற்ற சிவாலயங்கள் அழிந்துபோகும் நிலையில் இருப்பதையும், அகிம்சைவாதியான தந்தைக்கும் போராளியான மகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும்  இந்தக் குறுநாவல் எடுத்துச் சொல்லியிருந்தது.

‘தாய்மண்ணை நேசிக்கும் எழுத்துப் போராளி’ என்று குரு அரவிந்தனின் கதைகளை வாசித்த மாவீரரின் தாயாரான மூத்த ஈழத்து எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்கள் ‘கனடிய தமிழர் இலக்கியம்’ என்ற ஆவண நூலில் எழுதிய தனது கட்டுரையில் பதிவு செய்திருப்பதில் இருந்து குரு அரவிந்தன் அவர்கள் தாய்மண் மீது கொண்ட உணர்வை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

குரு அரவிந்தனின் கதைகளுக்கு இன்னுமொரு சிறப்பு அம்சம் இருக்கின்றது, அதாவது தமிழகத்தின் பிரபல ஓவியர்கள் பலர் இவரது கதைகளுக்கு ஓவியம் வரைந்திருப்பதேயாகும். பிரபல ஓவியரகளான ராமு, ஜெயராஜ், மாருதி, அரஸ், ஷியாம், பாண்டியன், மனோகர் போன்றோர் இவரது அதிகமான கதைகளுக்கு ஓவியம் வரைந்திருந்தனர். இதில் தனித்துவமான ஓவியத்தை ஈhழப்போராட்டத்தின் உண்மைச் சம்பவத்தை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொன்ன கதைகளில் ஒன்றான ‘நங்கூரி’ என்ற விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த குரு அரவிந்தனின் கதைக்கு ஓவியம் வரைந்த ஓவியர் மனோகருக்கு பார்வை குறைபாடு நோய் ஏற்பட்டு இருப்பினும் தான் முன்பு வெளிச்சத்தில் கண்டதை, அப்படியே நினைவில் வைத்து, இருட்டில் அதை வரைந்து கொடுத்திருந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அந்தத் தகவல் பல வாசகர்களை ஆச்சரியப்படவைத்தது.

விகடன் பவழவிழா மலரில் வெளிவந்த குரு அரவிந்தனின் ‘விகடனும் நானும்’ என்ற அனுபவப் பகிர்வுக்கு ஓவியர் சேகர் படம் வரைந்திருந்தார்.  ஒரு கதையை ஆர்வத்தோடு வாசிக்கத் தூண்டுவதற்கு அந்தக் கதைக்காக வரையப்படும் ஓவியமும் முக்கிய காரணமாக அமைகிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் பல இதழ்களிலும் வெளிவந்த குரு அரவிந்தனின் கதைகளில், தத்ரூபமாக ஓவியம் வரையப்பட்ட ஒரு சில கதைகளை எடுத்துப் பார்த்தால் குறிப்பாக குரு அரவிந்தனின் காதல் என்பது, ‘வாய்மையின் இடத்தில்’ என்ற விகடன் கதைகளுக்கும் கல்கியில் வெளிவந்த ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’ என்ற கதைக்கும் ஓவியர் ராமு அவர்கள் படம் வரைந்திருந்தார். விகடனில் வெளிவந்த குரு அரவிந்தனின் குறுநாவலூன ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ க்கும், 'இதுதான் பாசம் என்பதா' என்ற கதைக்கும் கலைமகளில் வெளிவந்த ராமரத்தினம் நினைவுப் போட்டியில் பரிசுபெற்ற கதையான 'தாயுமானவர்' என்ற குறுநாவலுக்கும், குமுதத்தில் வெளிவந்த 'மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா' என்ற கதைக்கும் ஓவியர் ஜெயராஜ் அவர்கள் ஓவியம் வரைந்திருந்தார். 'ரோஷக்காரி' என்ற விகடன் கதைக்குக் கதாபாத்திரமான சுபத்ராவுடன் தானே பூங்காவில் உட்கார்ந்து கதைப்பது போலத் தனது படத்தையே அந்தக் கதைக்கும், விகடனில் வெளிவந்த ‘சார் ஐ லவ்யூ’ என்ற கதைக்கும் ஓவியர் மாருதி அழகான முகபாவத்தோடு பதின்மவயது பெண்ணை ஓவியமாய் வரைந்திருந்தார். ஓவியர் ஸ்யாம் விகடன் காதலர்தின மலரில் வெளிவந்த, ‘அவளுக்கு ஒரு கடிதம்’ என்ற கதைக்கும் மற்றும் 'புல்லுக்கு இறைத்த நீர்' என்ற கதைக்கும் அழகான ஓவியம் வரைந்திருந்தார். ஓவியர் அரஸ் விகடனின் வெளிவந்த 'தொடாதே' என்ற கதைக்கும், கல்கியில் வெளிவந்த 'போதிமரம்' என்ற கதைக்கும் அருமையாகப் படம் வரைந்திருந்தார். ஓவியர் பாண்டியன் அவர்கள் விகடனில் வெளிவந்த 'நீர்மூழ்கி நீரில்மூழ்கி' என்ற குறுநாவலுக்குப் படம் வரைந்தபோது, இந்தக் குறுநாவலுக்கு இவரைப்போன்ற பிரபல ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருந்ததையும், இதுவரை எந்தவொருவரின் கதைக்கும் ஐந்து பிரபல ஓவியர்கள் படம் வரைந்ததில்லை என்பதும் ஒரு சாதனையாகவே எண்ணினார்கள். 'சிலந்தி' என்ற கனடிய ரோஜா இதழில் வெளிவந்த கதைக்கும், ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற உதயன் தொடருக்கும் ஈழத்து ஓவியர் திரு அவர்களே படம் வரைந்திருந்தார். வெற்றிமணியில் வரும் குரு அரவிந்தனின் கதைகளுக்கு அழகான படங்களை ஓவியமாக்கித் தருபவர் பிரதம ஆசிரியர் கலாநிதி சிவகுமாரன் அவர்கள்.

இதைவிட ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல் போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும், வெற்றிமணி (ஜேர்மனி) புதினம் (லண்டன்) வல்லினம், நண்பன் (மலேசியா) உயிர்நிழல் (பிரான்ஸ்) யுகமாயினி (இந்தியா) போன்ற இதழ்களிலும் குரு அரவிந்தனின் ஆக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கனடாவில் உதயன், தமிழர் தகவல், தமிழ் மிரர், செந்தாமரை, தாய்வீடு, விளம்பரம், தூறல், ஈகுருவி, தளிர் மற்றும் பதிவுகள், திண்ணை, தமிழ் ஆதேஸ், காற்றுவெளி; போன்ற இணைய இதழ்களிலும் வெளி வருகின்றன.

இவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பல பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. பிரபல சர்வதேச இதழ்கள் எல்லாவற்றிலும் கனடாவில் வசிக்கும் குரு அரவிந்தனின் ஆக்கங்கள் வெளிவரும்போது இவரைச் சர்வதேச எழுத்தாளர் என்று துணிவோடு சொல்வதில் என்ன தயக்கம்!





Comments