Love Story - முகநூல் காதல்




முகநூல் காதல்






 குரு அரவிந்தன்.


மா, உங்கள் பேஸ்புக்கில் நண்பராக என்னை இணைத்துக் கொள்வீர்களா?’

மின்னஞ்சல் மூலம் அந்தச் செய்தி வந்திருந்தது.
முன்ஜென்மத் தொடர்போ என்னவோ ‘திரு’ என்ற அந்தப் பெயர் எனக்குப் பிடித்தமானதாக இருந்ததால் பத்தோடு பதினொன்றாக அவனையும் எனது சினேகிதனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பதில் அளித்தேன்.

எனது புளக்கை பேஸ்புக்கில் இணைத்திருந்தேன்.
மறுநாள் கணினி யன்னல் விரிந்தபோது,

‘தமிழில் உங்களுக்கு நிறைய ஆர்வமுண்டோ?’
திருவிடமிருந்து கேள்வியாய் கண் சிமிட்டியது.

‘ஏன் கேட்கிறீங்கள்?’ பதிலைக் கேள்வியாக்கினேன்.

‘அவளைத் தமிழ் என்றார்கள்
வல்லினம் மெல்லினம் இடையினம்
அவனுக்குப் பிடித்ததோ இடையினம்’

என்ற சில வரிகளை உங்க கவிதையில் இருந்து படித்தபோது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அதனாலேதான் கேட்கிறேன். யார் அந்த அவள்?

‘அவனுக்குப் பிடித்தவள்’ என்று பதில் எழுதினேன்.

‘அதைத்தான் கேட்கிறேன். அவனையாவது யார் என்று..?’

‘எங்கோ ஒருத்தன், யாரறிவார்?’

‘அது யாராயும் இருக்கலாமா?’

‘இருக்கலாம்.’

இப்படித்தான் எங்கள் நட்பு பேஸ்புக்கில் ஆரம்பமாகித் தொடர்ந்தது. பேஸ்புக்கின் வாழ்க்கைக் குறிப்பு பகுதியில் அதிக தகவல்களை இருவருமே தரவில்லை.

நான் கனடா என்று எழுதியிருந்தேன். திரு ஜெர்மனி என்றும் குறிப்பிட்டிருந்தான்.

புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் நான் வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்றைப் போட்டிருந்தேன்.

திரு இளம் நடிகர் ஆகாஷ் படத்தைப் போட்டிருந்தான். அவ்வப்போது இரவு பகல் பாராது பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பல விடையங்களையும் பரிமாறிக் கொண்டோம்.

சுறா மைனா சிங்கம் சிறுத்தை என்று ஒரு படம் விடாமல் சினிமா விமர்சனம் செய்தோம். எந்திரனையும் மன்மதன் அம்பையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

சிங்கப்பூர் உல்லாசப் பயணக் கப்பலில் கமலும் திரிஷாவும் நடனமாடுவதை பார்த்து ரசித்தோம். சிந்து சமவெளியில் நடித்த அனகாதான் மைனாவில் வரும் அமலா என்று புகைப்படத்தைப் புரட்டிப்புரட்டிப் பார்த்தே கண்டுபிடித்தோம்.

ராதாவின் வாரிசுதான் கார்த்திகா என்று முகத்தைப்பார்த்தே அடித்துச் சொன்னோம். சூரியாவின் தம்பி கார்த்திக்கின் காதலி யாராக இருக்கும் என்று தூண்டில் போட்டுப் பார்த்தோம்.

காதலர் தினத்திலன்று ஏதாவது புதிய படம் வெளிவருகிறதா என்று விளம்பரத்தில் தேடினோம்.

இப்படியே தினமும் உருப்படியான பல காரியங்களைப் பேஸ்புக்கின் உதவியோடு சலிப்பில்லாமல் நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.

முன்பெல்லாம் கடிதம் கையால் எழுதி முத்திரை ஒட்டி முகவரி எழுதி அனுப்ப வேண்டும். பதிலுக்கு நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். இப்போ நவீன தொழில் நுட்பவசதியால் அந்தக் குறைகள் எல்லாம் நீங்கிவிட்டன.

 உடனுக்குடன் தகவல் பரிமாற முடிகிறது. மின்னஞ்சல் மூலமோ அல்லது பேஸ்புக் மூலமோ எழுத்துப் பரிமாற்றம் விரைவாக நடைபெறுகிறது.

பெற்றோருக்குத் தெரியாமலே அறைக்குள் கணினி முன் உட்கார்ந்தபடியே உலகைச் சுற்றிவந்து பல விடையங்களைச் செய்யமுடிகிறது. அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் பரிமாறும் கடிதங்கள் கூட இதனால் தப்பிக் கொள்ள வாய்ப்புண்டு.

திருவின் பேஸ்புக்கில் எங்கள் குடும்பம் என்று ஒரு வர்ணப் புகைப்படம் இருந்தது.

‘நாமிருவர் நமக்கிருவர்’ என்ற குடும்பக்கட்டுப்பாட்டு விளம்பரம் போல் திருவும் சகோதரியும் அப்பா அம்மாவும் புன்னகை சிந்திய முகத்தோடு இருந்தார்கள்.

சகோதரி ஒரு தேவதை போல் என் கண்ணுக்குத் தெரிந்தாலும் நான் அதைப்பற்றித் திருவிடம் விமர்சிக்கவில்லை. பெண்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு அவளது அழகு என்று என் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

தற்செயலாக ஜெர்மனியில் இருந்து எனது நண்பன் அனுப்பிய திருமணப்படங்கள் சிலவற்றில் திருவின் சகோதரி அழகாகச் சிரித்துக் கொண்டிருப்பதை அவதானித்தேன். அந்தப் படங்களில் திருவும் இருக்கலாம் என்று தேடிப்பார்த்தேன். அகப்படவில்லை.

எனவே திருவிற்கு அது பற்றிப் பேஸ்புக் மூலம் செய்தி அனுப்பினேன்.
‘உன்னுடைய சகோதரியை நண்பனின் திருமணப் படத்தில் பார்த்தேன். அந்தத் திருமணத்திற்கு நீ போகவில்லையா?’

திருவின் பதிலுக்குக் காத்திருந்தேன். பதில் வரவில்லை. உடனுக்குடன் பதில் அனுப்பும் திருவுக்கு என்ன நடந்தது?

‘உமா, உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும், உங்கள் தொலைபேசி எண்ணைத் தருவீங்களா? உங்களுடன் நான் நேரடியாகப் பேசவேண்டும்.’ திருவிடம் இருந்து எதிர்பாராத செய்தி வந்திருந்தது.

நேரடியாகப் பேசுவதற்கு அப்படி என்ன தேவை இருக்கிறது. ஏதாவது சுற்றுமாற்று வேலையோ?

பேஸ்புக் மூலம் நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். வயது போனவர்கள் இளைஞர்கள் போல நடித்து பதின்ம வயதுப் பெண்களை ஏமாற்றுவதாகக் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சீ.. சீ.. திரு அப்படி எல்லாம் செய்ய மாட்டான்.

இதிலே பயப்பிட என்ன இருக்கிறது? தொலைபேசி எண்தானே, அப்படி என்னதான் பேசப்போகிறான், கொடுத்தால் போச்சு!

அசட்டுத் துணிவோடு தொலைபேசி எண்ணைத் திருவுக்கு அனுப்பிவிட்டேன்.
மறுநாள் தொலைபேசி வெளிநாட்டு அழைப்பு என்று சிணுங்கியது.

‘ஹலோ..!’ என்றேன்.

‘உமா இருக்கிறாங்களா? அவங்களோட பேசலாமா?’

‘உமாவா.. நீங்க யார் பேசிறீங்க..?’

‘உமாவோட பிரென்ட் திரு என்று சொல்லுறீங்களா?’

‘திருவா?’ குரலைக் கேட்டதும் ஒரு கணம் அதிர்ச்சியில் தயங்கினேன்.

‘என்ன பேச்சையே காணோம்..!’

‘இ..ல்லை வந்து.. நீங்க ஒரு பையன் என்றல்லவா நினைச்சேன்.’

‘அப்படித்தான் உமாவும் நினைச்சிட்டிருக்கிறா, அதைச் சொல்லத்தான் அவசரமாய் எடுத்தேன்.’

ஒரு கணம் நான் உறைந்து போய்விட்டேன்.

‘அப்போ திரு, நீங்க ஒரு பெண்ணா..?’

ஆமா, பெண்தான் திருமகள் என்ற பெயரைத்தான் சுருக்கித் திரு என்று வைத்திருந்தேன். அந்த உண்மையைச் சொல்லத்தான் நான் இப்போ உமாவை அழைச்சேன். உண்மையை மறைச்சதற்காக உமாகிட்ட மன்னிப்புக் கேட்கவேண்டும்.

ஆமா நீங்க யார்? உமாவோட அண்ணனா?

‘இருங்க திருமகள், உங்ககிட்ட நானும் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும்.’

'என்ன..?’

நான் சிறிது நேரம் தயங்கினேன்.

மறுபக்கத்தில் நான் சொல்லப்போகும் அதிர்ச்சியைத் திருமகள் தாங்குவாளோ தெரியாது ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவளை நானும் அதிர்ச்சிகுள்ளாக்க வேண்டாமா?

‘திரு, நான்தான் உங்க பிரென்ட் உமா, அதாவது உமாசுதன்!’



*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

***********************************************************


Comments