Love Story - யார் அந்த தேவதை?


LOVE STORY: kuruaravinthan@hotmail.com

யார் அந்த தேவதை?


குரு அரவிந்தன்


'சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?'

தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா.

அப்பாவிற்கு கோயில், குளங்களுக்குப் போவதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அதனாலே என்ன தான் தலை போகிற காரியமாய் இருந்தாலும் வெள்ளிக் கிழமைகளில் தாயைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதில் சூரியா தவறுவதில்லை.

அதைத் தன்னுடைய கடமையாகவே கருதிச் செய்தான். இன்றும் அப்படித்தான் கோயிலுக்குப் போய்விட்டு ஸ்கூட்டரில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவின் தொல்லை கொஞ்ச நாளாய் தாங்க முடியாமல் போய்விட்டது. தங்கை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்குப் போய்விட்டதால் இவன் தனித்துப்போய் அம்மாவிடம் வசமாய் மாட்டிக் கொண்டான்.

எப்படியாவது காலாகாலத்திற்கு மகனுக்கும் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்ற தீராத ஆசையில் தினமும் மகனை நச்சரிக்கத் தொடங்கினாள் சாரதா.

எங்கேயாவது அழகான பெண்களைக் கண்டால் மனம் மாறியாவது சம்மதம் சொல்லுவானோ என்ற அற்ப ஆசை அவளுக்கு. அதனாலே எங்கேயாவது ஷாப்பிங் போனால், கோயிலுக்குப் போனால் 'அந்தப் பெண்ணைப் பாரேண்டா தேவதை மாதிரி என்ன அழகு, இந்தப் பெண்ணைப் பாரேண்டா என்ன மாதிரி லட்சுமி கடாட்சமாய் இருக்கிறா" என்று தினமும் இதே தொல்லையாய்ப் போய்விட்டது.

அதனாலே தான் தாயார் பின்னாலே இருந்து காதுக்குள் கிசுகிசுத்தபோது திரும்பிப் பார்க்காமல் அலட்சியம் செய்தான்.

'ஏன்டா, யார் யாருடைய பிரச்சனையை எல்லாம் வலியப்போய் உன்னுடைய தலையிலே போட்டுக் கொண்டு செய்வியே, இதை மட்டும் ஏன் கண்டு கொள்ள மாட்டேனெங்குறாய்? பாவமடா அந்தப் பெண்ணு, ஏதோ ஆபத்திலே மாட்டியிருக்கிறா போலத் தெரியுது! கொஞ்சம் உதவி பண்ணேண்டா?'

'யாரை அம்மா சொல்லுறாய்?" பச்சை விளக்கு எப்போ எரியும், அங்கிருந்து கிளம்பலாம் என்ற அவசரத்தில் அவனிருந்தான்.

'இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பாரேன்"

வேண்டா வெறுப்பாய்த் திரும்பிப் பார்த்தவன் ஆச்சரியப்பட்டான்.

யார் அந்த தேவதை?

ஒருகணம் அவளை உற்றுப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

இவளா?

ரம்யா! அந்த ஊரிலே உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள். இவளது அண்ணன் ரமேஷ் இவனோடு சட்டக் கல்லுரியில் ஒன்றாகப் படித்த நண்பன்.

பழகுவதற்கு இனியவன். ஆனால் இவளோ பணத்திமிர் பிடித்தவள். அதைவிட தான் பெரிய உலகஅழகி என்ற எண்ணம் வேறு. நண்பனைத்தேடி அவர்கள் வீட்டிற்குப் போனபோதெல்லாம் இவனை அவள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்தது இவன் மனதில் அந்த நாட்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

வெறித்த பார்வையோடு சாரதியின் ஆசனத்தில் ஆடாமல் அசையாமல் அவள் உட்கார்ந்திருந்தாள்.

யாரோ பின்னால் இருந்து துப்பாக்கி முனையில் அவளைக் கடத்திக் கொண்டு போவது போல மிரண்டுபோய் இருந்தாள். அவளது முகத்தில் பயக்களை அப்படியே தெரிந்தது.

நிலமையின் பயங்கரத்தை சூரியா உடனே கிரகித்துக் கொண்டான். 'இவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று அவனது பழிவாங்கும் மனசு ஒருகணம் நினைத்தது.

ஆனால் அவன் படித்த சட்ட அறிவு அவனைச் சிந்திக்க வைத்தது. அவள் மீது அவனுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருந்தாலும் ஆபத்திற்கு உதவவேண்டும் என்ற நல்லமனம் அவனை விரைவாகச் செயற்பட வைத்தது.

சட்டென்று தனது ஸ்கூட்டரை அவளது காருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்திவிட்டு இறங்கி காரைச் சுற்றி வந்து நோட்டம் விட்டான்.

வேறு யாராவது துப்பாக்கியோடு இருக்கைக்குப் பின்னால் மறைந்து இருக்கிறார்களோ என்று கண்ணாடிக் குள்ளால் பார்வையைச் செலுத்தினான். அன்னியர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவளுக்கு என்ன நடந்திருக்கும்?

அதைப்பற்றி சிந்திக்க இப்போது நேரமில்லை! அவள் ஆடாமல் அசையாமல் பயத்தோடு சீட்டில் உட்கார்ந்திருப்பதில் இருந்து அவளுக்கு ஏதோ ஆபத்துக் காத்திருப்பது தெரிந்தது. அருகே சென்று பார்த்தபோது அவள் முகத்தில் பொட்டுப் பொட்டாய் வியர்வை துளிர்த்திருந்தது.

இதயம் வேகமாகத் துடிக்க அவளது சின்னமார்பு மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குனிந்து உள்ளே பார்வையைச் செலுத்தியவன் மீண்டும் அதிர்ந்தான்.

இடுப்பிலே அது என்ன கறுப்பாக ஒரு பட்டி..?

அவளது இடுப்பிலே இருக்கையோடு சேர்ந்தபடி பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அவளது இதயத் துடிப்பையும் மிஞ்சி டிக், டிக் சத்தம் இவன் காதில் விழுந்தது. ஒவ்வொரு டிக், டிக் சத்தமும் மரணதேவனிடம் அவளை இழுத்துக் செல்வது இவனுக்குப் புரிந்தது.

குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு, அதாவது டைம் பாம்!

இது யாரோ விஷமிகளோ, தேசவிரோதிகளோ செய்த வேலையாய் இருகக்கலாம். இன்னும் சொற்ப நேரத்தில் அவன் கண்முன்னாலேயே இந்த அழகிய மலர் இதழ் இதழாய்ச் சிதறுண்டுபோமோ?

நினைக்கவே அவனது உடம்பு நடுங்கியது.

அவள் மட்டுமா பாதிக்கப்படுவாள், இங்கே அக்கம் பக்கம் எல்லாமே பாதிக்கப்படுமே? அப்பாவி மக்களின் உயிர் உடமை எல்லாமே சட்டென்று அவன் கவனத்தில் வந்தன. ஏதாவது செய்து இந்த அழிவைத் தடுத்தேயாகவேண்டும்.

'நோ!' என்று வாய்விட்டுக் கத்தியவன், அவசரமாகச் செயற்பட்டான்.
தனது செல்லிடபேசியில் குண்டு அகற்றும் அவசரபிரிவிற்கு விபரத்தை தெரிவித்தான்.

தனது ஸ்கூட்டரின் அவசர விளக்கைப் போட்டு ஏனைய பயணிகளை அந்தக் காருக்கு அருகே வராமல் எச்சரிக்கை செய்துவிட்டு தாயாரிடம் விரைந்து வந்தான்.

'அம்மா, ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு நீங்க வீட்டிற்குப் போங்க, இந்தாங்க பணம், நான் அப்புறம் வர்றேன்."

தாயாரின் கைகளில் பணத்தைத் திணித்துவிட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல் ரம்யாவிற்கு அருகே சென்று சாரதிபக்கக் கதவில் ஏதாவது வயர் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை அவதானித்தான்.

இல்லை என்று தெரிந்ததும் கதவின் கைப்பிடியில் கையை வைத்து மெதுவாக இழுத்தான். கதவு மெல்லத் திறந்து கொண்டது.

பக்கவாட்டில் அவளை இப்போ முழுமையாக அவனால் பார்க்க முடிந்தது.
"பயப்படாதே!" என்று மெதுவாக குனிந்து அவள் காதுக்குள் ஆறுதல் வார்த்தைகள் சொன்னான்.

மெல்லத் தலைசாய்த்து அவளது முழங்காலுக்கருகே உடம்பை வளைத்து அவளது இடுப்புப் பட்டியை ஆராய்ந்தபோது அவளது சூடானமூச்சுக் காற்று இவனது கன்னத்தில் பட்டுத் தெறித்தது.

அலங்கோலமாய் மேலே ஏறியிருந்த அவளது ஸ்கேட்டை இழுத்து அவளது பளிங்கு போன்ற தொடைகளை மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து விட்டபோது அவளின் உடம்பு சிலிர்ததை இவனால் உணரமுடிந்தது.

'டிக்.. டிக்.. டிக்..!"

நேரம் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான்.

மூன்றே மூன்று நிமிடங்கள் தான் மிஞ்சியிருந்தன. வாழ்வா, அல்லது சாவா?
மூன்று நிமிடங்கள் தான் பாக்கி என்று தெரிந்ததும் அவளது உடம்பு மெல்ல மெல்ல உதறலெடுத்தது. காலமெல்லாம் உன்காலடியில் கிடப்பேன்,

எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு, பிளீஸ் பிளீஸ்..! என்பது போல அவளது விழிகள் அவனிடம் கெஞ்சி மன்றாடின. உயிர்ப் பிச்சை கேட்பது போல அவளது மெல்லிய உதடுகள் வார்த்தைகள் வராமல் துடிப்பதை இவன் அவதானித்தான். அவளது கண்கள் மரணபயம் என்றால் என்னவென்று அப்படியே காட்டிக் கொடுத்தன.

இப்போ அவள் இருக்கும் அந்த நிலையைப் பார்த்தபோது அன்று அவனை அலட்சியம் செய்த பெண் இவள்தானா என்பதை அவனால் நம்பமுடியாதிருந்தது. பெண் என்றால் பேயே இரங்கும் போது இவன் மட்டும் எம்மாத்திரம்?

வீணாக்கும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானது! அதன் பெறுமதி அளவிடமுடியாதது!

எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று உடம்பெல்லாம் துருதுருத்தது. குண்டைச் செயலிழக்க வைக்கும் பிரிவினருக்காக இனியும் காத்திருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவன்,  விரைவாகக் காரியத்தில் இறங்கினான்.

எந்த வயரின் தொடர்பைத் துண்டிப்பது? கறுப்பா, சிவப்பா?

எப்போதோ ஒரு ஆங்கிலப் படத்தில் இப்படியான குண்டைச் செயலிழக்க வைப்பது எப்படி என்பதைப் பார்த்த ஞாபகம் திடீரென வந்தது. ஆனால் எந்தநிற வயரைத் துண்டித்தான் என்பது சட்டென்று ஞாபக்திற்கு வர மறுத்தது.

கறுப்பா? சிவப்பா? மூளைக்கு வேலை கொடுத்துப் பார்த்தான்.

பதட்டத்தில் 'ஏதோ ஒன்று!' என்ற பதில் தான் வந்தது.

நிறத்தைச் சொல்லத் தயங்கியது.

இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. வருவது வரட்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு கடவுளைப் பிரார்த்தித்தபடி கையில் அகப்பட்ட ஒரு வயரைப் பிடித்தான். என்ன நிறம் என்று கூடப் பார்க்கவில்லை.
துண்டிக்கலாமா? ஒரு கணம் தயங்கினான்.

'டிக்.. டிக்.. டிக்..!"

இன்னும் பத்து வினாடிகள்! இனியும் தாமதிக்க முடியாத நிலைமை. எப்படியோ வெடித்துச் சிதறப்போகிறது.

அதற்கிடையில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்!
'தொலைந்துபோ!"' என்று ஆவேசமாகக் கத்தியபடி அந்த வயரைப் பிடித்து இழுத்தான்.

ஒரு வினாடி எல்லா இயக்கமும் நின்றுபோக, மறுகணம் 'படீர்' என்ற சத்தம் கேட்டது, அவன் சுதாரிக்குமுன் அவன் மார்பில் அவள் பொத்தென்று விழுந்தாள். நினைவிழந்த அவளை மெதுவாகத் தாங்கி அணைத்து, பட்டியை அகற்றி அங்கே தயாராக வந்து நின்ற ஆம்புலன்ஸில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றான் சூரியா.

நினைவு தெளிந்து அவள் படுக்கையில் கண்விழித்துப் பார்த்தபோது, மங்கிய வெளிச்சத்தில் சூரியாவின் முகம்தான் முதலில் தெரிந்தது.

தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மிரள மிரளப் பார்த்தாள். அருகே உட்கார்ந்து இருந்த சூரியாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, குண்டு வெடித்ததா இல்லையா என்ற சந்தேகத்தோடு,

'நாங்க எங்கே இருக்கிறோம்" என்றாள்.

அவளது அந்த ஸ்பரிசத்தில் உடம்பெல்லாம் கிளுகிளுப்பில் சிலிர்க்க தன்னை மறந்த சூரியா, அவளது கேள்வியின் அர்த்தம் புரியாமல் மெல்லிய புன்னகையோடு,

'சொர்க்கத்தில்!" என்றான்.

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)


*************************************************************

குரு அரவிந்தன் - வாழிய வாழியவே

தமிழ்மொழி யொளிரத் தம்மினம் போற்ற
இமிழ்மழை தரும்சுக இன்னுணர் வெழுத்தால்
யாக்கும் இவர்கதை ஞான்றும் புகழை
ஆக்கி ஊக்குதே! ஆர்வம் பெருகுதே!

-பண்டிதர்.மா.சே.அலக்ஸாந்தர்.



Comments