LOVE STORY: kuruaravinthan@hotmail.com
காதல் என்பது…
குரு அரவிந்தன்
'ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல்தான் உன்மையான
காதலா?'
காதலா?'
நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள்.
அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடியவில்லை.
‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம்,
வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள்.
இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.
‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான் விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம் பார்க்கின்றார்;. அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’
‘ஹ_ ம்… செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டோம். படித்து நல்ல உத்தியோகமும் தேடிக்கொண்டுவிட்டாய். அங்கேயே ஒருத்தனை பிடித்தும்விட்டாய். நாங்கள் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போகின்றாய்? சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உன் இஷ்டம்!"
அதற்குமேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்பது போல ஜானகி நகர்ந்து விட்டாள்.
நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலையில் சார்ச்சில் மோதிரம் மாற்றி, மாலையில் கலியாண மண்டபத்தில் அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், தாலி மட்டும் கட்டிக் கொண்டு உஷா, திருமதி உஷா மனோவானாள்.
கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கணவனுடன் தன் அம்மா வீட்டில் தங்குவதற்கு விரும்பினாள் உஷா. முதல் நாள் ஜானகி தடபுடலாக விருந்துச் சமையல் செய்தாள்.
சாப்பாடு அருமையாக இருந்தது. ஆனாலும் மனோ வேண்டா வெறுப்பாகத்தான் சாப்பிட்டான்.
‘எப்படித்தான் இந்த வெஜிட்டேரியன் சாப்பாட்டைச் சாப்பிட்டு உயிரோட
இருக்கிறீங்களோ" என்று அலுத்துக் கொண்டான்.
அடுத்த நாளே ஊருக்குக் கிளம்பவேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான் மனோ.
‘ஏன் மனோ… ஒரு வாரம் தங்கலாம்னு சொன்னீங்களே?’ என்றாள் உஷா.
‘இல்லை… நாளைக்கே நம்ம ஊருக்கப் போகிறோம். எனக்கு அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு’
உஷா மௌனமானாள். மனோவிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது.
இரண்டு நாட்கள் பயணம் செய்து புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள் உஷா.
மாலையில் "ரிசப்சன்" நடந்தது.. நண்பர்களும் உறவினர்களும் வந்து வாழ்த்திப் போனார்கள்.
மனோ சொந்த ஊருக்கே வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு வந்து தாயின் வீட்டிலேயே குடித்தனம் போட்டான். புகுந்த வீட்டிற்காக உஷா தனது வேலையை இராஜினாமா செய்தாள்.
காலையிலே எழுந்து குளித்து தலைவாரி பொட்டு வைத்து கையிலே காப்பியுடன் படுக்கை அறைக்குள் நுழைந்தவள், தூங்கிக் கொண்டிருந்த மனோவை எழுப்பினாள்.
கண் விழித்தவன் காப்பியை வாங்கி அருகே டீப்பாய் மீது வைத்து விட்டு அவளைத் தன்னருகே இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
"உஷா இன்னிக்கு நீ ரொம்ப அழகாய் இருக்கே! என்றான். அவள் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தான்.
அவள் வெட்கத்தால் முகம் சிவந்து, தலையைக் குனிந்து கொண்டாள்.
அவள் முகவாய்க்கட்டையை விரலால் பற்றி நிமிர்த்தி,
‘உஷாக் கண்ணு....நான் ஒன்று சொல்வேன் கேட்பியா?’ என்றான்.
‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.
‘வந்து... எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை...பொட்டு வைத்தால் அம்மாவுக்குப் பிடிக்காது... அதுதான் அதை எடுத்து விடேன் பிளீஸ்.’
உஷா ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள். ‘அம்மா அப்படிச் சொன்னாளா?’
என்று கேட்க நினைத்தாள். கேட்கவில்லை.
‘உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்.’ கண்களை
மூடி, தன் நெற்றிப் பொட்டை அழித்துக் கொண்டாள்.
‘என்மேலே கோபமா உஷா?’
அவள் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். கண்கள் கலங்கினாலும் காட்டிக்
கொள்ளவில்லை.
அன்று வெள்ளிக்கிழமை. மாலை இருவரும் கடை வீதிகுச் சென்றார்கள்.
திரும்பி வரும் போது அம்மன் கோயில் வாசலில் அவள் ஒரு நிமிடம்
நின்று கும்பிட்டாள்.
‘உஷா கோயிலுக்குப் போகணுமா?’ என்று கேட்டான் மனோ.
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை.
‘நீங்க...’ என்று இழுத்தாள்.
‘நீ உள்ளே போய்க் கும்பிட்டு விட்டு வா, அதுவரைக்கும் நான் இங்கேயே நிற்கிறேன்.’ என்றான்.
தனியே உள்ளே போக அவளுக்கு மனசு என்னவோ செய்தது.
‘நானும் உன்கூட உள்ளே வரட்டுமா உஷா?’ என்று அவன் கேட்பான் என்று எதிர்பார்த்தாள். அப்படி அவன் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
கோயிலில் பிராகாரம் சுற்றிக் கும்பிடும் போது மனம் விட்டு அழுது தீர்த்தாள்.
அதன் பின், வீடு வரும்வரை மௌனமாகவே வந்தார்கள். வாசலில் மனோ
மௌனத்தைக் கலைத்தான்.
‘உஷா ஒரு நிமிடம்... வந்து... இந்தப்... பொட்டு....’
அவன் முடிப்பதற்குள் அவள் அதை அழித்திருந்தாள்.
‘அப்புறம்… தலையிலே பூ அது வந்து அம்மாவிற்கு...’
‘அம்மாவுக்கு, அம்மாவுக்கு, அம்மாவுக்கு........
உங்களுக்கு இதை விட்டால் வேறு ஒன்றுமே சொல்லத் தெரியாதா?’ கேட்க நினைத்தவள் அவன் முகத்தைப் பார்த்து விட்டு மொளனமானாள். தன் தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்தாள்.
‘தாங்யூ.. உஷா... யூ.. ஆர்.. ஸோ....அண்டர்ஸ்டாண்டிங்.’
அவளது மௌனத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உஷா புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் வரவில்லை. மனதை ஏதோ குடைந்தது. சின்ன விஷயங்களைப் பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள். விடிந்தால் ஞாயிற்றுக் கிழமை. காலையில் மனோ எழுந்திருப்பதற்கு முன் விழித்துத் தயாராக இருக்க வேண்டும். அவனோடு சேர்ந்து சார்ச்சுக்குப் போய் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தபடி தூங்கிப் போனாள்.
ஆனால், ‘உஷா நான் சார்ச்சுக்குப் போய்விட்டு வாருகிறேன்’ என்று மனோ அவளைத் தட்டி எழுப்பிச் சொல்லிக் கொண்டு புறப்படப் போகும் போதுதான் திடுக்கிட்டுக் கண் விழித்தாள் உஷா.
பரபரப்பாக எழுந்து, ‘நானும் வாருகிறேனே.......ஒரு நிமிடம் நில்லுங்களேன்’ என்று சொல்ல வாய்திறப்பதற்குமுன், ‘மனோ நேரமாச்சு சீக்கிரம் வா போகலாம்.’ என்று அவன் தாயின் குரல் கேட்டது.
அடுத்த சில விநாடிகளில் தாய் பின்னால் உட்கார, மனோவின் ஸ்கூட்டர் உறுமிக்கொண்டு போனது.
அன்று மனோவின் பிறந்தநாள். காலையிலே காப்பியுடன் வந்து ‘பிறந்தநாள்’
வாழ்த்துக்கள் கூறி அவனை எழுப்பினாள் உஷா.
ஆசை ஆசையாக அவனுக்குப் பிடித்தமான உணவு சமைத்தாள். ஐஸ்சிங் கேக் செய்தாள். மாலையில் மனோ வந்ததும் ‘ஹாப்பி பர்த்டே’ பாடிக் கேக் வெட்டவேண்டும், அப்புறம் இருவரும் சினிமா பீச் எங்கேயாவது வெளியே சந்தோசமாய்ப் போய்வர வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. உஷா ஆசையோடு வாசலை நோக்கி
ஓடி வந்தாள்.
‘அம்மா... ரெடியா? சீக்கிரம் வாங்கோ... நேரமாச்சு.’ வாசலில் இருந்தபடி குரல் கொடுத்தான் மனோ.
‘நான் அப்பவே ரெடி’. என்றபடி மனோவின் அம்மா கிளம்பினாள்.
‘உஷா நாங்க சார்ச்சுக்குப் போய்விட்டு வாறோம், கதவைச் சாத்திக்க’
என்றபடி அவள் பதிலுக்கும் காத்திராமல் அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.
தாயும் பிள்ளையும் இரவு பத்து மணிக்கு வந்தார்கள். உஷா ஒன்றுமே
பேசவில்லை. சாப்பாட்டு மேசையில் உணவை எடுத்து வைத்தாள்.
‘சாப்பாடு வேண்டாம். நாங்கள் சாப்பிட்டாச்சு. இதோ உனக்கும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். சாப்பிடு’ மனோ சாப்பாட்டைப் பிரித்து வைத்தான்.
‘வேண்டாம் எனக்குப் பசிக்கவில்லை. காலையிலே இருந்து ஆசையாய்
செய்து வைத்ததெல்லாம் அப்படியே இருக்கிறது. கேக் கூட செய்து
வைத்தேன். ஏன் என்றுகூடக் கேட்க மாட்டீங்களா?’
‘நான் தான் சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னேனே. அதைப் பிறிஜ்ஜில்
எடுத்து வை. இந்தா இதைச் சாப்பிடு.’
‘பிறிஜ்ஜிலே எடுத்து வைக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டுச் சமைச்சேன்?’ பொருமினாள் உஷா..
‘இப்ப என்ன செய்யணும்ங்கிறே? வைக்க விருப்பமில்லாவிட்டால் எங்கேயாவது கொட்டு’
அவனது பதில் அவளுக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது. இனியும் பொறுமையாய் இருக்க அவளால் முடியவில்லை.
‘இந்த வீட்டிலே எனக்கென்று விருப்பு வெறுப்பு ஒன்றுமே இல்லையா?’
குரலைச் சற்று உயர்த்திக் கேட்டாள்.
‘அது தான் உனக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தேனே’ என்றான் மனோ.
‘இந்த வீட்டு நாய்க்கும் தான் சாப்பாடு போடுறீங்க’.
‘இப்ப என்ன ஆச்சுது, ஏன் கத்திப் பேசுறே? கொஞ்சம் மெள்ளத் தான் பேசேன்! அம்மாவிற்குக் கேட்டால் என்ன நினைப்பாங்க?’
சே… எதற்கெடுத்தாலும் அம்மா..!.அம்மா..! இதைத் தவிர வேறு
ஒன்றுமே தெரியாதா உங்களுக்கு? உங்களுக்குப் பிடித்தமான சமையல் செய்து, நீங்கள் வந்ததும் ‘ஹப்பி பார்த்டே’ பாடி, கேக் வெட்டிக் கொண்டாடலாம்னு நெனைச்சிருந்தேன். வெளியே போகும் போது என்னையும் அழைச்சுக்கிட்டுப் போவீங்க என்று கற்பனைக் கோட்டை கட்டிக்கிட்டிருந்தேன். எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல உடைச்சு எறிஞ்சுட்டீங்களே!’
‘இதோ பாரு நீ என்னவோ சார்ச்சுக்கு வரப்போறதில்லை. ஸ்கூட்டரில் ஒருத்தரைத்தான் என்னால் கூட்டிப் போக முடியும். அதனாலே தான் வழக்கம்போல அம்மாவைக் கூட்டிக்கொண்டு போனேன். திரும்ப லேட்டாயிட்டதனால அப்படியே சாப்பிட்டு விட்டு வந்தோம், அவ்வளவுதான்.’
‘நான் ஒருத்தி... உங்க மனைவி... இங்கே காத்திருக்கிறேன் என்பது கூட
உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?
‘அப்படி நீ நினைச்சா நினைச்சுக்கோ"" அவன் படுக்கை அறையில்
நுழைந்து கதவை அடித்துச் சாத்தினான். காலையில் எல்லாம் சரியாய்ப் போய் விடும் என்று நினைத்தபடி தூங்கிப் போனான்.
காலையில் ‘குட்மார்னிங்’ இல்லாமல் காப்பி மட்டும் காத்திருந்தது.
காப்பி வாசனையில் மனோ தூக்கம் கலைந்து எழுந்தான். உஷாவுக்குக் கோபம் இன்னமும் தணியவில்லையோ என நினைத்தபடி, குளித்து டிரஸ் மாற்றி, அமைதியாகச் சாப்பிட்டு அவளிடம் ஒன்றுமே சொல்லிக் கொள்ளாமல் வேலைக்குக் கிளம்பிப் போனான்.
மனைவி என்ற உரிமைகூட இல்லாமல், பிரார்த்னை செய்யமுடியாமல், பூச்சூடமுடியாமல், பொட்டு வைக்க முடியாமல், இது என்ன அடிமை வாழ்க்கை? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து நடக்கமுடியும் என்று நினைத்தது எல்லாம் இப்போது அவளுக்கு வெறும் கனவாய்த் தெரிந்தது.
காதல் என்பது வெறும் கற்பனையோ? காதற் திருமணங்கள் எல்லாம் இப்படித்தான் தோல்வியில் முடியுமோ? கண்கள் கலங்க குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கடிதம் எழுதத் தொடங்கினாள்.
‘மனோ என்னை, எனது அன்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று தான்
நான் இதுவரை காலமும் காத்திருந்தேன். சொந்தம் பந்தம் எல்லாம் துறந்து
உங்களை மட்டுமே நம்பி வந்த எனக்கு நீங்கள் எந்த ஆதரவும் தரவில்லை.
உங்கள் அலட்சியம் என்னை வதைக்கிறது. என்றாவது ஒருநாள் என்னை, எனது அன்பை, உங்களாற் புரிந்து கொள்ள முடிந்தால் எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுங்கள். நான் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்.’
கடிதத்தை மடிக்கும் போது வாசலில் அழைப்புமணி கேட்டது.
‘யாராக இருக்கும் இந்த நேரத்தில்?’ கதவைத் திறந்தவள் திகைத்துப் போனாள். மனோ!
‘நீங்கள்... நீங்களா... இங்கே... இந்த... நேரத்தில்..?’ அவள் விக்கி விழுங்க...
உள்ளே நுழைந்தான் மனோ.
‘ஒரு முக்கியமான பைலைக் கொண்டு போக மறந்து விட்டேன், அது
தான் எடுத்துப் போக வந்தேன். ஆமா அது என்ன கடிதம்? ஊரிலே
இருந்தா?’
உஷா தன்னைச் சுதாரிக்க முன்பே அவசரமாகக் கடிதத்தை பறித்து
வாசித்தான். அவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அமைதியாக
உட்கார்ந்து திரும்பவும் வாசித்தான்.
‘என்ன இது?’ என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.
உஷா கண்களில் நீர் முட்ட தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
அவன் மெதுவாக எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து அருகே
உள்ள நாற்காலியில் உட்கார வைத்தான்.
‘இந்தா பார்.... மனசைப் போட்டு வீணாக அலட்டிக்காதே. ஒருவரை ஒருவர் விரும்பித்தான் நாம் திருமணம் செய்து கொண்டோம். நமக்குள் ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். உனக்கு நான், எனக்கு நீ. இதை யாராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் அம்மாவிற்கு நம்மை விட்டால் வேறு துணையில்லை. இந்த வயோதிப வயதில் அவருக்கு நாம்தான் துணையிருக்க வேண்டும். இது ஒரு மகன் தாய்க்குச் செய்யும் கடமையும் கூட. நாளைக்கு நீயும் ஒரு தாயாகும் போது தான் உனக்கு இதன் அர்த்தம் புரியும். வாழ்க்கை என்பது வெறும் கற்பனை அல்ல. இது முற்றிலும் நிஜம். பிரச்சனைகளை விட்டு ஓடிப் போவதால் அவை தீரப்போவதில்லை.’
அவன் பேசப்பேச அவள் அமைதியாக இருந்தாள்.
‘உன்னை மட்டும் சொல்லிப் பயனில்லை. தப்பு என்னிடமும் உண்டு. உன்னுடைய குறைகளை நான் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. உன்னுடைய கோணத்தில் இருந்து நான் யோசித்துப் பார்ததிருந்தால், இந்த அளவு போயிருக்காது. நாம் ஒருவரை ஒருவர் பரிபூரணமாகப் புரிந்து கொண்டுவிட்டோம் என்று நம்பிவிட்டேன். அதனால்தான் இப்படி ஒரு சங்கடம் நேர்ந்துவிட்டது.’
அவள் நம்ப முடியாமல் மனோவையே வைத்த கண் மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
‘உஷா அழாதேம்மா...!’ உஷாவின் கண்ணீரைத் துடைத்தபடி,. ‘ஒரு நிமிடம் இருக்கிறாயா?.....நான் சீக்கிரம் போய் இந்த பைலைக் கொடுத்து விட்டு ஆபீசுக்கு அரை நாள் மட்டம் போட்டுவிட்டு வந்துவிடுகின்றேன். சரியா..?’ என்று கண்சிமிட்டிச் சிரித்தான்.
ஒரு விதமாக ஆபீஸ் வேலையை முடித்துக் கொண்டு வரும்போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது.
வரும் வழியிலே புடவைக் கடைக்குள் நுழைந்தான். உஷாவிற்குப் பிடித்தமான மெஜன்தா நிறத்திலே ஒரு புடவையும் மாச்சிங் நிறத்தில் பிளவுஸ_ம் எடுத்தான். தனக்கு ஒரு பட்டு வேட்டி சால்வையும் எடுத்தான். இனிமேல் உஷா கோயிலுக்குப் போகும் போது தானும் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு அவள் கூடவே போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உஷாவுக்குப் பிடித்த மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டான்.
தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வது போன்ற திருப்தி
யோடு வீட்டுக்கு வந்தான் மனோ. வீடு பூட்டியிருந்தது. அம்மா நேற்றைக்கு மாமா வீட்டுப் புதுமனை புகுவிழாவுக்குப் போயிருக்கிறார். நாளைதான் வருவார். ஆனால் உஷா?
‘சிரித்த முகத்தோடு ஆவலாய் ஓடிவந்து கதவைத் திறப்பாளே, என்ன
ஆச்சு உஷாவிற்கு?’ நினைவில் ஏதோ உறுத்த பதட்ட மடைந்தான்.
நான் அவ்வளவு சொல்லியும் பழையபடி ஏதோ நினைத்துக் கொண்டு…
பக்கத்து வீட்டு மீனுக்குட்டி எட்டிப் பார்த்தாள்.
‘அங்கிள்.. இந்தாங்க சாவி... ஆன்ட்டி வெளியே போய்ட்டாங்க....
நீங்க வந்தா, இந்தச் சாவியைக் கொடுக்கச் சொன்னாங்க.’
நெஞ்சம் படபடக்க கதவைத் திறந்து உள்ளே போனான். சோபாவில் பொத்தென்று அமர்ந்தான். உஷா இல்லாத வீடு வெறுமையைத்தர, அவன் கண்களில் நீர் தளும்பியது.
ஒரே விநாடிதான். வாசற்கதவு திறக்கப்படும் சத்தம். சுட்டென்று திரும்பிப் பார்த்தான். உஷா அவசர அவசரமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
‘உஷா வந்துவிட்டாயா? என்றபடி ஆனந்தக் கண்ணீர் மல்க ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டான்.
மனோ அழுவதைப் பார்த்த உஷாவிற்கு அவளை அறியாமலே கண்கலங்கியது.
‘மனோ... என்ன இது... சின்னக் குழந்தை மாதிரி...’ அவள் அவனை அணைத்து தேற்றி உள்ளே கூட்டி வந்தாள்.
‘உங்களுக்கு ‘நான்-வெஜ்’ பிடிக்குமே என்று தான் ஓடிப்போய் சிக்கின்
வாங்கி வந்தேன். இப்படி அழுகின்ற அளவிற்கு என்ன நடந்தது?’
‘அழுகையா.. சேச்சே.. இது ஆனந்தக் கண்ணீர்மா! சரி, சரி.. சட்டுனு சாப்பிட்டுட்டுக் கிளம்பறே.. ஜாலியா சினிமா போயிட்டு, அப்படியே வெளியே டிரைவ் - இன்ல சாப்பிட்டுத் திரும்புவோம். நீ ஆசையா வாங்கிட்டு வந்ததால, இப்ப இந்த சிக்கனை நான் சாப்பிடுறேன். இதுதான் லாஸ்ட்! இத்தோட நான் - வெஜ்ஜூக்கு குட்பை!’ என்றான் மனோ.
ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதலே உன்மையான காதல் என்பதும், அப்படிப்பட்ட காதல் என்றும் தோற்பதில்லை என்பதும் புரிய, மனோவின் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள் உஷா.
நன்றி; ஆனந்தவிகடன்
*********************************************************
( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)
************************************************************
குரு அரவிந்தன் வாழி! வாழி! தீராத எழுத்துத் தீபங்களோடு!
தேசம்தாண்டிய
தமிழிலக்கியக் கலைக்கூடங்களில்
குரு அரவிந்தன்
வளர்ந்து நிமிர்ந்து தழைத்து
வாழ்க பல்லாண்டு
தீராத எழுத்துத் தீபங்களோடு!
- கவிஞர் புகாரி-
Comments
Post a Comment