Love Story - காலங்களில் அவள் வசந்தம்.


LOVE STORY:  kuruaravinthan@hotmail.com

காலங்களில் அவள் வசந்தம். 


குரு அரவிந்தன்


னக்கு அருகே இருந்த மேசையில்தான் மலர்ச் செண்டு இருந்தது.

மலர் செண்டை அந்தப் பெண் தேடியபோது அதை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினேன்.

அதை என்னிடம் வாங்கி, நன்றி சொல்லிக் கொண்டே அருகே நின்ற பிளவகேளிடம் கொடுத்தவள், சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

‘நீங்க ராஜேஸ் தானே?’

‘ஆமா, நீங்க.. காயத்திரி தானே?’

‘என்னால் நம்பமுடியவில்லை, எவ்வளவு காலமாச்சு!’

‘எனக்கும்தான். நாங்க மீண்டும் சந்திப்போம் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. அதுவும் அவுஸ்ரேலியாவில்!  காயத்திரி நீ அப்படியேதான் இருக்கிறாய். நான் ஆச்சரியத்தோடு சொன்னேன்.’

‘நீங்களும் அப்படியேதான் இருக்கிறீங்க, இது என்னுடைய மகள் சிந்தியா.’ அந்த திருமண வைபவத்தில் பிளவகேளாக நின்ற சிறுமியை அறிமுகப் படுத்தினாள்.

காயத்திரியின் முகச்சாயல் அப்படியே அவளிடம் இருந்தது.

‘அப்பா படம் எடுக்கக் கூப்பிடுறாங்க’ என்னுடைய மூத்தமகள் அகல்யா நினைவுகளைக் கலைத்தாள்.

என்னுடைய மகளை  காயத்திரிக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மணமக்களை நோக்கி நடந்தேன். மணமகனின் நெருங்கிய உறவினர் என்ற முறையில் இலங்கையில் இருந்து இந்தத் திருமணத்திற்காக வந்திருந்தேன்.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைவலைகள் பசுமையாய் கூடவே வந்தன.

காயத்திரியை முதன் முதலாக லண்டனில்தான் சந்தித்தேன். இலங்கையில் இருந்து வந்த நான் அங்கே பொறியியலாளருக்குப் படித்துக் கொண்டிருந்தேன். என்னைப்போலவே இலங்கையில் இருந்து தாதியாகப் பயிற்சிபெற அவளும் லண்டனுக்குத் தனியே வந்திருந்தாள். தாதிப்பயிற்சி முடிந்ததும் அங்கே உள்ள ஒரு வைத்தியசாலையில் கடமையுமாற்றினாள்.

ஒருமுறை லயன்ஸ் கிளப்பில் இருந்து இரத்ததானம் செய்வதற்காக வைத்திய சாலைக்குச் சென்றிருந்தபோது அவளைச் சந்திக்க நேர்ந்தது. அவள்தான் எனக்கு இரத்தம் எடுத்தாள்.

‘எங்கே குத்த..?’ என்று கேட்டாள்.

‘கையிலே..!’ என்றேன்.

‘அது தெரியும், எந்தக் கையிலே..?’ என்றாள்.

நான் சிறிது நேரம் யோசித்தேன்.

அவளது கேள்வி இரண்டு கையிலும் வேறு வேறாய் இரத்தம் ஓடுமோ என்று என்னைச் சந்தேகப்பட வைத்தது.

‘என்ன பலமாய் யோசிக்கிறீங்க..?’ என்றாள்.

‘இரண்டு கையிலும் ஒரே குறூப் இரத்தம்தானே ஓடும்?’

‘அதிலென்ன சந்தேகம்?’ என்றாள்.

‘உங்களுக்கு ஏதில குத்த விருப்பமோ அதில குத்தி எடுங்க!’ என்றேன்.

அடடா.. என்ன தாராளமனசு என்று நினைத்திருக்கலாம்,

அவளுக்குச் சிரிப்பு வந்திருக்க வேண்டும், காட்டிக் கொள்ளாமல் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே வலது கையைத் தெரிந்தெடுத்தாள்.

இரத்தநாளத்தைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் ஊசியைக் குத்த, ஒரு விரலால் தடவித் தேடிக் கொண்டிருந்ததில் இருந்து அவள் சற்றுச் சிரமப்படுவது தெரிந்தது.

இரத்தத்தைக் கண்டால் எனக்கு மயக்கமே வந்துவிடும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த மென்மையான விரல்களின் வருடலின் சுகத்தை அனுபவித்துக் கொண்டு மிகஅருகே இருந்த அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘இன்னும் குத்தவே இல்லை, ஏன் இப்படி தம் பிடிச்சிட்டு இருக்கிறிங்க, சாதாரணமாய் இருங்களேன்’ என்றாள்.

நான் சாதாரணமாய் இருக்கத்தான் முயற்சி செய்தேன். ஏனோ என்னால் முடியவில்லை.

அவளது அருகாமையின் தாக்கத்தில், இதமான வாசனைத் திரவியம் போல அந்த வாசம்  சுவாசத்தை நிறைத்தது.

ஊசி ஏற்றும்போது, ஊ…! என்று என்னை அறியாமலே சத்தம் போட்டேன்.

‘வலிக்குதா..?’ என்றாள்.

ஆமா என்று தலையசைத்தேன்.

‘என்ன சின்னப்பிள்ளைகள் மாதிரி..’ என்று சொல்லிச் சிரித்தபடி கண்சிமிட்டினாள்.

மின்னலாய் வெட்டிச் சென்ற அந்தப் பார்வையில் என்னையறியாமலே அவள்பால் ஈர்க்கப்பட்டேன்.

என் வாழ்க்கையில் வசந்தம் குடிபுகுந்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

தென்றலின் குளிர்மை, பட்சிகளின் ஓசை, மலர்களின் வாசம், பரந்து விரிந்த வானம் எல்லாமே எனக்கே எனக்காய்க் காத்திருப்பது போல, எனக்கு என்ன ஆச்சு என்றே புரியவில்லை. என்னை மறந்து அவள்தான் எல்லாமே என்ற நிலைக்கு என்னை இழுத்துச் சென்றது.

அதன்பின் அவளை அடிக்கடி சந்தித்தேன்.
அன்று காதலர் தினம். ஒற்றை றோஜாவோடு அவளுக்காகக் காத்திருந்தேன். வியப்போடு ஏற்றுக் கொண்டாள். தன்னோடு இரவு விருந்திற்கு வரமுடியுமா என்று கேட்டாள். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன். பல விடையங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். தெரிந்தவர்கள் எங்களை வாழ்த்தினார்கள். விருந்து முடிந்து இருவரும் நடனமாடினோம். ஏல்லாமே நல்லபடியாய் நடந்தது. அவளைப் பற்றிய நினைவோடு நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.

மறுநாள் அவள் அவசரமாக அழைத்தாள். ஊரிலே தனது தாயார் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவசரமாகத் தான் ஊர் திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தாள்.

அவளுடைய சோகத்தில் முழுமையாகப் பங்குபற்ற முடியாவிட்டாலும், அவள் போவதற்கு வேண்டிய பிரயாண வசதிகளை ஓடியாடிச் செய்து கொடுத்தேன். சீக்கிரமே திரும்பி வந்துவிடுவதாக வாக்குக் கொடுத்துப் பிரிந்து சென்றாள்.

காத்திருந்தேன். ஆனால் அவள் திரும்பி வரவேயில்லை.

சந்தேகத்திற்குத் தீனி போடுவதுபோல, தாயாரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக முறைப்பையனைத் திருமணம் செய்து கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் போய்விட்டதாக செய்தி வந்தது.

மனமுடைந்துபோன நான் விரக்தியின் உச்சக் கட்டத்திற்கே சென்றேன்.

தனிமை என்னை வாட்டியது. லண்டனில் இருக்கப் பிடிக்காததால் திரும்பவும் ஊருக்குச் சென்றேன்.

சோகத்தைக் காலம் கரைத்தது. லண்டன் மாப்பிள்ளை என்று சொத்துப் பத்தோடு வந்த பெண்ணை மனைவியாய் ஏற்றுக் கொண்டேன்.

மூத்தவள் பெண்ணாகவும், அடுத்தவன் ஆணாகவும் பிறக்கவே இரண்டோடு நிறுத்திக் கொண்டோம்.

இருபத்தைந்து வருடக் கனவுகள் மீண்டும் நிஜமாக மறுபடியும் அதே காயத்திரி!

இரவு விருந்துபசாரத்தின்போது எங்கள் மேசையிலேயே அவளும் கணவரும் இருந்தார்கள். கணவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சிறிது நேரத்தால் கணவர் எழுந்து நண்பர்களைச் சந்திக்க அடுத்த மேசைக்குச் சென்றார். எனது மகளும் எழுந்து சினேகிதிகளிடம் சென்றாள்.

நான் எதுவும் பேசவில்லை. குற்ற உணர்வு உள்ளவளாக காயத்திரி தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.

என்ன யோசனை..? என்றாள் திடீரென்று.

இல்லை, கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன், லண்டன் காதலர் தின நடனத்தை என்னால் மறக்க முடியவில்லை என்றேன்.

அவளுக்கும் அந்த நினைவு வந்திருக்க வேண்டும். நினைவுகளை அசைபோட்டு மெல்லச் சிரித்தாள்.

‘ராஜேஸ் அந்தந்த நேரவாழ்க்கையை நினைத்து காலமெல்லாம் ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது. எது யதார்த்தமோ அதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வயதில் ஒவ்வொன்றும் முக்கிமாய்த் தெரியும். அதுதான் வாழ்க்கை என்ற மாயத் தோற்றத்தை அது ஏற்படுத்தும். அதை எல்லாம் தாண்டி யதார்த்த வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை ஏற்றுக் கொள்ளவேணும். அதைத்தான் நான் செய்தேன். இப்போது என்னுடைய கவலை எல்லாம் என்னுடைய குடும்பத்தைப் பற்றியதுதான். உங்களுக்கும் குடும்பம் இருப்பதால் நீங்களுக்கும் அந்தக் கவலையோடுதான் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களை மீண்டும் சந்தித்ததில் ரொம்பச் சந்தோஷம், வரட்டா..?’

எனது பதிலைக்கூட எதிர்பாராமல் அவள் எழுந்து சென்றாள்.

நான்தான் ஏதோ பெரியயய...  தவறு செய்து விட்டது போல, குறுகிப்போய் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

மங்கிய வெளிச்சத்தில் கணவனோடு கைகோர்த்து நடனமாடுவது இங்கிருந்தே தெரிந்தது!

(நன்றி: உதயன் 14 பெப்ரவரி 2008)

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

**********************************************************

Comments