Love Story - முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?


LOVE STORY:     kuruaravinthan@hotmail.com



கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்து..


குரு அரவிந்தன்.

எதிரே வந்த அவளை என்னையறியாமலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அதைக் கவனித்திருக்க வேண்டும். அவளது நடை மெல்லத் தளர்ந்தது.

‘சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட
துள்ளும் கால்கள் சிறுநடைபோட
மருண்டு நின்றாய் மானென விழித்தாய்
மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்’

ஏன் தலை கவிழ்ந்தாள் எனத் தெரியவில்லை. ஒரே ஒரு முறையாவது என்னை அவள் திரும்பிப் பார்ப்பாளா என்ற ஆதங்கம் எனக்குள் துளிர்த்தது. அவளது சினேகிதி ஏதோ சொல்ல அவள் தலை குனிந்தபடி அதைக் கேட்டுக் கொண்டே மெல்ல நடந்தாள். கேட்டுக் கொண்டிருந்தாளா அல்லது கேட்பது போல நடித்துக் கொண்டிருந்தாளா தெரியவில்லை.

உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பாரக்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே..

சில நாட்களாக அவளை நான் தொடர்கிறேன் என்பதை அவள் அறிந்திருக்கலாம். என்னை அவள் பார்த்தாளோ இல்லையோ தெரியவில்லை. அவள் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் கணத்தில் நான் அவளிடம் எதிர் பார்த்ததெல்லாம்,

‘மௌனமே பார்வையால் ஒரு 
பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையாய் ஒரு 
வார்த்தை பேச வேண்டும்’ என்பதுதான்.

நான் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை. பார்வையோ ஜாடையோ கிடைக்கவில்லை. என் காதல் ஒருதலைக் காதலாய் இருக்கலாம். என்னைப்போல எத்தனைபேர் தங்கள் காதலை வெளியே சொல்லமுடியாமல் இதுபோல் தவித்திருக்கலாம்.

உனைத்தான் கண்டு சிரித்தேன் - நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
ஏனைத்தான் எண்ணித் துடித்தேன் - எண்ணம்
ஏனோ ஏனோ வளர்த்தேன்.

எண்ணத்தை வளர்த்தேனே தவிர, காதலைச் சொல்லத் துணிவு இருக்கவில்லை. துணிவில்லாதவன் நிச்சயமாகக் கோழைதான். அவன் காதலிக்கத் தகுதி அற்றவன் ஆகிவிடுகிறான். அவன் ஆசைகளை மட்டுமே மனதில் வளர்த்துக் கொண்டிருப்பவன். முதலில் அவள் மீது ஈர்ப்பு வந்தது.
அது அன்பாய் பின் பாசமாய் மாறியது.

ஆசையை நெஞ்சில் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
பாசத்தில் நானென்ன பாக்கி வைத்தேன் - எந்தன்
பாவத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?

அவள் என்னைவிட்டு விலக விலக அதுவே காதலாய் மாறிவிட்டது. ஓவ்வொருவர் மனதிலும் எதிர்ப்பால் மீது ஒரு வகை ஈர்ப்பு இருந்திருக்கலாம். மனதுக்குப் பிடித்த அவள் ஒரு வார்த்தையாவது கனிவாய் பேசமாட்டாளா என்ற ஏக்கம் துளிர்க்கலாம்.

சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை
சேதி சொல்லாதோ - இந்த 
பத்தரை மாற்றுப் பாவை மேனி
பங்கயம் ஆகாதோ?

வெளியே சொல்லாத அந்தக் காதல் அவர்களுடனேயே மடிந்திருக்கலாம். காலாகலமாய் இதுதான் தொடர்கதையாய்த் தொடர்கின்றது. மனசுக்குள் பூட்டிவைத்த ஆசைகள் எல்லாம் அவரவருக்கு மட்டும்தான் சொந்தம். என்றாவது ஒருநாள் காதலைச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைத்தால்,

நிலவே உன்னை அறிவேன் - அங்கே
நேரே ஒருநாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் - இல்லை
பனிபோல நானும் மறைவேன்.

ஆதவனைக் கண்டதும் எப்படி பனி மறைந்து விடுகின்றதோ அது போலத்தான் காதலும். கலியாணம் காட்சி என்று வந்துவிட்டால் இந்தக் காதலும் பனியைப்போல மறைந்துவிடும். ஆனாலும் அடிமனதில் தீராத அந்த ஏக்கம் இறுதிவரை உறைந்துதானிருக்கும். அதுதான் காதல்.


*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

**********************************************************

குரு அரவிந்தன் வாழி! வாழி!

புதிதாக நீபடைக்கும் விருந்து பார்த்து
பூத்தவிழி மூடாது காத்து நிற்பர்
பொதியைமலைப் பிறந்ததமிழ் வளர்த்த காதற்
பொற்பெழுதும் கைவண்ணம் வாழி! வாழி! 

-கவிஞர் அனலை இராசேந்திரம்-

Comments