Love Story - காதல் போயிற் சாய்தல்..!


காதலர் தினக்கதை:
LOVE STORY:  kuruaravinthan@hotmail.com


காதல் போயிற் சாய்தல்..!



குரு அரவிந்தன்

நாளை அன்றூவின் பிறந்தநாள்.

இங்கே இருந்து கொண்டு எப்படி அவனை வாழ்த்தலாம் என்று நினைத்தாள்.

அவனுக்கு வாங்கிய பிறந்தநாள் பரிசையும், பூச்செண்டையும் கொரியரில் அனுப்பிவிட்டு செல்பேசியில் வாழ்த்துச் சொல்லுவோம் என்றுதான் முதலில் நினைத்தாள்.

சென்ற வருடம் வலன்டைன் தினத்திலன்று அன்றூ கொடுத்த மலர்ச் செண்டை நினைத்துப் பார்க்க அதுவே அவளுக்குள் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.

இருவரும் ஒரே இடத்தில் வெவ்வேறு பிரிவில் வேலை செய்தாலும், வேலை விடையமாக அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். அப்புறம் காபி டின்னர் என்று அவர்களது நட்பு மெதுவாக வளர்ந்தது.

வழமைபோல கன்டீனில் சந்தித்தபோது, ‘எங்கே ஒரு வாரமாய் ஆளையே காணோம்’ என்றான் அன்றூ.

‘தெரியும்தானே என்னுடைய வேலை அப்படி, கம்பனி விடயமாய் அடிக்கடி வெளியிடங்களுக்குப் போகவேண்டும். இந்த மாதத்தில் இது இரண்டாவது பயணம். எனக்கென்ன பமிலியா, புதுப்புது இடங்களைப் பார்த்து என்ஜோய் பண்ணுகிறேன்.’ என்றாள்.

‘அதிஸ்டக்காரி, உன்னைப் பார்க்க எனக்குப் பொறாமையாய் இருக்கு’ என்றான் அன்றூ.

பேசுவதற்கு அவர்களிடம் நிறையவே இருந்தது. அடிக்கடி சந்தித்ததில் அவர்களுடைய நட்பு நெருங்கி வந்தது. திடீரென வலன்டைன் தினத்திலன்று அவள் சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அவன் மலர்க் கொத்து ஒன்றை அவளிடம் கொடுத்துத் தன் காதலை வெளிப்படுத்தினான்.

அவள் எதுவும் சொல்ல முடியாமல் இன்ப அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

கலாச்சார முரண்பாடு அவர்களுக்குள் இருந்ததால், அவளுக்குள் தயக்கம் இருந்தது.  வேறுமொழி, வேறுஇனம், வேறுமதம் ஆனாலும் அன்றூ இவளை விரும்பினான். இவளுக்கும் அவனில் ஒருவித ஈர்ப்பு இருந்தது. அவன் ஆண், இவள் பெண் என்ற எதிர்ப்பால் ஈர்ப்புத்தான் அவர்களுக்குள் நட்பை ஏற்படுத்தியதோ தெரியவில்லை.

அவனிடம் ஏற்பட்ட ஈர்ப்பை எப்படி வெளியே சொல்வது என்றுதான் இது நாள்வரை தவித்தாள்.

தெரிந்தால் அப்பா கொலையே செய்து போடுவார் என்ற பயம் வேறு அவளுக்கு இருந்தது. அம்மாவை ஓரளவு சமாளிக்கலாம், ஆனால் போதாக்குறைக்குப் பாட்டி ஒன்று, எந்த நேரமும் தொண தொணவென்று எப்படி இதை எல்லாம் சமாளிப்பது என்று சிந்தித்தாள். இனசனமென்று யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற பயமும் ஒரு காரணமாய் இருந்ததால், இந்த விடையத்தைப் பெரிது படுத்தாமல் மௌனம் காத்து வந்தாள்.

அவள் கனடிய மண்ணில் பிறந்ததால் பெற்றோரின் பிறந்த மண்ணின் கலாச்சாரத்திற்கும், புகுந்த மண்ணான கனடிய கலாச்சாரத்திற்கும் நடுவே அவள் அகப்பட்டு கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் ஆபீசில் சந்தித்தபோது அன்றூ அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.
‘என்னுடைய காதலை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. தினந்தினம் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதைவிட அதைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் நேற்று அப்படி நடந்து கொண்டேன். சொறிபோதட்.’ என்றான்.

அன்றூ பேசும்போது அவனது குரலில் கொஞ்சம் கீச்சுத்தன்மை இருந்ததால் அவனை ஆண்மையற்றவன் என்று அவளது தோழிகள் கேலிசெய்யும் போதெல்லாம் அவன் மீது அவளுக்கு ஒருவித பச்சாதாபம் ஏற்படுவதுண்டு. அதனாலோ என்னவோ, அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. தனது விருப்பத்தை மெதுவாகச் சினேகிதியிடம் சொன்னபோது, ‘என்னடீ அவனையா நீ விரும்புகிறாய், அவனொரு கேயடி..’ என்றாள்.

இவளின் முகம் சட்டென்று மாறிப்போனதைச் சினேகிதி அவதானித்திருக்க வேண்டும், ‘ஏய்.. ஐயாம் யோக்கிங்.. சும்மாதான் சொன்னேன்,’ என்று சொல்லிச் சமாளித்தாள்.

அவளுக்குச் சில இடங்களில் திருமணம் பேசி வந்தபோது அவள் தன்னை ஒருவன் விரும்புவதாகத் தனது விருப்பத்தை தாயிடம் மெல்ல வெளியிட்டாள்.

கலாச்சார வேறுபாடுகள் காரணமாக வீட்டிலே எதிர்ப்பிருந்தாலும், ‘வாழப்போவது நான்தானே’ என்ற அவளது வாக்குவாதத்தை முன்வைத்து இறுதியில் அவள் விருப்பப்படியே எல்லாம் அவசரமாக நடந்து முடிந்தது.

‘தேமொழியே நீயவனை மாலையிட வாக்களித்தாய், மையலினாலில்லை 
அவன் சாலவருந்தல் சகிக்காமல் சொல்லி விட்டாய்’.

தேன் நிலவு, விடுமுறை என்று எல்லாமே முடிந்து மீண்டும் வழமையான வேலைக்குள் மூழ்கிப் போனாள்.

இந்த ஆறமாத காலத்தில் இது அவளது மூன்றாவது பயணம். புதிதாகத் திருமணம் செய்த ஜோடிகள் என்பதால் அவர்களுக்குள் பிரிவுத்துயர் இருந்தது. நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் இருப்பதால் அடிக்கடி கணவனும் மனைவியும் செய்தி அனுப்பிக் கொள்வார்கள்.

பேசாமல் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடலாமே என்றுகூட அன்றூ சொல்லிப் பார்த்தான். அவளோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அனுபவம் மட்டுமல்ல, கொழுத்த சம்பளத்தோடு அவளுக்கு வேறு வேலை கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது.

வந்த வேலை முடிவதற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்தது.

அமெரிக்காவில் இந்த வாரம் லோங் கொலிடே. அதாவது திங்கட் கிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. விமானச் சீட்டு இலகுவில் கிடைத்தால், சேப்பிறைசாய் ரொறன்ரோ போய் வந்தால் என்ன என்று நினைத்தாள்.

திடீரெனப்போய் அவனுக்கு முன்னால் நின்று கொண்டு ‘ஹப்பிபார்த்டே’ சொன்னால் எப்படியிருக்கும்? அவனுக்கு இப்படி ஒரு ஆச்சரியமான இன்பஅதிர்ச்சி கொடுக்க நினைத்தாள். உடனேயே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தாள்.

பொஸ்டனில் இருந்து இரவு புறப்படும் எயர்கனடா விமானத்தில்தான் சீட்டுக் கிடைத்தது. மாலையில் அவனுடன் தொடர்பு கொண்டு பொஸ்டனில் இருப்பதுபோலக் காட்டிக் கொண்டாள்.

இரவு 9: 43க்கு வரவேண்டிய விமானம் தாமதமடைந்ததால், பியர்சன் விமான நிலையத்தை விட்டு அவள் வெளியே வந்தபோது இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது.

வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு வந்தவள், வீட்டு வாசலில் நிற்காமல் சற்றுத் தள்ளி வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டாள்.

தன்னிடம் இருந்த சாவியால் மெதுவாகக் கதவைத்திறந்து விளக்கைப் போடாமலே பாதவணியை வாசலில் விட்டுவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

அவனது குறட்டைச் சத்தம் கேட்டது. இரண்டு வாரங்கள் தனித்துப்போய் இருந்ததால், பிரிவும், தனிமையும் இருட்டும் அவளது இளமை உணர்வுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது.

மெல்ல அவனது போர்வைக்குள் நுழைந்து காதுக்குள் ‘ஹப்பிபார்த்டே’ சொன்னால் அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்குமே என்ற நினைப்போடு போர்வையை மெதுவாக விலக்கி உள்ளே நுழைய முற்பட்டாள்.

மெல்லிய வெளிச்சத்தில் அவள் கண்ட காட்சி அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன இது, யார் இது? ஒரே போர்வைக்குள் அவனை அணைத்தபடி..!

‘ஓ மை கோட்..!’ ஒரு கணம் உறைந்து போய் நின்றாள். கை கால் உடம்பு எல்லாமே நடுக்கமெடுத்தன.

இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்தவளுக்கு அவன் பேரதிர்ச்சியல்லவா கொடுத்திருக்கிறான்.

தங்களை மறந்த ஆழ்ந்த தூக்கத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவர்கள் இருந்ததால் எதையும் கண்டு கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தவள், சத்தம் போடாமல் மெதுவாக வந்த வழியே அடி எடுத்து வைத்துத் திரும்பினாள்.

எதிர்பாராத அதிர்ச்சியில் உடம்பெல்லாம் வியர்த்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தவளுக்குப் பிறந்த வீட்டு ஞாபகம் வந்தது.

வாடகை வண்டி எடுத்துக் கொண்டு பெட்டியோடு பிறந்த வீட்டிற்குக் கிளம்பினாள். வாசல் அழைப்பு மணியை அடித்துவிட்டுக் காத்திருந்தாள். யார் என்று பார்த்துக் கதவைத் திறந்த அவர்களுக்கு, ‘என்ன இவள் திடீரென இந்த நேரத்தில்’ என்று ஆச்சரியமாக இருந்தது.

‘ஏன்டி நீ பாஸ்டன்ல நிற்கிறாய் எண்றல்லவா நினைச்தேன், என்ன திடீரென்று?’ அம்மா ஆச்சரியமாக் கேட்டாள்.

‘உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்திச்சு அதுதான் திடீரென கிளம்பி வந்திட்டேன்’ என்று சொல்லிச் சமாளித்தாள்.

அப்பாவிற்குச் சந்தேகம். இவள் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இரவு நேரத்தில் அதுவும் தனியாக ஏன் இங்கே வந்தாள்?

காதல் திருமணம் என்பதால் நடந்ததை வெளியே சொன்னால் அவளுக்குத்தான் அவமானம் என்பதால் இரவு தூக்கமின்றித் தவித்தாள். கண் கலங்கியபடி தூங்காமல் விடியும்வரை கிடந்தவளைப் பார்த்த அம்மாவிற்கு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது புரிந்து போயிற்று.

‘என்னாச்சு, ஏன் அழுகிறாய்?’ அருகே படுத்திருந்த அம்மா ஆதரவாய் ஆறுதல் சொல்ல, அவள் நடந்ததை மறைக்க முடியாமல் தாயிடம் கொட்டித் தீர்த்தாள்.

‘இப்ப என்ன செய்யப் போகிறாய். திரும்பத் திரும்பச் சொன்னேனே கேட்டியா. பிடிவாதமாய் இந்தக் கலியாணம்தான் வேணுமென்று அடம் பிடித்தாய். நீயே முடிவெடுத்து நீயே விரும்பிச் செய்த கலியாணம். என்னவெண்றாலும் செய்.’ என்றாள் அம்மா.

அம்மா தொடக்கத்தில் சத்தம் போட்டாலும் யதார்த்தத்தை உணர்ந்து பணிந்து வந்தாள். எதையுமே யதார்த்தமாகச் சிந்திப்பவள் என்பதால் நடந்ததைப் புரிந்து கொண்டாள்.

‘உனக்கு ஏற்ற முடிவை நீயே தேடிக்கொள். விவாகரத்துத்தான் வேணுமென்றால் அதையும் செய்யலாம். அப்பாவிடம் சொல்லி வக்கீலைப் போய்ப் பார்க்கலாம். இல்லை அவனோட சேர்ந்து வாழலாம் என்று நினைத்தாhல் அதையும் செய்யலாம். மனதைத் தளரவிடாதே. எந்த முடிவென்றாலும் சிந்தித்து நிதானமாய்ச் செய், ஏனென்றால் உன்னுடைய எதிர் காலம் உன்னுடைய முடிவில்தான் தங்கியிருக்கிறது. எந்த முடிவெடுத்தாலும் உனக்காக இந்த வீட்டுக் கதவு எப்பவுமே திறந்திருக்கும்.’ அம்மாவின் ஆலோசனை அவளைச் சிந்திக்க வைத்தது.

அம்மா சொன்ன புத்திமதியைக் கவனத்தில் கொண்டாள். காதல் போயிற் சாதல் என்பதில் அவளுக்கு நம்பிக்கையில்லை. அப்படி ஒன்றும் முட்டாள் பெண்ணுமல்ல, கணவனைப் பிரிந்திருப்பது, விவாகரத்து செய்வது என்பதில்கூட அவளுக்கு அக்கறையில்லை.

அன்றூவைத் தன் வழியிற் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தோடு செயற்பட்டாள். அதற்காகச் சில விட்டுக் கொடுப்புகள், மன்னிப்பு களுக்குக்கூட  அவள் தயாராக இருந்தாள்.

மனம் குழம்பிப்போய் இருந்தாலும் அன்றூ நல்லவன்தான் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் இளமைப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவன் அப்படி நடந்திருக்கலாம்.

சிகரட் பிடிப்பதுபோல, மது அருந்துவதுபோல இதுவும் இளமையில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு பழக்கமே. அவன் ஒன்றும் ஆண்மை குறைந்தவனல்ல, முதலில் அவனுடன் அப்படியான தொடர்பு வைத்திருக்கும் கூட்டாளிகளை வெட்டி விடவேண்டும்.

இது வாழ்க்கைப் பிரச்சனை, கவனமாகச் செயற்பட்டால் அதைச் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவளது மனதில் துளிர் விட்டது. சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப நாமும் சாய்ந்து கொள்ள வேண்டும், காதல் போயிற் சாதல் அல்ல சாய்தல் என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

காதலன் இப்படி நடந்து விட்டானே என்பதற்றகாக அவள் ஆவேசப்பட்டு தப்பான எந்த முடிவும் எடுக்கத் தயாராக இல்லை. காதல் போயிற் சாய்தல்.. சாய்தல்..! என்பதே அவளது முடிவாக இருந்தது.

அவள் ரொறன்ரோவிற்கு வந்து போனதே தெரியாதது போல சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு பியர்சன் விமான நிலையத்திற்குத் திரும்பினாள்.

இன்னும் ஒரு வாரம் இருக்கிறது வந்த வேலை முடிவதற்கு, ஆறுதலாகச் சிந்தித்து முடிவெடுப்போம், அவனை இனிமேல் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும் என்ற முடிவோடு பாஸ்டன் பயணத்தைத் தொடர்ந்தவள் செல்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

அன்றூவிடம் இருந்து வந்த பல அழைப்புகள் அதில் பதிவாகியிருந்தன.



*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

***********************************************************

Comments