Love Story - வலித்தாலும் காதலே..!


LOVE STORY:  kuruaravinthan@hotmail.com

வலித்தாலும் காதலே..! 

குரு அரவிந்தன்


‘வலிக்குதடா…!’

நீண்ட மௌனத்தை உடைத்துக் கொண்டு வெளிவந்தது அவளது வார்த்தைகள். எனக்கு அருகே அவள் உட்கார்ந்து இருந்தாலும் நான் அவளைத் திரும்பிப்  பார்க்கவில்லை. எனது மௌனம் கலையாமற் போகவே, பக்கத்தில் இருந்த எனது தோளில் தலைசாய்த்து மெதுவாக விசும்பத் தொடங்கினாள்.

அவளது ஸ்பரிசம் என்னைச் சற்றுக் கிறுங்க வைத்தாலும், கல்லுளிமங்கன் போல் உட்கார்ந்திருந்தேன். அவளுக்கு மட்டும்தான் வலிக்குமா? தன்னால் மட்டும்தான் பிடிவாதம் பிடிக்கமுடியும் என்று நினைத்துத்தானே இத்தனை தூரம் போனாள். அவளே வலியத் தேடிக்கொண்டது, அவளே அனுபவிக்கட்டும் என்று நான் தொடர்ந்தும் பிடிவாதமாக இருந்தேன். கடந்தகாலம் அவளுக்குப் புகட்டிய பாடத்தின் வெளிப்பாடாய்த்தான் இந்த வார்த்தைகள் வெளிவந்திருக்க வேண்டும்.

‘திருமணம் என்ற பந்தம் தேவைதானா?’ என்பதில்தான் எங்கள் பிரச்சனையே ஆரம்பமானது. தாலியைக்கட்டி அவள்தான் எனது வாழ்க்கைத் துணைவி என்பதை ஊர் அறியச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடுதான் நான் திருமணத்தைப் பற்றிய பேச்சை அவளிடம் ஆரம்பித்தேன்.

 நாள் குறிப்பது பற்றியும், எப்போது, எங்கே திருமணத்தை வைப்பது என்பது பற்றியும் முடிவு எடுக்கத்தான் அவளிடம் அன்று பேச்சுக்கொடுத்தேன். யார் என்ன உபதேசம் செய்தார்களோ தெரியவில்லை, முற்றிலும் மறுத்து விட்டாள்.

ஊரிலே நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஒரு குடும்பப் பெண்ணிடம் இருந்து அதிர்ச்சி தரக்கூடிய வகையில் இப்படியான ஒரு கேள்வி எழும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை.

‘தாலி கட்டப் போறீங்களோ, என்ன நாய்க்குக் கழுத்தில பட்டிகட்டுற மாதிரியோ?’ என்ற அவளது கேள்வியில், வேடிக்கையாகக் கேட்பதுபோல கேட்டாலும் குதர்க்கம் இருந்ததை அவதானித்தேன்.

‘என்ன சொல்கிறாய்..?’ என்றேன் திகைப்போடு. ஊரிலே அடக்க ஒடுக்கமாக இருந்த இவளா இங்கே வந்ததும் இப்படிக் கேட்கிறாள்.

‘என்ன சொல்ல இருக்குக்கு. தாலி கீலி ஒண்டும் வேண்டாம். அதெல்லாம் அந்தக் காலம், நாங்கள் ஒன்றாக இருப்பம்.’

‘ஒன்றாக என்றால்..?’

‘ஒரு கொண்டோமேனியம் வாங்கி அதிலே இரண்டு பேரும் சேர்ந்து வாழுவோம். மோட்கேட்சை இரண்டு பேரும் சேர்ந்தே கட்டுவோம். ஓவ்வொரு மாதமும் இரண்டாகப் பிரித்து ஏனைய செலவுகளைப் பங்கிடுவோம். ஊருக்காக வாழவேண்டாம், எங்களுக்காக வாழுவோம்.’

‘என்னாச்சு உனக்கு, நன்றாக யோசித்துத்தான் சொல்கிறியா..?’

‘ஆமா..! அனுபவப்பட்டவங்க புத்திமதிகளைக் கேட்டுத்தான் சொல்கிறேன்.’
‘அப்ப திருமணபந்தத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?’

‘அப்படித்தான் வெச்சுக் கொள்ளுங்களேன், தாலி கட்டினதுக்காக நாங்கள் என்ன வித்தியாசமாய் வாழப்போகிறோமா? இல்லைத்தானே..?

‘எங்க இனசனங்கள் என்ன நினைப்பாங்க?’
‘நீங்க பயப்படாதீங்க ஊரில என்றால் ஏதாவது நினைக்கலாம், இது கனடா, இந்த நாட்டில இது சகஜம். அதைப்பற்றி யாருமே கவலைப்படமாட்டாங்க.’
‘அக்கம், பக்கம் இனசனமெண்டு..!’

‘பக்கத்து வீட்டில யார் இருக்கினமெண்டு கூட அவைக்குக் கவலையில்லை, அவைக்காக நீங்கள் கவலைப்படவேண்டாம்.’
‘தாலி என்கிறது புனிதமானது, அதனால பெண்ணுக்குத்தான் அதிக பாதுகாப்பு..!’

‘இதுதானே வேண்டாமென்கிறது, இப்படிச் சொல்லிச் சொல்லியே திரும்பவும் ஆணாதிக்கப் புத்தியைக் காட்டுறீங்களே!’
‘எதைச் சொன்னாலும் ஆணாதிக்கம் என்கிறாய். இது, சமுதாயம் எங்களை மதிக்கவேணுமே என்கிற என்னுடைய குறைந்த பட்ச எதிர்பார்ப்பு!’
‘அப்ப சமுதாயத்திற்காகத்தான் நாங்கள் வாழப்போகிறோமா?’

‘உன்னுடைய இந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. உன்னோட ஒரு ரூம்மேட் போல வாழ்வதிலும் எனக்கு  இஷ்டமில்லை, அதை நீ புரிஞ்சுக்கோ.’
‘அப்போ தாலிகட்டிக்கொண்டு ஒரு அடிமைபோல உங்கடதயவில நான் இங்கே வாழவேணும் என்று எதிர்பார்க்கிறீங்களோ?’

‘இப்ப உனக்கு நான் என்ன சொன்னாலும் விளங்கப்போவதில்லை. பிடிவாதம்தான் பிடிக்கப்போகிறாய் என்றால் இனி உன்னுடைய இஷ்டம்!’
‘கொஞ்சம் பொறுங்க, இன்னுமொரு கொண்டிசன் இருக்கு..!’ என்றாள்.
என்ன என்று நான் கேட்கவில்லை. கேள்விக் குறியோடு நான் பார்த்த பார்வை அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

‘கொக்கென்று நினைத்தாயோ..?’ என்பது போன்ற சுட்டெரிக்கும் அவளது அலட்சியப் பார்வை மீண்டும் என்னைத் தாக்கியது.

‘எனக்கென்று தனியாக ஒரு படுக்கையறை வேணும். என்னுடைய விருப்பம் இல்லாமல் படுக்கையறைப் பக்கம் நீங்க வரக்கூடாது!’

நிச்சயமாக இவளுக்கு ஏதோ நடந்திருக்க வேண்டும். யாரோ இல்லாததும் பொல்லாததும் சொல்லி இவளுடைய மனதை நன்றாக மாற்றிவிட்டிருக்க வேண்டும். கோடீஸ்வரரான ஒனாசிஸை திருமணம் செய்தபோது ஜாக்குலின் கென்னடி இப்படித்தான் ஒரு நிபந்தனை போட்டது எனக்கு ஞாபகம் வந்தது. நான் கோடீஸ்வரனுமல்ல, படுக்கையறைப் பக்கம் போகாமலிருக்க எனக்கொன்றும் அப்படி வயசாகிப் போய்விடவுமில்லை.

ஊரிலே இருந்தபோதே நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம். கல்லூரிக் காதல் என்பதுபோல நாங்கள் படித்த கல்லூரிச் சூழ்நிலை எங்களுக்குள் ஒருவித புரிந்துணர்வை ஏற்படுத்தி இருந்தது. நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக, புலம் பெயர்ந்து கனடாவிற்குத் தனியே வந்தேன். மெல்ல மெல்ல நல்லதொரு நிலையில்; என்னை நிலை நிறுத்திக் கொண்டு அவள் நினைவாகவே இருந்து அவளை ஸ்பொன்சர் செய்தேன்.

ஊருக்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து அவளை இங்கே வரவழைத்தேன். அவள் இங்கே வந்து இறங்கியபோது, முறைப்படி திருமணம் முடியும்வரை ஒன்றாக இருப்பது நல்லதல்ல என்ற பண்பாடு கருதி அவளை அவளது தூரத்து உறவினர் குடும்பத்தோடு சிறிது காலம் தங்கவைத்தேன். ஏதாவது படிக்கட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்தேன். அவள் தினமும் கல்லூரி சென்று வந்தாள்.

அங்கேதான் ஏதோ தவறு நடந்திருக்கிறது. யாரோ அவளுக்கு மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். ஊரிலே பொருளாதார நிலை காரணமாக அனேகமான பெண்கள், ஆண்களை நம்பித்தான் வாழ்ந்தார்கள். இந்த நாட்டில் சுதந்திரம் இருந்ததால், ஆண்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படவில்லை.

அதன் தாக்கம்தான் இவளது மாற்றத்திற்குக் காரணமோ என்று நினைத்தேன். சுதந்திரமான வேலை, சுதந்திரமான வாழ்க்கை, சுதந்திரமான சிந்தனை என்று இப்படி ஒவ்வொரு விடையத்திலும் சுதந்திரம் தலைகாட்டி இவளைப் போன்ற சிலரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஓன்றாய் வாழ்ந்து பார்ப்போம் பிடிக்காவிட்டால் விலகிக் கொள்வோம், அதற்காகத் திருமண பந்தத்திற்குள் கட்டுப்படத் தேவையில்லை என்ற கொள்கையுடைய ஒரு சில இளம் ஜோடிகளின் வழியையே இவளும் பின்பற்றுகிறாள் என்பதை நினைத்தபோது, எங்கள் பண்பாடு கலாச்சாரத்திற்கு இது ஒவ்வாது என்பதை நான் சீக்கிரமே புரிந்து கொண்டேன்.

ஆனாலும் அவள் மீது நான் வைத்த அன்பு உண்மையானது என்பதால், அவள் விருப்பப்படியே இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். எப்பொழுதும் மனதுக்கு மிகவும் பிடித்தமான ஒருவரின் அன்பான அரவணைப்பு மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். அந்த அரவணைப்பு தந்த சுகத்தைக்கூட அனுபவிக்க முடியாமல், குழந்தை பெற்றுக் கொள்வதைக்கூடத் தள்ளிப் போடச் சொன்னாள்.

மனசு வலித்தது, வலித்தாலும் காதலே என்பதால், அவளை எனது இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க நான் விரும்பவில்லை. கட்டாயப் படுத்தினால் அதுவும் ஆணாதிக்கம் என்று கூப்பாடுகூடப் போடலாம், பிரிந்து செல்வதற்கு அதுவே காரணமாயும் அமையலாம் என்பதால் வாழ்க்கை ஏனோ தானோ என்று நகர்ந்து கொண்டிருந்தது. காலமும் எங்களுக்காகக் காத்திராது வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது.

அன்று எனது இனத்தவரின் திருமண வீட்டிற்கு இருவரும் சென்று திரும்பிய போது அவளது கலகலப்பான சிரிப்பு மறைந்து போயிருந்ததை அவதானித்தேன்.

‘ஏலாதடா, இந்த ஊரும் உலகமும் பார்க்கிற பார்வையை என்னாலே தாங்க முடியாமலிருக்கடா. ஏதாவது செய்யேன், பிளீஸ்..!’ என்றாள்.
‘இப்ப என்னை என்ன செய்யச் சொல்கிறாய்..?’ என்றேன்.

‘இப்ப கொஞ்ச நாட்களாக நாங்க எங்கே போனாலும் என்னை வேண்டுமென்றே அவமதிக்கிறாங்களோ என்று எனக்கு எண்ணத் தோணுது’
‘ஏ..ன்..ன்..? அப்படி என்ன நடந்தது உனக்கு?’

‘உங்க கசினோட திருமணத்திற்கு வந்த எனக்கு எந்த முன்னுரிமையும் அவங்க தரவில்லையே!’
‘ஏன் உன்னோட அவங்கள் எல்லோரும் நல்லாய்த்தானே பழகினாங்க.’
‘பழகினாங்கதான் ஆனால், ஆரத்தி எடுக்கவோ, அல்லது மணப்பெண்ணின் தோழியாக அருகே நிற்கவோ என்னை விடல்லையே.’
‘ஓ.. அதுவா..?’ என்று இழுத்தேன்.

‘ஏன் அவங்க என்னை மட்டும் அலட்சியப்படுத்திறாங்க?’
‘அது.. வந்து உனக்குச் சொன்னால் புரியாது..!’
‘பரவாயில்லை, சொல்லுங்க’

‘குடும்பப் பெண்களைத்தான் இப்படியான மங்களகரமான நிகழ்ச்சிகளுக்குப் பங்கேற்க விடுவாங்க, எங்க சமுதாயக் கட்டமைப்பு அப்படி, உனக்குத்தான் அந்த அதிஸ்டம் கிடைக்கவில்லையே?’
‘எனக்கா? என்ன சொல்லுறீங்க?’

‘தாலி கட்டாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒண்ணாய் இருந்தால் இவங்க மதிக்கமாட்டாங்க, தப்பாய்த்தான் நினைப்பாங்க.’
‘தப்பாண்னா?’

‘வேண்டாம், சொன்னால் நீ தாங்கமாட்டாய்’
‘நான் தாங்கிக்குவேன், நீங்க சொல்லுங்க’
‘இவள் என்னுடைய மனைவி அல்ல, வைப்பாட்டின்னு..’
அந்தச் வார்த்தை சாட்டை கொண்டு அடித்ததுபோல அவள் மனதைப் புண்படுத்தி இருக்கவேண்டும். சிறிது நேரம் மௌனமாய் இருந்தாள்.
‘ஏன், திருமணம் செய்யாமல் இங்கேயே பலர் ஒன்றாய் சந்தோஷமாய் இருக்கிறாங்களே!’

‘இருக்கலாம், அது அவங்கவங்க கலாச்சாரம், பண்பாட்டைப் பொறுத்தது. தேவை முடிஞ்சு போனால் சட்டென்று பிரிஞ்சும் போயிடுவாங்க’
என்ன நினைத்தாளோ தெரியவில்லை, சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டுச் சொன்னாள்,

‘எனக்கு இப்போதான் புரியுது. போதும் நாங்கள் இப்படி வாழ்ந்த வாழ்க்கை.’ என்றாள்.

எனக்கு அந்த வார்த்தை சற்று அதிர்ச்சியாக இருந்தது.
‘சந்தித்தோம், பிரிவோம்..!’ என்று சொல்லப் போகிறாளோ என்று நினைத்தேன்.

‘குடும்பமாக சொந்தம் பந்தம் என்று நாங்களும் இருக்க வேண்டும் என்கிற ஆசைதான் எனக்கு இப்போ இருக்கு.’ என்றாள்.
‘அப்படின்னா..?’

‘இப்படியும் வாழலாம் என்று உபதேசம் சொன்னவர்களின் சுயரூபம் இப்பதான் மெல்ல மெல்லப் புரியுது. இரட்டை வேஷம் போட்டிருக்கிறாங்கள் என்பதும் தெரியுது. தான், தன்னுடைய குடும்பம் என்று கவனமாக அவர்கள் இருந்து கொண்டு மற்றக் குடும்பங்களைப் பிரிச்சு விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவங்களோட தொழிலாகப் போச்சு. இவங்க சொல்லைக் கேட்டால் இங்கே யாருமே உருப்படமாட்டாங்க.’


நான் குறுக்கிடாது அவள் சொல்வதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘காலம் போனாலும் பரவாயில்லை, ஏதாவது கோயில்லை என்றாலும் எனக்குத் தாலி கட்டிவிடுங்கோ. எனக்கும் அதிலே சம்மதம்’ என்றாள் பெருமூச்சு விட்டபடி.

நம்பமுடியாது சந்தேகத்தோடு அவளைப் பார்த்தேன்.
‘எங்களுக்கு வயதுபோக முந்தி பிள்ளைகளைப் பெற்று நல்ல பிரசைகளாய் அவங்களை இந்த நாட்டில வளர்ப்போம். நாங்கள் ஒழுங்காய்க் கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் அவங்களும் அப்படி இருப்பாங்கள்.

குடும்பம் என்றால் என்ன என்று இப்போதான் எனக்குப் புரியுது.’ என்றாள்.
அவளுடைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று எனக்குப்புரியவில்லை. அவளுக்கு இதுவரை உபதேசம் செய்தவர்கள் எல்லாம் எங்கே போனார்களோ தெரியவில்லை.

அற்ற குளத்து அறுநீர்ப்பறவைபோல மெல்ல மெல்ல அவர்கள் விலகிப் போயிருக்கலாம்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்வது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும் என்பதை இப்போதுதான் இவள் புரிந்து கொண்டிருக்கிறாள். தனித்துப்போய் நிற்கும்போதுதான் இப்படியான ஞானம் பிறக்குமோ தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் இடையிடையே காதல் வலித்தாலும், புரிந்துணர்வு இருந்தால் தேனாய் இனிப்பதும் காதலே என்பதை அவளது அந்த இதமான அணைப்பில் புரிந்து கொண்டேன்.

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)


*********************************************************

குரு அரவிந்தன் வாழி! வாழி!

எழுத்தில்; குருவாம்; இன்முக அரவிந்தன்
பழுத்த கதைசொல்லி பண்பினில் உயர்ந்தோன்
வற்றாத ஊற்றாக வார்த்திடுவார்; கதைகள்
பற்றோடு தமிழையும் பாங்காய்ப் படிப்பித்து
என்றென்றும் சிறப்போடு இன்புற வாழ்கவே!

-கவிஞர் அகணி சுரேஸ் -

Comments