Love Story - காதல் வந்திடிச்சோ..?


காதல் வந்திடிச்சோ..?




குரு அரவிந்தன்


தைமாதத்தில் ஒரு நாள். தைப் பொங்கல் தினம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்று தான் உன்னை முதன் முதலாகக் கண்டேன். பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோ போல நீயும் குளிர் ஆடை அணிந்து தலையை மூடியிருந்தாய்.

கோயில் வாசலில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் எனது வண்டிக்குப் பக்கத்தில் தான் உங்கள் வண்டியும் நிறுத்தப் பட்டிருந்தது. உன் அப்பாவும் அம்மாவும் இறங்கி முன்னால் நடக்க, அவர்களைத் தொடர்ந்து நான் செல்ல, எனக்குப் பின்னால் நீயும் உன் தம்பியோ, தங்கையோ வந்து கொண்டிருந்தீர்கள்.

‘வழுக்கும், கவனம்..!’ என்றாய்.

பின்னால் வருவது பெண் என்று குரல் காட்டிக் கொடுத்தது.

நான் திரும்பிப் பார்த்தேன்.

உன் தம்பியோ தங்கையோ தெரியவில்லை,  கைகளைப் பற்றிக் கொண்டு கயிற்றிலே நடக்கும் சர்க்கஸ் பெண்மணி போல நீ கவனமாக அடிமேல் அடிவைத்து நடந்து வந்து கொண்டிருந்தாய். பனி உறைந்த நிலத்தில் உன் மலர்ப்பாதம் பட்டால் உறைந்துவிடுமே என்று என்மனம் தேவையில்லாமல் வேதனைப்பட்டது.

யாரை அப்படி எச்சரித்தாய்..? உன் பெற்றோரைத்தானே என்று நான் சற்று அலட்சியப் படுத்தி விட்டேன்.

முத்துக்களாய் உன் சிரிப்பொலி சிதறிய போதுதான் உணர்ந்தேன், பனித்தரையில் நான் விழுந்து கிடப்பதை.

‘ஆ.. யூ.. ஓ கே..?’ அருகே, என் முகத்திற்கு மிகஅருகே உன் குரல் கேட்டது.
மழைக்கால மேகத் திரைகளை விலத்தி எட்டிப் பார்க்கும் முழுநிலாவாய் கறுப்பு மேலாடைக்குள்ளால் உன் முகம் பளீச் என்று பிரகாசித்தது. பகலிலும் நிலவா..? கற்பனையில் மிதந்தேன்.

முத்தில் மோகனப் பல்லெடுத்து
முழுமதியென முகமெடுத்து
கத்துங்குயிலின் குரலெடுத்து – இந்த
சித்திரப்பாவை என்செய்தாள்?

குழலினிது யாழினிது என்பர் இவளது இனிய குரல் கேளாதார்!

அவளது இனிய குரல் கேட்ட நான் எழுந்திருக்க முயற்சி செய்தேன். பட்ட காலே படும் என்பது போல எழுந்திருக்க முடியாமல் மீண்டும் மீண்டும் பனி வழுக்கியது.

லட்சியத்தை நோக்கி முன்னேறும் போது ‘திரும்பிப் பார்க்காதே’ என்று சொல்வார்கள். வெளி வீதியில் என்னை அங்கப் பிரதட்சிணம் செய்ய வைப்பதாக அம்மா ஏதாவது நேர்த்திக் கடன் வைத்தாளோ தெரியாது. நான் திரும்பிப் பார்த்ததன் பலன் என்னவாயிற்று என்று பனி நிலத்தை உழுத போதுதான் விளங்கியது.

என் உதடுகளில் பனி பூத்திருந்ததைப் பார்த்ததும் உன் முகம் சட்டென்று வாடிப்போனது.

‘அடி பட்டிருச்சா..?’ இரக்கத்தோடு கேட்டு விட்டு தயங்காமல் கைகளை நீட்டினாய்.

‘உதவிக் கரம்’ பற்றிக் கொண்டு மெதுவாக எழுந்து நின்றேன். உன் கைகள் தொட்ட இடம் பனிக் குளிரிலும் இதமாய்ச் சுட்டது.

கோயில் வீதியில் இப்படியான நினைப்பு வந்திருக்கக் கூடாதுதான், ஆனாலும் வந்து தொலைத்தது. இந்தத் தொடுகைக்காக எத்தனை தடவை வேண்டும் என்றாலும் விழுந்து எழும்பலாம் போலவும் இருந்தது.

நீ என் கையைத் தொட்ட போது உன் கைகளிலே இருந்த கார்ச் சாவியில் தான் என் கவனம் முழுவதும் பதிந்தது. உன் வயதைக் கேட்காமலே நீ பதினாறைக் கடந்து விட்டாய் என்று அது சொல்லாமல் சொல்லிற்று. இதுவே ஊராய் இருந்திருந்தால் நீ என்னைத் தொட்ட போது ஒரு பிரளயமே வெடித்திருக்கும். நல்ல காலம்இ இந்தப் பனிமண்ணில் இதை எல்லாம் தாங்கிக் கொள்வார்கள்.

பிரகாரம் சுற்றிக் கும்பிடும் போது என் கண்களுக்குள் நீ சிக்கிக் கொண்டாய். பொட்டு வைத்த முகமும், பூச்சூடிய கூந்தலும், பட்டுப் பாவாடையும், அரைத்தாவணியும் உன் அழகிற்கு அழகு சேர்ப்பது போல இருந்தன.

சேலை உடுத்தால் எப்படி இருப்பாய் என்று மனசு கற்பனை பண்ணிப் பார்த்தது. சீ சீ உன் மேனிபட்ட எல்லாமே அழகாய்த்தான் இருக்கும்.

மன்னிக்கவும் கற்பனை இலவசமாய்க் கிடைப்பதால் எப்படி வேண்டும் என்றாலும் உன்னைப் பற்றி நினைத்துப் பார்க்கும் சுதந்திரம் எனக்கு இருப்பதாக நினைத்தேன், அவ்வளவுதான்.

பூசை முடிந்து திரும்பிப் போகும்போது நான் மெதுவாக எனது காரை நோக்கி நடந்தேன். நீயோ என்னை விலத்தி, வேகமாக முந்திக் கொண்டு உனது காரை நோக்கி நிதானமாய் நடந்தாய்.

திரும்பிப் பார்ப்பாய் என்று நினைத்தேன். நீயோ திரும்பிப் பார்க்காமலே காரின் கதவைத் திறந்தாய்.

‘திரும்பிப் பார்த்தால் வழுக்கி விழுந்து விடுவோமோ’ என்ற எனது அனுபவம் உனக்கு ஒரு பாடமாய் இருந்திருக்கலாம். அனுபவங்கள்தானே நிறையப் பாடங்களைச் சொல்லித் தருகின்றன.

எங்கே திரும்பிப் பார்க்காமலேயே போய் விடுவாயோ என்று மனம் ஏங்கியது. நீ என்னை ஏமாற்றவில்லை.

என்னையறியாமலே என் மனதை உன் மனம் தொட்டிருக்கலாம்!

வண்டியின் உள்ளே நுழையுமுன் திரும்பி ஒரு பார்வை பார்த்தாயே, முதற் பார்வை! அப்பப்பா.. அப்படியே உறைந்து விட்டது என் இதயம். நீ என்னைத் தொட்டுத் தூக்கி விட்ட போது கூட அசையாத இதயம் அந்தப் பார்வையில் எப்படி உறைந்து போனது என்று எனக்கு இது வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

உறைந்த என் உள்ளத்தை அப்படியே விட்டு விட்டு நீ பேசாமல் போயிருக்கலாம். ஆனால் நீ அப்படிச் செய்ய வில்லை.

போகும் போது காரில் இருந்து என்னைப் பார்த்து ஏன் அப்படி ஒரு புன்னகை சிந்தினாய்..? என்னைப் பைத்தியமாக்கவா..?

பனிக்கட்டியாய் இறுகிக் கிடந்த என் இதயத்தில் கொஞ்சம் உப்பைத் தூவி விட்டது போல இருந்தது.

உறைந்து போயிருந்த இதயம் மீண்டும் உருகிவிட்டது.

பார்வையால் உறைய வைக்கவும், புன்னகையால் உருக வைக்கவும் எப்படித்தான் உன்னால் முடிகிறதோ?

எட்ட நின்று கொண்டு றிமூட் கொன்றோலால் காரை இயங்கச் செய்வதும், அணைக்கச் செய்வதும் போல கிட்ட வராமலே உன் விழி அசைவாலும், புன்னகையாலும் என் இதயத்தை ஆட்டிப் படைக்கிறாயே, தூர இருந்தே என்னை இயக்கும் கருவியாய் நீ மாறிவிட்டாய் என்பது உனக்குத் தெரியுமா?

என் இதயத்தை உருக வைத்ததுதான் வைத்தாய், அங்கேயே ஒரு ரோஜாச் செடியை நட்டுவிட்டுப் போய் இருந்தால் இப்போது அது அழகாகப் பூத்திருக்கும். அந்தப் பூவைப்; பறித்துக் கொண்டு என் காதலைச் சொல்ல உன்னிடம் ஓடி வந்திருப்பேன்.

என் மனதில் சலனத்தை விதைத்து விட்டு நீ மட்டும் போய்விட்டாய்!

உன் உதடுகள் துடித்தால்தான் என்னால் சிரிக்க முடிகிறது!

உன் விழிகள் மூடினால்தான் என்னால் தூங்க முடிகிறது!

உன் அசைவில் தான் என்னால் இயங்க முடிகிறது!

எனக்குள்ளே எப்படி இந்த மாற்றங்கள்? எதையோ எனக்குள் இழந்து விட்டது போல புரிந்து கொள்ள முடியாத தவிப்பு!

வேறு வழியில்லை! அரை மணி நேரமாய் வரிசையில் நின்றேன். ரோஜாக்களின் தோட்டம் எப்படி இந்தப் பெரும்சந்தைக்குள் வந்தது என்று வியப்பாக இருந்தது. ரோஜா மலர்களில் இத்தனை நிறங்களா? பல வர்ணங்களில் ரோஜாக்கள் பூப்பதுகூட இந்த மரமண்டைக்கு இத்தனை நாட்களாய்த் தெரிந்திருக்கவில்லை.

எந்த நாட்டு ரோஜாவோ தெரியாது, பார்த்தவுடன் கண்ணைக் கவர்ந்த இந்த சிவப்பு ரோஜாவை வாங்கி வந்திருக்கிறேன். நான் மட்டும்தான் காதலில் சிக்கித் தவிக்கிறேனோ என்று இதுவரை நினைத்ததைப் பொய்யாக்கி விட்டார்கள் அந்த வரிசையில் நின்றவர்கள். எவ்வளவு ஆவலோடும் எதிர் பார்ப்போடும் இவர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்த வருடமும் இவர்கள் நீண்ட வரிசையில் இப்படிப் பூ வாங்கக் காத்திருப்பார்களோ தெரியாது.

‘இப்போதைக்கு எல்லோருடைய காதலும் வாழ்க..!’ என்று வாழ்த்துவதைத் தவிர வேறு எதுவும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. காதல் கசக்குமென்றால் இத்தனைபேர் வரிசையில் நிற்பார்களா?

விலை மதிக்க முடியாதது என்று நினைத்துத்தான் இந்த ரோஜாவை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். 'எதைத் தருகிறோம் என்பது முக்கியமில்லை, ஏன் தருகிறோம் என்பதுதான் முக்கியம்'. அது உனக்குப் புரிந்தால் என் காதலும் புரியும்.

ஆசையோடு வந்திருக்கிறேன். நாகரிகமான முறையில் காதலைச் சொல்வதில் தப்பில்லை. மனம் திறந்து சொல்லிவிடு!

சம்மதம் சொல்லத் தயக்கமா? வார்த்தைகள் வர மறுக்கிறதா?

வார்த்தைகள் வேண்டாம், வார்த்தைகள் வேண்டாம்,

மௌனத்தினாலே பேசிவிடு!

அதுவே எனக்குப் போதும்.


*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

***********************************************************

Comments