One Minute Story:
கண்ணில் தெரியுது காதல்
குரு அரவிந்தன்.
கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதி;ல் இருவருக்கும் தயக்கம் இருந்தது.
ஓவ்வொரு தடவையும் மனம் திறந்து சொல்லிவிடுவோமா என்று நினைக்கும் போதெல்லாம், மற்றவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ, தூயநட்பு இதனால் உடைந்து விடுமோ என்ற பயத்தில் இருவருமே மௌனம் காத்தனர்.
இனியும் தாங்கமுடியாது என்ற நிலையில், அவள்தான் துணிந்து அவனிடம் கேட்டாள்,
‘பிரதீப், கேட்கிறேனே என்று தப்பாய் எடுத்திடாதே, உனக்கு கேர்ள்பிரண்ட் இருக்கா?’
அவன் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு ‘ஆமா’ என்று தலை அசைத்தான்.
அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மென்று விழுங்கினாள். யார் அந்த அதிர்ஸ்டசாலி என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினாள்.
‘உன்னோட உள்ளத்தைக் கவர்ந்தவளின் போட்டோ இருந்தால் கொஞ்சம் கொடேன், பார்க்கலாம்!’ என்றாள்.
‘எல்லோரும் தங்க காதலியை நெஞ்சிலே சுமப்பாங்க, நான் மட்டும் வித்தியாசமா கண்ணுக்குள்ளே சுமக்கிறேன்’ என்றான்.
‘போட்டோவைக் கேட்டால் கண்ணுக்குள் சுமக்கிறன் என்கிறாய், விரும்பினால் காட்டு இல்லை என்றால் வேண்டாம்’ என்றாள் பொய்யான கோபத்தோடு.
‘சரி, சரி கோபப்படாதே, இங்கேபார்’ என்று தான் அணிந்திருந்த பாதரசம் பூசப்பட்ட தனது கூலிங்கிளாசைச் சுட்டிக்காட்டினான்.
எதிரே நின்ற அவளது ‘அழகான முகம்’ அதிலே பளீச்சென்று தெரிந்தது.
*********************************************************
( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)
***********************************************************
Comments
Post a Comment