Vikatan-Story- Vaaimyien Idaththil




வாய்மையின் இடத்தில்..




குரு அரவிந்தன்

(‘உங்களோடு பழகினது இருக்கட்டும் சார்.. உங்க பையனோட எப்படிப் பழகினா? ரொம்ப நெருக்கமா பழகினாவா? ரெண்டுபேரும் ஒண்ணா வெளியே போய் வருவாங்களா..?’ )


                                                         நன்றி: ஆனந்தவிகடன்

தொலைபேசி அலறிக் கொண்டிருந்தது.

சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசிகூட இப்போதெல்லம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது. கொஞ்ச நாட்களாக யாராவது துக்கம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். புரொபஸர் சிவராமன் மெ ள்ள  எழுந்து வேண்டா வெறுப்பாகத் தொலைபேசியை எடுத்தார்.

யாராக இருக்கும்? என்ன செய்தியாக இருக்கும?; இப்படித்தான் அன்றும் தொலைபேசி அலறியது.

அவரது மகன் சாலை விபத்தில் இறந்து போன செய்தியை இடியாக அவர்மீது இறக்கியது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை.

அவரது குடும்பத்துக்குத் தெரிந்த பலர் நேரே வந்து துக்கம் விசாரித்தார்கள். வரமுடியாத சிலர் தொலைபேசியில் துக்கம் விசாரித்தார்கள். அவன் பிரிந்து விட்டான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கனவு போல எல்லாம் முடிந்து விட்டது.

‘ஹலோ!’

‘மே ஐ ஸ்பீக் டு புரொபஸர் சிவராமன்?’

‘ஸ்பீக்கிங்..!’

‘சார் நான்தான் ரமேஸ்…’

‘ரமேஷா .. எந்த..?’

‘உங்க கிட்ட படிச்சேனே ஞாபகம் இருக்கா?’

‘எந்த ரமேஷ்.. ம்..’

‘கிரிகெட் டீமிலேகூட இருந்தேனே..!’

‘ஆமா ஞாபகம் இருக்கு, பாஸ்ட் பௌலர் ரமேஷ்தானே?’

‘ஆமா சார் ஸ்டேஷன் மாஸ்டரோட மகன்!’

‘இப்போ புரியுது சிவசங்கரோட சன்தானே?’

‘ஆமா சார்! அதே ரமேஷ்தான்! உங்க வீட்டில நடந்த துக்கமான செய்தி கேள்விப்பட்டேன். அதுதான் போன் பண்ணினேன். உங்க மகன் சுரேஷ் என்னோட கிளாஸ்மேட்தான். எவ்வளவு நல்ல பையன், அவனுக்கு இப்படி ஒரு பரிதாபச் சாவு வந்திருக்கக்கூடாது சார், வுpதி யாரை விட்டது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!’

‘என்ன செய்ய, யாரை நோக? எல்லாம் ஒரேயடியாக முடிஞ்சுபோச்சுப்பா’

‘ஐயாம் ஸாரி..! இது உங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’.

‘அவன்தான் போயிட்டானே, இனி அவனைப்பற்றி பேசி என்ன செய்ய ஆமா.. நீ எப்படி இருக்கிறே.. என்ன பண்றே..?’

‘நல்லா இருக்கேன் சார்! ஒரு பெரிய கம்பெனியில கம்ப்யூட்டர் இன்ஜினீயராக இருக்கேன்.’

‘கல்யாணமாயிடுச்சா?’

‘இல்லை சார்.. அதில் ஒரு சிக்கல்!’

‘சிக்கலா? ஏன்.. காதல் கீதலா? அதனாலே வீட்ல எதிர்ப்பா?’

‘இல்லை சார்.. அரேஞ்டு மாரேஜ்தான்! பெண் பார்த்தாச்சு எல்லாமே நல்லாப் பொருந்தி இருக்கு, எங்க வீட்லயும் எல்லோருக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்கு.’

‘அப்புறம் ஏன் தாமதம், உனக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்கில்லையா?’

‘பிடிச்சிருக்கு சார், நல்ல நிறமாக, ரொம்ப அழகா என்னுடைய தோற்றத்திற்கு ஏற்ற மாதிரி பொருத்தமா இருக்கா.’

‘அப்புறம் என்ன.. ஜாம் ஜாம்னு கல்யாணத்தை நடத்தி முடிக்கவேண்டியது தானேப்பா’

‘அங்கதான் சார் ஒரு சின்ன சிக்கல்!’

‘என்ன சிக்கல்?’

‘நீங்களே மகனை இழந்த துயரத்தில் இருக்கிறீங்க உங்க கிட்ட எப்படி?’

‘பரவாயில்லை சொல்லுப்பா, பெண்ணு யார்? எனக்குத் தெரிஞ்சவளா?’
‘ஆமா.. சார்!’

‘அப்போ என்கிட்ட படிச்சவளா?

‘இல்லை, உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச பெண்ணுதான்! சுற்றி வளைச்சுப் பேசாம நேரடியாகவே சொல்லிடறேனே.. பெண்ணு வேறுயாருமல்ல.. உங்க வீட்டு மருமகளாக வர இருந்தவதான்..’

‘யாரு .. நம்ம சுரேஷக்குப் பார்த்த பெண்ணா? சுமதியா? அந்தப் பெண்ணையா கட்டிக்கப்போறே?’

‘ஆமாம் சார்,  அதுதான் அந்தப் பெண்ணைப் பற்றி உங்க கருத்தைக் கேட்டதற்கு அப்புறம்தான் அவங்களுக்குச் சம்மதம் சொல்லலாம்னு இருக்கேன்’



‘ரொம்ப நல்ல பெண்ணுப்பா.. நல்ல குடும்பம், நல்ல குணம், குடும்பத்துக்கு ஏத்த பெண்ணு.. என்ன செய்ய அவளை மருமகளா அடைய எனக்குத்தான் கொடுத்து வைக்கலையே!’ ஏக்கப் பெருமூச்சு விட்டார்.

‘இந்த வீட்டுக்கு விளக்கேற்ற வேண்டியவ.. எத்தனை கனவுகளோடு இருந்தோம்! எல்லாமே முடிஞ்சு போச்சுப்பா!’ அழுது விடுவார்போல இருந்தது.

‘ஆமா.. சிக்கல்னு சொன்னியே.. அந்தப் பெண் பேர்ல தோஷம், ராசி அது இதுன்னு.. ஏதாவது..?’

‘இல்லை, அவங்களைப் பத்திக் கொஞ்சம் சொன்னீங்கன்னா.. பழகறதுக்கு.. அவங்க எப்படி..?’

‘ரொம்ப முற்போக்கான, தைரியமான பெண்ணுப்பா..! மனசில் எதையும் வெச்சுக்க மாட்டா.. பட்டுன்னு கேட்டுடுவா..!’

‘அப்படியா, அவங்க அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவாங்களா?’

‘ஆமா, நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் கல்யாணத்திற்குத் தேதிகூடக் குறிச்சிருந்தோம். வருஷப்பிறப்ன்னிக்கு எல்லோருமா சேர்ந்து கோயிலுக்குப் போய் வந்தோம். அப்புறம் எங்க வீட்டுக்கு வந்து அவ கையாலே விளக்கேத்தி, பால்காய்ச்சி காபி கலந்து எல்லோருக்கும் கொடுத்தா. அப்புறம் சுரேஷ் பார்த்டே பார்ட்டிக்கும் வந்து எங்களோட கலந்துகிட்டா.. ரொம்ப பாசமான பெண்ணு.. இரண்டு மாசங்கூட முடியலை.. எல்லாமே கனவாகக் கலைஞ்சு போச்சு..!’

‘அப்போ அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்திருக்கிறா போல..!’ ரமேஷ் ஆர்வமாகக் கேட்டான்.

‘இல்லப்பா.. மூணே மூணு தடவைதான் வந்திருந்தா.. ஆனா, முப்பது வருஷபந்தம் போல எங்களோட பழகினா..!’

‘உங்களோடு பழகினது இருக்கட்டும் சார்.. உங்க பையனோட எப்படிப் பழகினா? ரொம்ப நெருக்கமா பழகினாவா? ரெண்டுபேரும் ஒண்ணா வெளியே போய் வருவாங்களா..?’

சிவராமன் ஒரு கணம் யோசித்தார், அவன் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறான் என்பது சட்டென்று அவருக்குப் புரிந்தது.

‘அவங்க ஒண்ணாப் படுத்தாங்களா?’ என்று நேரே கேட்க முடியாமல் இப்படிச் சுற்றி வளைத்துக் கேட்கிறானே..!’

‘சே.. இவன் ஒரு சந்தேகப்பிராணி! கல்யாணத்திற்கு முன்பே இப்படித் துருவித் துருவி விசாரிப்பவன் வாழ்நாள் ழுழுவதும் அவளை என்ன பாடு படுத்துவானோ?’

‘பாவம்.. சுமதி! இந்தக் கிராதகனையா அவள் மணந்து கொள்ள வேண்டும்?’;
வேண்டாம். அந்தத் தங்கமான பெண்ணுக்கு வேறு உத்தமமான வரன் கிடைக்காமல் போகாது. அவ நல்லாயிருக்கணும்!

‘நீ கேட்க வர்றது, என்ன நினைக்கறே என்கிறது எனக்குப் புரியுதுப்பா, ஆமாம்! இது போதுமா..?’

பட்டென்று ரிசீவரை வைத்தார் சிவராமன்.

நன்றி: ஆனந்தவிகடன்






Comments