போதி மரம்
குரு அரவிந்தன்
'அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று...'
.

அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் 'பிரித்" ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி..!
அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா ‘நான் ஒரு நல்ல பௌத்தனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘இல்லை’ என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.
‘நான் ஏன் இப்படிச் சாக்கடைப் புழுவாய் மாறினேன்? நாட்டுப்பற்றா? மதவெறியா? இல்லை மொழிவெறியா?’
எதுவுமே இல்லை! குடும்பத்தின் வறுமை தான் அவனை இராணுவத்தில் தொழில் புரிய இழுத்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பள்ளிப் படிப்பு அதிகம் வரவில்லை. அவனது கட்டுமஸ்தான உடம்பிற்கு இந்தத் தொழில் ஒன்றுதான் அந்த நேரம் ஏற்றதாக இருந்தது. எனவே தான் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான்.
அவன் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் தினமும் பயிற்சி செய்வதுஇ சாப்பிடுவதுஇ தூங்குவதுஇ போன்றவை தான் இராணுவத்தின் தொழிலாக இருந்தது. எப்போதாவது எங்கேயாவது மழை வெள்ளமென்றால் அங்கே போய் மக்களுக்கு உதவி செய்வார்கள். அவ்வளவுதான். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இப்படித்தான் அவனது இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் நடைபெற்ற இனக்கலவரம் அவனால் மறக்க முடியாத ஒரு சம்பவமாகிவிட்டது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட போது வீதிக்காவல் கடமையில் அவன் நின்றிருக்கிறான். கொள்ளை அடித்தவர்கள் தனது இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவற்றைக் கண்டும் காணாதது போல அவன் இருந்திருக்கிறான்.
அன்றுதான் முதன்முதலாக அவனும் இப்படியான அநியாயத்திற்குத் துணைபோனான். அப்புறம் எத்தனையோ தடவைகள் இப்படியான அநியாயங்கள் நடக்கும் போதெல்லாம் தவறு என்று தெரிந்தும் வாய்மூடி மௌனமாய் இருந்திருக்கிறான்.

மண்ணாசைஇ பொன்னாசைஇ பெண்ணாசை இவையெல்லாம் மனிதனின் அழிவிற்காக ஏற்பட்ட ஆசைகள்தான் என்பது அவனுக்குத் தெரியும். மாற்றான் வீட்டு மண்ணை ஆக்கிரமிக்க அரசு ஆசைப்பட்ட போது சேவை காரணமாக மறுக்க முடியாமல் அவனும் அங்கே கடமைக்குப் போனான். ஆக்கிரமித்த நிலத்தில் கால் பதித்த கட்டுப்பாடற்ற இராணுவம் தான்தோன்றித் தனமாய் அங்கே நடக்க முற்பட்டது.
வறுமையில் வாடிய அப்பாவி மக்கள் துப்பாக்கி முனையில் பலவந்தமாய் அடக்கப்பட்டனர். காய்ந்து கிடந்த இளமைகள் அடங்காத ஆசைகளோடு பொன்னுக்கும் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு அலைந்தன. ஆகமொத்தமாக தீராத ஆசைகளோடுதான் அந்த இராணுவம் அங்கே களம் புகுந்தது.
அன்று வீதிச் சோதனைக்காக உயர் அதிகாரியோடு அவனும் வேறு சிலரும் சென்ற போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. வீதிக்குக் குறுக்கே யாரோ கற்பாறை ஒன்றை நகர்த்தி இருந்தார்கள். பாதைத் தடை காரணமாக சந்தேகத்தின் பேரில் அருகே உள்ள வீடுகளைச் சோதனை போட்டார்கள்.
அப்போது தான் மங்கிய வெளிச்சத்தில் ஜன்னல் வழியாக அவள் முகம் அங்கே தெரிந்தது. கட்டில் விளிம்பில் தலை குனிந்தபடி அவள் உட்கார்ந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே அவளிடம் ஒரு கவர்ச்சி தெரிந்தது. அந்த அழகை அவளுக்குத் தெரியாமல் வெளியே நின்றபடி அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.
திடீரென வாசற் கதவை உதைத்துக் கொண்டு உயரதிகாரி உள்ளே நுழைவதையும் அவள் பயத்தோடு திடுக்கிட்டு எழுந்து நிற்பதையும் அவனால் பார்க்க முடிந்தது. அவள் மடியில் இருந்த குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். அவன் நல்ல நோக்கத்தோடு உள்ளே வரவில்லை என்பதை அவனது பார்வையில் இருந்தே அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
அவசரமாக முந்தானையை இழுத்து திறந்த மார்பை மறைக்க முயற்சி செய்தாள். அவள் இருந்த கோலமும் தனிமையும் உயரதிகாரியை வெறி கொள்ளச் செய்திருக்க வேண்டும். அவளைப் பிடித்திழுத்து மூர்க்கத் தனமாய் கட்டிலில் உயரதிகாரி தள்ளிய போதுதான் ‘மது குடித்தால் தான் வெறிக்கும் மாது பார்த்தாலே வெறிக்கும்’ என்று அந்த உயரதிகாரி அடிக்கடி சொல்வது அவனுக்கு நினைவிற்கு வந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று.
உயரதிகாரி காரியம் முடிந்து வெளியேறியதும் அவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. பால்வடிந்த வாயோடு பச்சைக்குழந்தை தரையில் வீரிட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் சகிக்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டவன் ‘லெட்ஸ் கோ’ என்ற உயரதிகாரியின் கட்டளைக்குப் பணிய வேண்டிவந்தது. ஆனாலும் கடமையின் நிமிர்த்தம் அவன் மீண்டும் மௌனம் காத்தான்.
அந்தத் தாய் அன்று போட்ட சாபமோ என்னவோ ஆனையிறவுச் சமரின் போது அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த முகாம் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் தண்ணீரில்லாமல் நாவறண்டு உயிருக்குப் போராடியதும் முகாமை விட்டுத் தப்பிப் பின்பக்கமாய் ஓடும்போது தாங்களே முகாமின் பாதுகாப்பிற்காக புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயரதிகாரி பலியானதும்இ அவனது கால் ஊனமானதும் அவனால் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
முகாமை விட்டுத் தப்பி ஓடும் போது தான் மரணம் அவனைப் பின்னால் துரத்துவது அவனுக்குப் புரிந்தது. இந்த உலகில் வாழப்போவது சிறிது காலம் தான் என்று அவனுக்கு தெரிந்த அடுத்த நிமிடமே மரணபயமும் அவனைப் பிடித்துக் கொண்டது. அது கூட அவனது ஒரு கால் கண்ணிவெடியில் சிக்கி ஊனமுற்ற போது தான் அப்படி அவனுக்குச் சிந்திக்கத் தோன்றியது. காலின் வலியை விட மனசுதான் அதிகம் வலித்தது.
இந்தக் குறுகிய காலத்திற்குள் மொழிவேற்றுமை மதவேற்றுமை ஜாதிவேற்றுமை போன்ற பல விதமான வேற்றுமைகளை அவன் சந்தித்து இருக்கிறான். இந்த வேற்றுமை உணர்வுகள் தானே மனிதனை மிருகமாக்கி ரத்த வெறி பிடித்து அவர்களை அலைய வைக்கிறது. வேண்டாம் வேற்றுமை ஒன்றுமே வேண்டாம்! இப்போதைக்கு அன்பு என்கிற இயற்கையின் மொழியைப் புரிந்து கொண்டாலே அவனுக்குப் போதும் போல இருந்தது!
‘அன்பு’ என்றதும் அவனது உடம்பு சிலிர்த்துக் கொண்டது. அன்பாலே முடியாதது ஒன்றுமில்லை. அது ஒரு இன்ப ஊற்று. என்றுமே வற்றாத ஒரு ஜீவநதி. போதிமரத்தின் கீழ் உட்காராமலே அவனுக்கு சிறிது சிறிதாக ஞானம் பிறந்தது.
இராணுவத்திடம் இருந்து வந்த ‘விரும்பினால் மறுபடியும் சேவைக்கு வரலாம்’ என்ற அழைப்புக் கடிதம் அவனை மீண்டும் சிந்திக்க வைத்தது. யுத்தம் என்ற போர்வையில் ஒன்றுமே அறியாத அப்பாவிகளின் உயிரைப் பலி எடுக்கவா இந்த அழைப்பு?
சின்ன வயதில் படித்த யுத்த வெறி பிடித்த அசோகச் சக்கரவர்த்தியின் சரித்திரம் கண் முன்னால் விரிந்து நின்றது. புத்தபிரானும் பிறப்பால் ஒரு இந்து தானே! அவர் புனித பூமியில் அவதரிக் காவிட்டால் நானும் ஒரு இந்துவாக இருந்திருப்பேனோ? அன்று அந்தப் பெண் ‘அம்மா’ என்று கத்தாமல் ‘அம்மே’ என்று எனது மொழியில் அவலக்குரல் எழுப்பி இருந்தால் உதவிக்கு ஓடியிருப்பேனோ? ஒருவேளை ஊமையாகப் பிறந்திருந்தால் நான் என்ன மொழி பேசியிருப்பேன்? மொழி எல்லாம் ஊமையானால்;;;..? அவனது சிந்தனைகள் விரிந்து கொண்டே போகக் கலங்கிக் கிடந்த மனம் தெளிவானது.
அவன் தனது இராணுவ உடையைக் கழைந்து விட்டு காவி உடை அணிந்து கொண்டான். ஆயுதத்தைக் கிழே போட்டுவிட்டு அகிம்சையைக் கைகளில் எடுத்துக் கொண்டான். கறை படிந்த உடம்பு தூய்மையானது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. இனி மனிதநேயம் ஒன்றே தனது லட்சியம் என்று எண்ணியவனாய் அருகே உள்ள பௌத்தசாலையை நோக்கி நொண்டிக் கொண்டே நடந்தான்.
வானத்தைப் பார்த்துப் பழகிப்போன அவன் அனிச்சையாக நிமிர்ந்து பார்த்தான். யுத்த மேகங்கள் கலைந்து போக வானத்து இரைச்சல் அடங்கிப் போயிருந்தது. அவனது மனதைப் போல நீண்ட நாட்களின் பின் கீழ்வானம் வெளித்திருந்தது. தொலைவானத்தில் காலைச் சூரியனின் கதிரெளியில் வெள்ளைப் புறாக்கள் சுதந்திரமாய் சிறகடித்துப் பறப்பதைப் பார்க்கக் காயப்பட்ட மனதிற்கு இதமாக இருந்தது.
பௌத்த மடத்தை அடைந்த போது அதன் வாசற் கதவு இழுத்து மூடப்பட்டிருந்தது. போதி மரத்தின் கீழ் காவி உடை ஒன்று மடித்து வைக்கப் பட்டிருந்தது. பௌத்த பிக்குவினால் எழுதப் பட்ட வாசகம் ஒன்றும் அங்கே பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது.
‘தமிழர்களை வென்றெடுக்கும் யுத்தத்தில் பங்கு கொள்வதற்காக நான் இராணுவத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறேன்.’
நிழல் நிஜமாக நிஜம் நிழலானது!
....................................................................................................
Comments
Post a Comment