True Story - Vikatan - Harambe ஹரம்பி


Vikatan True Story : Harambe


ஹரம்பி




குரு அரவிந்தன்

Kuru Aravinthan



( தன்னைப் பலி கொடுத்த ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே! )

    நன்றி: 



ந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது.

ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன்.

இப்பொழுதெல்லாம் முகநூல் இருப்பதால் உடனுக்குடன் வாழ்த்துச் செய்தி அனுப்பி எங்கள் விருப்பத்தைச் சொல்ல முடிகின்றது.

17 வது பிறந்த நாள் என்பதால் ஹரம்பியின் அழகான படத்தைப் போட்டு ஒரு லைக் போடுங்கள் என்று முகநூலில் பதிவு செய்திருந்தார்கள். சென்ற வருடம் ஸ்வீட் ஸிக்டீன் என்று 16 வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடிய புகைப்படங்களும் அந்த முகநூலில் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன்.

ஸ்வீட் ஸிக்டீனைக் கடந்து சென்ற ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாதது அந்த நாள் என்பதால் ஹரம்பிக்கும் மறக்க முடியாத நாளாக அது இருந்திருக்கும். வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தை நோக்கிய நகர்வு இங்கேதான் அனேகமானவர்களுக்கு ஆரம்பமாகின்றது. ஏனோ முகநூலில் பார்த்த ஹரம்பியின் அந்த அப்பாவித் தனமான பார்வையில் ஏதோ ஒரு சோகம் குடியிருப்பதை அவதானிக்க முடிந்தது. ஒருவேளை ஹோம்சிக் என்று எல்லோரும் சொல்வது போல உறவுகளைப் பிரிந்து, இயற்கைச் சூழலை விட்டு இங்கே வந்த சோகமாகக்கூட அது இருக்கலாம்.

ஹரம்பியின் இந்த சிறை வாழ்க்கை எத்தனை வருடங்களாகத் தொடர்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறையில் அடைத்து வைக்குமளவிற்கு ஹரம்பி எந்த ஒரு குற்றமும் செய்திருக்க நியாயமில்லை என்பதைக் குழந்தைத் தனமான அந்த முகத்தைப் பார்த்த போதே நான் புரிந்து கொண்டேன்.

ரெக்ஸாசில் இருந்த ஹரம்பியை அந்தச் சிறைக்குக் கொண்டு வந்ததற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கலாம், ஒருவேளை அனாதையாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருக்கலாம். ஆனாலும் முதல் நாள் பார்த்த போதே எனக்குக் ஹரம்பியைப் பிடித்துப் போய்விட்டது.

ஒரு நிமிடத்தில் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயதுபோல, ஹரம்பிக்குப் பதினேழு வயதிலே தத்து என்று தலையில் எழுதப்பட்டிருக்கலாம்.

நான்கு வயதுதான் இருக்கும், யமதூதுவன் போல அந்தச் சிறுவன் பெற்றோருடன் அங்கு நுழைந்திருந்தான். செயற்கையாகப் போடப்பட்ட பாதுகாப்பு வேலிபோலப் பதினைந்தடி ஆழத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த அந்தக் காட்சிதான் அவன் கண்ணில் முதலில் பட்டது. தண்ணீரைக்கண்டதும் தானும் தண்ணீரில் விளையாடப் போவதாக அவன் அடம் பிடித்தான். தாயார் என்ன சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாகத் தாயாரின் கைகளை உதறிவிட்டு, அந்த இடத்திலே தரையில் உட்கார்ந்து கொண்டான். தாயார் சற்று விலகியதும் எழுந்து ஒரே ஓட்டமாக ஓடி மேலே போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியையும் கடந்து திடீரெனக் கீழே குதித்தான்.

ஒரே நிமிடந்தான், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்வையாளர்கள் எல்லோரும் உறைந்து போனார்கள். கீழே விழுந்த சிறுவன் அடிபட்டதால் அப்படியே மயக்கமாகக் கிடந்தான். பதினைந்தடி ஆழமாகையால் கீழே விழுந்த போது சிறுவனின் உடம்பில் அடிபட்டிருக்கலாம், சில நிமிடங்கள் மயக்க நிலையில் அசையாமல் அப்படியே அவன் கிடந்தபோதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது, சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் கீழே இருந்த இரண்டு பெண் கொரிலாக்கள் அந்தச் சிறுவனை நோக்கி வேகமாக ஓடிவந்தன.

மேலே நின்ற கும்பல் ஓவென்று கூக்குரலிட, இதைக்கண்ட ஹரம்பி ஓடிச்சென்று அந்தக் கொரிலாக்களைத் தள்ளிவிட்டு கீழே மயங்கிக் கிடந்த அந்தச் சிறுவனைக் குனிந்து பார்த்தது. மற்றக் கொரிலாக்களால் ஆபத்து வரலாம் என்று நினைத்தோ என்னவோ, தனது காதலிகளான அந்த இரண்டு கொரிலாக்களையும் சற்றுத் தூரம் வரை விரட்டிவிட்டுப் பொறுப்புள்ள ஒரு தகப்பனைப் போல சிறுவனுக்கு அருகே வந்து பாதுகாப்பாக நின்று கொண்டது.


மயக்கம் தெளிந்த சிறுவனின் கண்களில் எதிரே பூதாகரமாய் நின்ற ஹரம்பிதான் கண்ணில் படவே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத சிறுவன் ஓவென்று பலமாக அழத் தொடங்கினான். இதைப் பார்த்துக் கொண்டு வெளியே நின்ற மக்கள் கூட்டம் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்தில் மீண்டும் கூக்குரலிட்டது. அவர்கள் கும்பலாகக் கீழே வந்து அந்தச் சிறுவனைத் தாக்கி விடுவார்களோ என்ற பயம் ஹரம்பியைச் சட்டென்று பிடித்துக் கொண்டது.

மேலே நின்று கத்திக் கூக்குரலிடும் அந்தக் கும்பலின்; சத்தம் மேலும் மேலும் அதிகரிக்கவே, அவர்கள் எந்த நேரமும் கீழே வந்து சிறுவனைத் தாக்கலாம் என்ற பயத்தில் ஹரம்பி மேலே அண்ணார்ந்து பார்த்தது. சிறுவனை அந்தக் கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் இதற்கு ஒரே வழி அந்தச் சிறுவனை ஒதுக்குப் புறமாகக் கொண்டு சென்று கூக்குரலிடும் மக்களிடம் இருந்து பாதுகாப்பதே என்று அது நினைத்தது.

ஐந்தறிவு படைத்த அந்த மிருக்த்திற்கு அதைவிட வேறு எதுவம் யோசிக்கத் தோன்றவில்லை. தனது குட்டிகளை எப்படிப் பாதுகாக்குமோ அப்படித்தான் அது செய்ய நினைத்தது. ஆனால் மிருகம் ஒன்று நினைக்க மனிதன் ஒன்று நினைத்தான். ஹரம்பியால் சிறுவனுக்கு உயிராபத்து ஏற்படலாம் என மிருக்காட்சிச் சாலைப் பணியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் ஹரம்பியோ எந்த ஒரு கட்டத்திலும் சிறுவனைத் தாக்கவோ, பயமுறுத்தவோ முற்படவில்லை, மாறாகச் சிறுவனைப் பாதுகாக்கவே நினைத்தது.

எனவே சிறுவனைத் தூக்கித் தனது காலடியில் இருத்திவிட்டு அவனைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தது. பாதுகாப்பான ஒரு மூலையில் சிறுவனை உட்கார வைத்தால் மக்கள் கூட்டம் சிறுவனைத் தாக்க மாட்டார்கள் எனக் ஹரம்பி நினைத்து, எங்கே சிறுவனைப் பாதுகாப்பாய் வைக்கலாம் என்று அக்கம் பக்கம் பார்த்தது.

ஹரம்பி சுமார் 400 இறாத்தல் நிறை இருக்கலாம். நெட்டையான உருவம், சுமார் ஐந்தரையடி உயரமிருக்கலாம். நடக்கும் போது அசைந்து அசைந்து நடப்பதே அதற்குத் தனி அழகைக் கொடுத்தது. மேலே நின்று கத்திக் கூக்குரலிட்டவர்கள் அந்தச் சிறுவனைத் தாக்க முனைந்ததால்தான், அவர்களிடம் இருந்து தப்புவதற்காகத்தான் சிறுவன் கீழே தண்ணீருக்குள் குதித்தான் என்றுதான் ஹரம்பி நினைத்தது. அந்தக் கும்பலிடம் இருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மட்டும்தான் ஹரம்பியின் நினைவில் நிறைத்திருந்தது.

சட்டென்று தண்ணீருக்குள் இருந்த சிறுவனை அணைத்துத் தூக்கி நிற்க வைத்தது. சிறுவனைத் தூக்கி நிற்க வைத்த ஹரம்பிக்குச் சிறுவனை இரண்டு கைகளாலும் அணைத்துத் தூக்கி தோளில் போடத் தெரியவில்லை. தனது குட்டியை எப்படிக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு செல்லுமோ அப்படித்தான் சிறுவனைப் பிடித்து கொண்டு சென்றது. கீழே விழுந்து முழங்காலில் அடிபட்டதால் சிறுவனால் நடக்க முடியாமலிருந்தது. மீண்டும் தண்ணீருக்குள் விழுந்த சிறுவனை என்ன செய்யலாம் என்று ஒரு கணம் யோசித்தது. ஐந்தறிவுதான் என்றாலும் புத்திசாலிக் ஹரம்பி சிறுவனை அப்படியே தண்ணீரில் மிதக்க விட்டபடி அப்படியே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் சென்றது.

இக்கட்டான அந்த சூழ்நிலையில் வேறெதுவும் செய்யக் கூடிய நிலையில் ஹரம்பி இருக்கவில்லை. குழந்தையைத் தண்ணீருக்குள்ளால் இழுத்துச் சென்று பாதுகாப்பாக மூலையில் உட்கார்ந்து கவனமாகத் தனது காலடியில் இருத்திவைத்திருந்தது.

கும்பலின் குரல் இப்போது இன்னும் அதிகரித்திருந்துது.

‘சூட் தட் நாஸ்டி அனிமல்’ கும்பலில் யாரோ கூக்குரலிட்டார்கள்.

அடுத்த கணம் அருகே நின்ற சிலரும் சேர்ந்து அவனோடு கோரஸ் பாடினார்கள்.

‘சுடுவதா இல்லையா?’ துப்பாக்கியோடு ஹரம்பியைக் குறிவைத்தபடி நின்ற காவலாளியின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

எந்த ஒரு காரணமும் இல்லாமல் அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்படப் போகிறதே என்ற கவலைகூட இல்லாமல் ‘கொன்றுவிடு’ என்ற குரல்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியில் மனதில் வலுக் கட்டாயமாக மீண்டும் மீண்டும் விதைக்கப்பட்டன.

தற்செயலாகச் சிறுவனுக்கு ஏதாவது நடந்தால் தன் மீது பழியைப் போட்டு விடுவார்கள். அதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்போடு அவனது விரல் றிக்கரில் பதிந்தது.

குரங்கில் இருந்து பிறந்தவன் தான் மனிதன் என்பார்கள். தன்னை சுடுவதற்கு இந்த ஆறறிவு படைத்தவர்கள் ஏன் குறி வைக்கிறார்கள் என்பது கூட அந்த ஐந்தறிவு படைந்த கெரில்லாவிற்குப் புரிந்திருக்கவில்லை.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கி ரவை துளைத்து இரத்தம் பீறிட்ட போதும்கூடச் சிறுவனைத் தாக்க ஹரம்பி முனையவில்லை. உயிர் பிரியும் அந்தக் கடைசி நிமிடத்தில்கூட ‘உன்னை வெறிபிடித்த இந்த மனிதக் கூட்டத்தில் இருந்து பாதுகாக்க என்னால் முடியவில்லையே’ என்ற இயலாமையுடன் கண்களில் நீர்துளிர்க்க மௌனமாக அந்தச் சிறுவனைப் பார்த்தது ஹரம்பி. அடுத்த விநாடியே விழி மூடக்கூட அவகாசம் இல்லாமல் அதன் உயிர்த் துடிப்பு மெல்ல அடங்கிப் போனது.

வாய் பேசமுடியாத அந்த ஜீவனின் உயிரைப் பறித்து விட்ட மனநிறைவோடு வெளியே நின்று கத்திக் கூக்குரலிட்டவர்கள் தங்கள் வெறி அடங்கியதும் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.

‘கட்டுக்கடங்காமல் போகலாம் என்பதால் ஹரம்பியைச் சுட்டுக் கொன்று விட்டோம்’ என்று பொறுப்பானவர்கள் அறிக்கையில் எழுதிவைத்து விட்டுப் போய் விட்டார்கள். ‘உங்களைவிட எங்களுக்குத்தான் கவலை அதிகம்’ என்று முகநூலில் பதிவு செய்து தங்களுக்குள் வேறு சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.

தன்னைப் பலி கொடுத்ததன் மூலம் காலமெல்லாம் திட்டித் தீர்க்கவிருந்த மனித குலத்திடம் இருந்து ஹரம்பி விடுதலை பெற்றுக் கொண்டது.

அவரவருக்கு அவரவர் வாழ்க்கை முக்கியமானாலும், ஓன்று மட்டும் எனக்குப் புரியவில்லை, இவர்களுக்கு எப்படி மனம் வந்தது ஹரம்பியைச் சுட்டுக் கொல்வதற்கு? அனாதையாய் கூண்டுக்குள் அடைந்து கிடந்து இத்தனை காலமாய் வந்து போன பார்வையாளர்களை எல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருந்த ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே!


நன்றி: விகடன்
.........................................................................................................................

Comments