துடுப்பிழந்த படகில் உயிர் துடித்த போது..!
(குரு அரவிந்தன்)
சுமார் 10 மில்லியன் மக்களுக்கு மேல் காவுகொண்ட முதலாம் உலக யுத்தம், ஜேர்மனி நாடு சரணடைந்ததைத் தொடர்ந்து 1918 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 11 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அதே வருடம் மூன்று மாதங்களுக்கு முன்பாக, 1918 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வடஅமெரிக்காவில் உள்ள கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியில் வந்து விழும் ஆற்றில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. நூறு வருடங்களின் பின் அந்தச் சம்பவம் பற்றிச் சென்ற மாதம், நயாகரா பார்க் குழுவினரால் நினைவு கூரப்பட்டது.
1918 - 08 - 06
செவ்வாய்க்கிழமை - மாலை நேரம் 3:15 மணி
இழுவைப்படகோட்டி திரும்பிப் பார்த்தான். பனி மூட்டத்திற்குள் எதுவும் தெரியவில்லை. சீரான வேகத்தில் சென்ற இழுவையந்திரப் படகின் (Tug boat) வழமைக்கு மாறான விரைவைப் பார்த்ததும் ஏதோ தவறு நடந்து விட்டதை உணரமுடிந்தது. இழுவைப்படகின் வேகத்தைக் குறைத்து விட்டுப் பின்பக்கத்தில் சென்று பார்த்தான், வண்டல் மண் ஏற்றியபடி பின்னால் கட்டி இழுத்து வந்த படகைக் காணமுடியவில்லை. என்ன நடந்திருக்கும்? சுமார் 80 அடி நீளமும் 30 அடி அகலமுமான, பின்னால் கட்டி இழுத்துவந்த அந்தப் படகைப் (iron scow) பனிப் புகாருக்குள் அவனால் பார்க்க முடியவில்லை. கட்டியிருந்த கேபிள் வடக்கயிற்றை இழுத்துப் பார்த்தான், கேபிள் கயிறு இலகுவாக இழுபட்டு கையோடு வந்தது. நெஞ்சு திக்கென்று அடித்துக் கொண்டது. வேகமாக அடித்துச் செல்லும் ஆற்றில் இழுத்து வந்த பாரப்படகு (A barge-like vessel) கட்டவிழ்த்துக் கொண்டு விட்டதை உணரமுடிந்தது. அப்படியானால், அதில் இருந்த அவனுடன் வேலை செய்த இருவருக்கும் என்ன நடந்திருக்கும்?
இழுவைப் படகால் இழுத்து வந்த படகில் இருவர் இருந்தார்கள். குரல் கொடுத்துப் பார்த்தான், எந்தப் பதிலும் அங்கிருந்து வரவில்லை. நினைக்கவே பயம் பிடித்துக் கொண்டது. நயாகரா அப்பறிவர் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்காவின் நிலப்பகுதியில் இருந்து கனடாவின் தெற்கு எல்லை நோக்கி ஓடிவந்து நயாகரா நீர்வீழ்ச்சியாக மாறும் ஆற்றில்தான், நீர்வீழ்ச்சிக்கு அருகே இந்த விபத்து நடந்தது.
இந்த ஆறுதான் சற்றுத் தூரம் சென்றதும், மிகப்பெரிய ஓசையோடு நயாகரா நீர்வீழ்ச்சியாக மாறிச் சுமார் 200 அடிவரை கீழ் நோக்கித் தண்ணீரைக் கொட்டுகின்றது. ஒருவேளை நீரோட்டத்தோடு இழுபட்டு நீர்வீழ்ச்சிக்குள் அகப்பட்டிருப்பார்களோ? இதற்குள் விழுந்த யாரும் இதுவரை உயிர் தப்பியதில்லை என்பதால், அவனது உடம்பு அவனை அறியாமலே நடுங்கத் தொடங்கியது.
நயாகரா மின் நிலையத்திற்கான வேலைக்காக கப்டன் ஜோன் வலஸ், ஹஸஜம்பா என்ற படகின் படகோட்டியாக (‘Hassayampa’ being operated by Captain John Wallace) இந்த ஆற்றில் வேலை செய்து கொண்டிருந்தான். தினமும் வண்டல் மணலை ஆற்றில் இருந்து அள்ளிச் செல்வதற்காகத்தான் இந்தப் படகு பாவிக்கப்பட்டது. எனவே இந்த சுற்றாடல் அவனுக்குப் பழக்கமானதாக இருந்தது. சுமார் 200 அடி உயரமானதும், 2,200 அடி அகலமானதுமான நயாகரா நீர்வீழ்ச்சி ஒரு நிமிடத்திற்கு ஆறு மில்லியன் கியுபிக் அடி தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருப்பது அவனது நினைவுக்கு வந்தது. சுமார் 30 மைல் வேகத்தில் கீழ் நோக்கி விழும் தண்ணீர் மட்டும் 100 அடி ஆழத்திற்கு கீழே செல்கின்றது. முதற்குடி மக்களின் மொழியில் நயாகரா என்றால் கழுத்து என்று பொருள் படும், இதற்குள் விழுந்த யாரும் இதுவரை உயிர் தப்பியதில்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான்.
வேகமாக அடித்துச் செல்லும் ஆற்றில், மேற்கொண்டு நீர்வீழ்ச்சிப் பக்கம் செல்வது ஆபத்தானது என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசித்துப் பார்த்தான். அக்காலத்தில் உடனடியாகத் தொடர்பு கொள்ள செல்போன் வசதிகள் இல்லை என்பதால், உடனடியாகவே கரைக்கு வந்து நடந்த விடயத்தை அதிகாரிகளுக்குத் தெரிவித்தான்.
கட்டவிழ்த்துக் கொண்டு நீர்வீழ்ச்சியை நோக்கி வேகமாக நகர்ந்த படகில், பபலோவைச் சேர்ந்த இருவர் வேலை செய்தார்கள். சுவீடனில் இருந்து வந்து குடியேறிய கஸ்ராவ் லொவ்பேர்க் (Gustav Lofberg) என்பவரும் ஜேம்ஸ் ஹரிஸ் (James Harris) என்பவரும்தான் அந்தப் படகில் வேலை காரணமாகத் தனித்து இருந்தார்கள். கடல் அனுபவம் மிக்க லொவ்பேர்க்கைவிட, ஹரிஸ் வயதில் குறைந்தவராகவும், கடல் அனுபவம் அற்றவராகவும் இருந்தார். தங்கள் படகு கட்டவிழ்த்து விட்டதை விரைவாகவே அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
‘எங்களுடைய படகு நீர்வீச்சியை நோக்கி வேகமாக நகர்கிறது, என்ன செய்யலாம்’ என்றான் அருகே ஓடி வந்த ஹரிஸ் பதட்டமாக.
‘தெரியும், கொஞ்சம் பொறுமையாக இரு’ என்று லொவ்பேர்க் அவனைச் சமாதானப்படுத்தினான்.
‘தெரியமா, தெரிந்துமா இப்படி மௌனமாக இருக்கிறாய்?’
‘ஒரு முறைதான் நாங்கள் இறக்கப் போகிறோம், அது எப்போ என்பதை நாங்களே தீர்மானிப்போம்’ என்றான் லொவ்பேர்க்.
‘என்ன சொல்கிறாய் லொவ்பேர்க், என்ன நடக்கப் போகிறது என்று உனக்குத் தெரியலையா, படகு நீர்வீழ்ச்சிக்குள் விழப்போகிறது?’
நீர்வுpழ்ச்சியின் இரைச்சல் அதிகரித்துக் கொண்டிருப்பது இவர்களின் காதில் காலன் கூவி அழைப்பது போல விழுந்தது.
‘தெரியும் பதட்டப் படுவதாலே ஒன்று நடக்காது, படகை நிறுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்றுதான் யோசிக்கிறேன், இருந்தால் அதை முயற்சிப்போம்’ என்றான் லொவ்பேர்க்.
‘எப்படி?’ நம்பிக்கை இல்லாமல் கேட்டான் ஹரிஸ். இன்னும் சில நிமிடங்களில் நீர்வீச்சியோடு சமாதியாகப் போகிறோமே என்ற நினைப்பில் அவனது குரலில் நடுக்கம் தெரிந்தது.
‘இப்போ இதனுடைய வேகத்தைக் குறைக்க வேண்டுமானால், கீழே உள்ள கதவைத் திறந்து விடுவோம்.’
‘கதவைத் திறந்தால் தண்ணீர் உள்ளே வந்து படகு மூழ்கிவிடுமே?’
‘இல்லை, படகின் பாரத்தைக் கூட்டினால் தண்ணீரில் அடித்துச் செல்லும் வேகத்தைக் குறைக்க முடியும் என்றான்’ லொவ்பேர்க்.
மிக அருகே இருந்த நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ‘வா வா’ என்று அவர்களின் காதுக்குள் இன்னும் பெரிதாக ரீங்காரமிட்டது.
1918 - 08 - 06
செவ்வாய்க்கிழமை - மாலை நேரம் 3:25 மணி
பதினாறு வயதில் இருந்தே கடலில் படகோட்டிய அனுபவம் லொவ்பேர்க் என்பவருக்கு இருந்தது. ஆனால் வேகமான ஆற்றிலே படகோட்டுவது என்பது வித்தியாசமானது. நீர்வீழ்ச்சிப் பக்கம் வேகமாகச் செல்லும் படகை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று திண்டாடியபோது, உடனடியாக அவர்களுக்கு அந்த யோசனைதான் தோன்றியது,
அதாவது வண்டல் மண்ணை வெளியே கொட்டும் கதவை திறந்து விட்டால் தண்ணீர் உள்ளே புகுந்ததும் படகில் தண்ணீர்ப் பாரமேறிப் படகின் வேகம் குறையும் என்று லொவ்பேர்க் நம்பினான். காரணம் சுமார் 2000 தொன் நிறையுள்ள வண்டல் மணலும், கல்லும் அந்தப் படகில் ஏற்றப்பட்டிருந்தது.
வேறு வழி ஒன்று தெரியாததால், விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதால், அப்படியே இருவரும் சேர்ந்து கதவைத் திறந்து விட்டார்கள். கதவைத் திறப்பதற்கு உதவும் போதும் ஹரிஸின் கைகள் நடுங்குவதை அவதானித்தான் லொவ்பேர்க்.
அவசரப்பட்டுத் தாங்கள் எடுத்த முடிவு சரியானதா என்று தெரியாமல் இருவரும் தவித்தார்கள். ஒவ்வொரு விநாடியும் கடக்க உயிர் வேகமாகத் துடித்தது. படகு அப்படியே தண்ணீரில் மூழ்கிவிடுமா அல்லது ஆண்டவன் அவர்களது பிரார்த்தனைக்கு ஏதாவது வழிகாட்டுவாரா?
அவர்களின் அதிஸ்டம் படகின் வேகம் சட்டென்று குறைந்தது மட்டுமல்ல, படகு சிறிது நேரம் தண்ணீரில் ஆடி அசைந்து, அங்குமிங்கும் தள்ளப்பட்டு அடியில் இருந்த ஒரு பாறையில் முட்டித் தரை தட்டிக் கொண்டது.
பிரார்த்தனை பலித்ததா, இல்லையா அவர்களுக்கே நம்பமுடியாமல் இருந்தது. திடீரெனப் படகு நின்றதும், லொவ்பேர்க் ஆலோசனை பலனளித்ததில் ஹரிசுக்கு அவன் மீது மதிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டது.
நல்ல காலமாக நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து சுமார் 650 யார் தூரத்திற்கு அப்பால் படகு தரைதட்டியதால், அடித்துச் செல்லப்பட்ட படகு தற்காலிகமாக நீர்வீழ்ச்சிக்குள் தலைகுப்புற விழாமல் தப்பிக் கொண்டது.
ஆனால் எவ்வளவு நேரத்திற்கு மரணத்தின் விளிம்பில் நின்று இப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
வேகமாகக் காற்றடித்தாலோ அல்லது தண்ணீரின் வேகம் அதிகரித்தாலோ மீண்டும் படகு தள்ளப்படுவதற்குச் சாத்தியங்கள் இருந்தன. இவர்களது கெட்டகாலமோ என்னவோ, வானம் கறுத்திருந்ததனால், விரைவாகவே இருட்டத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. நீரின் வேகத்தில் படகு மீண்டும் ஒரு துள்ளுத் துள்ளி நீரோட்டப் பக்கமாகத் திரும்பியது.
சட்டென்று படகு நீரோட்டப் பக்கம் திரும்பவே அவர்கள் பரிதவித்துப் போனார்கள்.
ஓ.. என்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சல் அருகே காதைக் குடைந்து கொண்டிருந்ததால், என்னாகுமோ, ஏதாகுமோ என்று அவர்களின் மரணபயம் இன்னும் அதிகரித்தது.
‘ஹரிஸ் பதட்டப்படாதே, நாங்கள் ஒன்று செய்யலாம்’ என்றான் லொவ்பேர்க்.
இப்படியான சந்தர்ப்பங்களில் நம்பிக்கையை இழந்து விடாது, கடைசிவரை முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கடலில் படகோட்டிய அனுபவத்திலிருந்து லொவ்பேர்க் அறிந்திருந்தான்.
‘எனக்குக் கையும் ஓடவில்லை. காலுமோடவில்லை, நீ என்ன செய்யச் சொன்னாலும் செய்கின்றேன்’ என்றான் உறைந்து போய் மரணப்பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்த ஹரிஸ்.
‘முதலில் படகை அங்குமிங்கும் அசையாது நிறுத்த வேண்டும், அதற்கு முயற்சி செய்வோம்.’
‘இப்படி வேகமாக அடித்துச் செல்லும் தண்ணீரில் எப்படி..?’ கேள்விக் குறியோடு வார்த்தைகள் தடுமாறி நின்றன.
‘நங்கூரத்தை இறக்கிவிடுவோம், தற்செயலாக வேகமாக தண்ணீர் வந்தாலும் நங்கூரம் படகை அசையாமல் ஓரளவு காப்பாற்றும்’ என்றான் லொவ்பேர்க்.
இருட்டி விட்டால், உதவிக்கு யாரும் வரப்போவதில்லை, சொற்ப நேரத்தில் மரணிக்கப் போகிறோமே என்ற அதிர்ச்சியில் ஹரிஸின் மூளை இயங்க மறுத்தது. உயிர் தப்புவதற்காக லொவ்பேர்க் என்ன சொன்னாலும் தலையாட்டி யந்திரம்போல அதை ஏற்கத் தயாராக இருந்தான் ஹரிஸ்.
இருவரும் சேர்ந்து அவசரமாக நங்கூரத்தை இறக்கி விட்டார்கள். நங்கூரம் போட்டதில் படகின் ஆட்டம் மெல்லக் குறைந்ததில், ஓரளவு மனதுக்குத் திருப்தியாக இருந்தது.
ஆனால் எவ்வளவு நேரம் மரணத்தின் பிடியில் இருந்து இப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
அவர்களுக்கான மரணக் குகை அருகேதான் இருக்கிறது என்பதை நீர்வீழ்ச்சியின் இரைச்சல் அவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தது.
இன்றுபோல, தொடர்பு சாதனங்கள் அக்காலத்தில் இல்லாததால், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இருவரும் மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
ஆனால் எந்த நேரமும் படகு தண்ணீரில் இழுபட்டு நீர்வீழு;ச்சியில் விழலாம் என்ற பயம் மட்டும் இருவரையும் வாட்டிக் கொண்டே இருந்தது. எந்த நேரமும் அப்படி ஒரு நிலை ஏற்படலாம் என்பதால், நெஞ்சு வேகமாகத் துடித்தது.
இன்னும் சில விநாடிகளில் நடக்கப் போவதை நினைத்துத் தங்களைப் பாதுகாப்பதற்காக ஏதாவது ஆயத்தங்களை அவசரமாகச் செய்யலாமோ என யோசித்தார்கள்.
விரைவில் இருட்டி விடும் என்பதால் என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. லொவ்பேர்க் நீர்வீழ்ச்சியில் விழப்போகும் படகோடு தன்னைக் கயிற்றால் கட்டிக் கொண்டார். படகோடு நீர்வீழ்ச்சியில் விழுந்தால் தற்செயலாகப் படகு மூழ்கிப் போகாமல் கீழே வேகமாக ஓடும் ஆற்றில் மிதந்தால், நீர்வீழ்ச்சிக்குள் தான் விழாமல் தப்பிக் கொள்ளலாம் என நினைத்தார்.
ஹரிஸின் சிந்தனையோ வேறுவிதமாக மாறுபட்டிருந்தது. அதனாலே ஹரிஸ் அங்கிருந்த பீப்பா ஒன்றுடன் தன்னைக் கட்டிக் கொண்டார். படகு சரிந்து நீர்வீழ்ச்சியில் விழும்போது பீப்பாவோடு வெளியே குதிப்பதுதான் அவரது திட்டமாக இருந்தது. அப்படி விழும்போது, மிதக்கக் கூடிய பீப்பாவோடு தான் கரை ஒதுங்கலாம் என்ற கணிப்பு இருந்தது. அல்லது யாராவது தன்னைக் காப்பாற்ற முன்வரலாம் என்று நம்பினார்.
ஆனால் அவர்கள் நினைத்தது போல அந்த நீர்வீழ்ச்சி ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல என்பதைக் கடந்தகால மரணங்கள் நிரூபிக்கத் தயங்கவில்லை. அழகான அந்த நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்தவர்களுக்குத்தான் புரியும், அந்த அழகுக்குப் பின்னால் பெரியதொரு ஆபத்தும் இருக்கிறது என்பது!
இழுவைப் படகில் இருந்து கட்டவிழ்த்த படகொன்று தனியாகத் தத்தளிப்பதைத் சுற்றுலாப் பயணிகளும், உள்ளுர் மக்களும் கண்டனர். இதுவரை எந்தவொரு படகையும் அந்த இடத்தில் யாரும் பார்த்ததில்லை. நயாகரா மேலாற்றில் இருவர் படகில் அகப்பட்டு நீர்வீழ்ச்சிக்கு அருகே ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெகு விரைவாகப் பரவத் தொடங்கின. செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் உடனடியாகவே நயாகரா ஆற்றின் இருகரையிலும் கூடத்தெடங்கினர். என்றும் இல்லாதவாறு அமெரிக்கக் கரையிலும், கனடியக் கரையிலும் உள்ளுர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வேகமாகக் கூடத் தொடங்கிவிட்டனர்.
1918 - 08 - 06
செவ்வாய்க்கிழமை - மாலை நேரம் 3:55 மணி
நடந்த பயங்கர சம்பவத்தைக் கேள்விப்பட்டு நயாகரா பார்க் குழுவைச் சேர்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டனர். சுமார் 4:05 மணியளவில், அவசர உதவி அழைப்பு விடவே நியூயோர்க் தீயணைப்பு படையினரும், ஒன்ராறியோ தீயணைப்புப் படையினரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் படையினரும் செய்தி கிடைத்த சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
அருகே இருந்த நயாகரா மின்சார நிலையக் கட்டிடம் தான் கரையோரத்தில் உயரமான கட்டிடமாக இருந்தது. அதுமட்டுமல்ல, ஆற்றில் தத்தளிக்கும் படகுக்கு அருகாமையிலும் அந்தக் கட்டிடம் இருந்தது. எனவே அவசர உதவி செய்வதற்காக வந்தவர்கள் அந்தக் கட்டிடத்தில் ஒன்றுகூடி இருந்து என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தினர்.
தொடர்பு சாதன வசதிகளோ, ஹொலிக்கொப்டர் வசதிகளோ இல்லாத காலமாகையால் எப்படி அவர்களை உடனடியாகக் காப்பாற்றலாம் எனச் சிலர் தங்கள் கருத்துக்களையும், சில திட்டங்களை முன் வைத்தனர்.
ஆற்றின் வேகத்தைக் கணக்கில் கொண்டு, வேறு படகுகள் அந்த இடத்திற்கு அருகாமையில் போவது ஆபத்தானது என்பதால், வேறு வழி எதுவும் இல்லாததால், அப்போது அவர்களிடம் இருந்த மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு, படகில் அகப்பட்டு இருப்பவர்களைக் காப்பாற்ற முன்வந்தனர்.
நேரத்தை வீணடிக்காது அவசரமாகச் செயற்படத் தொடங்கினர் கரையோரப் பாதுகாப்புப் படையினர். கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் இருந்த உயிர் பாதுகாப்பு கயிற்றை துப்பாக்கி மூலம் படகை நோக்கிச் செலுத்தினார்கள். ஆனால் அது குறித்த இலக்கை அடையவில்லை.
நேரமோ ஓடிக்கொண்டிருந்ததால், இருட்டுமுன் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றே எல்லோரும் பாடுபட்டார்கள். இரண்டாவது தடவையாக முயற்சி செய்து பார்த்தார்கள். இந்தத் தடவை புதிதாக அனுப்பிய கயிறு வெற்றிகரமாக இலக்கை அடைந்தாலும், பாதிவழியில் மற்றக்கயிறுடன் இந்தக் கயிறு சிக்கிக் கொண்டது.
இருட்டி விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்த போதுதான், அப்பகுதியில் வசித்த ‘ரெட்ஹில்’ என்பவர் அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்.
முதலாம் உலகப் போரில் பங்குபற்றிக் காயம் ஏற்பட்டதால், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்த கனடியரான வில்லியம் ரெட் ஹில் (Veteran, William “Red” Hill Sr) என்பவர் தன்னார்வத் தொண்டராக மனிதாபிமான முறையில் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
இவர்கள் நயாகரா ஆற்றங்கரையில் நீண்ட காலம் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள். நன்றாக நீந்தத் தெரிந்த அவர், அந்த ஆற்றின் நீரோட்டத்தை மட்டுமல்ல, அதன் வரலாற்றையே அறிந்து வைத்திருந்தார். தனக்குச் சந்தர்ப்பம் தந்தால், தானே நீந்திப் போய் சிக்கியிருந்த கயிற்றின் சிக்கலை எடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டார்.
‘இந்த இருட்டுக்குள் வேகமாக இரைச்சலோடு அடித்துச் செல்லும் தண்ணீரில் இறங்க உங்களுக்குப் பயமில்லையா?’ அவருடைய பாதுகாப்புக் கருதி அவரைத் தடுக்கச் சிலர் முற்பட்டனர்.
‘பயப்பட்டால் முடியுமா? இருவருடைய உயிர் தண்ணீரில் தத்தளிக்கிறது, அதைச் சும்மா பார்த்துக் கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா?’ என்றார் ரெட்ஹில்.
‘அதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்களா?’
அவர் தன்னைத் தடுத்தவர்களை ஒரு கணம் மேலும் கீழும் பார்த்தார்.
‘பயப்படாதீங்க, நயாகராவின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டுதான் நான் இங்கே பிறந்தேன் இறக்கும் போதும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இறப்பேன்’ என்று அவர்களுக்கு அவர் பதில் சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே தண்ணீரில் குதித்தார்.
அங்கு நின்ற ஆபத்திற்கு உதவும் குழுவினர் சிறிது நேரம் அதிர்ந்து போய் நின்றனர். இதற்காகவே அவர்கள் பயிற்றப்பட்டாலும், தங்கள் உயிரைப் பணயம் வைக்க யாரும் முட்டாள் தனமாக முன்வரவில்லை. சிலர் நம்பிக்கையே இல்லாமல், ‘வேகமாக அடித்துச் செல்லும் இந்த ஆற்றில் இவரால் நீந்த முடியுமா?’ என்று நினைத்து பிரியா விடை கொடுப்பது போல, ‘போய்வா மகனே’ என்பது போல அவரைப் பார்த்துக் கைகளை அசைத்தனர்.
1918 - 08 - 06
செவ்வாய்க்கிழமை - மாலை நேரம் 7:10 மணி
வேகமாக இழுத்துச் செல்லும் தண்ணீரில் கயிற்றைச் சிக்கல் எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
ரெட்ஹில் ஏதோ அசட்டுத் தனத்தில் அந்தப் பொறுப்பை எடுத்தாலும், அதை நடைமுறைப் படுத்துவது என்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது.
குளிர் காற்றில் தண்ணீர் சில்லென்று இருந்தது மட்டுமல்ல, நுரை கக்கிக் கொண்டு கீழே குதிப்பதற்குத் தயாராக நீர்வீழ்ச்சியை நோக்கி வேகமாக ஓடியது. ரெட்ஹில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாலும், கும்மிருட்டுக்குள் அவரால் சிக்கல் எடுக்க முடியாமற் போனதால், தனது பாதுகாப்புக் கருதித் திரும்பிக் கரைக்கு வரவேண்டி வந்தது.
முதல் முயற்சி தோல்வியடைந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்று எல்லோரும் கூடி யோசித்தார்கள். ரெட்ஹில்லின் ஆலோசனைப்படி, படகை நோக்கி உடனடியாக பெரிய மின் விளக்குகளைக் கொண்டு கரையில் இருந்து வெளிச்சம் பாய்ச்சலாம் என்று முடிவெடுத்தார்கள். உடனடியாகவே பெரிய தேடுதல் விளக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு விளக்குகளைக் கொண்டு வந்தனர். கொண்டு வந்த விளக்குகளின் உதவியுடன் படகு இருந்த பக்கம் நோக்கி ஆற்றில் வெளிச்சம் பாய்ச்சினர். பிரகாசமான வெளிச்சத்தில் ஓரளவு தண்ணீருக்குள் பார்ப்பதற்கு வசதியாக இருந்ததால், சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ரெட்ஹில் அந்த இடம் நோக்கி நீந்திச் சென்றார்.
நயாகரா ஆறு அவருக்குப் பழகிப்போன இடமென்பதால், கயிற்றைச் சிக்கெடுத்து எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்தார். செய்தது மட்டுமல்ல, அங்கிருந்தே படகில் இருந்தவர்களுக்குக் குரல் கொடுத்து, அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார். இந்த இரண்டு காரியத்தையும் நேர்த்தியாக முடித்து விட்டு வெற்றிகரமாக மீண்டும் கரைசேர்ந்தார். ரெட்ஹில் மட்டும் அன்று தனது உயிரைப் பணயம் வைத்து துணிந்து சீறிப்பாயும் ஆற்றுத்தண்ணீரில் இறங்கி இருக்காவிட்டால், இவர்களால் திட்டமிட்டபடி மீட்பு நடவடிக்கையைத் தொடர முடியாமல் போயிருக்கும்.
முதலில் துப்பாக்கி மூலம் மெல்லிய பாரம் குறைந்த கயிறும், அதைத் தொடர்ந்து மொத்தமான, நின்று பிடிக்கக்கூடிய கயிறும் படகுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கயிற்றில்தான் அவர்களின் உயிர் தங்கியிருந்ததால், படகில் இருந்த இருவரும் கயிற்றைப் படகில் இறுக்கமாகக் கட்டிவிட்டனர்.
காற்சட்டை வடிவில் ஏணை போன்ற கயிற்றில் செல்லக்கூடிய மிதவையை முதலில் உயரே தொங்கிய கயிற்றில் கப்பியின் உதவியோடு அனுப்பினார்கள். ஏணை வடிவான பாதுகாப்பான அணிக்குள் கால்களைச் செலுத்திக் கொண்டு அதற்குள் இருக்க, கரையில் இருப்பவர்கள் கயிற்றில் தொங்குபவரை கப்பியில் இழுத்துக் கரைசேர்ப்பார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
அந்திவானத்தில் மின்னலும், இடியும் மழை வருமோ என்று பயம் காட்டின. ஆனால் நல்ல காலமாக மழை பெய்யவில்லை. மழை பெய்திருந்தால் ஏரியில் நீர் மட்டம் உயரந்திருக்கும். நீர்மட்டம் ஏரியில் உயர்ந்தால், ஆற்றுநீர் பெருக்கெடுத்து இரவோடு இரவாகப் படகை அடித்துச் சென்று நீர்வீழ்ச்சியில் தள்ளியிருக்கும். இருட்டுக்குள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால், இரவு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
உயிரைக் கையில் பிடித்தபடி இரவு முழுவதும் மரணத்தின் விளிம்பில் துடித்துப் போயிருந்த அவர்களுக்கு உதயசூரியன் விடியலை நோக்கி நம்பிக்கை தந்தது. அதிகாலையில் மீண்டும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். செய்தி கேட்டு, ஆற்றங்கரையோரம் நெடுக சுற்றுலாப் பயணிகளும் ஊர்மக்களும் அதிகாலையிலேயே அங்கு கூடத் தொடங்கியிருந்தனர்.
1918 - 08 - 07
புதன்கிழமை - காலை நேரம் 6:15 மணி
படகில் இருவர் உயிருக்குப் போராடுவதை நினைத்துச் சிலர் பதட்டப்பட்டாலும், அனேகமானவர்கள் வேடிக்கை பார்க்கவே வந்திருந்தனர். பல்லின மக்களும் அங்கே கூடியிருந்ததால் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றது போல அந்தச் சம்பவத்தை விபரித்தனர். கேபிள் கயிற்றை சரியாகக் கட்டாததால் தான் இது நடந்தது என்றும், இயற்கை சேகரித்து வைத்த வண்டல் மண்ணைத் திருடப்போனால், நயாகரா அன்னை மன்னிக்க மாட்டாள் என்றும் பல கதைகள் அந்தநேரத்தில் அங்கு உருவாக்கப்பட்டன.
சிலர் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், சிலர் கடினமான காரியம் என்றும், முடியவே முடியாது என்றும் பொழுது போக்குவதற்காகத் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
இரவு முழுவதும் பயந்த நிலையில் இருந்தது மட்டுமல்ல, பசிக்களையும் ஏற்பட்டதால் ஹரிஸ் மயங்கி விழுந்து விடும் நிலையில் இருந்ததான்.
‘ஹரிஸ் நீ சரியாகப் பயந்து போயிருக்கிறாய், நான் எப்படியும் சமாளித்து கொள்வேன், ஆகவே நீதான் முதலில் போகிறாய்’ என்றான் லொவ்பேர்க்.
‘அதெப்படி, உங்களைத் தனியே விட்டு நான் போவதா, என்னாலே அப்படி எல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாது’ லொவ்பேர்க்கின் கரங்களைப் பற்றிக் கொண்டு அழாக்குறையாகச் சொன்னான் ஹரிஸ்.
‘இங்கேபார், வாழ்வா, சாவா என்பதுதான் இப்போது எங்கள் போராட்டம், இந்தக் கயிற்றில் இருவரும் ஒரே சமயத்தில் போகமுடியாது. விவாதிப்பதற்கு இது நேரமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்.’ என்று அறிவுரை வழங்கினான் லொவ்பேர்க்.
லொவ்பேர்க்கின் விருப்பப்படி ஹரிசுக்கு வெளியேற முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் ஹரிஸ் செல்வதற்குப் படகில் அவரோடு இருந்த லொவ்பேர்க் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார்.
கயிறு இரண்டு பக்கமும் இறுகக் கட்டப்பட்டு, மெல்ல மெல்ல மின்நிலையத்தின் கூரையில் நின்றவர்கள் தொங்கும் கயிற்றில் கப்பியின் துணையோடு ஹரிஸைக் கரையை நோக்கி இழுத்தார்கள்.
சீறிப்பாயும் தண்ணீருக்கு மேலால் அந்தரத்தில் நின்ற ஹரிஸ் கிட்டத்தட்ட மயங்கி விடும் நிலையில் இருந்தார். பசிக்களை ஒருபக்கம், பொதுவாகவே உயரத்தில் அதுவும் அந்தரத்தில் நின்று கீழே பார்த்தால் பயிற்சி பெறாத யாருக்கும் தலையைச் சுற்றத்தான் செய்யும், அதுவும் வேகமாக ஓடும் தண்ணீரைக் கீழே குனிந்து பார்த்தால் எப்படி இருக்கும்?
நல்ல காலமாக லொவ்பேர்க் ஹரிஸைக் கிழே விழுந்து விடாமல் கவனமாகக் பாதுகாப்புக்கவசத்தோடு சேர்த்துக் கட்டி விட்டிருந்தார்.
கரையில் இருந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் ஹரிஸைவிட பயந்தவர்களாய் உணர்ச்சி வசப்பட்டவர்களாய், என்ன நடக்குமோ என்று தவித்துக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்லக் கயிறு நகர்ந்ததால், கரையில் நின்று பாரத்தவர்களின் தவிப்பு இன்னும் அதிகமாகியது.
கட்டிடத்தின் கூரையில் நின்ற பாதுகாப்புப் படையினர், ஹரிஸை மெல்ல மெல்ல இழுத்துக் காலை நேரம் சுமார் 8:50 மணியளவில் கரை சேர்த்தார்கள். கரைசேர்ந்த ஹரிஸ், உயிரோடு தப்பிவிட்ட மகிழ்ச்சி தாங்க முடியாமல் மயக்கம் போடவே அவருக்கு உடனடியாக முதலுதவி செய்தார்கள்.
1918 - 08 - 07
புதன்கிழமை - காலை நேரம் 9:50 மணி
இந்த நடவடிக்கை மெதுவாக நடைபெற்றாலும், அவர்களின் பாதுகாப்பு கருதி அவசரப்படாமல் செய்ததாக இதற்குப் பொறுப்பாக அப்போது இருந்த காப்டன் நெல்சன் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார்.
ஹரிஸ் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்ததைத் தொடர்ந்து லொவ்பேர்க்கையும் அதே முறையில் கயிற்று மூலம் சுமார் ஒரு மணி நேரத்தின் பின் அதாவது 9:50 மணியளவில் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். எந்தப் பாதிப்பும் இல்லாமல், கஷ்டப்பட்டு இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதில் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
கட்டவிழ்த்த படகு மட்டும் அதே இடத்தில் தனித்து தரித்து நின்றது. ஒருநாளல்ல, இரண்டு நாளல்ல, நூறு வருடங்கள் அதே இடத்தில் காத்திருந்தது.
எந்த வசதிகளும் இல்லாத காலமாக இருந்தாலும், உயிர்களின் மதிப்பை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டிருந்ததால்தான், அந்த இருவரின் உயிர்களும் அன்று காப்பாற்றப்பட்டன. மிகப் பெரியதொரு சாதனையை அன்று ரெட்ஹில் போன்றவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி முன்வந்து செய்ததால்தான் மனித நேயம் இன்றும் நிலைத்து நிற்கின்றது.
நூறு வருடங்களின் பின் ஹலோவின் தினத்திலன்று (31-10-2019) நயாகரா ஆற்றங்கரைப் பகுதியில் தென்மேற்கே இருந்து இரவு அடித்த சூறாவளியின் போது இடம் பெயர்ந்து வரலாறு படைத்தது அந்தப் பழைய இரும்பினாலான படகு. அந்தப் படகு ஹலோவீன் தினத்திலன்று இரவு இடம் பெயர்ந்தது பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். மறுநாள் கூட்டமாகக் கரையில் நின்று வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்தேன். எனக்கு அருகே ஆண்களும் பெண்களுமாய்க் கலந்து நின்ற சிலர் இந்தப் படகு பற்றி ஆங்கிலத்தில் விவாதிப்பதும் என் காதில் விழுந்தது.
ஆவி, பேய், பிசாசு என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர்களும் மேலை நாடுகளில் இருப்பது பலருக்குத் தெரியாது. சிறுவர், சிறுமிகளுக்கு ஹலோவீன் தினம் வேடிக்கையாக இருந்தாலும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் ஹலோவீன் தினம் அதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. விவாதத்தில் ஈடுபட்ட ஒரு சாரார் பழமை வாதிகளாக இருந்தனர்.
‘இதுவரை காலமும் இல்லாமல் ஹலோவீன் தினத்திலன்று இரவு படகு தள்ளப்பட்டது என்றால், அதுவும் சரியாக 100 வருடங்களின் பின் நடந்திருக்கிறது என்றால், ஆவிகளின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது என்பது தானே அர்த்தம்’ என்ற வாதத்தை ஒருவர் முன்வைத்தார்.
‘நீங்கள் சொல்வது சரிதான், பிதிர்களுக்கான கடமைகளைச் செய்யாவிட்டாலும் இப்படி நடக்கும், எத்தனை இளைஞர்களும், யுவதிகளும் இங்கே இந்த ஆற்றில் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களின் ஆவி சாந்தியடையக் கூடிய மாதிரி இவர்கள் எதுவுமே செய்திருக்க மாட்டார்கள்.
பஞ்சபூதங்களில் ஒன்றான நீரைத் தரும் நயாகரா அன்னை எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுத்திருப்பாள், அதனால் வந்த வினைதான் இது’ என்றார் இன்னுமொருவர்.
பஞ்சபூதங்களை மேற்கோள் காட்டியது யாரென்று திரும்பிப்பார்த்தேன். ஆசிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
ஒரு படகு இடம் மாறியதற்குப் பின்னால் இவ்வளவு கதைகள் இருக்கிறதா?
அப்படி என்றால் இடம் பெயர்ந்த, புலம்பெயர்ந்வர்களுக்குப் பின்னால் சொல்லப்படாத எத்தனை கதைகள் இருக்கக்கூடும்!
‘இந்தக் காலத்திலும் இதை நீங்கள் நம்பிறீங்களா, நீண்ட காலமாகி விட்டதால், படகு துருப்பிடித்திருப்பதால் அதில் துவாரம் விழுந்திருக்கிறது. அதனூடாகத் தண்ணீர் வெளியேறியபடியால் படகின் பாரம் குறைந்திருக்கலாம். ஹலவீன் அன்று பெரும் காற்று வீசியதால், பாரம் குறைந்த படகு தண்ணீரால் தள்ளப்பட்டிருக்கலாம், அவ்வளவுதான்’ என்று எனக்கு அருகே நின்ற ஒருவர் அறிவியல் சார்ந்த தனது கருத்தைச் சொன்னார்.
அவர்கள் உரையாடும் போது, அவர்களுடைய கருத்துக்களைச் செவிகள் உள்வாங்கினாலும், நான் அந்தப் படகைப் புகைப்படம் எடுப்பதில் கவனமாக இருந்தேன். அவர் சொன்னது போல, துருப்பிடித்த படகில் பெரிய துவாரம் விழுந்திருந்ததால், அதனூடாகப் படகில் இருந்த தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பது மட்டும் என் கண்களுக்குத் தெரிந்தது. அதையும் குளொசப்பில் படம் எடுத்தேன். காரணம், படகு இடம் மாறியது பற்றி அவர் சொன்னதில் ஒரு அர்த்தம் இருந்தது.
எந்த நேரமும் படகு காற்றினால் தள்ளப்பட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் விழலாம் என்பதால், அதன் கடைசி யாத்திரையைப் படம் பிடிப்பதற்காகச் சக்தி வாய்ந்த வீடியோ கமெராவை ஊடகத்தினர் அருகே உள்ள நயாகரா மின் நிலையத்தின் கூரையில் தற்போது பொருத்தியிருக்கிறார்கள். மிகவும் பாரமான இரும்பினாலான துருப்பிடித்த இந்தப் படகு நீர்வீழ்ச்சியில் திடீரென விழுந்தால், அச்சமயம் கீழே Maid of the Mist ஐப் பார்ப்பதற்காக படகுகளில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதிப்பு எற்படலாம் என நயாகரா பாக் குழுவினர் எதிர்பார்ப்பதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். சில சமயம் இந்தப் படகு இன்னும் சில காலம் தொடர்ந்தும் இந்த இடத்தில் நிலைகொண்டிருக்கலாம் எனவும் சிலர் நம்புகின்றார்கள்.
சாதனை வீரன் ரெட்ஹில்லைப் பற்றிச் சொல்வதென்றால், பொலிஸாருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு, அவர் பயமின்றி ஆற்றிலே சுழியோடி, நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்தவர்களின் சுமார் 180 உடல்களை வெளியே கொண்டு வந்திருக்கின்றார். இதேபோல ஆற்றிலே விழுந்த 28 பேரை உயிரோடு காப்பாற்றி இருக்கின்றார். இதைவிட மிருகங்கள், பறவைகள் என்று தண்ணீரில் தத்தளித்தபோது, துணிந்து தண்ணீரில் இறங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றார். மனிதநேயம் அவரோடு கூடப்பிறந்ததால்தான் அவரால் இதை எல்லாம் சாதிக்க முடிந்தது.
றிவர்மான் (River Man) என்று அழைக்கப்பட்ட அவர் செய்த நல்ல காரியங்களை அப்பொழுது யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.
1912 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நயாகரா நீர்வீழ்ச்சியில் பனிப்பாறை உடைந்த போது நடந்த விபத்தில் மூவர் கொல்லப்பட்டாலும், உடைந்த பனிப் பாறைகளுக்கு மத்தியில் துணிந்து சென்று பலரைக் காப்பாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. நயக்கராவின் மடியில் தவழ்ந்த இவர் 1942 ஆம் ஆண்டு 54 வது வயதில் மரணமானார். மரணப்படுக்கையில் இவர் தனது பிள்ளைகளுக்கு ‘The river will keep you poor but in return it will give you a reward greater than money. I can’t put it into words’ என்றுதான் குறிப்பிட்டார்.
தனது உயிரைத் துச்சமாக மதித்து ஆபத்தான செயலைச் செய்து இரண்டு உயிர்களை அன்று காப்பாற்றிய இவரைக் கௌரவிப்பதற்காக இவர் மரணமான அன்று நயாகரா ஆற்றில் தரைதட்டி நின்ற அந்தப் படகின் மீது பிரகாசமான மின்சார விளக்கின் ஒளி பாய்ச்சப்பட்டு நினைவு கூரப்பட்டார். நயாகரா பாக் குழுவினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
சாதனை படைக்க முற்படுபவர்கள் தங்கள் உயிரைப் பற்றி எப்பொழுதும் கவலைப் படுவதில்லை. இவரது மகனான ரெட் ஹில் யூனியர் 1951 ஆம் ஆண்டு பீப்பா ஒன்றில் இருந்தபடி நீர்வீழ்ச்சியில் குதித்து சாதனை படைக்க முயன்றபோது, கனடாவின் ‘ஹோஸ் சூ’ நீர்வீச்சியின் சுழியில் அகப்பட்டு மரணமானார். இவரது மரணம் அவர்களின் குடும்பத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதனால் அவர்கள் தங்கள் பாரம்பரிய நிலத்தை விட்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இடம் பெயர்ந்தார்கள்.
100 வருடங்களின் பின் ரெட்ஹில் செய்த சாதனையை நினைவு கூர்ந்து ரெட்ஹில்லின் குடும்பத்தினர், நயாகரா பார்க் குழுவினரால் ஒன்ராறியோவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பேரப்பிள்ளைகளும், பூட்டப் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். நூறு வருடங்களின் பின் இந்தப் படகு நயாகரா ஆற்றிலே தனது இருப்பிடத்தை மாற்றியதால்தான், கடந்த காலத் தியாகங்களை எங்களால் நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வரலாற்றில் சாதனைகளும், தியாகங்களும் உடனுக்குடன் ஆவணப் படுத்தப் படாவிட்டால், காலம் அதற்கான தடயங்களை அழித்து, புதிய தவறான வரலாற்றை உருவாக்கி விடலாம்.
Timeline Note:
For 100 years, the Iron Scow, A barge-like vessel was lodged in the same place in the "powerful upper rapids" above the Canadian Horseshoe Falls, according to Niagara Parks.
On October 31st, 2019, a major windstorm developed over the Niagara Frontier. Wind gusts peaked at near 60 mph blowing from a west-south-west direction.
At some point throughout the night and next day morning on Friday November 1st, 2019, the scow was dislodged from the shoal upon which it had grounded upon in August 6th, 1918.
The scow appeared to have been overturned and driven by wind and water approximately 100 feet down river before being grounded again.
More than a year ago, during a remembrance of the 100th anniversary of the rescue, the parks commission briefly illuminated the scow and promised a new plaque would soon honor the heroism of Mr. Red Hill Sr.
Conspicuously missing from an earlier monument – an omission the family believes was due to longtime bureaucratic resistance at celebrating a charismatic daredevil.
Kuru Aravinthan.
.......................................................................................
Comments
Post a Comment