நீர்மூழ்கி....!
நீரில் மூழ்கி...!!
ஆனந்தவிகடனின் பரிசு பெற்ற கதை:
மனித உயிர்களைக் காப்பாற்றும் புனித போராட்டத்தில் அவன் வென்றானா?
காதல், சோகம், பாசம், தியாகம், துரோகம் நிறைந்த விறுவிறுப்பான குறுநாவல் - ஆசிரியர், விகடன்.
ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று, மூன்று கோடிக்கு ( 3 million) மேற்பட்ட வசகர்களைச் சென்றடைந்த கதை. இந்தக் கதைக்கு பிரபல ஓவியர்களான ஜெயராஜ், மாருதி, ராமு, அர்ஸ், பாண்டியன் ஆகியோர் ஓவியம் வரைந்திருந்தனர். விகடனில் ஐந்து ஓவியர்கள் படம் வரைந்த இக்கதை 3 மில்லியன் வாசகர்களுக்கு மேல் சென்றடைந்தது குரு அரவிந்தனுக்குத் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகில் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.
இந்தக் கதையை எழுதியது யார் என்ற விகடனின் போட்டியில் ‘குரு அரவிந்தன்’ என்று சரியாகப் பதிலளித்த 45,261 வாசகர்ளில் குலுக்கல் முறையில் தெரிவான ஏழு அதிஸ்டசாலிகளான வாசகர்களுக்கு விகடன் முத்திரை பதித்த தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்தது.
நீர்மூழ்கி நீரில் மூழ்கி…..
- முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன் -
கனடியத் தமிழ்ச் சூழலில் இலக்கியத் துறையில் முனைப்பாகச் செயற்பட்டு வருபவரில் ஒருவர் குரு அரவிந்தன அவர்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையில் அவர் புனைகதை நாடகம் திரைக்கதை வசனம் சிறுவர் இலக்கியம் முதலான பல்துறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர். அவரது அண்மைக்கால ஆக்கமாக நீர் மூழ்கி நீரில் மூழ்கி… என்ற தலைப்பிலான ஆனந்த விகடனில் பரிசு பெற்று வெளிவந்த குறுநாவல் தொகுதி வெளிவந்துளது.
இலங்கை தெல்லிப்பழை மகாஜனாகல்லுரியின் பழைய மாணவரான இவர் ‘நூறாண்டுகாணும் மகாஜனாமாதா’ விற்குச் சமர்ப்பணமாக இவ்வாக்கத்தை வெளிக் கொணர்ந்துள்ளார். தொழில்நுட்ப அறிவியல்சார் பார்வை குரு அரவிந்தனின் எழுத்தில் தெரிகிறது. இந்நூலாக்கம் பற்றிய ஒரு திறனாய்வுக் குறிப்பாக இச்சிறு கட்டுரை அமைகிறது.
இந்தத் தொகுதியில் இரு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக அமைந்த நீர்மூழ்கி நீரில் மூழ்கி… என்ற ஆனந்தவிகடனில் வெளிவந்த புனைகதை ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகிய நீர்மூழ்கிக் கப்பலில் உயிராபத்தை எதிர்நோக்கியிருந்தவர்கள் பற்றியது. இரண்டாவது புனைகதையான உறைபனியில் உயிர்துடித்தபோது… என்பது கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த பனிநிறைந்த வடதுருவத்திற்குச் சென்ற ஆராய்ச்சிக் குழு ஒன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சம்பந்தப் பட்டதாகும்.
நீர்மூழ்கி நீரில் மூழ்கி… என்ற குறு நாவலின் கதையம்சமானது நீர்மூழ்கி சம்பந்தமான இராணுவ இரகசியங்கள் வெளிப்படாது இருப்பதற்காக அதிகாரமட்டத்தில் இருப்பவர்கள் மேற்கொண்ட சில அணுகு முறைகள் தொடர்பானதாகும். இத்தொடர்பில் நடுநிசி 12மணி ஒருநிமிடத்திலிருந்து மறுநாள் பின்நேரம் 6மணிவரை அதாவது 18மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற சம்பவங்களையும் எண்ண ஓட்டங்களையும் மையப்படுத்தி இதன் கதையம்சம் விரிகிறது.உறைபனியில் உயிர்துடித்தபோது…என்ற இரண்டாவது கதையானது வடதுருவத்திற்கு விஞ்ஞான ஆராய்ச்சிக்குச் சென்ற 12பேர் கொண்ட குழுவினர் தொடர்பானது. அவர்கள் பனிப்புயலில் சிக்கித் தவித்ததான – முன்னைய நாவலில் சுட்டப்பட்டது போன்ற ஒரு உயிராபத்தான சூழலை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது. மீட்கப்படாத இருவரில் ஒருவரின் மனைவி தன்னுடைய கணவன் உயிராபத்திலிருந்து மீண்டு விட்டான் என்ற நம்பிக் கையோடு இருந்த வேளையிலே அதிகார வர்க்கம் அவளுக்கு உண்மை நிலையை கூறி அதே வேளை அந்த ‘உண்மைநிலையினை வெளிப்படுத்த வேண்டாம்’ என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கின்றது. அதற்காக பெருந்தொகைப் பணத்தையும் சலுகைகளையும் வழங்குவதாக ஆசையும் காட்டுகிறது. இச்சலுகைகள் ஒன்றும் கணவனுக்கு ஈடாகமாட்டாது என்பதை உணர்ந்த அவள் தனது வாரிசுக்காக உயிர்வாழ நினைக்கிறாள். இதுதான் இரண்டாவது குறுநாவலின் சாராம்சமாகும்.
இவ்வாறான அதிகாரவர்க்க நிலைப்பாடுகளால் பாதிக்கப்படும் சராசரி சமூகமாந்தரின் அவலநிலையை வாசகர்களுக்கு உணர்த்துவதே குரு அரவிந்தனுடைய நோக்கமென்பதை மேற்படி இரு ஆக்கங்களிலிருந்தும் உய்த்துணர முடிகிறது. இதற்கு ஏற்றவகையில் இருகதைகளினதும் கதையம் சங்களையும் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளையும் அவர் ஒரு திட்டப்பாங்குடன் உருவாக்கி வளர்த்துச் சென்றுள்ளமை தெரிகிறது. நீர்;மூழ்கி… குறுநாவலிலே உயிராபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மைக்கேலை ஒரு தியாக உணர்வுடைய பாத்திரமாகக் காட்டும்வகையில் அவனுடைய காதலுணர்வுசார் பின்புலம் கட்டமைக்கப் பட்டுள்ளது. தன்னால் காதலிக்கப்பட்ட அதேசமயம் திருமணம் செய்ய முடியாது போன ஒரு பெண்ணின் கணவனை உயிராபத்திலிருந்து மீட்க வேண்டுமென்ற உள்ளுணர்வால் தூண்டப்பட்டவனாக அவனைச் சித்தரித்துள்ள முறைமை கதையம்சத்திற்குச் சுவை சேர்ப்பதாகும்.
உறைபனி குறுநாவலிலே உயிராபத்திலிருந்த ஒருவனின் (டெனிஸ்) மனைவியின் காதல்சார் உணர்வுநிலைகளை மையப்படுத்திக் கதையம்சம் வளர்த்தெடுக்கப்படுகிறது. காதலனாகிய கணவன் ஆய்வுநிமித்தம் பிரிந்து சென்ற நிலையில் அப்பிரிவுத்துயரில் தவித்த அவளுக்கு அவன் உயிராபத்தில் இருக்கிறான் என்ற செய்தி கிடைத்தபொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது. பின்னர் அவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டான் என்ற செய்தி கிடைத்த பொழுது அவளுக்கேற்பட்ட நிம்மதி நீடிக்கவில்லை. அதிகாரியானவர் உண்மைநிலையைக் கூறியபொழுது திடுக்கிட்ட அவள் சோகத்தின் விழிம்பிற்குச் செல்கிறாள். பின்னர் அரசு தரும் சலுகைகளை மறுத்த அவள் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தனது வாழ்வைத் தொடர்கிறாள் என்ற வகையில் இந்தக் கதை அமைகிறது. இப்பாத்திரத்தின் உணர்வுகளினூடாக அதிகாரவர்க்கத்தின் மேற்படி குரூர குணாம்சம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
இவ்விரு குறுநாவல்களின் கதையம்சங்களும் முறையே ஆழ்கடல் மற்றும் பனிச்சூழல் என்பவற்றோடு தொடர்புடையவை. அச்சூழல் சார்ந்த அறிவியல் அம்சங்களும் இக்குறுநாவல்களில் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. முதலாவது குறுநாவலில் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டமைப்பு மற்றும் பொறியியல் நுட்பம் என்பவற்றை ஆசிரியர் விளக்குகிறார். அக்கப்பல் விபத்துக்குள்ளாகும் நிலையில் அதிலிருப்பவர்களைக் காப்பாற்ற முயல்பவர்கள் எத்தகைய தொழில்நுட்பச் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதான அறிவியல்சார் பார்வை அரவிந்தனின் எழுத்தில் தெரிகிறது. அதுபோலவே பனிப்புயல் தொடர்பான கதையிலும் அப்புயல்சார்ந்த பல்வேறு அறிவியல் சார்ந்த செய்திகளையும் நாவல்களில் அவர் பதிவு செய்துள்ளார். இவ்வாறான அறிவியல்; மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளையும் உள்ளடக்கிய படைப்புக்கள் என்ற வகையில் இவ்விரு குறுநாவல்களும் ‘அறிவியல்சார் புனைகதைகள்’ என்ற வகைமைக்குரிய அடையாளங்களையும் இவை பெற்றுள்ளன.
இத்தகைய எழுத்து முறைமைக்குத் தமிழகத்தில் ‘சுஜாதா’ போன்ற சிலர் முன்னோடியாக அமைந்துள்ளனர் என்பது இங்கு நினைவிற் கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும். இவ்விரு குறுநாவல்களின் தகுதிப்பாடு பற்றிச் சிந்திக்கும்வேளையில் குருஅரவிந்தன் அவர்களுடைய படைப்பாளுமையில் புலப்படும் வளர்ச்சிநிலை யொன்றை இங்கு சுட்டுவது அவசியமாகிறது. உணர்ச்சிகளை மோதவிட்டு அவற்றின் முரண்பாடுகளுக்கிடையிலே கதையம்சங்களைச் சுவைபட வளர்த்துச் செல்லும் ஒரு சிறந்த எழுத்தாக்க முறைமையை இவற்றில் நாம் காண்கிறோம். குருஅரவிந்தன் அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட கதையம்சத்தைச் சுவைபட வளர்த்துச் சென்று எதிர்பாராத முடிவுகளோடு நிறைவு செய்யக் கூடியவர் என்பதை மேற்படி நாவல்கள் உணர்த்தி நிற்கின்றன. அவருடைய இந்த ஆளுமையே அவருக்கு பரந்ததொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் எம்மால் உணரமுடிகிறது.
‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி.…’மற்றும் ;உறைபனியில் உயிர் துடித்தபோது…’ ஆகிய இந்த இரு நாவல்களிலும் அவரது ஏனைய நாவல்களிலிருந்து ஓரளவு வேறுபட்ட படைப்பு முறைமையை இனங்காண முடிகிறது. இவற்றில் சமூகத்தின் அதிகாரமட்டம் சார்ந்த வகைமாதிரியான பாத்திரங்கள் நமது காட்சிக்கு வருகின்றன. நீர்மூழ்கி… குறநாவலில் வரும் இராணுவ அதிகாரியும் மற்றக் குறுநாவலில் வருகின்ற அதிகாரியும் இவ்வகையான பாத்திரங்களாகக் கணிக்கத்தக்கவர்கள். இவ்வாறான ஆட்சியதிகாரத்தால் பாதிக்கப்படும் சராசரி மனித சமூகத்தின் பிரதிநிதிகளாக அல்லது வகைமாதிரிகளாகவே ஏனைய பாத்திரங்கள் நமது கவனத்திற்கு வருகின்றனர். இதனால் இவ்விரு நாவல்களிலும் சமூக யதார்த்தப்பாங்கான படைப்பாக்க முறைமையை ஓரளவு இனம் காணமுடிகிறது. இது குரு அரவிந்தனுடைய புனைகதைப் படைப்பாளுமையின் ஒரு வளர்ச்சிநிலையாகக்; கணிக்கத்தக்கது என நான் கருதுகிறேன். படைப்புகளுக்கான கதையம்சங்கள் மற்றும் கதைநிகழ் களங்கள் என்பவற்றைத் தேர்ந்துகொள்வதிலும் குரு அரவிந்தன் அவர்கள் தமது பார்வைகளை அகலப்படுத்தி வருவதனை இவ்விரு குறநாவல்களும் தெளிவாக உணர்த்திநிற்கின்றன. மேலும், அறிவியல் மற்றும் தெழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி நிலைகளை உள்ளடக்கியும் சூழல் மாசடைதல் போன்ற உலகளாவிய பிரச்சினைகளைக் கவனத்துட் கொண்டும் படைப்புகளை அவர் உருவாக்க முயன்றுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு வளர்ச்சி நிலையாகும.; இவ்வாறாக வளர்ச்சியும் விரிவும் எய்திவரும் குரு அரவிந்தனுடைய படைப் பாளுமையானது எதிர்காலத்தில் தமிழின் புனைகதைத்துறைக்கு மேலும் வளம்சேர்க்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்து இத்திறாய்வுரையை நிறைவுசெய்கிறேன்.
நீர்மூழ்கி....!
நீரில் மூழ்கி...!!
நேரம்: 00:00:01 சனிக்கிழமை
நடுநிசி பன்னிரண்டு மணி இருக்கும், திடீரென உலகத்தின் பார்வை எல்லாம் அந்தச் சிறிய துறைமுகத்தை நோக்கித் திரும்பியிருந்தது. கடும் காற்றுமழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் செய்தி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பல தேசங்கங்களிலிருந்தும் அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். சற்றும் எதிர்பாராத இவர்களின் நடவடிக்கையால் என்றுமே இல்லாதவாறு அந்தத் துறைமுகம் ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன நடக்குமோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லோர் முகத்திலும் கேள்விக் குறியாய் நின்றது!
‘கடற்கழுகு’ என்ற அந்தக் கப்பல் துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூர மிட்டிருந்தாலும் சூறாவளியின் வேகத்தைத் தாங்கமுடியாமல் மெல்ல ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. ஆழ்கடலில் அவசர நேரங்களில் உதவி செய்வதற்கு வேண்டிய அத்தனை வசதிகளோடும் அந்தக் கப்பல் அமைக்கப் பட்டிருந்தது. அந்தக் கப்பலுக்கருகே எல்.ஆர்-5 என்ற நவீன வசதிகளைக் கொண்ட ஆபத்தில் உதவி செய்யும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் தயார் நிலையில் நின்றது.
இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் கடல் அலைகள் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன.
கண்களை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்த மைக்கேலுக்கு ‘கடற்கழுகின்’ ஆட்டம் தாலாட்டுவது போல இருந்தது. மிகப் பெரிய பொறுப்பு ஒன்று அவனிடம் மேலிடத்தால் ஒப்படைக்கப் பட்டிருந்ததால் அவன் ஒருவித பதட்ட நிலையில் இருந்தான். பிறந்த நாட்டிற்காக இதைச் செய்கிறோம் என்பதை விட அவனிடம் இயற்கையாய் இருந்த மனிதாபிமானமும் இரக்க குணமுமே அவனை எந்த மறுப்பும் சொல்லாமல் அந்தப் பொறுப்பை ஏற்க வைத்தன. எடுத்த பொறுப்பைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அவன் இருந்தான். ஆனால் அவனது கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல் இரவு முழுவதும் இயற்கையின் சீற்றம் தடை செய்து கொண்டிருந்தது. என்றும் இல்லாதவாறு சூறாவளியும் கடல் கொந்தளிப்பும் அவர்களை ஆழ்கடலுக்குச் செல்ல முடியாமல் பயம் காட்டிக் கொண்டிருந்தன.
‘எப்படியும் காலையில் முதல் வேலையாக அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும். லாரிஸாவிற்குக் கொடுத்த வாக்கை நான் எப்படியும் காப்பாற்ற வேண்டும்!’ மைக்கேல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
மேலிடத்திற்குக் கொடுத்த வாக்கை விட லாரிஸாவிற்குக் கொடுத்த வாக்கே அவனுக்கு முதன்மையாகப் பட்டது. நீண்ட நாட்களின் பின் லாரிஸாவை எதிர்பாராமல் சந்தித்ததும், திடீரென அவனைத்தேடி லாரிஸா வருவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்காததும், அவனது பதட்ட நிலைக்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்.
‘வாக்குக் கொடுத்தால் அதைக் காப்பாற்றணும், அதுதான் மனிதனுக்கு அழகு’ கிராமத்தில் இருக்கும் அவனது தாயார் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தான் அவனது தாரக மந்திரமாய் இப்போது இருந்தது.
‘வாக்குக் கொடுத்தால் உயிரே போனாலும் கொடுத்த வாக்கை நிறை வேற்றாமல் இந்த மைக்கேல் விடமாட்டான் என்பதை காலமெல்லாம் எண்ணி யெண்ணி லாரிஸா வெட்கப்படணும்.’
‘மைக்கேல் உன்னிடம் மன்னிப்புக் கேட்கும் தகுதி கூட இந்தப் பாவிக்கில்லை, ஆனால் இதை விட்டால் எனக்கு வேறு வழியே தெரியலை! உன்னால் தான் இந்த உதவியைச் செய்ய முடியும். நீ தான் என் கணவருக்கு உயிர்ப்பிச்சை தரணும், தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதே ப்ளீஸ்...!’ அவள் அவனது கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள்.
‘அங்கிள் எனக்கு அப்பா வேணும்...!’ லாரிஸாவின் பெண் திரேஸா, ஏழு வயதிருக்கலாம் கண்களில் நீர் முட்ட அவனை பரிதாபமாய்ப் பார்த்தாள்.
‘அங்கிள்....!’ அவனால் ஜீரணிக்க முடிய வில்லை! ஸாரிஸாவின் பெண்ணுக்கு அவன் அங்கிள் ஆகிவிட்ட கதையை நினைக்க மனவேதனை கொழுந்து விட்டு எரிந்தது. அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டியவன் இன்று அங்கிள் ஆகிவிட்டான்.
கயிற்றிலே நடப்பது போல கொஞ்சம் தவறினாலும் உறவுமுறைகள் இப்படி எல்லாம் மாயாஜாலம் காட்டிவிடுமோ?
தாயும் மகளும் அவனிடம் கையேந்தி நிற்பதைப் பார்த்து அவன் உண்மையிலே உடைந்து போய்விட்டான்.
‘அழாதே லாரிஸா! நீ அழுதால் அதை என்னாலே தாங்கிக்க முடியாது!’
அவனது இளகிய மனதை அவள் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள்.
‘அப்போ நீ எனக்கு உதவி செய்வியா? என் கணவரைக் காப்பாற்றுவியா?’ ஏக்கத்தோடு கேட்டாள்.
‘உனக்காக எதையும் செய்வேன் லாரிஸா’ திறந்த மனதோடு எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் பதில் சொன்னான்.
‘ப்ராமிஸ்...?’ அவள் கையை நீட்டினாள்.
‘ப்ராமிஸ்....!’ அவன் அவள் கையைத் தொட்டுச் சத்தியம் செய்தான்.
பொட்டென்று கண்ணீர் துளி ஒன்று அவனது கைகளில் பட்டுத் தெறித்தது.
நினைவுகள் முள்ளாய் நெஞ்சில் ஆழமாய்ப் புதைந்து உறுத்திய வேதனை. எப்படி இவளால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் என்னிடம் உதவி கேட்டு வரமுடிந்தது? தன் குடும்பத்திற்கு ஒன்றென்றால் பெண்மை யாரிடமும் கையேந்துமோ?
இதே போலத் தான், இன்று இவள் கேட்டது போலவேதான் அன்றும் அவன் அவளது கைகளைப் பிடித்துக் கெஞ்சினான்.
‘நீ என்னைக் காதலிப்பது நிஜமானதென்றால், என்மேல் வைத்திருக்கும் அன்பு புனிதமானதென்றால், தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் செல்லி விடாதே லாரிஸா!’
அவளிடம் அன்று காதலை யாசித்த போது இரக்கமே இல்லாமல் இவனது கைகளை உதறிவிட்டு இதயத்தைச் சுக்குள் நூறாய் உடைத்து எறிந்து விட்டுப் போய்விட்டாள்.
அன்று போனவள் அப்படியே போயிருக்கலாம்! ஆனால் இத்தனை வருடத்தின் பின் இன்று மீண்டும் இவனைத் தேடி வந்திருக்கிறாள். தனிமையில் அல்ல தனது பெண்னோடு! அதுவும் கட்டிய கணவனுக்காக உயிர்ப் பிச்சை கேட்டு இவனிடம் யாசித்து நிற்கிறாள்.
நேரம்: 02:10:35 சனிக்கிழமை
‘மைக்கேல் கால் ஃபார் யூ!’
அவன் சிந்தனையில் இருந்து விடுபட்டு தொலைபேசி இருந்த கபினுக்குள் நுழைந்தான்.
இந்த நேரத்தில் அழைப்பது யாராய் இருக்கும்?
‘மைக்கேல் ஹியர்!’
ராணுவ அமைச்சகத்தில் இருந்து பாதுகாப்பு மந்திரி தான் மறுபக்கத்தில் குரல் கொடுத்தார்.
‘மைக்கேல் எப்படி இருக்கிறாய்? உன்னைத்தான் நம்பி இருக்கின்றோம்! எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றனவா?’
‘ஜெஸ் ஸார்! எல்லாம் ரெடி. நாங்க காலையில் கிளம்ப இருக்கின்றோம்!’
‘நாங்க என்றால்? எத்தனை பேர் போறீங்க?’
‘பன்னிரண்டு! ஆனால் நான்தான் ஆழ்கடலுக்குப் போய் சப்மரீன் கதவைத் திறக்கப் போறேன். என்னோட உதவியாளன் ஷேர்மனும் உதவிக்கு வர்றான். மற்றவங்க எல்லாம் ஸ்டான்ட்பை.’
‘ரொம்பப் பொறுப்பான வேலை. ஷேர்மன் எப்படி ஒத்துழைப்பானா? நம்பிக்கையானவனா?.
‘ஆமாம் ஸார்! நம்பிக்கையானவன். கடந்த ஐந்து வருடமாய் என்னோடு தான் தொழில் செய்யிறான்’
‘அப்படியா? காலநிலை எப்படி இருக்கிறது? காலையில் சரியாயிடுமா?’
‘சரியாயிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். சரியோ இல்லையோ நாங்க போவதாக முடிவெடுத்திட்டோம்!’
‘நாடே பதட்ட நிலையில் இருக்கிறது. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு மக்களிடம் இருந்து வருமுன் நாங்க ஏதாவது செய்தாகணும்!’
‘நிச்சயமாக! காலையில் எப்படியும் ஒரு முடிவு தெரியும்!’
‘அப்படியா? நல்லது அவசரமாக கபினெட் கூட்டம் நடக்கிறது, பல விடயங்களைப் பற்றி அவசரமாக முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. கூட்டம் முடிந்ததும் தேவையானால் எதற்கும் காலையில் உன்னோடு தொடர்பு கொள்கிறேனே!""
‘யெஸ் ஸார்!’
‘குட்லக் மைக்கேல்!’
‘தாங்யூ ஸார்!’
அத்துடன் தொடர்பு துண்டிக்கப் பட்டது.
பாதுகாப்பு மந்திரி தன்னோடு தொலைபேசியில் நேரடியாகப் பேசியது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய மேலிடத்தின் கவலை அவனுக்குப் புரிந்தது. அவர்கள் பதற்றப் படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் வெளியே சொல்ல முடியாத பல அரசியல் ரகசியங்களை அம்பலத்திற்குக் கொண்டு வர அரசு விரும்பவில்லை.
முதலில் இதை உள்நாட்டுப் பிரச்சனையாகத் தான் அரச அதிகாரிகள் நினைத்தார்கள். ஆழ்கடலில் ஆபத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கும் ஸப்மரீனுக்குள்ளே மாலுமிகள் உயிருக்குப் போராடுகிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களது குடும்பத்தின், உறவினரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேறு வழியில்லாமல் வெளிநாடுகளின் உதவியை எதிர் பார்க்க வேண்டி வந்தது. அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுச் சில நாடுகள் உதவிக்கு வந்தன.
அந்த வகையில் தான் இந்தக் கடற்கழுகு என்ற கப்பலும், எல்ஆர்-5 என்ற ஆபத்திற்கு உதவி செய்யும் அந்த நீர்மூழ்கிக் கப்பலும் உதவிக்கு வந்தன. எந்த நிமிடமும் ஆழ்கடல் நோக்கிப் புறப்படுவதற்கு அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
நேரம்: 04:05:21 சனிக்கிழமை
வெளியே சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது. மைக்கேல் கடற்கழுகின் அப்பர்டெக்கில் உள்ள யன்னல் வழியாகக் கடலை நோட்டம் விட்டான். வெளியே பயங்கர இருட்டில் காற்றோடு சேர்ந்து கரும்பூதம் போல அலைகள் ஆரவாரித்துக் கொண்டிருந்தன. எப்படியும் காலையில் அடங்கி விடும் என்ற அசையாத நம்பிக்கை அவன் மனதில் இன்னமும் இருந்தது. சில்லென்ற கடற் காற்றில் உடம்பு நடுங்கியது. தனது கபினுக்குச் சென்று ஸ்வெட்டரை எடுத்து மாட்டிக் கொண்டான். இப்போ உடம்பின் மெல்லிய சூடு உள்ளே பரவி குளிருக்கு இதமாக இருந்தது. அவனுக்குத் தன்னை அறியாமலே சிரிப்பு வந்தது. இதமாக இருப்பதற்கு ஸ்வெட்டர் மட்டும் காரணமல்ல லாரிஸா தன் கைப்பட ஆசையாய்ப் பின்னிக் கொடுத்தது தான் காரணம் என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்!
இப்படித்தான் அன்றும் இந்த ஸ்வெட்டரை அணிந்து கொண்டு அந்தக் குளிரில் அவன் அவளுக்காகக் காத்திருந்தான். வானம் கறுத்துப் பொட்டுப் பொட்டாய் விழுந்த மழைத் துளிகளில் நனைந்தபடி அவள் அவனைத் தேடி வேகமாய் வந்தாள்.
‘ஏய் லாரிஸா! என்ன இது இப்படி நனைஞ்சு போய் வர்றியே உடம்பு என்னத்திற்காகும்?’
அவன் பதட்டப் பட்டு தனது கைக்குட்டையை எடுத்துத் தலையைத் துவட்டி விட்டான்.
‘எனக்கு ஒன்றும் ஆகாது! பரவாயில்லை விடு நானே துடைச்சுக்கிறேன்’ அவள் அவனிடம் இருந்து விலகி தனது கைக்குட்டையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள்.
அவள் அப்படி அவசரமாக அவனிடம் இருந்து விலகிய விதம் அவனுக்கு என்னவோ வழக்கத்துக்கு மாறாக சற்று வித்தியாசமாக இருப்பதாகத் தெரிந்தது. ஆனாலும் தன்னைத் தேடி இந்த மழைக் குளிரில் அவள் வந்து விட்டாளே என்ற பெருமிதத்தின் சந்தோஷ ஊற்று உடம்பெல்லாம் பரவி அவள் மீது இரக்கம் கொள்ள வைத்தது.
அவள் அவனுக்கு எதிரே ஆனால் சற்று விலகி மௌனமாய் அமர்ந்தாள்.
மாலை நேரத்து இருட்டில் மின்னல் ஒன்று வெட்டிப் போக அவள் முகம் வாடி சோகம் குடி கொண்டிருப்பது பளீச்சென்று தெரிந்தது.
‘என்ன லாரிஸா.. பேசமாட்டேன் என்கிறாய்? என்னாச்சு உனக்கு?’
அவன் சொன்னது எதுவுமே கேட்காதது போல அவள் பதில் எதுவும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையில் தலை குனிந்திருந்தாள்.
‘என்னோட கோபமா?’
‘.........’
‘ப்ளீஸ்... சொல்லேன்!’
இல்லை என்று மட்டும் தலையசைத்தாள்.
‘அப்போ வீட்டிலே ஏதாவது பிரச்சனையா?’
‘ஆமா..’
‘என்கிட்ட சொல்லக் கூடாதா?’
தலை குனிந்திருந்தவள் சட்டென்று விம்மி வெடித்தாள்.
அவன் பதறிப் போய் அவளருகே சென்று அவள் முகத்தை நிமிர்த்தினான். அவன் தொட்டதும் அதற்காகவே காத்திருந்தது போல அவன் கைகளில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்.
அவளது விம்மலும் கேவலும் அதிகரிக்க, அவனை அறியாமலே அவனது கண்களும் கலங்கத் தொடங்;கின.
‘அழாதே லாரிஸா பிளீஸ்!’
அவள் அவனது கைகளை விலத்தி விட்டு அவனை நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தாள்.
‘ப்ளீஸ்! என்ன நடந்தது.. சொல்லேன்!’
‘வீட்டிலே ஒரே ரகளை! அப்பா நம் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். தான் பார்த்த பையனையே கட்டிக் கொள்ளும்படி என்னைக் கட்டாயப் படுத்துகிறார், எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை. என்னால எங்க வீட்டில நிம்மதியே குலைஞ்சு போச்சு!’
‘ஏன் அப்பா உன்னைக் கட்டாயப் படுத்திறார்? அவனை நீ திருமணம் செய்வதால் அப்பாவிற்கு என்ன லாபம்?’
‘அவர் வேறுயாருமில்லை அப்பாவின் மேலதிகாரி. இளமையிலேயே தனது கெட்டித்தனத்தால் பதவி உயர்வுகள் பெற்று மேலதிகாரியானவர். அப்பாவிற்குப் பிடித்தமானவர்.’
‘உனக்கு அவனை ஏற்கனவே தெரியுமா?’
‘ஆமா, கடற்படையினரின் கிறிமஸ் பாட்டிக்கு நாங்க போயிருந்த போது அவரும் அங்கே வந்திருந்தார். அங்கேதான் அப்பா என்னை அவருக்கு அறிமுகப் படுத்திவைத்தார். நடன நிகழ்ச்சியின் போது தன்னோடு நடனமாட முடியுமா என்று மிகவும் மரியாதையோடு அவர் கேட்டபோது என்னாலே மறுக்க முடியவில்லை.’
‘அப்புறம்...?’
‘நடனமாடிவிட்டு இரவு விருந்தில் கலந்து கொண்டோம். அப்போது தான் அவர் என்னைத் தனக்குப் பிடித்திருப்பதாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பமா என்றும் கேட்டார்.’
‘அதற்கு நீ என்ன சொன்னாய்?’
‘நான் ஒன்றுமே சொல்லவில்லை, சிரித்துச் சமாளித்து விட்டேன்!’
‘ஏன்;;.. உனக்கொரு பாய்ஃபிரண்ட் இருப்பதாகச் சொல்லியிருக்கலாமே?’
‘சொல்லியிருக்கலாம், அவர் மூலம் எங்கள் காதல் அப்பாவிற்குத் தெரிய வந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்!’
‘சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டதன் பலன் என்னவென்று இப்போ உனக்குப் புரியுதா?’
‘நான் என்ன வேண்டும் என்றா சொல்லாமல் மறைச்சேன்? உன்னை எங்க வீட்டிலே அறிமுகப்படுத்து முன் இதை எப்படி அவரிடம் சொல்வது என்று தான் தயங்கினேன்.’
‘சரி இப்போ என்ன செய்வதாய் உத்தேசம்?’
‘அவர் என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக அப்பாவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த அப்பாவும் உடனேயே சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அப்பாவின் பதவி உயர்வு அவர் கையில் தான் தங்கியிருக்கிறது.’
‘கேவலம் அப்பாவின் பதவி உயர்வுக்காக உன்னைப் பலிகொடுக்கப் போகிறாயா?’
‘அந்தப் பதவிக்கு உயர வேண்டும் என்பது தான் அப்பாவின் நீண்ட நாள் கனவு. அதுமட்டுமல்ல, அவருக்குக் கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. அரசாங்க பங்களா இருக்கிறது. குடும்பப் பொறுப்பு எதுவுமில்லை. எங்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. கல்யாணச் செலவைக் கூட அவரே ஏத்துக் கொள்வதாகச் சொல்கிறார். இதை விட அப்பாவிற்கு வேறு என்ன வேணும்? அதனாலே தான் என்னைக் கூடக் கேட்காமல் சம்மதம் சொல்லி விட்டார்!’
எங்கேயோ இடி முழங்கியது. இங்கே அவன் இதயம் வலித்தது.
‘உன்னுடைய மௌனத்திற்கு நீ கொடுத்த விலை என்ன என்று உனக்குத் தெரியுமா லாரிஸா?’
அவள் எதுவும் பேசாது மௌனமாக இருந்தாள்.
‘அப்போ நீ என்ன தான் முடிவு எடுத்திருக்கிறாய்?’
‘இந்தக் கல்யாணம் நடக்காவிட்டால் அப்பா தன்னை உயிரோடு பார்க்க மாட்டாய் என்று சொல்கிறார். உனக்கு என்னுடைய நிலைமை புரியும் என்று நினைக்கின்றேன்.’
‘அம்மா என்ன சொன்னா?’
‘அம்மாவும் அப்பாவின் பக்கம்தான். அப்பாவிற்கு ஏதாவது ஒன்றென்றால் அம்மா தானும் பேயிடுவேன் என்கிறா.’
‘நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னமும் பதில் சொல்லலையே.’
‘நான் என்ன சொல்ல? உனக்கு என்னுடைய நிலைமை என்னவென்று புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.’
லாரிஸா சொல்ல வந்ததை நாசுக்காகச் சொல்லிவிட்டாள்.
‘அப்போ நீ என்னோடு பழகியது, என்னைக் காதலித்தது எல்லாம்.....?’
‘எல்லாமே நிஜம்! என்னுடைய நிலையில் நீ இருந்தால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வாய் மைக்கேல்?’
அவள் கண்ணீருக்கிடையில் அவனைப் பார்த்துக் கேட்ட போது அவன் பதில் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போய் நின்றான்.
‘இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கா சொல்லு மைக்கேல்?’
அவன் என்ன சொல்ல முடியும்? அவன் எப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறான் என்பது அவனுக்குத் தான் தெரியும்! இந்த நிலையில் அவனால் அவளுக்கு எப்படி, என்ன வாக்குக் கொடுக்க முடியும்?
அவனது மௌனம் தான் அவளது கேள்விக்குப் பதிலாயிற்று.
‘அப்பா அம்மாவை பலி கொடுத்து எங்கள் காதல் வாழணுமா? சொல்லு மைக்கேல்?’
‘பலியா? நம்ம காதலுக்கு பலி கொடுக்கணுமா.....?’
அவன் அதிர்ந்து போய் நின்றான்.
தங்கள் காதல் நிறைவேறத் தனது பெற்றோரைப் பலிகொடுக்க வேண்டுமா என்று லாரிஸா அவனைப் பார்த்துக் கேட்டபோது மைக்கேல் அதிர்ந்து போனான். அப்புறம் அவள் சொன்னது எதுவுமே அவன் செவிகளில் ஏறவில்லை! லாரிஸா அந்த இடத்தை விட்டுப் போய் விட்டாள் என்பது கூடத் தொரியாமல் அவன் நெடுநேரம் மழையில் நனைந்து கொண்டே நின்றான்.
சுய உணர்விழந்து விறைத்துப் போய் நின்ற அவனை யாரோ அவனது நண்பர்கள் தான் அவனது விடுதியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
பிரிவு என்பது எவ்வளவு வேதனையானது என்பது அவளைப் பிரிந்த அந்தக் கணத்தில் அவனுக்குப் புரியவில்லை. பின்புதான் தனிமையில் அந்தப் பிரிவுத் துயரை அனுபவித்த போது அவனுக்கு அந்த வேதனை எப்படிப் பட்டதென்று மெல்ல மெல்லப் புரிந்தது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் புதுப்புது அர்த்தம் தெரிந்தது.
‘நான் பாசத்தோடு வளர்ந்திட்டேன். அதை உடைத்தெறியும் துணிவு என்னிடம் இல்லை மைக்கேல்!’
‘நம்ம காதலை மட்டும் உடைத்தெறிய உனக்கு எப்படி மனசு வந்தது லாரிஸா?’ அவன் தனிமையில் தனக்குள் விம்மினான்.
இதயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் ஊசியால் குத்திக் கிழறிப் பார்ப்பது போல இனம் புரியாத அந்த வேதனை அவனை வாட்டத் தொடங்கியது. அவளை மீண்டும் சந்திக்க அவன் எடுத்த முயற்சி எல்லாம் பலனற்றுப் போயிற்று.
இவன் கையாலாகாதவன் என்று அவளது பெற்றோர் நினைத்திருக்கலாம். உண்மை ஒருபக்கம் கனமாக அழுத்த தனிமை அவனை மேலும் வாட்டியது. இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் அந்தத் தோல்வியை மறப்பதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு நிம்மதி தேடி ஊருக்குப் போனான்.
காதல் தந்த தோல்வியில் இருந்து ஒருவாறு மீண்டு அவன் மீண்டும் வேலைக்கு வந்த போது தான் லாரிஸா வேறு ஒருவனின் மனைவியாகி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியவந்தது. அதுமட்டுமல்ல அவளது கணவன் தான் தங்கள் கடற்படைப் பிரிவில் உள்ள மிகநவீன மயமாக்கப்பட்ட ஸப்மரீன் ஒன்றின் கேப்டனாக இருக்கிறான் என்ற செய்தியையும் அவனது நண்பர்கள் மூலம் அவன் அறிந்து கொண்டான்.
அந்த நீர்மூழ்கிக் கப்பல் தான் இப்போ விபத்தில் சிக்கி ஆழ்கடலில் மூழ்கி இருக்கிறது. அதை மீட்கும் பணிக்குத்தான் இவன் பொறுப்பேற்றுச் செல்கிறான்.
யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அந்த ஸப்மரீனில் இருந்த பாம் ஒன்று வெடித்த போது மாலுமிகள் எல்லோரும் இறந்திருப்பார்கள் என்று தான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சில மாலுமிகள் இன்னமும் உயிரோடு இருப்பதாக அதிலிருந்து எஸ்.ஓ.எஸ் சமிக்ஞை செய்தி வந்த போது இவர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்.
அப்படி என்றால் உள்ளே இன்னமும் சிலர் உயிரோடு இருக்கிறார்களா? எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று நாங்கள்தான் தப்புக் கணக்குப் போட்டு விட்டோமா? எல்லோர் முகத்திலும் ஒரு உற்சாக உணர்வு ஏற்பட்டது.
உடனடியாக அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமான உணர்வு அந்தக் கணமே அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டது. அதற்கான ஏற்பாடுகளைத் தான் அவசரமாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேரம்: 05:10:07 சனிக்கிழமை
மைக்கேல் விளக்கு வெளிச்சத்தில் அந்த வரை படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். மூழ்கிக் கொண்டிருக்கும் நீர்மூழ்கிக் கப்பலின் வரைபடம் தான் அது. இந்த நீர்மூழ்கி தான் அந்தப் பிராந்தியத்தின் கட்டளைக் கப்பலாகவும் இருந்திருக்கிறது. இந்த நீர்மூழ்கியில் பல இராணுவ ரகசியங்கள் அடங்கியிருந்தன. அணு உலை மூலமே நீர்மூழ்கி இயங்குவதற்குச் சக்தி கொடுக்கப் பட்டது. அதைவிட சில சிறிய அணு ஆயுதங்களும் உள்ளே இருந்திருக்கலாம் என்று நம்பப் பட்டது. விபத்து நடந்தபோது தானியங்கி மூலம் அணு உலை நிறுத்தப் பட்டதால் பல அழிவுகள் உடனடியாகத் தடுக்கப் பட்டன. ஆனால் உள்ளே இருந்த அணு ஆயுதங்கள் ஏதாவது சேதமடைந்திருக்கலாமோ என்ற பயம் அவர்களிடையே இருந்தது. எனவே தான் இந்த விடயத்தில் அரசு மிகவும் நிதானமாக நடந்து கொண்டது.
ஆழ்கடலில் எடுக்கப் பட்ட விபத்திற்குள்ளான நீர்மூழ்கியின் புகைப் படங்களை ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் மைக்கேல். ரொப்பிடோ கம்பாட்மென்ட் பகுதியில் சேதம் தெரிந்தது. அங்கேதான் முதலாவது பாம் வெடித்திருக்க வேண்டும். அதன் காரணமாக உள்ளே தீப்பிடித்திருக்கலாம். அது மற்றைய கேபினுக்கும் பரவியிருக்கலாம். உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவதாக வெடித்த பாம் தான் அதிக சேதத்ததை நீர்மூழ்கிக்கு ஏற்படுத்தியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. நீர்மூழ்கியின் முன்பக்கத்தில் ஒரு பகுதி இதனால் தான் பாதிக்கப் பட்டிருந்தது. பெரிஸ்கோப் உள்ள பகுதியிலும் பாதிப்புத் தெரிந்தது. ஆபத்து நேரங்களில் தப்பி வெளியே போவதற்காக முன்பக்கத்தில் அமைந்திருந்த எஸ்கேப்காச் பாவிக்க முடியாதவாறு முற்றாகச் சேதமடைந்திருந்தது.
படத்தை நிதானமாக ஆராய்ந்து பார்த்த போது உள்ளே அகப்பட்டு இருப்பவர்களை முன்பக்க வாசலால் வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை மைக்கேல் அப்போதே இழந்து விட்டான்.
அதன்மூலம் அவர்களை வெளியே கொண்டு வருவது இலகுவாக இருந்திருக்கும். அந்த வாசல் சேதமடைந்திருப்பதால் இப்போது அதற்குச் சந்தர்ப்பமே கிடையாது. அந்தக் கபினுக்குள் கடல் நீர் புகுந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் தெரிந்தன. பின் பக்கத்தில் உள்ள இன்னுமோர் கதவு அவன் கவனத்தைக் கவர்ந்தது. எந்த விதசேதமும் இல்லாமல் அக்கதவு இருந்தது. உள்ளே இருப்பவர்களின் உதவி இல்லாமல் அந்தக் கதவை வெளியே இருந்து திறக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும். இதற்கான பயிற்சியைப் பெற்றவர்களால் தான் இக் கதவைத் திறக்க முடியும். மைக்கேல் ஏற்கனவே அதற்கான சிறப்பு பயிற்சி பெற்றிருந்தான். பின் பக்கத்தில் உள்ள கபினில் இருந்த மாலுமிகள் உயிர் தப்பியிருக்க நிறைய சாத்தியம் இருந்தது. அவர்களிடம் இருந்து தான் அந்த எஸ்.ஓ.எஸ் செய்தி வந்திருக்கலாம். அந்தக் கதவைப் படத்தில் ஹைலைட்டரால் குறியிட்டான். அந்தக் கதவைத் திறப்பதற்கு உரிய குறிப்பீடுகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது மீண்டும் அவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக உதவியாளன் அவனை அழைத்தான்.
‘இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்பா? யாராக இருக்கும்?’
நேரம்: 06:12:01 சனிக்கிழமை
‘ஹலோ...!’
‘மைக்கேல்! லாரிஸா ஹியர்!’
‘ம்...!’ என்றான் அந்தக் குரலைக் கேட்டதும்.
‘உன்னைத் தொந்தரவு படுத்திறேனா மைக்கேல்?’
‘......... ‘ என்ன சொல்வது என்று தெரியாமல் மைக்கேல் தயங்கினான்.
‘என்ன மைக்கேல் மௌனமாயிட்டாய்?’
‘இல்லை அப்படி ஒன்றுமில்லை!’
‘டிவி செய்தியில் என்னென்னவோ எல்லாம் சொல்லுறாங்க, எனக்குப் பயமாயிருக்கு மைக்கேல்!’
‘பயப்படாமல் இரு லாரிஸா, இந்த நேரத்தில் தான் உனக்கு மனதில் உறுதி வேண்டும்!’
‘எப்படி பயப்படாமல் இருப்பது மைக்கேல்? அவரை நினைச்சா பயமாயிருக்கு, அவர் உயிரோடு இருப்பாரா மைக்கேல்?’ ஒரு குழந்தை போல தேம்பியபடி கேட்டாள்.
‘நாங்க அப்படித் தான் நம்பறோம். அவங்களுக்கு இருபத்தி நான்கு மணித்தியாலத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் இன்னமும் இருக்கு. அதனாலே பயப்படத் தேவையில்லை!’
‘அதற்கு முன்னே நீ அந்த ஸ்பாட்டுக்கு போயிடுவியா?’
‘ஆமாம்!’
‘காலநிலை சரியில்லை என்று சொல்லுறாங்களே?’
‘ஆமாம் அவங்க சொல்லட்டும், ஆனால் என்ன நடந்தாலும் உதவிக்குப் போறதாய் நான் முடிவெடுத்திட்டேன்!’
‘நீ நினைச்சால் எதையும் சாதிப்பாய் மைக்கேல், ஆனால் உன்னை நினைச்சால் தான் எனக்குக் கவலையாயிருக்கு!’
‘ஏன்?’
‘இந்தப் பயங்கரச் சூறாவளியில் நீ சிக்கிவிடுவாயோ என்று தான் எனக்குப் பயமாயிருக்கு!’
மைக்கேல் விரக்தியாச் சிரித்தான். அவனது சிரிப்பில் ஏளனம் தெரிந்தது.
‘ஏன் மைக்கேல் நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?’
‘இல்லை! இந்த மைக்கேலுக்காக இரக்கப்படவும் உன் மனசின் ஒரு மூலையில் இடம் ஒதுக்கியிருக்கியே, அதை நினைச்சா..’
‘மைக்கேல், ப்ளீஸ்.. பழசை எல்லாம் சொல்லிக் காட்டி என்னை வார்த்தைகளால் கொல்லாதே!’
‘நீ மட்டும் என்னை உயிரோடு கொல்லலையா?’
‘பழி தீர்க்க இதுவல்ல நேரம் மைக்கேல்!’
அவள் கேவுவதும் விம்மி வெடிப்பதும் தொலைபேசியில் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ஒரு பெண்ணின் துயரம் கோபம் அவலம் ஆற்றாமை எல்லாமே அந்த அழுகையில் வெளிப்பட்டது.
ஏனோ அவள் கண்ணில் நீர் வடிந்தால் இப்போதும் இவன் நெஞ்சம் துடித்துப் போய்விடுகிறது!
‘லாரிஸா மை டார்லிங்! நீ அழக்கூடாது!’
‘எ.....என்ன சொன்னாய் மைக்கேல்?’
‘அழாதேன்னு சொன்னேன்!’
‘இல்லை! நீ வேறு ஏதோ சொன்னாய்!’
‘டார்லிங் என்றேன்’
‘வேண்டாம் மைக்கேல், அப்படியெல்லாம் என்னை அழைத்துப் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வராதே!’
‘நீ மறந்திருக்கலாம் லாரிஸா ஆனால் நான் எதையும் மறக்கலையே!’
‘எனக்கு ஏழு வயசில பெண்ணொருத்தி இருக்கா! மூடிவைத்த நினைவுகளை மீண்டும் கிளறி என்னைச் சஞ்சலப் படுத்தாதே பிளீஸ்!’
‘இல்லை உன் மனதை நோகடிக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் நினைத்ததில்லை!’
‘எட்டு வருடமாய் நான் நல்ல மனைவியாய் வாழ்ந்து விட்டேன்! எனக்காக இல்லாவிட்டாலும் என் மகளுக்காகவாவது அவர் திரும்பி வரணும். அவள் அப்பா செல்லம். அவளுக்கு அப்பா வேணும் மைக்கேல்!’
‘என்னாலே முடிந்ததைச் செய்வேன் லாரிஸா!’
‘கொஞ்சம் இரு, என் பெண்ணு உங்கிட்ட கொஞ்சம் பேசணுமாம்!’
சிறிது நேர அமைதிக்குப் பின் தொலைபேசி கைமாறியது.
‘ஹலோ அங்கிள்.. திரேஸா ஹியர்!’
‘என்னம்மா..?’ அவனது குரலில் ஈரம் சுரந்தது.
‘எங்கப்பா திரும்பி வருவாரா அங்கிள்?’
‘கண்டிப்பா வருவாரம்மா.’
‘அவர் உயிரோடு இருக்கமாட்டார் என்று அடுத்த வீட்டுக்காரங்க பேசிக்கிறாங்கன்னு என்னோட சினேகிதி சொல்லுறா, அதெல்லாம் பொய் தானே அங்கிள்?’
‘வதந்திகளை நம்பக்கூடாதம்மா!’
‘அப்போ டிவி நியூஸில் உயிரோடு இருக்கிறாங்களா இல்லையா என்று நிச்சயம் சொல்ல முடியாதுன்னு சொன்னாங்களே!’
‘உள்ளே உயிரோடு இருப்பதாக எங்களுக்கு எஸ்.ஓ.எஸ் செய்தி வந்திருக்கே! நாங்க நம்பிக்கையைக் கைவிடல்லை, அதனாலே அவங்களை மீட்க நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிறோம்.’
‘புயலடிக்கும் போது கடலுக்குப் போகப் பயமில்லையா அங்கிள்?’
‘பயம்தான்! பயந்தா உங்க அப்பாவை எப்படிக் காப்பாற்றுவதாம்?’
‘நீங்க ரொம்ப நல்ல அங்கிள், உங்களுக்கு நான் என்ன தரட்டும்?’
‘எனக்கா? சரி என்ன கொடுப்பாய்?’
‘ஒரு முத்தம் தரட்டுமா?’
‘அங்கேயிருந்தா? எப்படி?’
‘உ...ம்மா’ என்ற சத்தத்தோடு அவள் மறுமுனையில் இருந்து தொலைபேசிக்குள்ளால் ஒரு நீண்ட முத்தம் கொடுத்தாள். அந்தக் குழந்தையின் முத்தத்தில் அவன் நெகிழ்ந்து போனான்.
‘ஸ்வீட் கிஸ்! ரொம்பத் தாங்ஸ்ம்மா, உன்னோட நல்ல மனசிற்கு உன் அப்பா நிச்சயம் திரும்பி வருவாரம்மா!’
‘நீங்களும் அப்பாவோட எங்க வீட்டிற்குக் கட்டாயம் வரணும், சரியா அங்கிள்?’
‘சரிம்மா கட்டாயம் வர்றேன்!’
‘நான் காத்திருப்பேன் அங்கிள்!’
‘ஓ...கே ப்றமிஸ்!’
ரிசீவரை வைத்துவிட்டு அப்பாவிற்காக ஏங்கும் அந்தச் சிறுமியின் பாசத்தை நினைத்து ஒரு கணம் நெகிழ்ந்து போனான். பாசமுள்ள அந்தக் குழந்தைக்காகவாவது எப்படியும் அதன் தகப்பனை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற உணர்வு ஒரு வெறியாய் அவன் உள்ளத்தில் ஏற்பட்டது.
நேரம்: 07:20:28 சனிக்கிழமை
சுமார் நூறு மைல்களுக்கு அப்பால் மையம் கொண்டிருந்த சூறாவளி வடக்கு நோக்கி மெல்ல நகர்வதாக வானொலி அறிவித்தது.
காலையில் மைக்கேல் கடலை நோட்டம் விட்டான். காற்றின் வேகம் தணிந்ததால் கடற் கொந்தளிப்பு சிறிது குறைந்திருந்தது. ஆனாலும் எந்த நேரமும் மீண்டும் ஆர்ப்பரிக்கலாம் என்பது போல வானம் இருண்டு மழை பெய்து கொண்டிருந்தது.
காலநிலை தங்களுக்குச் சாதகமாக சிறிது மாறியதால் மீட்புக்குழுவிற்கு பயணத்தைத் தொடரலாம் என்ற உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆபத்தில் அகப்பட்டு இருப்பவர்களை உயிரோடு மீட்டுக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் மீண்டும் துளிர்த்தது. அந்த உற்சாகத்தோடு எல்லா ஆயத்தங்களையும் அவசரமாச் செய்தார்கள். அவர்கள் துறைமுகத்தை விட்டுப் புறப்படும் சமயம் மைக்கேலுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இந்த அழைப்பு நிச்சயமாக பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து தான் என்று மைக்கேல் நினைத்தான். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு எதிர்பாராமல் திடீரெனத் தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப் பெருமைப்பட்டான்.
‘ஹலோ! மைக்கேல் ஹியர்....!’
‘ஹாய் மைக்கேல்! நான் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் பேசறேன்..’
‘குட்மார்னிங்! சொல்லுங்க சார்.’
‘நீங்க புறப்பட ஆயத்தமா?’
‘ஆமா ஸார் எல்லாம் ரெடி, நாங்க இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட இருக்கிறோம்.’
‘காலநிலையால் உங்க பயணத்திற்கு ஒன்றும் பாதிப்பில்லையே?’
‘இல்லை சார், காலநிலை எப்படி இருந்தால் என்ன? நாங்கள் அவர்களை மீட்கப் புறப்பட்டு விட்டோம். இனி அவர்களோடு தான் திரும்பி வருவோம்.’
‘மைக்கேல் நீ தானே சப்மரீன் கதவைத் திறக்கப் போகிறாய்?’
‘ஆமாம் சார், நான் தான் திறக்கப் போகிறேன். என்னோடு ஷேர்மனும் உதவிக்கு வருகிறான்.’
‘தற்செயலாக திறக்க முடியாவிட்டால் என்ன செய்வாய்?’
‘இல்லை, கதவில் எந்த சேதமும் இல்லை. எனவே கதவைத் திறப்பதில் எவ்வித கஷ்டமும் இருக்காது என்று தான் நம்புகின்றேன். ஏனென்றால் ஏற்கனவே இப்படியான கதவுகளைத் திறப்பதற்குப் போதுமான பயிற்சி எடுத்திருக்கிறேன்.’
‘அப்படி என்றால் எப்படியும் கதவைத் திறந்து விடலாம் என்கிறாய்?’
‘ஆமாம், முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு! நீங்க கொடுக்கும் ஊக்கமும் உட்சாகமும் தான் எங்களுக்கு அந்தத் துணிவைத் தருகின்றது.’
‘நல்லது! உன்னுடைய துணிவை உண்மையாகவே பாராட்டுகின்றேன். ஆனால் இப்போ நான் சொல்வதை நீ கொஞ்சம் கவனமாகக் கேட்கவேண்டும்.’
‘நிச்சயமாக.... சொல்லுங்க சார்’
‘இந்த ரகசியம் எங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும். நான் சொன்னபடி நீ செய்ய வேண்டும்’
‘நாட்டின் நன்மைக்காக எதையும் செய்வேன்.’
‘அப்படி என்றால் எந்தக் காரணம் கொண்டும் நீ சப்மரீன் கதவைத் திறக்க வேண்டாம். கதவைத் திறக்க முயற்சிப்பது போல நீ பாசாங்கு செய்தால் போதும்.’
‘ச.. சார்! என்ன சார் சொல்.....றீங்க?’ அவன் அவர் சொல்வதை நம்பமுடியாமல் அதிர்ந்து போய்க் கேட்டான்.
‘ஏன்.. சார்..?’ என்ற அவனது கேள்வியின் விடை அவனை அதிரவைத்தது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சொன்னதைக் கேட்ட மைக்கேல் ஒரு கணம் அதிர்ந்து போயச் செயல் இழந்து நின்றான். பின் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு திரும்பவும் கேட்டான்.
‘என்ன சார் சொல்றீங்க?’
‘ஆமாம், கதவைத் திறக்க வேண்டாம். கதவைத் திறந்தால் பல ரகசியங்கள் வெளியே வந்து விடும் என்று அரசு அஞ்சுகிறது. எனவே மக்களை நம்ப வைப்பதற்காக மட்டும் நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதாகக் காட்டிக் கொண்டால் போதும்.’
மைக்கேலுக்கு இப்போ எல்லாமே குழப்பமாகத் இருந்தது.
‘கதவைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?’
‘இருக்கு... நிறைய இருக்கு! உள்ளே வெடித்த பாம் என்ன வென்று யாருக்கும் இதுவரை தெரியாது. வெடித்தது சிறிய அணு ஆயுதமாக இருந்தால் கூட கதவைத் திறக்கும் போது அதன் கதிர் வீச்சு வெளியே பரவக் கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது.’
‘அதனாலே...?’
‘அப்படிப் பரவினால் அதனால் ஏற்படும் பாதிப்பு எப்படி பட்டதாய் இருக்கும் என்பது உனக்குப் புரியாதா?
‘அதற்காக... அதற்குள் அகப்பட்டவர்களை அப்படியே விட்டு விடுவதா?’
‘வேறு என்ன செய்ய முடியும்? நம்மேல் எப்போது கரி பூசலாம் என்று உலக நாடுகள் சில காத்திருக்கின்றன. அது மட்டுமல்ல உள்நாட்டிலும் இதனால் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம்."
‘அவங்களை எப்படியாவது காப்பாற்றுங்க என்று தானே மக்கள் கேட்கிறாங்க, அதனாலே என்ன பிரச்சனை?’
‘பிரச்சனையே அங்கேதானே இருக்கு, அணுக்கதிர் வீச்சில் அவங்க பாதிக்கப் பட்டிருந்தால் அவங்களை வெளியே கொண்டு வருவது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?’
‘ஏன்? பாதிக்கப்பட்டவங்களுக்கு உடனே ஏதாவது ரீட்மென்ட் கொடுக்கலாமே?’
‘கொடுக்கலாம், கொடுத்தாலும் பாதிக்கப் பட்டவங்க அதிக நாட்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை! தினமும் ஒவ்வொருவராய் தங்கள் கண்முன்னால் துடித்துத் துடித்து மரணத்தைத் தழுவுவதை அந்தக் குடும்பத்தினரால் தாங்க முடியும் என்று நினைக்கிறாயா?’
‘அப்போ.. என்னதான் செய்யச் சொல்லுறீங்க?’
‘ஒரு சில உயிர்களைக் காப்பாற்றுவதால் நாங்கள் எதையும் பெரிதாய்ச் சாதித்து விடப் போவதில்லை! அதேசமயம் உள்நாட்டில் கலவரம் ஏற்பட்டால் பல உயிர்கள் பலியிடப் படலாம். இது இந்த அரசிற்கு நல்லதல்ல. எனவேதான் சொல்கிறேன் மீட்பு முயற்சியைத் தாமதப் படுத்துங்கள்.’
‘அப்போ எங்க பயணத்தைக் கைவிடச் சொல்லுறீங்களா?’
‘இல்லை அப்படிச் செய்யாதே! நாட்டிற்கும் வெளியுலகிற்கும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் அதை நம்பக் கூடியதாக நடக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்பு முயற்சியைத் தாமதப் படுத்த வேண்டும்.’
‘தாமதிப்பதால் என்ன லாபம்? நாங்கள் வேண்டும் என்றே தாமதப் படுத்துவதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?’
‘அதற்காகத்தான் காலநிலை மீது பழியைப் போடச் சொல்லுறேன்!’
‘அவர்களுக்கு இன்னும் சில மணிநேரங்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் தானே இருக்கு!’
‘அதனாலே தான் சொல்லுறேன், சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆக்ஸிஜன் தீர்ந்து போனதும் அவர்களுக்கு வரப்போவது இயற்கை மரணம்!’
‘நீங்க என்ன சொல்லுறீங்க..... அவங்க மூச்சுத் திணறி.....பரிதாபமாய்...?’
‘ஆமாம்! நாங்க எங்களாலே முடிந்த அளவு முயற்சி செய்தோம், ஆனால் அவர்களை உயிரோடு காப்பாற்ற முடியவில்லை என்று மக்களை நம்ப வைத்து விடலாம்!’
‘என்ன சொல்றீங்க.. இது மகாபாவம் இல்லையா.’
‘தினமும் நாட்டில் எத்தனை விபத்துகள் எத்தனை இடங்களில் நடக்கின்றன. அதற்கெல்லாம் கவலைப் படுகிறோமா? அதிலே இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டால் போச்சு.’
இதைக் கேட்டதும் மைக்கேல் பேச்சிழந்து மௌனமானான்.
எங்கள் நாடு, எங்கள் தோழர்கள், எங்கள் உடன் பிறப்புக்கள், என்றெல்லாம் அரசியல் மேடைகளில் கூக்குரலிட்டவர்களா இன்று இப்படிச் சொல்கிறார்கள்? இவர்கள் என்னமாய்த் திட்டம் போடுகிறார்கள். எப்படி இவர்களால் இதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது? மனிதாபிமானமே இல்லாதவர்களா? ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்காக இவர்கள் எதையும் செய்வார்களோ? அரசியல் என்றால் சேறும் சகதியும் தானோ?
‘மைக்கேல்.. என்ன பேச்சைக் காணோம்?’
‘இல்லை ஒன்றுமில்லை!’
தன்னை ஒரு இக்கட்டான நிலையில் அரசு தள்ளி விட்டிருப்பதை மைக்கேல் உணர்ந்தான்.
‘நான் சொன்னது போல பயணத்தைத் தொடருங்கள். கதவைத் திறப்பதில் தாமதம் காட்டுங்கள் ஆனால் எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம்!’
‘......’
‘நான் சொன்னது புரிஞ்சுதா? இது மேலிடத்து உத்தரவு. உன்னை நம்பித்தான் அனுப்புகின்றேன். குட்லக்! நான் சொன்னபடி எல்லாம் நடந்தால் திரும்பி வந்ததும் உனக்குப் பதவி உயர்வும் வீரப்பதக்கமும் காத்திருக்கிறது.’
மைக்கேல் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் ரிசீவரை அடித்து வைத்தான். அந்த வேகத்தில் அவனது இயலாமை தெரிந்தது. கையாலாகாதவனாய்ப் போணோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
யாருக்கு வேண்டுமாம் இந்தப் பதவி உயர்வும் வீரப்பதக்கமும்?
நேரம்: 08:18:03 சனிக்கிழமை
திட்டமிட்டபடி அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆவேசமாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலலைகள் ஓரளவு ஓய்ந்து போயிருந்தன. இருண்ட வானம் கடலில் கரும்பச்சை பூசிக் கொண்டிருக்க அந்த நீரலைகளைக் கிழித்தபடி கப்பல் வேகமாக ஆழ்கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மைக்கேல் கடல் அலைகளை வெறித்துப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
‘அடுத்து என்ன செய்வது’ என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது.
‘உண்மையிலேயே மேலிடத்தில் இருந்துதான் இந்தச் செய்தி வந்ததா? இல்லை அரசுக்கு எதிரான சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வந்ததா? அரசிற்கு எதிரானவர்களும் மேலிடத்தில் இருக்கிறார்களா? மைக்கேலுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
கடலலைகள் கொஞ்சம் ஓய்ந்தது போலிருந்தாலும் அவனது நெஞ்சின் அலைகள் அவனுக்குள் வேகமாக மோதிக் கொண்டிருந்தன.
‘என்ன பாஸ் யோசிக்கிறீங்க? யார் போன்ல? ஏதாவது தப்பு நடந்து போச்சா?"" அருகே நின்ற ஷேர்மன் கேட்டான்.
‘இல்லை ஒன்றுமில்லை! அது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!’
''அவர்தான் பேசினார் என்று உங்களுக்கு நிச்சயமாய் தெரியுமா?’
‘அவராகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.’
‘அவர் அப்படி என்னதான் சொன்னார்? உங்க முகம் சட்டென்று வாடிப்போச்சே..’
‘ஆமாம் நான் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை அவர் கொடுத்திட்டார்!’
நடந்ததைச் சொல்வதா விடுவதா என்று மைக்கேல் ஒரு கணம் தயங்கினான். யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும் போல இருந்தது. ஷேர்மனிடம் சொல்லி ஆலோசனை கேட்கலாம் என நினைத்து நடந்ததைச் சொன்னான்.
‘என்ன பாஸ், உங்களுக்குப் பைத்தியமா? இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டு, கடைசி நிமிடத்தில் நம்ம திட்டத்தைக் கைவிடுவதா?’
‘வேறு என்னதான் செய்யச் சொல்கிறாய்?’
‘நாங்க ஒன்றைக் கவனிக்கணும். காலநிலை கூட ‘நமக்குச் சாதகமாய் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எங்க திட்டத்தைக் கைவிடுவது நல்லதா? அத்தனை உயிரும் மூச்சுத் திணறி பரிதவித்துச் சாவதற்கு நாம காரணமாய் இருக்கணுமா? சொல்லுங்க.’
‘வேறு என்ன தான் நாங்க செய்யலாம் என்று நினைக்கிறாய்?
‘என்னாலே ஏதாவது உதவி செய்யலாம் என்றால் அதற்கு நான் தயாராய் இருக்கிறேன்’
‘அப்போ நான் ஒன்று செய்யப்போகிறேன். குடைசி நிமிடத்தில் மேலிடத்து உத்தரவை மீறி கதவைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விடுவதென்று தீர்மானித்து விட்டேன்!’
‘ரொம்ப நல்ல ஐடியா, ஆனால் நீங்க இப்படிச் செய்வதால் உங்க உயிருக்கு ஏதாச்சும்.......?’
‘என்ன செய்வாங்க? எங்கேயாவது பாதாளச் சிறையிலே என்னை அடைப்பாங்க அல்லது மரணதண்டனை கொடுப்பாங்க! எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை!’
‘என்ன பாஸ் இப்படி அலட்சியமா சொல்றீங்க?’
‘ஆமாம், பல உயிர்களைக் காப்பாற்ற என்னுடைய உயிரைத் தியாகம் செய்ய நான் தயாராயிருக்கிறேன்!’
‘அப்போ உயிர்த் தியாகம் செய்ய நீங்க தயார்!’
‘ஜெஸ்.....!’ பெருவிரலை உயர்த்தி உறுதியோடு சொன்னான். மைக்கேலின் வார்த்தைகளில் உறுதி தெரிந்தது.
‘எனக்கு அப்பா வேணும்’ என்று கேட்டு அழுத சிறுமி திரேஸா, மைக்கேலின் மனக்கண்ணில் நிழலாய் வந்து போனாள்.
நேரம்: 12:55:09 சனிக்கிழமை
விபத்து நடந்த இடத்தை அடைந்ததும் ஆழ்கடலுக்குள் செல்வதற்கான பிரத்தியேக ஆடைகளை இருவரும் அணிந்து கொண்டனர். கதவைத் திறப்பதற்கு வேண்டிய நவீன உபகரணங்கள் அடங்கிய பெட்டியையும், ஒருவரோடு ஒருவர் செய்தி பரிமாறிக் கொள்வதற்கும் கப்பலில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்தோடு தொடர்புகொள்வதற்கும்; வேண்டிய சாதனங்களையும் எடுத்துக் கொண்டனர். நீரின் அழுத்தத்திற்கும் குளிருக்கும் ஈடு கொடுக்கக்கூடிய உடைகளோடு ஆக்ஸிஜன் சிலிண்டரும் மாஸ்க்கும் அணிந்து நீரில் குதித்து ஆழ்கடலை நோக்கி நீந்தினர்.
விபத்தில் அகப்பட்ட சப்மரீனை அடைந்ததும் மைக்கேல் நேரத்தை வீணாக்காமல் தான் எற்கனவே குறித்து வைத்திருந்த பின்பக்கத்தில் இருந்த கதவுப் பக்கம் சென்று காரியத்தில் இறங்கினான். எவ்வளவு சீக்கிரம் கதவைத் திறக்கிறோமோ அவ்வளவிற்கு அதிகமான உயிர்களைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையோடு விரைவாகச் செயற்பட்டான்.
அவனுக்குக் கதவைத்திறப்பதற்குத் தேவையான உபகரணங்களை அவ்வப்போது ஷேர்மன் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தான்.
மைக்கேல் பொறுமையாகச் செயற்பட்டான். ஆழ்கடலில் வைத்து ஸப்மரீன் கதவைத் திறப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதும், ஆனாலும் எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பதில் தனது பாஸ் திறமையானவன் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் ஷேர்மன் கண்டிருக்கிறான். எப்படியும் மைக்கேல் கதவைத் திறந்து விடுவான் என்ற நம்பிக்கை அவன் மனதில் இருந்தது.
திடீரென மைக்கேல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான்.
‘என்ன பாஸ் என்னாச்சு?’
‘காம்பினேஷன் லாக்கை திறந்திட்டேன், இன்னும் ஒரு லாக்தான் பாக்கியிருக்கு எப்படியும் கொஞ்ச நேரத்திலே திறந்திடலாம்.’
‘அந்த லாக்கையும் திறந்துட்டால் கதவைத் திறந்துடலாமா பாஸ்?’
‘ஆமா! நாம பட்ட கஷ்டத்திற்கு சீக்கிரம் ஒரு விடிவு வரப்போகுது.’
‘அப்படின்னா அவங்களை உயிரோட வெளியே கொண்டு வரமுடியுங்கிறீங்களா?’
‘ஆமா, முடியும். இதற்காகத் தானே இத்தனை கஷ்டப்பர்றோம்!’
‘அவங்க வெளியே வந்தால் உங்க நிலைமை என்னாகும் என்று யோசிச்சுப் பார்த்தீங்களா?’
‘இதிலே யோசிக்க என்ன இருக்கு? அவங்க உயிர் பிழைக்கணும், அவங்க குடும்பம் சந்தோஷப்படணும், அதிலே தான் ஆத்ம திருப்தி இருக்கு!’
‘அப்போ அவங்க உயிரைக் காப்பாற்ற உங்க உயிரைத் தியாகம் செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?’
‘இது தியாகமல்ல, மனிதாபிமானம்!’
‘எதுவாக இருந்தாலென்ன, நீங்க எதற்கும் துணிஞ்சிட்டீங்க?’
‘ஆமா! மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் என் கடமையைத்தான் நான் செய்யறேன்.’
எப்படியும் லொக்கைத் திறந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு மைக்கேல் தனது கவனம் முழுவதையும் அதிலே செலுத்திக் கொண்டிருந்த போது, பின்னால் நீந்திவந்த ஷேர்மன் சட்டென்று மைக்கேலைப் பிடித்திழுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் குழாயைத் துண்டித்து விட்டான்.
ஷேர்மனின் இந்த எதிர்பாராத நடவடிக்கையால் அதிர்ந்து போன மைக்கேல், ‘ஷேர்மன் நீயா?’ என்றான் சற்றும் நம்பமுடியாமல். அடுத்த சில விநாடிகளில்,
ஆக்ஸிஜன் இல்லாமல் மைக்கேல் மூச்சுத் திணறத் தொடங்கினான்.
‘ஆமாம் மைக்கேல்.. நானே தான்! மேலிடத்து உத்தரவை மீறி நீ கதவைத் திறக்க முயன்றால், உன் கதையை முடித்து விடும்படி எனக்குக் கட்டளை இட்டிரு க்கிறார்கள். நான் என் கடமையை தான் செய்கிறேன். அதுமட்டுமல்ல, நீ உயிரோடு இருந்தால் எனக்குப் பதவி உயர்வே கிடைக்கப் போவதில்லை! உன்னோட உயிர்த் தியாகத்தால் எனக்குப் பதவி உயர்வும் வீரச்சாதனை செய்ததற்கான வீரப்பதக்கமும் கிடைக்கப் போகிறது.’
மூச்சுத் திணறி மைக்கேல் உயிருக்குப் போராடும் போது ஷேர்மனின் வார்த்தைகள் துரோகத்தனத்தின் எதிரொலியாக ஒலித்தன. யாரை நல்ல நண்பன் என்று நம்பினானோ, அவனே கூட இருந்து குழி பறித்த போது மைக்கேல் செய்வதறியாது அப்படியே உறைந்து போனான்.
ஆழ்கடலில் உண்மைகள் அமிழ்ந்து போக உயிர் பிரியும் கடைசிக் கணத்தில் மூச்சுக்காய்ப் பரிதவித்து, அவன் விட்ட கடைசி மூச்சும் நீர்க்குமிழியாய்; மேலே வந்து கடல் மட்டத்தில் உடைந்து அழிந்து போயிற்று.
நேரம்: 18:00:00 சனிக்கிழமை
டி.வி-யின் மாலைச் செய்தியில் ஆழ்கடலில் மைக்கேலுக்கு நடந்த விபத்துப் பற்றி அறிவிக்கப் பட்டது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மைக்கேல் தற்செயலாக நடந்த விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாகவும், அவனோடு உதவிக்குச் சென்ற ஷேர்மன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் அறிவித்தார்கள். அந்த விபத்துக் காரணமாக காலம் தாமதித்துத் தான் ஸப்மரீன் கதவைத் திறக்க முடிந்தது என்றும் உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் இறந்து போய்க் காணப்பட்டதாகவும் மேலும் அறிவித்தார்கள். உயிர் தப்பிய ஷேர்மனுடன் நடந்த நேரடிப் பேட்டி செய்தியின் பின் ஒளிபரப்பப்படும் என்றும் சொன்னார்கள்.
காத்திருப்புக்கள், நம்பிக்கைகள், வாக்குறுதிகள் எல்லாம் அந்த ஒரு கணத்தில் உடைந்து சிதறிப் போயின. உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாடகத்தின் முடிவு எதிர்பாராத காரணங்களால் ஒரு சோக முடிவாகப் போயிற்று.
அடுத்த வீட்டுச் சினேகிதி பரபரப்பாக ஓடிவந்து மாலைச் செய்தியில் அறிவித்ததை திரேஸாவிடம் சொன்னபோது திரேஸா அதை நம்ப மறுத்து விட்டாள்.
‘மைக்கேல் அங்கிள் சொன்னது போல வதந்திகளை நான் நம்பத் தயாராயில்லை’ என்று பிடிவாதமாக அந்தச் சிறுமி நம்பமறுத்து விட்டாள்.
கொடிகள் எல்லாம் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு இறந்து போன மாலுமிகளுக்காக நாடே துக்கத்தில் மூழ்கியது. உறவுகள் மௌனமாய் நெஞ்சுக்குள் விம்மி விசும்பின.
தினந்தினம் நடக்கும் ஆயிரமாயிரம் விபத்து மரணங்களில் இதுவும் ஒன்றாகிப் போய்விட்டது. காலம் கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் துயரத்தைத் தனக்குள் விழுங்கிக் கொண்டது.
மைக்கேல் அங்கிள் கட்டாயம் அப்பாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவார் என்ற நம்பிக்கையோடு கள்ளங் கபடமறியா அந்தச் சிறுமி திரேஸா தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாசலிலேயே உட்கார்ந்து இன்னமும் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாள்!
……………………………………
ஓவியர்கள் - Artist
ஜெயராஜ்
ராமு
மாருதி
அர்ஸ்
பாண்டியன்
Thank you so much to everyone for enjoying this story. As of today, 3 million people have read this story which is a milestone I am enormously proud of and could not have done with out the support of my publishers and fans. This specific story was published in Vikatan, an India magazine which publishes more than 1 million hard copies a week. I am extremely grateful for all your continuous support and blessings. Many thanks for the opportunity to meet our fan club members.
kuruaravinthan@hotmail.com
என் இனிய வாசகர்களே, நீங்கள் தொடர்ந்தும் எனக்குத் தரும் ஆதரவுக்காக என் மனம் கனிந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களை நேசிக்கும்,
குரு அரவிந்தன்.
Comments
Post a Comment