நூல் திறனாய்வு: சொல்லடி உன் மனம் கல்லோடி?



 

Sample Review

நூல் திறனாய்வு:



சொல்லடி உன் மனம் கல்லோடி?









கோவிட் - 19 பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாத ஒரு சூழ்நிலையில் சில மாதங்கள் வாழப்பழகிக் கொண்டு விட்டோம். ஓய்வாக இருப்பதால் தொலைக்காட்சியையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிராமல், வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பிக்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன் வாங்கிக் கவனமாக வைத்திருந்த நாவல் ஒன்று கண்ணில் பட்டது.


ரொறன்ரோவில் உள்ள முருகன் புத்தகசாலைக்குச் சென்ற போது, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தப் புதினத்தின் அட்டைப்படம்தான் என்னை முதலில் கவர்ந்திழுத்தது. கிராமிய நடன உடையுடன் தலை குனிந்தபடி காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டிருக்கும் அழகான ஒரு இளம் பெண்ணின் அற்புதமான காட்சி அட்டையை அலங்கரித்திருந்தது. தெரிந்த முகம்போல இருந்ததால், புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன், புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்து தமிழ் இசையில் மட்டுமல்ல, பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கும் செல்வி ‘ஐஸ்வர்யா’ என்ற பல்கலைக்கழக மாணவிதான் அட்டைப் படத்தை அலங்கரித்திருந்தார் என்று தெரியவந்த போது, எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.

சென்னை, மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்தப் புதினத்தை எடுத்து தலைப்பை வாசித்தேன். ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற கேள்விக் குறியோடு கூடிய அந்த அருமையான தலைப்பு, ஒரு வேளை என்னைப் போன்ற ஒரு பெண்ணின் கதையாகக்கூட இருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது. தமிழர்களான எங்களது பண்பாடு கலாச்சாரத்தில் ஒரு அங்கமான இசையிலும், பரதநாட்டியத்திலும் எனக்கிருந்த ஈடுபாட்டால், அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் உடனே ஏற்பட்டது. புலம்பெயர்ந்து கனடா நாட்டிற்கு வந்தபோது. சிறு வயதில் இருந்தே பழகிப் போன வாசிப்புப் பழக்கத்தைப்; கைவிடாமல் வைத்திருந்தது மட்டுமல்ல, சிறுகதை, நாவல் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டதால் அடிக்கடி நல்ல நூல்களை வாங்கி வாசிக்கவும் பழகிக் கொண்டேன்.

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட, சர்வதேசப் புகழ் பெற்ற கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் இந்தப் புதினத்தைத் தூக்கம் வரவில்லை என்றுதான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். முன்பெல்லாம் வேலைப் பளுவின் மத்தியில் பொதுவாக வேறு சில நாவல்களை வாசிக்கும் போது அப்படி ஒரு தூக்கம் வந்துவிடும், ஆனால் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கியதும் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தில் நேரம் போனதே தெரியாமல் நாவல் முழுவதையும் வாசித்து முடித்த பின்புதான் இவ்வளவு விரைவாக விடாது வாசித்து முடித்திருக்கிறேனே என்று எண்ணத் தோன்றியது. வாசித்து முடித்த பின்பும் மனதுக்குள் காட்சிகள் நிழலாக ஓடிக்கொண்டே இருந்தன என்பதை நினைக்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இப்படியான புதினங்களை வாசிக்கும் போது பொழுது போக்குவதற்கு என்றே எண்ணத் தோன்றும், ஆனால் இந்தப் புதினம் ஏதோ ஒரு காட்சிப்படத்தைப் பார்ப்பது போன்று பக்கங்களைப் புரட்டும் போது ஒவ்வொரு காட்சிகளாக விரிந்து என்னை அப்படியே அதற்குள் மூழ்க வைத்து, ஒவ்வொரு பாத்திரங்களும் மனதைத் தொட்டு நின்றன. பரதநாட்டியம் பற்றி, இசையைப் பற்றி, பாசம் பற்றி, ஏன் காதல் வாழ்க்கை பற்றி ஆங்காங்கே ஆசிரியர் தரும் விளக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த நூலில் கனடாவில் 1992 ஆம் ஆண்டு முதலாவது பரதநாட்டியப்பள்ளியை ஆரம்பித்து பரதநாட்டியத்தில் பல நிருத்த நிறைஞர்களையும், ஆசிரியர்தர டிப்ளோமா பட்டதாரிகளையும் உருவாக்கிய நடன ஆசிரியை  ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றிருக்கின்றது.

இசையுடனும் கலையுடனும் தொடர்புடையவர்கள், குறிப்பாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளம் கலைஞர்கள், இலகு நடையில் எழுதப்பட்டிருப்பதால், கட்டாயம் வாசிக்க வேண்டிய புதினம் இதுவாகும்.
‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!’ என்ற பாரதியின் பாடலுடன்தான் நாவல் தொடங்குகிறது. நாவலைப் பற்றிச் சிறிது குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். மாலதியும் கமலினியும் பள்ளித் தோழிகள், கமலினியின் தாயாரான நடன ஆசிரியை தேவகியிடம் இருவரும் நடனம் பயில்கிறார்கள். இசையில் ஆர்வம் கொண்ட கமலினியின் தம்பி கண்ணன் இவர்களுடன் கூட்டுச் சேர்கின்றான். அரங்கேற்றத்தைத் தொடர்ந்து கமலினி திருமணமாகி அமெரிக்கா செல்ல, சிறு வயதில் இருந்தே நட்போடு பழகிய கமலினியின் தம்பி கண்ணணுக்குத் தன்னைவிட வயதிற் கூடிய மாலதி மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது. அவனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்துமுன் மாலதிக்குச் சொந்த பந்தத்தில் திடீர் திருமணம் நடந்து விடுகின்றது. குடிகாரக் கணவனான ராஜனுடன் மாலதி படும் அவஸ்தையைப் பார்த்துக் கண்ணனுக்கு அவன் மீது கோபம் வருகின்றது. ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற கண்ணனின் மனத்தவிப்பை யாரும் புரிந்து கொள்ளவில்லை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும், கண்ணனுடைய ஒரு தலைக் காதலுக்கு என்ன நடக்கிறது? புலம் பெயர்ந்த புதிய மண்ணில், காலம் மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் மனித மனதை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றது என்பதைத்தான் இந்த நாவல் அருமையாக எடுத்துச் சொல்கின்றது. இப்படியே கலை அம்சத்தோடு விறுவிறுப்பாகத் தொடரும் இந்த நாவலை வாசித்து முடிக்காமல் கீழே வைக்கவே எனக்கு மனம் வரவில்லை. 

‘புலம்பெயர்ந்த மண்ணில் கலைகளின் வளர்ச்சிபற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது, தனியாவர்த்தனத்தில் திஸ்ரகதி, கண்டகதி, மிஸ்ரகதி ஆகிய மூன்று கதிகளையும் ஒன்றாக இணைத்து நல்ல லயப்பிடிப்போடு மிக அநாயாசமாகக் கண்ணன் வாசித்துத் தனது லயஞான திறமையை வெளிக்காட்டினான்’ என்றும், மாலதி தனியாக ஆடும்போது, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற பாடல் வரிகளுக்கு அபிநயக்கும்போது. இடது கையில் பதாக முத்திரையைக் காட்டி, வலது கையில் முஷ்டி முத்திரையைப் பிடித்து இடது கையில் வேகமாக அடிப்பது போன்று அபிநயத்தபோது உணர்ச்சி வசப்பட்டு மெய்மறந்திருந்த சபையில் பலமான  கரவொலி எழுந்தது’ என்பது போன்ற எடுத்துக் காட்டுக்கள் இந்த நாவலை மெய்மறந்து வாசிக்க வைக்கின்றன. புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்களின் மொழி, இசை மற்றும் கலை ஆர்வத்தைப் புரிந்து கொள்ள வைக்கிறது இந்த நாவல். நடன ஆசிரியை தேவகியின் கணவரின் பாத்திரம் மட்டும் சொல்வதைச் செய்யும் ஒரு பொம்மைபோல இயங்குவதால் அந்தப் பாத்திரம் பெரிதாக எடுபடவில்லை, ஆனால் கதாசிரியர் அந்தப் பாத்திரத்தை அப்படிக் காட்டியதற்கும் ஏதாவது யதார்த்த காரணம் இருக்கலாம்.

குரு அரவிந்தனின் நாவல்களைப் பற்றி எழுத்தாளர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களே தனது வாழ்த்துரையில் சுவைபடக் குறிப்பிட்டிருக்கின்றார். ‘திருவிழாக்களில் கூம்புகளின்மேல் உருண்டையாக கிடைக்கும் ஐஸ்கிறீமை உருகி வழிய வழிய சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதன் சுவையையும் சுகத்தையும் தாண்டி இதைச் சாப்பிடும் போது ஒரு பதற்றம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் முடிந்து போய்விடும், சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்து சுவை இன்பத்தை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும். அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும். குரு அரவிந்தனுடைய புனைவுகளைப் படித்த போது எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது. முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப்பக்கங்களை எண்ணிப்பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்து விடும் ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பி இருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை எங்கள் வாழ்க்கை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழிய விடாமல் காப்பது. இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன.’

மறுவாசிப்புக்கான ஆர்வத்தை தூண்டி, மனதை அரித்துக் கொண்டே இருப்பது இந்த நாவலின் தனித்தன்மை என்று சொன்னால் மிகையாகாது. ஓவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய பல அனுபவங்களைக் கண்முன்னே கொண்டு வரும் ஆசிரியரின் எழுத்து நடையை மட்டுமல்ல, இளம் தலைமுறையினரை அட்டைப்படத்தில் கௌரவிக்கும் அவரது சிறந்த பண்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ரொறன்ரோவில் அனேகமான அரங்கேற்றங்களுக்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோது ஏற்பட்ட இவரது அனுபவம் இவரை இந்த நாவலை எழுதத் தூண்டியிருக்கலாம். லட்சக்கணக்கான வாசகர்களை இவர் சம்பாதித்து வைத்திருப்பதற்கு இவை எல்லாம் காரணமாக இருக்கலாம், நீண்ட நாட்களின் பின் தமிழரின் பாரம்பரிய சலங்கையையும், சங்கீதத்தையும் ஒலிக்க வைத்த அருமையான ஒரு நாவலை வாசித்த திருப்தி மனசில் ஏற்பட்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த மண்ணின் தேவைகருதி, அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை மறக்காது இருக்கவும், எமது பண்பாடு கலாச்சாரம் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒரு அங்கமான காதல் வாழ்வையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு நூல் வடிவமாக இந்தப் புதினத்தை எமக்குத் தந்த எழுத்தாளர் குரு அரவிந்தனை மனந்திறந்து பாராட்டுகின்றேன்.

சுலோச்சனா அருண்
ரொறன்ரோ. 

....................................................................................................

விமர்சனக் கட்டுரை


  குரு அரவிந்தனின் நாவல் : 

 “சொல்லடி உன் மனம் கல்லோடி

அகணி சுரேஸ்

உலகப் புகழ் பெற்ற கனேடியத் தமிழ் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் எழுதிய “சொல்லடி உன் மனம் கல்லோடி?” நாவலின் அழகிய பரதநாட்டியத் தாரகை ஒருவரைச் சித்தரிக்கும் ஓவியத்துடன் கூடிய அட்டைப்படம்இ அதன் நிறம் என்பன என்னை வெகுவாகக் கவர்ந்தன. அட்டைப் படத்தை ரசித்த எனது கண்கள் நூலின் உள்ளே நுழைவதற்கு முன்பாகஇ பழக்கப்பட்டவாறு நூலின் பின்புறம் சென்று நூலாசிரியர் குரு அரவிந்தன் அவர்களின் படத்தையும்இ இலக்கிய கலாவித்தகர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் எழுதிய நூலாசிரியர் அறிமுகத்தையும் தரிசித்தன. “நூலாசிரியர் நன்கு திட்டமிட்டுச் செயலாற்றுபவர்” என்ற திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் கூற்றினை குரு அரவிந்தன் அவர்களை நன்கு அறிந்தவன் என்ற வகையில் நான் முற்றாக ஏற்றுக் கொள்கின்றேன். அறிமுக உரையில் குறிப்பிட்டவாறு நூலாசிரியரின் கதைகள் ஆங்கிலம்இ மலையாளம்இ கன்னடம்இ தெலுங்குஇ பிரெஞ்சுஇ ஜெர்மன் போன்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பதுஇ மற்றும் திரைப்படத் தயாரிப்புக்கு பயன்பட்டிருப்பது போன்ற விடயங்கள் நூலாசிரியர் சாதனையாளர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அழகான அட்டையுடன் கூடிய இந்த நூலை இறுகப்பற்றியவாறு மெல்லத் திறந்ததும் இந்த நாவல் மணிமேகலைப் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன். அதனால் நாவலைப் படித்துவிட வேண்டும் என்ற ஆவலை மேலும் வலுப்படுத்தியது. அட்டைப் படத்திற்கான ஓவியத்தை மோகன் கிராபிக்ஸ்இ லேசர் வடிவமைப்பை லக்சுமி பிராபிக்ஸ்இ அச்சடிப்பை ஸ்கிரிப் ஓவ்செற் ஆகியோர் செய்துள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களையும் மனதாரப் பாராட்டிக் கொண்டேன்.

நாவலைப் படிக்கும் ஆவல் அடுத்துவரும் சில பக்கங்களைப் படியாமல் கதைக்குள் செல்லத்தூண்டினாலும்இ அவ்வாறு செல்லாது அடுத்துவரும் பக்கங்களைப் படித்தேன். ஒரு நூலிற்கு அணிசேர்க்கும் பக்கங்களைத் தவறாது படிக்க வேண்டும் என்று நான் பழகிக்கொண்ட பண்பும்இ அந்தப் பக்கங்களில் பதிவிட்டவர்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பும் நூலை அலங்கரித்த வாழ்த்துரைகளைப் படிக்க வைத்தது.

புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழ்மக்களைஇ குறிப்பாக கனடாவில் உள்ள தமிழர்களைப் பெருமைப்பட வைக்கும் தலைசிறந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வாழ்த்துரை நூலாசிரியருக்குக் கிடைத்த ஒரு மகத்தான விருது என்று கூறிக் கொள்ளலாம். முத்துலிங்கம் அவர்கள் “கண்முன்னே போர்க்கால யாழ்ப்பாண மக்களும் அவர்களின் வாழ்வும் வலியும். நிதர்சனமாக விரியும் குரு அரவிந்தனின் புனைவு சரித்திரமாக மாறும் தருணம் அது” என்று குரு அரவிந்தனின் ஒரு நாவல் பற்றிய கருத்தை தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு எழுத்தாளனுக்கு அவருடைய எழுத்தைவிடச் சிறந்த நினைவுச் சின்னம் என்ன இருக்க முடியும்?” என்ற முத்துலிங்கம் அவர்களின் கூற்று என்னை மிகவும் கவர்ந்தது.

கலைமன்றம் நடனக்கல்லூரி-கனடா அதிபர் நிரஞ்சனா சந்துரு அவர்கள் தனது வாழ்த்துரையை “ அடுத்த தலைமுறைக் கலைஞர்களின் வழிகாட்டியாகக் கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன்” என்ற கூற்றுடன் ஆரம்பித்துள்ளார். குரு அரவிந்தனின் எழுத்தாற்றலையும்இ அவரின் சாதனைகளையும் நிரஞ்சனா சந்துரு அவர்கள் பரதக் கலைஞரின் எழுத்துக்கள் என்பதைக் குறிகாட்டும் விதமாக அழகாகவும்இ நிறைவாகவும் பட்டியலிட்டுள்ளார். தனது வாழ்த்துரையில் இந்த நாவல் இளம் கலைஞர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துச் சொல்லும் புதினமாக அமைந்துள்ளது என்ற தகவலையும் தந்துள்ளார். 

குரு அரவிந்தனின் என்னுரை குரும்பசிட்டி ஜெகதீசன் அவர்களின் ஒரு வாழ்த்துக் கவிதையுடன் விரிந்தது. நூலாசிரியர் “இந்த நாவலை எழுதவேண்டும் என்று என்னைத் தூண்டியவர்கள் புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர்” என்ற கூற்றுடன் தனது இலக்கியப் பயண விபரங்களையும் என்னுரையில் தந்துள்ளார்.

ஆகா! இப்பொழுது எனது கவனம் கதைக்குள் நுழைந்தது. ஒரு நல்ல சுவையான சாப்பாட்டைக் காணுகின்ற பொழுது உமிழ்நீரால் வாயூறுவதைப் போன்று இவர் நாவலைப் படித்துவிட வேண்டும் என்ற ஆவல் எனது மனதில் ஊற்றெடுத்தது. இந்த விமர்சனத்தை வாசிக்கும் உங்களுக்கும் அடுத்து வரும் பந்திகளை வாசித்து விடவேண்டும் என்ற துடிப்பான நிலைக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள் இந்த நாவலைத் தேடி வாங்கிப் படிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
“சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா” என்ற மகாகவி பாரதியார் பாடலுக்கு தேவகி ரீச்சர் மாலினிக்கும்இ கமலினிக்கும் பரத அபிநயம் கற்பிக்கும் காட்சியுடன் நாவலுக்கான திரை விரிகிறது. கமலினியும்இ மாலினியும் சமவயது கொண்ட பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் தோழிகள். கமலினி தேவகி ரீச்சரின் செல்ல மகள். கமலினிக்கும்இ மாலதிக்கும் ஒரே நேரத்தில் வகுப்பை நடத்துவது பரதக்கல்வியில் திறமையிருந்தும் அவதானக்குறைவுள்ள கமலினியைஇ பரதக் கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட மாலினியுடன் இணைத்துக் கற்பிக்கும் பொழுது கமலினி அதிகம் அக்கறை காட்டுவாள் என்று தேவகி ரீச்சர் நினைத்திருக்கலாம். அதற்கு மேலாக இருவருக்கும் ஒன்றாக அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற தேவகி ரீச்சரின் எண்ணமே முக்கிய காரணமாகவிருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

தேவகி ரீச்சர் கமலினி அவதானக் குறைவாக நடந்துகொள்ளும் பொழுது சாமர்த்தியமாக மாலதி கமலினியை ரீச்சரிடம் பேச்சு வாங்காமல் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பது கமலினிக்கும்இ மாலதிக்கும் இடையில் உள்ள நெருக்கமான நட்பை எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு பரத வகுப்பு ஊடாக நாவலின் களத்தை ஆரம்பித்து மிகவும் சாமர்த்தியமாக நாவலுக்கான களத்தை வாசகர்கள் மனதில் பதியச் செய்கின்றார் நாவலாசிரியர். ஒரு பரத வகுப்பு முடிவடைகின்றது. மாலதியை வகுப்பிலிருந்து வீட்டுக்கு கூட்டிச் செல்ல கமலினி புறப்படுகிறாள். துணைக்கு கமலினியின் தம்பி கண்ணனை அழைத்துச் செல்லுமாறு தேவகி ரீச்சர் கட்டளையிடுகிறாள்.

வுpளையாடிக் கொண்டிருந்த கண்ணன் மறுப்பதும்இ அம்மா என்று கூவி கண்ணனை பயமுறுத்தி தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். இவர்களைவிட ஐந்து வயது குறைந்தவன் கண்ணன்.

கண்ணனின் பிறந்த நாள் தினத்தில் பரிசை வாங்கிக் கொடுத்ததின் மூலம் கண்ணனின் அன்பைச் சம்பாதிக்கிறாள் மாலதி. மேலும் மாலதி கொடுத்த முத்தம் கண்ணனின் பிஞ்சு முகத்தைச் சிவக்க வைக்கிறது.
மாலதி சுந்தரம் மாஸ்டரின் தனிப்பிள்ளை. மாலதியின் அம்மா மாலதியின் இளவயதிலேயே இறந்து விட்டாள். அன்புக்கு ஏங்கும் மாலதி என்ற கதாபாத்திரத்தை நாவலுக்குள் அழகாகச் சித்தரித்து நாவலை செழுமையாக நகர்த்துகிறார் நாவலாசிரியர்.

அழகாகஇ இயல்பாக நகர்ந்து சென்று கொண்டிருந்த நாவலில் புகுத்தும் புதிய கதாபாத்திரம் கதைக்கான இரண்டு பாதைகளைத் திறந்து வைக்கிறது.
ஐயோ ஏன்………….. என்று எனது மனதை எண்ண வைக்கிறது.
நாவலாசிரியர் யதார்த்தமான வாழ்க்கைப் போராட்டத்தை சரியான நேரத்தில் ஆரம்பித்து வைக்கின்றார் என்ற எண்ணம் எனது மனத்தை சமாதானப்படுத்துகிறது.

வாசகர்களே! இந்த நாவலைப் படித்து முடித்துத்தான் இருந்த இடம் விட்டு எழும்ப வேண்டும் என்ற ஆவல் என்னைக் கதிரையுடன் கட்டிப் போடுகிறது. ஆவல் பொங்குகிறது.

நாவலில் பல திருப்பங்களை அழகுற அடுக்கிச் சாமர்த்தியமாக கதையின் மிகுதிப் பயணத்தைத் தீர்மானிக்க முடியாமல் செய்து வாசகர்களைத் தத்தளிக்க வைக்கிறார் நாவலாசிரியர்.

கண்ணனுக்கு சைக்கிள் கற்கும் ஆசை வருகிறது. கமலினி கற்பிக்க மறுக்கிறாள். அன்பான தம்பி போன்று பார்க்கும் மாலதி அவனுக்கு சைக்கிள் ஓடக் கற்பிக்கிறாள். அதனால் மாலதி கண்ணனை நெகிழ்வுப்புடுத்துகிறாள்.
மாயக்கண்ணன் பல்லாங்குழல் இசையால் பெண்களை மகிழ்விப்பது போன்று நாவலில் வரும் கண்ணனும் தனது புல்லாங்குழல் இசையால் மாலதியை மகிழ்விக்கிறாள்.

நாவலில் கமலினிக்கும்இ மாலதிக்கும் ஒரே மேடையில் நடைபெறும் அரங்கேற்றம் நாவலில் அரங்கேறும் முக்கிய நிகழ்ச்சியாக அரங்கேறுகிறது. அரங்கேற்றத்தில் கண்ணின் புல்லாங்குழல்இ மிருதங்கம் ஆகியவற்றின் மீதுள்ள திறமையை வெளிப்படுத்த தேவகி ரீச்சர் வாய்ப்பு வழங்குகிறார்.  இந்த அரங்கேற்ற காட்சிகளை நாவலாசிரியர் பல்வேறு நுட்பங்களைக் குறிப்பிட்டு அழகாக விமர்சிக்கிறார். நாவலாசிரியருக்கு பரதக்கலை தெரியுமா என்றும் எண்ண வைக்கிறது.

நாவலில் வரும் சம்பவங்கள் மாறி மாறி மகிழ்ச்சியையும்இ கவலையையும் மாறி மாறித் தருகின்றன. சிக்கல் நிறைந்த யதார்த்த வாழ்வினை நாவலில் சித்தரிக்கின்றார் நாவலாசிரியர்.

நாவலில் நல்ல பெண் பாத்திரங்களை மட்டுமன்றிஇ நல்ல ஆண் பாத்திரங்களையும் கொண்டு நாவலை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் நாவலாசிரியர்.

வாசகர்களைக் கலங்க வைத்தும்இ பின்பு அவர்களின் கவலையைப் போக்கும் விதத்திலும் கதையை நகர்த்தி வாசகர்களை தன்வயப்படுத்துகிறார். அடுத்த தலைமுறைக்கு நல்ல படிப்பினைகளை சிறந்த கதைசொல்லியாக எடுத்துச் சொல்லுகின்றார் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள். மொத்தத்தில் ஒரு சிறந்த பயனுள்ள நாவலைப் படைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் ஐயமில்லை.

ஆம் வாசகர்களே! உங்கள் எண்ணம் எனக்குப் புரிகிறது. என்ன முடிவு என்று சொல்லவில்லையே? என்றுதானே கேட்கிறீர்கள். நான் எப்படிச் சொல்வேன்? தயவுசெய்து இந்த நாவலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். நான் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்றுதான்.  நீங்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நாவல். எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும்.

அன்புடன்
அகணி சுரேஸ்


Comments