நின்னையே நிழல் என்று.. Review

 



பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன்

ரொரன்ரோ பல்கலைக்கழகம், ரொரன்ரோ, கனடா

(எண்ணற்ற வாழ்க்கைச் சிக்கல்களையும், உள்மனத்தின் இயக்கநிலைப்பட்ட உணர்வுமோதல்களையும் இடையறாது அடிமனதில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒர் உணர்வுச்சித்திரமே உயிருள்ள இலக்கியப்படைப்பாக நிலைக்கின்றது. குரு அரவிந்தனின் சிறுகதைகளுக்கு இது சாலப்பொருந்தும். எம்மினத்தின் வாழ்வுப் பின்னணியில் ஏற்படும் தனிமனித, சமூக, குடும்ப சிக்கல்களையும், முரண்பாடுகளையும், மனமாற்றங்கள், சமூக மாற்றங்கள் போன்றவற்றை இதய சுத்தியோடு உள்வாங்க வேண்டும் என்ற தரிசன வீச்சுடனும் கதாசிரியர் குரு அரவிந்தன் தமது கதைகளை இங்கு நெய்திருக்கின்றார். 21ம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் மன, தளநிலைகளை உயிர் ஊட்டத்துடன் அவர் படம் பிடித்துக் காட்டும்போது, அவரது ஆதங்கம் எழுத்துக்களில் பட்டுத் தெறித்து பரந்து ஒளி வீசுவதை இந்தக் கதைகளின் கருவிலும் கற்பனையிலும் காணக்கூடியதாக உள்ளது. இதற்காக கனடா தமிழ் இலக்கியத்திற்கு நல்லதொரு படைப்பைத் தந்த கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களை நாம் பாராட்ட வேண்டும். - பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன். ரொரன்ரோ பல்கலைக்கழகம், ரொரன்ரோ, கனடா)


நவீன இலக்கியத்தின் வளர்ச்சியும், வளமும் வடிவங்களும் சமுதாயத்தின்; பன்மைநிலைப்பட்ட சமூகத்தொடர்பாடல்களின் இயக்கநிலைகளினாலேயே உந்தப்படுகின்றன. இக்கருத்து பொதுவாக உலகப்பெருமொழிகள் அனைத்தினதும் ஆக்கஇலக்கியப் படைப்புகளுக்கும் ஏற்புடையதாகும். இந்தியாவில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் புகுத்தப்பட்ட கல்வி முறைகளினதும், கருத்து நிலைகளினதும், கிறிஸ்தவ மத பரப்புதல்சார்ந்த அணுகுமுறைகளினதும் அறாத்தொடர்ச்சியான விளைவுகளின் வழியாகவே தமிழ் இலக்கியத்தில் உரை நடை, சிறுகதை, நாவல் போன்ற நவீன இலக்கிய வடிவங்கள் வேரூன்றி வளர ஆரம்பித்தன. 

கவிதைச் செழுமையிலும் காப்பிய வரம்பினுள்ளும் கட்டுட்பட்டிருந்த தமிழ் இலக்கியப் புலமையினை இந்த நவீன இலக்கிய வடிவங்கள் நெகிழ்ச்சியுறச் செய்தன. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிறிஸ்தவ மத பரப்புரையாளர்களும், பணியாளர்களும் கணிசமான செல்வாக்கினைச் செலுத்தி வந்துள்ளனர். ஐரோப்பிய  அரசுகளின் துணையோடு தென்னாசிய நிலப்பரப்பை வந்தடைந்த கிறிஸ்தவம் அதன் மறைப் பரப்புதல் தேவைகளை முன்னெடுப்பதற்கென தொடங்கி வைத்த மொழி பண்பாட்டுத் தொடர்புகள், ஆய்வுகள், உள்ளிணைவுகள், புலமைசார் உறவாடல்கள் ஆகியவற்றின் விளைவாகவே தமிழ் மொழிப் படைப்பிலக்கியத்தின் நவீன வரலாற்றில் பல புதிய இலக்கிய வடிவங்கள் பரிணமித்து மேம்பாடு பெற ஆரம்பித்தன.

ஐரோப்பிய இலக்கியத்தில் 17ம், 18ம் நூற்றாண்டுகளில் முனைப்பு அடையத் தொடங்கிய உரை நடை, இலக்கிய மரபு அதன் கால வளர்ச்சியில் இலக்கியத்தை சமுதாயத்தின் நுகர் பொருட்களில் ஒன்றாகச் சந்தைப் படுத்தியதென்பது வரலாறுதரும் செய்தி. 19ம், மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் விரைவாகவும், விரிவாகவும் தமிழிலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை போன்றவை பரந்தும் உயர்ந்தும் வளர்வதற்கு அதே காலத்தில் துரித வளர்ச்சியுற்ற அச்சு வாகனத் தொழில்நுட்ப முறைகளும் உந்து சக்தியாக அமைந்தன. ஆங்கிலக் கல்வி அமைப்பின் விளைவாக தமிழ்ச்சமுதாயத்தில் ஓர் புதிய குழுமமாகத் தோன்றிய மத்திய வர்க்கத்தினராலேயே முதலில் இவ்விலக்கியப் படைப்புகள் ஆக்கப்பெற்றன. இப் படைப்பிலக்கியங்களின் கதைப்பொருளாக அவர்களது வாழ்வுப் பிரச்சினைகளே முன்கொணரப்பட்டன. இவற்றை விலைகொடுத்து வாங்கிய வாசகர் வட்டமும் அந்த வர்க்கத்தை  சார்ந்தவர்களே. தமிழில் எழுந்த முதல் நாவலும் அதைத்தொடந்து வெளிவந்த படைப்புகளில் இதற்கு சான்றாதாரமாகும்.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் அலுவலக அருஞ்சுவடிக் காப்பாளராகப் பணி புரிந்த தேவநாயகம்பிள்ளையும், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ் நாவல் இலக்கியத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்த மாதவையரும் (1872- 1925) அவரது சமகாலத்தவரான நெய்யூர் அருமைநாயகமும் (1958 -1914) மத்திய வகுப்பினரின் வாழ்க்கைப் பிரச்சினனைகளைப் பின்புலமாகவைத்துத்; தமது நாவல்களை எழுதினார்கள். நாவல் இலக்கியத்தைக்; தமிழ் உலகிற்கு முதன் முதலில் ஆக்கித்தந்த இவர்கள் ஆங்கிலேய அரசின் கல்வியமைப்பின் கனிகள் மட்டுமல்ல, அதே அரசின் கீழ் உயர்ந்த உத்தியோகம் பார்த்தவர்கள். இதனை அறியும்போது இவர்களது கதைகளின் களம் இன்னும் துலக்கமடைகின்றது. அதாவது தாம் சார்ந்திருந்த மத்திய வர்க்கத்தினரின் சமய சமூகப் பிரச்சினகளையும் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தினாலும் அதை ஒட்டி எழுந்த சமயமாற்றம் கலப்புத் திருமணப் பண்பாட்டு முரண்பாடு மேற்கத்தேய நாகரிக நாட்டம், போன்றவற்றையும் பின்புலமாகக் கொண்டே இவர்கள் நாவல்களை எழுதினார்கள்.

இவை தவிர, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கல்வி, தொழினுட்ப மாற்றங்கள் சிறுகதை, நாவல் “இலக்கியம்” முன்னேறி வளர முக்கிய காரணிகளாக அமைந்தன. கையெழுத்துப் பிரதியைப் பல பிரதியாக்கம் செய்யும் அச்சியந்திரங்களும், பாடசாலைக் கல்வியினை அடியொற்றி நூல்களை வாசித்து அறிவைப் பெருக்குவதற்கான தேடலும், ஆர்வமும் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு நல்லதொரு சூழலைப் பிறப்பித்தன என்று 21ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் ஆக்க இலக்கியத்தின் அத்தனை வடிவங்களும் முற்றிலும புதிய கருத்து வளங்களுடனும், களவெளிகளுடனும் படர்ந்து விரிதல் கண்கூடு.

நாவல், சிறுகதை போன்ற இலக்கியபடைப்புகளின் இயங்குதளம் என்பது நாள்தோறும் நாம் நடமாடும் நனவுலகமாகும். ஓரு கதையின் யதாhத்தப் பாங்குகளும், பண்புகளுமே அக் கதைக்கு உரைகல் ஆகின்றன. தனி மனிதர்கள், குழுமங்கள், குடும்பங்கள், சமூகத்தின் பல்வேறு கட்டமைவுகளில் வாழுகின்றவர்கள் சந்திக்கின்ற சமர் புரிகின்ற பிரச்சனைகளையும் அவற்றை மாற்றவும், அன்றேல் அவற்றினின்று விடுபட்டு புதிய சூழலை உருவாக்கவும் எழுகின்ற உணர்வலைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதிபலிக்கின்ற வண்ணமே நாவல்களும் சிறுகதைகளும், நெய்யப்படுகின்றன. 

கதையின் பாதைகளையும், நெறிகளையும், இயங்கு தளத்தையும் அக்கதைகளின் பாத்திரங்களும் அவர்களுக்கு ஏற்படும் சவால்களும், இன்னல்களும், சந்தர்ப்பங்களுமே நகர்த்திச் செல்லுகின்றன. இத்தகைய பாத்திரங்களுக்கு நாளாந்த வாழ்வில் ஏற்படும் இரண்டக நிலைகளும், இரு கிளைப்பாடுகளும், விளுமிய முரண்பாடுகளும், குடும்ப, சாதி,சமய, சமூக உணர்வலைகளும், தனிப்பட்ட மனப்போராட்டங்களும், விரக்திகளும், வேதனைகளும், வெற்றிகளுமே, கதையின் நிகழ் தளத்திற்கு வலுவும், வளமும் சேர்க்கின்றன. தமிழ் ஈழத்தைக் தளமாகக் கொண்டு எழுதப்படும் இலக்கியப் படைப்புகளும் தமிழ் ஈழத்தவரால் எழுதப்படுபவையும் தனித்துவமான இலக்கிய பண்பைக் கொண்டிருப்பதற்கு வேறு காரணிகளும்; உண்டு.

 20ம் நூற்றாண்டின் கடைசிக் காலத்திலிருந்து தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுத் தளம், மொழித் தளம், குடும்ப சமூக உறவு, சமய பண்பாட்டுத்தளம் என்பன சிதைவுறத் தொடங்கின. அரசியல் சார்ந்த அசைவியக்கங்களே இதற்கு அடிப்படைக் காரணிகளாய் அமைந்தன. இதனால் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுப் பரப்பின்மீது முன் ஒருபோதுமில்லாத புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழலைப் பிறப்பித்தன. இவை யாவுமே தமிழ், இலக்கிய உலகில் பல புதிய எண்ணக்கருக்களைத் தோற்றுவித்தன. பேரிடர்கள், பேரழிவுகள் இடைவிடாத இடப்பெயர்வுகள், குடிபெயர்வுகள், புலப்பெயர்வுகள் போன்றவை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ்க் கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போன்றவற்றில் பிரதிபலிக்கப்படுவது வெறும் தற்செயல் நிகழ்வன்று, எனவேதான் குரு அரவிந்தனின் “ நின்னையே நிழல் என்று…”  இச் சிறுகதைத் தொகுதியில் கதைகளின் களம் தமிழீழம், இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி என்று பூகோள அளவிலே பரந்தும் விரிந்தும் செல்வதனைக் காண்கின்றோம்.

தமிழ் தேசிய எழுச்சியினதும் விடுதலைப்போராட்டத்தினதும் பாரிய பக்கவிளைவாக மேற்கத்தேய மற்றும் அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகளின் பெருநகர்களில் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தமிழர் 1980களிலிருந்து குடிபுகுந்து வாழ்கின்றனர். இப்புதிய வாழ்வுச்சூழலில் ஏற்படும் சமூக, குடும்ப, பொருளாதார, மற்றும் அரசியல் சவால்களுக்கு துணிவுடனும் தெளிவுடனும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் உந்தப்படுகின்றனர். பல்வேறுபட்ட விழுமிய முரண்பாடுகளையும், மரபு மாற்றங்களையும் எதிர் கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே இப்பின்புலத்தில் ஆக்கப்படும் இலக்கிய வடிவங்களில் இந்தவாழ்வுச்சூழல் இயல்பாக வந்தமைகின்றது. 

பல்வேறு பண்பாடுகள, பல் இனமக்கள,;; பல்வேறுமொழிகள்,  பூகோளஇயற்கையின தட்ப, வெட்பதாக்கங்கள், உறவுப்பிரிவுகளின் இன்னல்கள், கருத்து முரண்பாடுக்ள் சமூக நியதிகளை மறுப்பவர்கள், ஒரு மனிதனுக்குள் வாழும் பலமனிதக்கூறுகள்;, சிதைந்துகருகிய உள்மனங்கள், அடி மனங்களில் படர்ந்திருக்கும் துயரங்கள், தனிமையின் மனஏக்கங்கள், அழுத்தங்கள் இவை போன்ற எண்ணற்ற வாழ்க்கைச்சிக்கல்;களையும்;, உள்மனத்தின் இயக்கநிலைப்பட்ட      உணர்வுமோதல்களையும்  இடையறாது அடிமனதில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒர் உணர்வுச்சித்திரமே உயிருள்ள இலக்கியப்படைப்பாக நிலைக்கின்றது. குரு அரவிந்தனின் சிறுகதைகளுக்கு இது சாலப்பொருந்தும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பன்ணாட்டு வாழ்வுப் பின்னணியில் ஏற்படும் முரண்பாடுகளையும் தனிமனித, சமூக, குடும்ப சிக்கல்களையும் உள்மாற்றங்கள், மனமாற்றங்கள், சமூக மாற்றங்கள் போன்றவற்றை இதய சுத்தியோடு உள்வாங்க வேண்டும் என்ற தரிசன வீச்சுடனும் கதாசிரியர் குரு அரவிந்தன் தமது கதைகளை இங்கு நெய்திருக்கின்றார். இந்த ஆதங்கம் ஆசிரியரின் எழுத்துக்களில்பட்டுத் தெறித்து பரந்து ஒளி வீசுவதை அவரது கதைகளின் கருவிலும் கற்பனையிலும் காணக்கூடியதாக உள்ளது. 21ம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் மன, தளநிலைகளை உயிர் ஊட்டத்துடன் அவர் படம் பிடித்துக் காட்டுகின்றார். இன்றைய தமிழ் சமூகத்தின் வரலாற்றுச் சிக்கல்களை ஒரு வகையிலே தமது கதைகளிலே இக்கதாசிரியர் ஆவணப்படுத்துகின்றார். இதற்காக இதற்காக கனடா தமிழ் இலக்கியத்திற்கு நல்லதொரு படைப்பைத் தந்த கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.

சமகால ஈழத்தமிழ் அரசியல், சமூகவியல், வாழ்வியல், பொருளியல், அறவியல் போன்ற பலதுறைகளையும் வருடி வருகின்ற இக்கதைகள் எமது சமூகத்தின் பலத்தையும், பலவீனங்களையும் இனம் காட்டுவதன் ஊடாக தமிழச்சமூகத்தின்  வருங்கால வளர்ச்சிக்குத் திசைகாட்டும் கருவியாகவும் அமைகின்றன. திரு. குரு அரவிந்தன் அவர்கள் இதுபோன்ற மேலும் பல ஆக்கப் படைப்புக்களை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன்.

ரொரன்ரோ










Comments