(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் சர்வதேச திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி மூன்றாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)
வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்
மு. முருகேஷ், வந்தவாசி, தமிழ்நாடு.
‘வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்து, பரந்து விரிந்த உலகினைப் பார்த்து எழுதுவது புதினம். வீட்டின் சாளரத்தின் வழியாக வெளியே நடப்பதைப் பார்த்து எழுதுவது சிறுகதை’ என்பார் கவிஞரும் திறனாய்வாளருமான பேராசிரியர் பாலா.
எவ்வளவு சத்தியமான உண்மையிது; விரிந்த தளத்தில் வாழ்வின் பல்வேறு சிக்கல்களைப் பற்றி விஸ்தாரமாக விவாதத்தைத் தூண்டுவதுபோல் எழுதுவதற்கு புதினம் கைகொடுக்கும். ஆனால், பத்துப் பனிரெண்டு பக்கங்களுக்குள் எழுதப்படும் சிறுகதையானது வாழ்வின் ஏதாவதொரு நிகழ்வைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்து, அதன் வழியே நம் சிந்தனைக்குள் சில கேள்விகளை எழுப்பிட முடியும். அப்படியான கேள்விகளை எழுப்பும் கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். ‘தமிழ்ச் சிறுகதையின் கம்பீர முகம்’ என்றறியப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொடங்கி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட தமிழ்ச் சிறுகதை ஆளுமைகளின் ஏராளமான கதைகளை வாசித்திருக்கின்றேன். இன்றைக்கு எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து வருகின்றேன். பெரும்பாலும் வார, மாத இதழ்களில் வெளியாகும் கதைகளை விடவும், ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு நூலாகப் படிப்பதில் பெருவிருப்பம் கொண்டவன் நான். காரணம், அப்போதுதான் ஒரு எழுத்தாளரின் சிறுகதை நடையையும், அந்த எழுத்தாளனது உள்ளக்கிடக்கினையும் ஒருசேர அறிந்துகொள்ள முடியும். மேலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என புலம்பெயர் தமிழர்களின் சிறுகதைகளும் என் வாசிப்புக்கு நெருக்கமானவை. என் நூலகத்தில் நான் சேர்த்து வைத்திருக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களில் கவிதை நூல்களுக்கு அடுத்தப்படியாகச் சிறுகதை நூல்களே அதிகம் இடம் பிடித்திருக்கின்றன.
‘இனிய நந்தவனம்’ இதழின் வழியேதான், குரு அரவிந்தன் எனும் பெயர் எனக்கு முதல் அறிமுகம். கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ‘தங்கையின் அழகிய சினேகிதி’ (இனிய நந்தவனம் வெளியீடு – ஜூலை -2020) எனும் அவரது சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கடந்த வாரத்தின் ஓர் இரவில் 2 மணி நேரத்திலும், மறுநாள் காலையில் 2 மணி நேரத்திலும் இந்தச் சிறுகதை நூலை வாசித்து முடித்தேன்.
மொத்தமுள்ள 16 கதைகளையும் 4 மணி நேரத்தில் படித்து முடித்திருந்தாலும்கூட, கதைகளை வாசித்து நான்கு நாள்களைக் கடந்த பின்னும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளில் பேசப்பட்ட சமூக அக்கறையுடன் கூடிய கேள்விகள் எனக்குள் தொக்கி நிற்கின்றன. என் அன்றாட செயல்களின் ஒவ்வொரு நொடியிலும் குரு அரவிந்தனின் கதைகளின் பேசுபொருளும் கதாமாந்தர்களின் அறிவார்ந்த உரையாடலும், அதைவிட்டு விலகமுடியாமல் மீண்டும் மீண்டும் உள்ளெழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்; இந்நூலைப் படித்ததும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் முன்னிருக்கை வாசகனாகிப் போனேன் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்தத் தொகுப்பிலுள்ள 16 சிறுகதைகளுமே எனக்குப் பிடித்தமான கதைகளாக இருந்த போதிலும், பக்க அளவு கருதி, விதிமுறைப்படி இந்தத் தொகுப்பிலுள்ள 4 சிறுகதைகளைப் பற்றி மட்டுமே எனது திறனாய்வுக்காக எடுத்துக்கொண்டுள்ளேன்.
நூலின் முதல் கதையே எனது திறானாய்விற்குமான முதல் கதையாகவும் அமைகிறது. சிறுகதை நூலின் தலைப்புக் கதையை நூலின் முதல் கதையாக அல்லது நூலின் கடைசிக் கதையாக வைப்பதே சிறப்பான தொகுப்புக்கான அடையாளம் என்பேன். அப்போதுதான் வாசக மனதில் அந்தக் கதையின் தலைப்போடு சேர்ந்து, நூலின் தலைப்பும் அழுத்தமாக மனதில் பதியும். ‘சிறுகதையின் ஆன்மாவை வழித்து, நெற்றியில் இடப்படும் திலகம்தான் கதைக்கான தலைப்பு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது, எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைத் தலைப்புகளுக்கு வெகு பொருத்தமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ நூலின் முதல் கதையெ, நூலின் தலைப்புக்கான கதையுமாகி, கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
தன் தங்கையைப் பார்க்க வீட்டிற்கு வரும் சினேகிதியின் அழகில் மயங்கும் ஒரு சராசரி இளைஞனின் காதல் கதை இது என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாத வகையில், இந்தக் கதையின் போக்கும், கதையின் முடிப்பும் வாசகனை வெகுவாக யோசிக்க வைத்துவிடுகிறது.
கதையோட்டம் அபாரம். ஒவ்வொரு கதையும் தொடங்குவது மட்டுமே தெரிகிறது. முடிந்த பிறகுதான் நம்மால் சுயநினைவுக்கு வருவதுபோல் கதையோடு ஒன்றிப்போய் விட வைக்கிறார் எழுத்தாளர் குரு அரவிந்தன். சரசரவென வேகமாகக் கதை நம்மை இழுத்துக்க்கொண்டு போகிறது. அடுத்து என்ன நடக்குமோ... என்கிற எதிர்பார்ப்போடு கூடவே சேர்ந்து போகிறோம். இல்லையில்லை... தொடர்ந்து படிக்கிறோம். கதையை வாசித்து முடிக்கையில், நம் மனதில் ஆழமான வருத்தமொன்று கவிழ்ந்துகொள்கிறது. அதென்ன முடிவு..? நீங்களும் அந்தக் கதையைப் படியுங்கள். (முடிவை இப்போதே நான் சொல்லிவிட்டால், உங்களின் வாசிப்பு சுவாரசியம் தடைபடுமன்றோ..!).
ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தாலும், ‘எலியும் பூனையுமாக’ இருந்தால், ஒவ்வொருவரின் மனதிலும் வேறு வேறு மாதிரியான எண்ணங்களும் செயல்பாடுகளும் அமையுமென்பதை மிக நுட்பமான பார்வையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தச் சிறுகதையில் வரும் எந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் (அம்மாஇ அண்ணன், தங்கை, சினேகிதி) கதாசிரியர் பெயர் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்ததா, இல்லை கதாசிரியர் திட்டமிட்டுச் செய்தாரா என்பதை நாம் அறியோம். ஆனால், பெயரில்லாத இடங்களில் இந்தக் கதையைப் படிக்கும் வாசகன் தன் பெயரினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் செய்கை நிகழ்வதற்கான வாய்ப்பினை இதன் வழியே வழங்குகிற அந்த உத்தியை வெகுவாகப் பாராட்டுகின்றேன்.
தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையை உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும், வாசிப்பவர் மனதில் பெரிய அளவிலான தாக்கத்தினை இந்தக் கதை நிச்சயம் ஏற்படுத்தும். அத்தகைய வல்லமைமிக்க கதைக்கரு கொண்ட மிகநுட்பமான பார்வையில் எழுதப்பட்ட கதையாக இந்தக் கதையைப் பார்க்கின்றேன்.
ஒவ்வொரு இன மக்களின் மனதிலும் அவரவர் பண்பாடு குறித்த உயரிய எண்ணங்களும், அவை தலைமுறைகள் கடந்தும் தொடர வேண்டுமென்கிற விருப்பமும் இருப்பது இயல்பே. ஆனால், ‘வலித்தாலும் காதலே..!’ கதையின் நாயகி, காதலனின் அழைப்பையேற்று கனடாவிற்கு வந்து படிக்கிறாள்.
அங்குள்ள கலாச்சார முறைகளைப் பார்க்கிறாள். மன மாற்றம் உண்டாகிறது.
அவளது காதலன் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறபோது, “தாலி கட்டப் போறீங்களா, என்ன நாய்க்குக் கழுத்திலே பட்டிகட்டுற மாதிரியோ?’ என்று கேட்கிறாள். ‘என்னாயிற்று... இவளுக்கு?’ என்று திகைத்துப் போகிறான் காதலன்.
தாலி கட்ட வேண்டாமென்று மறுத்த காதலியிடம், ‘உன்னுடைய இந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. உன்னோட ஒரு ரூம்மேட் போல வாழ்வதிலும் எனக்கு இஷ்டமில்லை’ என்று மறுதலிக்கின்றான்.
‘அப்போ தாலி கட்டிக்கொண்டு ஒரு அடிமை போல உங்கட தயவில நான் இங்கே வாழவேணும் என்று எதிர்பார்க்கிறீங்களோ?’ என்று அவள் கேட்கிற கேள்வி, இன்றைக்கு பெண்ணியத்தைக் கையிலெடுத்திருக்கும் இளைய தலைமுறை பெண்களின் கேள்வியாக எழுகிறது.
பிறகு, இருவருமே மனமொத்து, தாலி கட்டிக்கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள். காதலனின் இனத்தவரின் திருமண வீட்டிற்குச் சென்று திரும்பியதும், அவளது மனதிலொரு மாற்றம் நிகழ்கிறது.
‘காலம் போனாலும் பரவாயில்லை. ஏதாவது கோயில்லை என்றாலும் எனக்குத் தாலி கட்டிவிடுங்கோ’ என்கிறாள்.
அவளது இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்தில் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு என்ன மாதிரியான சமூக மரியாதை கிடைக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. பெண் உளவியல் சார்ந்த இந்தக் கதை, ஒரு ஆண் எழுத்தாளரால், பெண்ணின் மன உலகிற்குள் சென்றும் எழுத முடியுமென்பதை மிகக் காத்திரமாக மெய்ப்பித்துள்ளது.
மூன்றாவது கதை ‘காதல் போயின் சாய்தல்..!’
தமிழ்க் கலாச்சாரத்தில் பிறந்த அவள், கனடிய கலாச்சாரத்தில் பிறந்தவனைக் காதலித்து, கணவனாகக் கரம் பிடிக்கிறாள். தேன் நிலவு, விடுமுறை என நாள்கள் கடக்க, மணமான ஆறாவது மாதத்தில் கணவனான அன்றூவின் பிறந்த நாள் வருகிறது. அன்றூ இருப்பது ரொறன்ரோவில்.
அடிக்கடி வெளியிடங்களுக்குப் பயணம்போகும் அவள், அப்போதும் வெளியிலிருக்கிறாள். பொஸ்டனிலிருந்து அதிரடியாக விமானம் பிடித்து, ரொறன்ரோ வருகிறாள்.
பியர்சன் விமான நிலையத்தில் அவள் வந்திறங்கியபோது நள்ளிரவு 12 மணி. வாடகை வண்டி ஒன்றினைப் பிடித்துஇ வீட்டிற்கு வருகிறாள். தன்னிடமிருக்கும் சாவியைக்கொண்டு, வீட்டின் கதவை மெதுவாகத் திறந்து, விளக்கைப் போடாமலேயே படுக்கை அறைக்குள் நுழைகிறாள். கதையைப் படிக்கிற நமக்கோ ‘திக்... திக்’ என்று மனம் அடித்துக்கொள்கிறது.
தனது காதல் கணவனுக்குத் திருமணமான பிறகு வருகிற முதல் பிறந்த நாளில், இன்ப அதிர்ச்சியைத் தர திட்டமிட்டு, ஆவலோடு வந்தவளுக்கு காத்திருந்தது இன்னொரு பெரிய அதிர்ச்சி.
குறட்டை விட்டு உறங்கும் கணவனின் போர்வைக்குள் அவனை அணைத்தபடி இன்னொரு உருவம். எதிர்பாராத பேரதிர்ச்சி அடைகிறாள்.
‘அன்றூ ஓரினச் சேர்க்கையாளனா..?’ அவளால் நம்ப முடியவில்லை. உடம்பெல்லாம் வியர்க்க, வந்த சுவடு தெரியாமல் பிறந்த வீட்டிற்குப் பெட்டியோடு வருகிறாள்.
மகளின் வருகை கண்டு பெற்றோர் அதிர்ந்தாலும், அவளை வரவேற்கின்றனர். அம்மாவிடம் நடந்தவற்றைப் பகிர்கிறாள். ‘உனக்கான முடிவை நீயே தேடிக்கொள்’ என்கிறாள் அம்மா.
மனம் பதறாமல் நிதானமாக யோசிக்கிறாள். ‘ஆத்திரத்தில் கையை விட்டால், அண்டாவிற்குள்ளும் கை நுழையாது’ என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றெண்ணி, மன அமைதியடைகிறாள்.
ஒருபாற் சேர்க்கை என்பது கனடிய மண்ணில் ஒன்றும் தவறானதில்லை. சிகரெட் பிடிப்பதுபோல, மது அருந்துவதுபோல இதுவும் இளமையில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம் என்கிற புரிதலுக்கு வருகிறாள். ஆனாலும், அவன் ஒன்றும் ஆண்மை குறைந்தவனல்ல என்பதையும் அவனது மனைவியாக அவளறிவாள். இப்போது என்ன செய்யலாம்? ‘அன்றூவோட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை இத்தோடு போதுமென விவாகரத்து கோரலாமா?’
வேண்டாமென்கிற முடிவுக்கு வருகிறாள்.
‘காதல் போயிற் சாதல் அல்ல சாய்தல்’ என மகாகவி பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் புது முடிவு ஒன்றினை எடுக்கிறாள். ‘இனிமேல் அன்றூவை தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். முதலில் அவனிடம் அப்படியான தொடர்புகளை வைத்திருக்கும் கூட்டாளிகளை வெட்டிவிட வேண்டும். பிறகுஇ கவனமாகச் செயல்பட்டால் அதைச் சரிசெய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையோடு, மீண்டும் பியர்சன் விமான நிலையத்திற்குச் செல்கிறாள்.
இன்றைய இளைய தலைமுறை பெண்கள் முடிவெடுப்பதில் எப்படி உறுதியாகவும் திடமாகவும் இருக்கிறார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், எதிர்கால வாழ்க்கையைக் கவனத்தில் கொண்டு, மிகச் சரியான முடிவை எடுப்பதில் தெளிவானவர்கள் என்பதை மிக நேர்த்தியாக இந்தக் கதையில் பகிர்ந்துள்ளார் குரு அரவிந்தன்.
மனக் குழப்பத்திலிருக்கும் எவரும் இந்தக் கதையைப் படித்தால், குழப்பத்திலிருந்து தெளிவைப் பெறலாம். எதிர்காலத்தைச் சிதைக்கா வண்ணம் சரியான முடிவெடுக்க வேண்டுமென்பதற்கான வழியினை காட்டும் சுடரொளியென இந்தக் கதை நம்மை வழி நடத்திப் போகிறது. இந்தக் கதையைப் படிப்பவர் வேறொரு எழுத்தாளனின் வாசகனாக இருந்தாலும், இந்தக் கதையினூடாகத் தனக்கான வாசகனாக அவரைத் தன்பக்கம் சாய்த்து, சாதித்து விடுகிறார் குரு அரவிந்தன்.
நான்காவதான கதை ‘அவள் வருவாளா?’ இந்த நூலின் நிறைவுக் கதை. ஒரு நூலின் முதல் கதையும் நிறைவுக் கதையும் சிறந்த கதையாக அமையுமானால், அந்த நூல் வாசக மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்வது நிச்சயம் என்பார்கள். அப்படியான தேர்ந்த கதையாக இந்நூலின் நிறைவுக் கதையும் இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
‘குடும்பச் சண்டைகள் நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டியவை’ என்பது தமிழ் மக்களின் வாழ்வியலில் சொல்லப்படாத நீதி. ‘எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். குறுக்கால நீ ஏன் மூக்கை நீட்டுறே?’ என்று கணவன் - மனைவி சண்டைக்குள் நுழைபவரைப் பார்த்துக் கேட்பதை இன்றும் தமிழ்க் குடும்பங்களில் காண முடிகிறது. அப்படியான ஒரு வாழ்முறையைக் கொண்ட தமிழ்க் குடும்பமொன்று கனடிய நாட்டில் வாழ்கிறது.
கணவன் – மனைவிக்கான காரசாரமான உரையாடல் வலுக்கவே, ஒரு கட்டத்தில் மனைவியை அடிக்க கையோங்கி விடுகின்றான் கணவன். மனைவி படித்தவளாயிற்றே... சும்மா விடுவாளா?
செல்பேசி வழி சினேகிதிக்கு உடனே இதனைப் பகிர்கிறாள்.
‘அடிக்கிற கணவனிடத்தில் வாழாதே. ம்... கிளம்பு’ என்கிறாள் தோழி. தன் குழந்தையோடு தனியாக வாழச் செல்கிறாள். மனைவியோடு சேர்ந்துவாழ ஆசைப்படுகிறான் கணவன். ஆனாலும், சுற்றிருப்பவர்கள் இவர்களைச் சேர்ந்துவாழ விடுவதாகயில்லை.
‘ஒரு பொம்பிளைக்கு இவ்வளவு திமிர் எண்டால் நீ ஏன் அடங்கிப் போக வேணும்? நீ பேசாமல் இரு. இவையெல்லாம் பட்டுத்தெளிய வேணும்’ என்கிறார்கள்.
இருவர் பேசித் தீர்த்துக்கொள்ளும் சிறுசிறு சண்டைகளுக்குள்ளும் மூன்றாம் நபர் நுழைந்தால், நூலிழைச் சிக்கல் கூட நூலாம்படைச் சிக்கலைப்போல பெரிதாகிவிடுமென்பது இவர்களது வாழ்க்கையிலும் உண்மையாகிறது.
ஒரு நாள், எதிரே தன் மனைவியைச் சந்திக்கும் கணவன், ‘ஐயாம் சாரி’ என்கிறான்.
‘ஏன் மன்னிச்சுடு என்று சொல்ல மாட்டீங்களோ, பெரிய மானஸ்தன்’ என்கிறாள் மனைவி.
இந்த உரையாடலில் தமிழர்களின் மனச் சிக்கலையும், காலங்காலமாகத் தமிழர்கள் மொழி குறித்து கொண்டுள்ள எண்ணத்தையும் நம்முன்னே விவாதமாக்கியுள்ளார் எழுத்தாளர் குரு அரவிந்தன். அதையும் கதைக்குள் துறுத்திக்கொண்டிருக்காமல், கதையின் இயல்பான போக்கிலேயே பேச வைத்து, நம்மையும் ‘ஆமாம்’ என ஏற்க வைத்துள்ளதும் கதாசிரியனுக்கு மட்டுமே வாய்த்த சவாலான பணி. அதை மிகத் திறம்பட இந்தக் கதையில் கையாண்டுள்ளார் கதாசிரியர் குரு அரவிந்தன்.
வாய்க்கூசாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘சாரி’ கேட்கும் தமிழர்களான நாம், ஏனோ ‘மன்னிப்பு’ என்று நம் தாய்மொழியில் கேட்கத் தயங்கவே செய்கிறோம். இதுதான் ஒருவனது தாய்மொழி, அவனது மனதோடு எவ்விதம் இணக்கமான உறவைக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்வதாகும். அந்நிய மொழியில் கேட்கும் ‘சாரி’ என்பதை வெறும் வார்த்தையாக மட்டும் கருதும் ஒருவன், அவனது தாய்மொழியில், அதனையே ‘மன்னிப்பு’ என்று கேட்கையில் தனக்கான தன்மானக் குறைவாகக் கருதுகின்றான். இந்த உளவியல்ரீதியான சிக்கலை ஒரு சிறிய உரையாடலின் வழி விவாதமாக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன்இ தமிழ்ச் சிறுகதையாளர்களில் போற்றுதலுக்குரிய உயர்ந்த இடத்தைப் பிடிப்பது இந்த இடத்தில்தான்.
கணவன் – மனைவி சண்டை என்பதாக மட்டுமே இந்தக் கதை சுருங்கிவிடாமல், நவீன காலப் பெண்வாதப் போக்கையும் இந்தக் கதை மெல்லக் குட்டுகிறது. கதையின் முடிப்பு படிக்கும் எவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
கணவன் – மனைவிக்குள் விழுந்த சிறுகீறலைப் பெரிய இடைவெளியாக்கி, இருவரையும் பிரித்த சினேகிதி கேட்கிறாள். ‘இவனெல்லாம் ஒரு ஆம்பிளையா, உன்னைக் கைநீட்டி அடிச்சவன்ரி.’
இதற்கு அவள் சொன்ன பதில்தான் இந்தக் கதையின் உச்சம்.
‘இல்லை. ஆத்திரத்தில் நான்தான் முதல்ல அவரை அடிச்சனான். அதுக்குத்தான் அவர் கையோங்கினவர்.’
அப்படியானால், கணவன் அடிக்கத்தான் கையோங்கினான். அடிக்கவில்லை; உண்மையில் அடித்தவள் மனைவிதான்!
‘மாறும் என்ற விதியைத் தவிர மற்றதெல்லாம் மாறும்’ எனும் சமூக நியதியின்படி, இப்படியான மாற்றங்களும் இன்றைய சமூகத்தில், முக்கியமாக புலம்பெயர்ந்த சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்த ஒரு கதையின் வழியே பட்டவர்த்தமாகப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் குரு அரவிந்தன்.
‘சிறுகதை உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் ரஷ்ய எழுத்தாளர் ஆண்டென் செகாவ், ‘கதைகளில் மனித மனங்களிலுள்ள உண்மைகள் பேசப்பட வேண்டும். அந்த உண்மையின் பேரொளியே வாசக மனதிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்’ என்றார். அப்படியான ஒரு சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள் இருக்கின்றன.
எழுத்தாளர் குரு அரவிந்தனின் இதில் உள்ள கதைகள் அனைத்துமே காதல் கதைகளாக என்றாலும், காதல் எனும் மையப்புள்ளியில் நின்றுகொண்டு, முதல் பார்வையிலேயே தூண்டப்படும் ஆண்-பெண் எதிர்பாலின கவர்ச்சியை, மனித உடலின்பத்தை, ஓரினச் சேர்க்கையை, பெண் சமத்துவத்தை, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் சமூகத் தேவையை என அனைத்தையும் பேசுகின்றன என்பதே எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள், இளையோர்களுக்கு மட்டுமின்றி, மூத்தோர்களும் விரும்பிப் படிக்க காரணமாகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சின்னச் சின்னப் பத்திகளில் ஓடும் நதியின் வேகத்தோடு நம்மை அழைத்துச்செல்லும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் விறுவிறுப்பான மொழிநடை. ஆகா... அற்புதம். உங்களின் வாசகன் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமையடைகின்றேன். வாழ்த்துகள்... எழுத்தாளரே.
உசாத்துணை:
தங்கையின் அழகிய சினேகிதி - இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி
0 0 0
Comments
Post a Comment