2021 Review Contest - 4th Prize Winner

 



  (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி நான்காவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)
                   
குரு அரவிந்தனின் சிறுகதைகளில் 

நவீன பெண் பாத்திரங்களின் வகிபாகம்

பெ. ஸ்ரீகந்தநேசன், யாழ்ப்பாணம், இலங்கை.

முகவுரை:-

தமிழ்ப் புனைகதை இலக்கிய உலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பதித்து வருபவர் குரு அரவிந்தன், ஆவார். இவரது சிறுகதைகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. சிறுகதைகளில் வலம் வரும் பாத்திரங்களில் பெண் பாத்திரங்கள் தனி இடம் பெறுகின்றன. இலக்கிய வடிவங்களில் இன்று வரை மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டு – நேசிக்கப்பட்டு – வருவது சிறுகதை இலக்கியம் ஆகும்.

பல்துறை ஆளுமையை உடைய குரு அரவிந்தன் அவர்களின் ஆனந்தவிகடனில் வெளிவந்த, ‘இதுதான் பாசம் என்பதா?’, ‘ரோசக்காரி’, ‘தொடாதே…’, ‘சார்…ஐலவ்யூ’, ஆகிய சிறுகதைகளில் பெண் பாத்திரங்கள் முறையே, திருமணத்தின் போது பெண்ணின் மனநிலை, நவீன யுகத்தில் பெண்ணுரிமை, வாழ்வியலில் ஏமாற்றம் அடையும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள், இளம் தாயின் மன அழுத்தத்தை புரிந்து நடந்து கொள்ளும் மகள் முதலிய கருப்பொருள்களைப் பெண் விடுதலை – சுதந்திரம் - உரிமை – நோக்கில் சமூக யதார்த்தமாக பெண் பாத்திரங்களின் வகிபாகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவ் வகிபாகங்களை உள்ளடக்க ரீதியாக சமூகவியல் அடிப்படையில் இவ் ஆய்வுக் கட்டுரையானது நோக்கும்.

தொடருரை:-

ஆசிரியர் தொழில் செய்யும் சீதாவிற்கு, கல்லூhயில் படிக்கும் அவளின் தம்பி, வயதுக்கு வந்த தங்கை, அந்திம காலத்தை அண்மித்த தந்தை ஆகியோரைக் கொண்ட குடும்பத்தின், பொருளாதாரம் அவளின் ஆசிரிய தொழில் வருமானத்திலையே ஓடியது. பக்கத்தூரில் வாழும் ஆசிரியன் ஒருவர், சீதாவை தமது உறவினர்களுடன், பெண்பார்க்க வந்து, எந்த விதமான காரணத்தையும் குறிப்பிடாமல் அவளைத் தனக்குத் திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பம் இல்லை எனக் கூறி, அவளது மனத்தைப் புண்படுத்துவதாக இச் சிறுகதை நவோடை உத்தியில் நகர்கின்றது. எதிர்பாராத விதமாக புகையிரத வண்டியில் ஆசிரியையும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் பரஸ்பரம் மனம் திறந்து உரையாடும் போது, ஆசிரியன், அவள் மீதுள்ள விருப்பத்தைக் கூறி, நீங்கள் முறைப்பையனை விரும்புவதாகவும் என்னை நிராகரிக்கும் படி கடிதத்தில் எழுதியிருந்தீர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, கடிதத்தைக் காட்டினார். அதைப் பார்த்து திகைத்துப் போனாள். இது என்னுடைய கையொப்பம் அல்ல என்று மறுத்தாள். மீண்டும் அந்த ஆசிரியர் சீதாவின் வீட்டுக்குக் முகூர்த்தம் குறிக்க வந்தார். பெரிதாக அவர் சீர்களை எதிர்பார்க்காமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக ஆசிரியனின் உறவினர்கள் கூறினார்கள். சீதாவின் தந்தை சம்மதம் சொல்ல முற்ட்ட போது, சீதா இந்த கலியாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை; தனக்கு தற்போது கலியாணத்திற்கு அவசியமில்லை என உறுதியாகச் சொல்லி, தந்தை, தாய் இல்லாத குறையே தெரியாமல் எங்களை அவர் வளர்த்திருப்பதாகக் கூறி, இவ்வளவு காலமும்  தனியாக  குடும்ப சுமையைத் சுமந்ததாகவும் தானும் கொஞ்ச காலம் சுமையைச் சுமந்து அந்த குடும்ப பொறுப்பையெல்லாம் முடிச்சிட்டு, திருமணத்தைப் பற்றி யோசிப்போம். அப்பா அந்த குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுட்டுப் போக மாட்டன். தான் போய்விடுவேன் என்று எண்ணியே தந்தை கடிதம் எழுதி, தனது கையொப்பத்தைப் போட்டு அனுப்பியுள்ளதாகவும் தன்னுடைய உணர்ச்சிகளை எப்படியாவது அடக்கிக்கொள்ள முடியும். தான் திருமணமாகிப் போனால், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் வயிற்றுப் பசியைப் பொறுக்க முடியுமா? என்றவாறு அந்தக் கடிதத்தைக் கிழித்தெறிந்தாள். ‘மனத்தில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது’ என ஆசிரியர் இச் சிறுகதையை நிறைவு செய்துள்ளார்.

  இச் சிறுகதை ஓட்டத்தில் பெண்ணின் மனநிலை திடீர் முடிவெடுத்து விட்டு பின்னர் நிதானித்து முடிவெடுப்தை ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், சீதாவின் “பெரிய சுமை குறைந்தது போல இருந்தது”, “மனத்தில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது” என இரண்டு இடங்களில் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டியுள்ளார். பெரிய சுமை என்பது ஆடவர்கள்  தன்னை வெறுக்கவில்லை. அது வரை தன்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் ஏதாவது காரணத்தைக் கூறி மறுப்பதையும் சமூகம் அதுவரை தன்னுடைய பெண்மையைக் கிண்டல் செய்தமையையும் தவிடுபொடியாக்கியமையும் காட்டுகின்றது. மனத்தில் இருந்த சுமை குறைந்தது என்பது தன்னுடைய பாலியல் உணர்வுகளை தன்னால், கட்டுப்படுத்த முடியும் எனவும் குடும்பச் சுமையைக் கொஞ்சக் காலம் அவள் சுமப்பதாகவும் பின்னர் திருமணம் புரிவதாகவும் கூறிய மனத்தைரியத்தைக் காட்டுகின்றது.

சிறுகதையில் வரும் சீதா நவீன பெண்ணினத்தின் பண்பாடு, கலாசாரம் நிறைந்த பாத்திரமாக சிறுகதை ஆசிரியர் காட்டியிருப்பது, அவரது சமூகத்தின் உண்மையான – நேர்மையான – நேர்த்தியான -  துல்லியமான – பார்வையைக் காட்டுகின்றது. தமது உடன் பிறப்புக்களுக்கு வாழ்க்கை என்னும் பாதையில் ஒளியைக் காட்டிவிட்டு தன்னுடைய வாழ்வில் திருமண வாழ்வைத் தொடரவுள்ளதாக ஆசிரியர் காட்டுவது, பெண்களின் உழைப்பால் பொருளாதாரம் நிறைவடைவதைக் காட்டுகின்றது. தன்னுடைய உடலியல் தேவைக்காக, சிறுவர்கள், முதியோர் ஆகியோரைப் பரிதவிக் விடாத பெண்ணாக சீதா வலம் வருகின்றாள். 

பெண்ணின் திருமணத்தைப் பழைய காலத்தில்  அவளின் அழகும் பருவமுமே தீர்மானித்தன. ஆனால்,  இன்றைய தொழிநுட்ப உலகில் பொருளாதாரம், கல்வி, தொழில், சூழல், தங்கி வாழ்வோர் எனப் பல காரணங்கள் தீர்மானிப்பதாக இச் சிறுகதையில் காட்டியுளளார்.

ரோசக்காரி’ – சிறுகதையில் வலம் வரும் சுபத்திரா என்னும் பாத்திரம் ‘எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங்’ சிறப்புப் பாடமாகக் கல்விக் கற்றவள். சுரேஷ் என்பவனைத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் சென்று, அவள், கணவனுக்கு உணவு சமைப்பதையே தனது பிரதான தொழிலாகக் கொண்டு அடுக்களையில் முடங்கி கிடந்தாள். பொருளாதரத்தில் எந்த சிக்கலும் இல்லாத அந்த குடும்பத்தில் சுபத்தரா வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு படித்த பெண்ணின் அறிவு, ஆற்றல், திறமை எல்லாம் வீணாகப் போவதை எண்ணி சுரேஷ் எத்தனையோ தடைவ வேலைக்குப் போகச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. இறுதியாக சுபத்தராவின் மாமாவின் திட்டத்தின் படி, அவளுக்கு ரோசம் வரும் அளவுக்கு சுரேஷ் நடந்து, அவளைத் திட்டித்தீர்த்தான். அதனால், ரோசக்காரியான சுபத்திரா இறுதியாக படித்த படிப்பிற்கேற்ற வேலையில் இணைகின்றாள். தன்னுடைய தந்தையின் மூலம், கணவன் சுரேஷ் நல்வர் என்பதையும் தனது திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்காகவும் நாட்டினுடைய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான், நாடு பொருளாதாரத்தில்  வளர்ச்சியடையும் முதலிய நோக்கங்களுக்காகவே என்னை வேலைக்குப் போக சொல்லியிக்கிறார். என்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக இந்த சிறுகதை  நிறைவு பெறுகின்றது.


‘ரோசக்காரி’ இல் வரும் பிரதான பெண் பாத்திரம் சுபத்தரா துணைப் பாத்திரம் அவளின் தாய் ஆகிய இருவரும் அங்கம் வகித்த போதும் சுபத்தரா என்ற பாத்திரமே சிறுகதை முழுவதும் இழையோடியுள்ளது. எல்லாப் பெண்களையும் போல ஆரம்பத்தில் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும்’ புருஷன் என்று வாழ்ந்த சுபத்திரா, கணவன் வேண்டுமென்றே செய்த வெறுப்பான செயல்களினால், அவள் நல்ல வேலைக்குச் சென்றதும், அவ்வளவு காலம் வீட்டுக்குள் அடைப்பட்டுக் கிடந்து காலத்ததை வீணடித்து விட்டதையும் தன்னுடைய செயற்பாடுகளையும் எண்ணி வெட்கம் அடைகின்றாள் என ஆசிரியர் காட்டியுள்ளார். இதன் மூலம் சுபத்தரா நவீன யுகத்தில பெண்கள் உணவு சமைத்துப் போடுவதற்கு மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல ஏதாவது துறையில் சாதனையாளராக வர வேண்டும் என்பதைக் காட்டியுள்ளார். இச் சிறுகதையில் வரும் துணைப்பாத்திரமான சுபத்திராவின் தாய் மரபு ரீதியான பெண் அடக்கு முறையை பெண்களே பெண்கள் மீது திணிப்பதைக் கணலாம். இதனுடாக பெண்களின் மனநிலை மாற வேண்டும் என்னதை ஆசிரியர் காட்டியுள்ளார்.

குரு அரவிந்தனின், ‘தொடாதே…’ என்னும் சிறுகதையில் கிராமத்து இளைஞன் அறியாப் பருவத்தில் இருந்த மல்லிகாவை ஆசைக்காட்டி அவளுடைய கற்புடன் விளையாடி விட்டு ஊரை விட்டு ஓடி அமெரிக்காவில் குடியேறி சிறந்த ‘டெனிஷ்’ வீரனாகப் புகழ் பெற்று விளங்கினான். இருந்தும் அவனது திறமையின் வலைக்குள் பெண்கள் பலரைச் சிக்க வைத்து, அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் படலம் தொடர்ந்த வண்ணமே இருந்தது என இக் கதையில் காட்டியுள்ளார்.

பன்னிரண்டு வருடங்கள் அவனது நினைவாகவே வாழ்ந்த மல்லிகா, ஜாஸ்மீன் என்ற பெயரில் விளையர்ட்டு வீரனைச் சந்திக்கின்றாள். இவனது பார்வையில் மீண்டும் விழுந்த மல்லிகா தன்னை யாரெனக் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவோ தடுத்த போதும் அவளுடைய உடலைச் சுவைக்கின்றான். பின்னர் விளையாட்டு வீரனுக்கு அவள் யார்? என்ற விடயம் தெரியவருகின்றது. அவனுக்கு பெண்கள் மீது கொண்ட மோகமும் பெயர், புகழ், பணம் மீது கொண்ட ஆசையும் அவளை உதாசீனப்படுத்தின.

அவளின் உண்மையான காதலைக்கொச்சப்படுத்தினான். மல்லிகா விபத்தொன்றில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தவறுதலாக எயிட்ஸ் நோயாளியின் குருதி ஏற்றப்பட்ட விடயத்தையும் அந்த தவறுக்காக வைத்தியசாலை நிறுவாகம் தனக்கு ஒரு தொகை பணம் கொடுத்ததையும் கூறி, பணத்தினால், எல்லாவற்றையும் வாங்க முடியாது என்ற உண்மையையும் அவனுக்கு உணர்த்துவதாக கதை நகர்ந்து, அவன் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக நிறைவடைகின்றது.

இச் சிறுகதையின் மூலம் மல்லிகா என்ற பெண் பாத்திரத்தின் வாயிலாக அவர்களின் உண்iமையான காதலை வெளிப்படத்துவதுடன், அந்த இளைஞனால், சீரழிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவதையும் காட்டியுள்ளார். இரண்டாவது தடவையாக அவளுடைய கற்பைச் சூறையாடும் போது, அவள் தன்னை “தொடாதே…” என கூறுவதன் மூலம் தனக்கு ஏற்பட்ட கொடிய வியாதி அவனுக்கும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயற்பட்ட போதும். அவன், அவளைக் கதைக்க விடாமல், “ஜாஸ்மின் இந்த உதடுகள் பேசுவதற்கல்ல சுவைப்பதற்கோ” என்று ஆசை வார்த்தைகள் பேசி பெண்மையைத் தனது கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதாக ஆசிரியர் காட்டியுள்ளார். இவற்றின் மூலம் அவளின் உண்மைக் காதலையும் நல்லெண்ணத்தையும் காட்டியுள்ளார். அவன் எவற்றையும் பொருட்படுத்தாமல், கட்டாயத்துக்கு உட்படுத்தி புதிய சிக்கில்களை எதிர் கொள்கின்றான். இச் சிறுகதை ஆசிரியர், கணவன் அல்லது மனைவி, காதலன் அல்லது காதலி உயிரோடு இருக்கும் தறுவாயில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாம்பத்திய கலாசாரத்தைச் சுட்டிக்காட்டி, இதை மீறியதினாலையே இன்று மனித இனத்தை எயிட்ஸ் நோய் ஆட்கொண்டுள்ளதைக் காட்டியுள்ளார்.


சார்…ஐலவ்யூ’ என்ற சிறுகதையில் சுசீலா, சுசீலாவின் மகள் நிலா ஆகிய பெண் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, கதையை நகர்த்தியுள்ள போதிலும் இடையே ‘புரொபஸர்’ ராமநாதனின் மனைவியையும் அவரின் மகளையும் குறிப்பிட்டு பெண்களின் மனநிலையை ஒப்பீட்டு அடிப்படையில் காட்டியுள்ளார்.

முப்பத்தெட்டு வயதில் கணவனை இழந்த சுசீலா ஆசைகள், உணர்ச்சிகள், எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது மகள் நிலாவிற்காக வாழ்கின்றாள். அதனை உணர்ந்த மகள் நிலா, தனக்குப் பிரத்தியேகமாக கல்வி கற்பித்த ஓய்வு பெற்ற ‘புரொபஸர்’ ராமநாதன் அவர்களும்; தன்னுடைய தாயும் நெருங்கி பழகியதைச் சாதகமாக வைத்துக்கொண்டு, தான் ‘புரொப்பஸ’ரைக் காதலிப்பதாககக் கூறி, நாடகம் ஆடினாள். தாய், மகள் அப்பா இல்லால் வாழ்கின்றமையால்தான் தவறுதலாகச் சிந்திப்பதாக, எண்ணி ‘புரொபஸ’ரை மறுமணம் புரிகின்றாள். பின்னர் மகள் மகிழ்வடைகின்றாள். மூவரும் ஒன்றிணைந்து வாழ்வதாக இக் கதை நிறைவுபெறுகின்றது.

இச் சிறுகதை தபுதாரனும் விதவையும் மறுமணம் செய்வதை வலியுறுத்துகின்றது. ‘புரொபஸர்’, நிலாவிற்கு அந்த வயதில் காதல் ஏற்படுவது இயற்கையான இயல்பு அது போகப்போக சரியாகிவிடும் என்றும் சுசிலா, நிலாவிற்கு அப்பா இன்மையால்தான் பாசத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்து கொண்டாள் எனவும் இருவரும் தவறுதலாக நிலாவின் மீது கணிப்பீடு செய்வதைக் காணலாம்.

பெண் பிள்ளைகளின் ஆரோக்கியமான உளவியல் வளர்ச்சிக்கு பெற்றோரின் ஒற்றுமை தேவை என்பதை இக் கதையின் மூலம் வலியுறுத்தியுள்ளார். ‘புரொபஸ’ரின் மனைவி இறந்ததும் அவரின் மகள் தந்தையின் கண்டிப்பில் வாழ முடியாமல் தனக்குப் பிடித்தவனோடு,  வீட்டை விட்டு வெளியேறுவதையும் சுசீலாவின் மகள் தந்தை இல்லாமல் வளர்வதால், அவளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மன அழுத்தங்களையும் இதற்குச் சான்றுகளாகக் குறிப்பிடலாம். நிலா, தன்னுடைய தாய்க்குச் சிறந்த வரன் தேடி வைத்து மகிழ்ச்சி அடைவதும் ‘புரொபஸ’ரின் மகள் தன்னுடைய தந்தையைப் பரிதவிக்கவிட்டுச் செல்வதாகவும் காட்டப்பட்டிருப்பதன் ஊடாக, நிலாவின் வகிபாகம் தாயின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் ‘புரொபஸ’ரின் மகளின் வகிபாகம் தந்தையின் உணர்வை ஊதாசீனம் செய்யும் தன்மையும் வெளிப்படுத்தப்பதுகின்றன.

மிகவும் எளிமையான உரைநடையை உடைய இந்த சிறுகதைகளில் வரும் ஒவ்வொரு பெண் பாத்திரமும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் புதிய கோணத்தில் அணுகுவதைக் காணலாம். ‘இதுதான் பாசம் என்பதா..’ என்ற சிறுகதையில் வரும் சீதாவின் தந்தையால் தன்னுடைய திருமணம் தடைப்பட்ட போதும், கோபப்படாமல் சிந்தித்து முடிவெடுக்கின்றாள். ‘ரோசக்காரி’ என்ற சிறுகதையில் வரும் சுபத்திரா எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவளின் ஆற்றல், அறிவு, திறமைக்கு ஏற்ற தொழில் தீர்வாகக் காட்டப்பட்டுள்ளது. ‘தொடாதே…’ என்ற சிறுகதையில் வரும் மல்லிகா காதலனால் ஏமாற்றப்படுவதால், அவள் அவனைத் திருத்த முற்படுவதையும் அவன் திருந்தாத பட்சத்தில் அந்த ஏமாற்றம் தன்னுடன் முடியட்டும் என புரட்சிகரமாக சிந்திக்கும் பாத்திரமாக வலம் வருகின்றாள். ‘சார்…ஐலவ்யூ’ என்ற சிறுகதையில் வரும் நிலா தாய்க்குத் திருமணம் செய்து வைக்கும் புரட்சிகரமான பெண்ணாகக் காட்டப்பட்டுள்ளாள். இவ்வாறு இவரது சிறுகதைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளையும் முற்போக்கு அடிப்படையில் முன் வைத்திருப்பது, கதா ஆசிரியரின் தனியான ஆளுமைiயும் சமூக ஜதார்த்த பார்வையையும் காட்டுகின்றன.

பெண் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் ‘சமுதாய மதிப்புக்கள்’ என்ற வகையில் சிறுகதைகளில் வரும் பெண்பாத்திரங்கள் சமூக விழுமியம் அல்லது மதிப்பை வெளிக்காட்டுவனவாக திகழ்கின்றன. சமூக முழுமைக்கோ அதன் குறிப்பிட்ட ஒரு பிரிவு அல்லது வர்க்கத்திற்கோ உள்ள பொதுவான மனித நடத்தைகளின் நியதிகள் மற்றும் தரவுகளின் (சரடநள யனெ ளவயனெயசனள) தொகுதியே சமுதாய மதிப்புக்கள் ஆகும். இவ்வாறான மரபு ரீதியான சமூக மதிப்புக்களைக் காரண காரிய அடிப்படையில் மெதுவாக தகர்த்தெறிவதைக் காணலாம். குரு அரவிந்தன் உடன் பாடான சமூக மதிப்புக்களான:- ஆசை, உணர்ச்சி, காதல், பாசம், கௌரவம், திறமை, கற்பு, புகழ், பக்தி, தாய்மை, பெண்மை, தன்னம்பிக்கை ஆகியவற்றைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். எதிர் மறையான சமூக மதிப்புக்களான:- ஏமாற்றம், மோகம், கோபம், பொய்மை, தீமை, பாவசெயல், பித்தலாட்டம், மதிக்காமை, சீரழிவு, மதுவுக்கு அடிமை, ஆகியவற்றில் பெண் பாத்திரங்களை ஏற்றி அவர்களுக்குச் சார்பாக நீதியை நிலை நிறுத்துவதைக் காணலாம்.

குரு அரவிந்தன் தன்னுடைய சிறுகதைகளில் பெண்களின் ‘கற்பு நிலை’யை ஒவ்வொரு சிறுகதையிலும் ஒவ்வொரு கோணத்தில் கையாளுகின்றார். கற்பு என்னும் மதிப்பு காலந்தோறும் பல நிலைகளில் வழக்காறு பெற்று வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் பொதுவாக – வெளிப்படையாக – நடக்கும் திருமணத்தைக் குறித்தது. அதாவது, ஒத்திக்கு ஒருவனைக் குறிக்கும். பின்னர் சொத்துடைமையும் ஆணாதிக்கமும் கற்பு நிலைமையைத் தீர்மானித்தன. புதமைப்பித்தன் ‘பொன்னகரம்’ – சிறுகதையில் குறிப்பிடும் கற்பும் ஜெயகாந்தன் ‘அக்கினிப்பிரவேசம்’ ‘கற்பு நிலை’ – சிறுகதைகளில் குறிப்பிடும் கற்பும் குரு அரவிந்தன் ‘இதுதான் பாசம் என்பதா…’, ‘தொடாதே…’  முதலிய சிறுகதைகளில் குறிப்பிடும் ‘கற்பு’ பற்றிய நிலை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டது. அங்கு ஆடவருடன், பெண்கள் நேரடியாக உரையாடி தங்களுடைய வாழ்க்கையும் கற்பையும் தீர்மானிப்பதைக் காணலாம்.

முடிவுரை:-
இச் சிறுகதைகளின் மொழியமைப்பிலும் மற்றும் நிகழ்வுகளிலும் செய்திகளிலும் பிற கூறுகளிலும் பெண்களின் உளவியல் பிரதிப்பலிப்புக்களையே தேடுகின்றன. அது குரு அரவிந்தனின் தனித்துவமான இலக்கிய முதிர்ச்சியாகும். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட சிறுகதைகளில் குரு அரவிந்தன், நவீன பெண் பாத்திரங்களின் வகிபாகங்களை நேர்த்தியாகக் கையாண்டு, இன்றைய உலகில் தமிழப் பெண்கள் சர்வதேச அளவில் பல நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாண்டுள்ளார். நவீன பெண்கள் மன அழுத்தங்களை எவ்வாறு வெற்றிகரமாக கையாள்வதையும் அவற்றுக்கு கணவர், பெற்றோர், உறவினர் முதலியோர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் செயற்படுவதையும் காட்டியுள்ளார். சமுதாய மதிப்புக்களில் (Social values) எதிர் மறையான மதிப்புக்களை நல்ல விடயங்கள் நடை பெற, இச் சிறுகதை ஆசிரியர் கையாண்டுள்ளார்;. அதன் மூலம் உலகத்தில் தீமையான விடயம் பெயரளவிலையே இருக்க வேண்டும் என்ற உன்னத நிலையைக் காட்டியுள்ளார். சான்றுகளாக, ‘சார்…ஐலவ்யூ’ – சிறுகதையில் வரும் மாணவி நிலா என்னும் பாத்திரம் தாயின் மன அழுத்தத்தைப் புரிந்து கொண்டு, தனக்குக் கல்வி கற்பிக்கும் ‘புரொபஸ’ரைக் காதலிப்பதாக நடிக்கவைத்துள்ளமையும் ‘ரோசக்காரி’ – சிறுகதையில் கணவன், மனைவியுடன் திட்டமிட்டு சண்டைப் பிடிப்பதையும் குறிப்பிடலாம்.
மொத்தத்தில் மிகவும் எளிமையான உரைநடை மூலம் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைப் புதிய கோணத்தில் அணுகித் தமிழ்ப் புனைகதை இலக்கிய உலகில் தனக்கென்று தனித்துவமான ஒரு இடத்தைக் குரு அரவிந்தன் பதித்து வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்திற்கே இடமில்லை.
முற்றும்.

மூல நூல்கள்
01) குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘இதுதான் பாசம் என்பதா?’
02) குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘ரோசக்காரி’
03)  குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘தொடாதே…’
04) குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘சார்…ஐலவ்யூ’

அடிக்குறிப்புக்கள்

01) பெரியண்ணா, கோ. (2002), இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள், ஜோதி புக் செண்டர், சென்னை, இந்தியா. பக் - 102, 103.
02) ஸ்ரீகந்தநேசன்,பெ., (புயல்), (2018), போர்க்காலச் சிறுகதைகள், தாய்மொழிக் கலை மன்றம், வடக்கு மாகாணம், இலங்கை. பக் - 40, 41.
03) நடராசன்,தி.சு., (2006), திறனாய்வுக்கலை, சொந்தம் பிரிண்டர்ஸ், சென்னை, இந்தியா. பக் - 55,62,63
04) புதுமைப்பத்தன், புதுமைப்பித்தன் கதைகள், பொன்னகரம். (முழுத் தொகுப்பு)
05) ஜெயகாந்தன், சிறுகதைகள் - அக்கினிப் பிரவேசம், கற்பு நிலை.
………………………………………………………………….

Comments