வாய்மையின் இடத்தில்..

 



வாய்மையின் இடத்தில்..
நன்றி: விகடன்
குரு அரவிந்தன்
 
தொலைபேசி கொஞ்சநேரமாக அலறிக்கொண்டிருந்தது. சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசி கூட இப்போதெல்லாம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது. 
கொஞ்ச நாட்களாக யாராவது துக்கம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். புரொபஸர் சிவராமன் மெல்ல எழுந்து வேண்டாவெறுப்பாகத் தொலைபேசியை எடுத்தார்.
யாராய் இருக்கும்? என்ன செய்தியாய் இருக்கும்?
இப்படித்தான் அன்றும் தொலைபேசி அலறியது.
அவரது மகன் சாலைவிபத்தில் இறந்து போன செய்தி தொலைபேசியில் இடியாய் வந்து விழுந்தது. அன்று அந்த அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டு உடைந்துபோனவர் அந்தத் துயரத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை. அவரால் மீளவும் முடியவில்லை. அவரது குடும்பத்திற்குத் தெரிந்த பலர் நேரே வந்து துக்கம் விசாரித்தார்கள். சிலர் தொலைபேசியில் விசாரித்தார்கள். அவன் பிரிந்து விட்டான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கனவுபோல எல்லாமே முடிந்து விட்டது.  தூண்போல இருந்தவனே போய்விட்டான் இனி யார் துக்கம் விசாரித்தென்ன விட்டென்ன என்ற விரக்தியில் தான் அவர் இருந்தார்.
‘ஹலோ!’
‘மே ஐ ஸ்பீக் ரு புரொபஸர் சிவராமன்?’
‘ஸ்பீக்கிங்..’
‘சார்... நான்தான் ரமேஷ்’
‘ரமேஷா? எந்த.......?’
‘உங்ககிட்ட படிச்சேனே.... ஞாபகமிருக்கா?’
‘எந்த ரமேஷ்.... ம்....... இரண்டு ரமேஷ் படித்ததாக ஞாபகம்’
‘கிரிக்கெட் டீமிலேகூட இருந்தேனே.... ஞாபகமிருக்கா?’
‘ஆமா......இப்போ ஞாபகம் வருது. உயரமா.....கொஞ்சம்....நிறமாய்.... ஃபாஸ்ட்பௌலர் ரமேஷ்தானே?’
‘ஆமா ஸார், ஸ்டேஷன் மாஸ்டரோட மகன்.’
‘இப்போ புரியுது! சிவசங்கரோட மகன்தானே?’
‘ஆமா ஸார்! அந்த ரமேஷ்தான்! உங்கவீட்ல நடந்த துக்கமான செய்தி கேள்விப்பட்டேன்! அதுதான் போன் பண்ணினேன். உங்க மகன் சுரேஷ் என்னோட கிளாஸ்மேட் தான். எவ்வளவு நல்ல பையன். அவனுக்கு இப்படி ஒரு பரிதாபச் சாவு வந்திருக்கக் கூடாது ஸார். விதி யாரை விட்டது? என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!’
‘என்ன செய்ய? யாரை நோக? எல்லாம் ஒரேயடியாய் முடிஞ்சுபோச்சுப்பா!’
‘ஐயாம் ஸாரி... இது உங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு!’
‘அவன்தான் போயிட்டானே, இனி அவனைப் பற்றிப் பேசி என்ன செய்ய? என்னை அழைத்து துக்கம் விசாரித்ததற்கு தாங்ஸப்பா! ஆமா.. நீ எப்படி இருக்கிறே? என்ன பண்றே?  
‘நல்லா இருக்கேன் சார்! ஒரு பெரிய கம்பனியில கம்ப்யூட்டர் இஞ்ஜினீயராக இருக்கேன்.’
‘கல்யாணமாச்சா?’
‘இன்னும் இல்லை சார்!’ வெட்கப்பட்டு மறுபக்கத்தில் வார்த்தைகள் வந்தன.
‘ஏன்? என்ன தாமதம்? என்னோட மகனுடைய வயதுதானே.... நேரகாலத்தோட  நல்ல பெண்ணாய்ப் பார்த்துக் கட்டிக்க வேண்டியது தானே!’
‘அதில்லை சார்... அதில் ஒரு சிக்கல்!’
‘சிக்கலா? ஏன்.. காதல் கீதலா? அதனால வீட்ல எதிர்ப்பா?’
‘இல்லை சார்.. அரேஞ்டு மாரேஜ்தான்...! பெண் பார்த்தாச்சு, எல்லாமே நல்லாய்ப் பொருந்தியிருக்கு. எங்க வீட்லயும் எல்லாருக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்கு!’
‘அப்படியா சந்தோஷம்! அப்புறம் ஏன் தாமதம்? உனக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்கில்லையா?’
‘எனக்கும் பிடிச்சிருக்கு சார்! நல்ல நிறமாக.. ரொம்ப அழகா, என்னுடைய தோற்றத்திற்கு ஏற்ற மாதிரி பொருத்தமா இருக்கா.’
‘அப்புறம் என்ன.. ஜாம் ஜாம்னு கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டியது தானேப்பா!’
‘அங்கதான் சார் ஒரு சின்ன சிக்கல்!’
‘என்ன சிக்கல்..?’
‘நீங்களே மகனை இழந்த துயரத்தில் இருக்கிறீங்க. உங்க கிட்ட எப்படி..?’
‘பரவாயில்லை, சொல்லுப்பா! பெண்ணு யார்? எனக்குத் தெரிஞ்சவளா?’
‘உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச பெண்தான்!’
‘யாரப்பா அது?’ அவர் ஆவலோடு கேட்டார்.
‘சுற்றி வளைச்சுப் பேசாம நேரடியாகவே சொல்லிடறேனே.. பெண்ணு வேறு யாருமல்ல உங்க வீட்டிற்கு மருமகளாய் வர இருந்தவதான்..’
‘யாரு நம்ம சுரேஷ_க்குப் பார்த்த பெண்ணா? சுமதியா? அந்தப் பெண்ணையா கட்டிக்கப்போறே?
‘ஆமா சார்.. அதுதான் அந்தப் பெண்ணைப் பற்றி உங்க கருத்தைக் கேட்டதுக்கு அப்புறம்தான் அவங்களுக்குச் சம்மதம் சொல்லாம்னு இருக்கேன்’
‘ரொம்ப நல்ல பெண்ணுப்பா... நல்ல குடும்பம், நல்ல குணம், குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணு... என்ன செய்ய அவளை மருமகளாய் அடைய எனக்குத்தான் கொடுத்து வைக்கலையே! ஏக்கப் பெருமூச்ச விட்டார்.
பழைய நினைவுகளில் அப்படியே சிறிது நேரம் மௌனமாகிப் போய்விட்டார்.
‘ஹலோ.. ஹலோ.. சார் லைன்ல இருக்கிறீங்களா?’
‘இருக்கேனப்பா! இந்த வீட்டிற்கு விளக்கேற்ற வேண்டியவா, எத்தனை கனவுகளோடு இருந்தோம். எல்லாமே முடிஞ்சு போச்சப்பா!’ அழுது விடுவார் போல இருந்தது.
‘ஆமா சிக்கல்னு சொன்னியே.. அந்தப் பெண் பேர்ல தோஷம், ராசி அது இதுன்னு..’
‘நீங்க சொல்றது புரியுது சார்! அவங்களைப் பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா... பழகறதிற்கு அவங்க எப்படியிருப்பாங்கன்ணு?
‘ரொம்ப முற்போக்கான, தைரியமான பெண்ணுப்பா....! மனசிலே எதையும் வெச்சுக்கமாட்டா, பட்டுன்னு கேட்டுடுவா...!’
‘அப்படியா சார்! அப்போ அவங்க அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவாங்களா?’
‘ஆமாப்பா வருவா.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் கல்யாணத்திற்குத் தேதிகூடக் குறிச்சிருந்தோம். வருஷப்பிறப்பன்னிக்கு எல்லோருமா சேர்ந்து கோயிலுக்குப் போய் வந்தோம். அப்புறம் எங்க வீட்டிற்கு வந்து அவகையாலே விளக்கேற்றி, பால்காய்ச்சி காபி கலந்து எல்லோருக்கும் கொடுத்தா, அப்புறம் சுரேஷ் பிறந்ததினத்திலன்று பார்த்டே பார்ட்டிக்கும் அழைத்திருந்தோம், அவா வந்து எங்களோட கலந்து கிட்டா.. இரண்டு மாசங்கூட முடியலை.. எல்லாமே கனவாகக் கலைஞ்சுபோச்சு!’
‘அப்போ அடிக்கடி வீட்டிற்கு வந்திருக்கிறா போல....!’ ரமேஷ் ஆர்வமாய்க் கேட்டான்.
‘இல்லப்பா..... மூணே மூணு தடவைதான் வந்திருந்தா.. ஆனா முப்பது வருஷபந்தம் போல எங்களோட பழகினா!’
‘சுமதி உங்க வீட்டில உள்ளவங்களோட பழகினது இருக்கட்டும் சார்.. உங்க பையனோட எப்படிப் பழகினான்னு மட்டும் தெரிஞ்சாப் போதும்..’
‘புரியலையே..?’
‘இல்ல ரொம்ப நெருக்கமாப் பழகினாளா? ரெண்டு பேரும் ஒண்ணா வெளியே போய் வருவாங்களா?’
அவன் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறான் என்பது சட்டென்று அவருக்குப் புரிந்தது. நிதானமாகச் சிந்தித்தார்.
‘அவங்க ஒண்ணாப் படுத்தாங்களா?’ என்று தன்னிடம் கேட்கமுடியாமல் இப்படிச் சுற்றி வளைக்கிறான் என்றுதான் அவருக்கு நினைக்கத் தோன்றியது.
‘சே.. இவன் ஒரு சந்தேகப்பிராணி. கல்யாணத்திற்கு முன்பே இப்படித் துருவித் துருவி விசாரிப்பவன் வாழ்நாள் முழுவதும் அவளை என்ன பாடுபடுத்துவானோ?’
பாவம் சுமதி! இந்தக் கிராதகனையா அவள் மணந்து கொள்ளவேண்டும்?
வேண்டாம். அந்தத் தங்கமான பெண்ணுக்கு வேறு உத்தமமான வரன் கிடைக்காமல் போகாது.
‘நீ கேட்க வர்றது புரியுதுப்பா, ஆமாம்! போதுமா?’
பட்டென்று ரிஸீவரை வைத்தார் சிவராமன்.
….

Comments