எழுத்தாளர் சிவசங்கரி - குவிகம் சிறுகதைத் தேர்வு

 சிவசங்கரி - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022  

சுரேஷ் ராஜகோபால்

 



எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்!



நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர, மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.

இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை.

நவம்பர் மாதக்  கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையைக்  கொடுத்தது.

இரண்டு கதைகள் முழுவதும் நகைச்சுவை கதைகள் – (நந்து சுத்து எழுதிய “மரு பெயர்ச்சி”, இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”)

இரண்டு கதைகள் நிலையாமை, அதாவது இறப்பு, பற்றிய செய்திகளை கதை முழுவதும் பேசுகின்றன.

யாரும் விரும்பி படிக்கும் வகையில் எல்லாக் கதைகளுமே இருக்கிறன்றன. கதைகளில் சமூக சாடல், ஜனரஞ்கம், பிறப்பு இறப்பு, வயோதிகம், குடும்பச் சண்டை, சமூகச்  சண்டை என்ற எல்லாம் பலவித மையக் கருத்துகள் வருகின்றன.

மிக முக்கியமான விஷயம் இலக்கிய இதழ்களில் வரும் கதைகள் மட்டுமே தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொய்யாக்கும் விதமாக வெகுஜன இதழ்களில் வந்த எல்லாக் சிறுகதைகளும் தரத்தில் மேன்மையாக இருக்கின்றன.

இந்த சிறுகதைத் தேர்வில் பலவித சிறு கதைகளை படித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. மனதை நெகிழ வைக்கிறது. இனி தேர்வுக்கு உகந்த கதைகளைப் பார்ப்போம்:

எழுத்தாளர் சோம. அழகு எழுதிய “ருக்கு அத்தை” (திண்ணை 06 நவம்பர் 2022)

எழுத்தாளர் சரசுராம் எழுதிய “வானுக்கும் எல்லை உண்டு” (தினமணிகதிர் 27 நவம்பர் 2022)

எழுத்தாளர் வி. உஷா எழுதிய “பெரிய கிளைகள் சிறிய இலைகள் ” (தினமலர் வாரமலர் 27 நவம்பர் 2022)

எழுத்தாளர் சன்மது எழுதிய “நீ வருவாய் என” (கணையாழி நவம்பர் 2022)

எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸ் எழுதிய “திருக்கூத்து” சொல்வனம் 27 நவம்பர் 2022

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை” (ஆனந்த விகடன் 09 நவம்பர் 2022)

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” (திண்ணை 27 நவம்பர் 2022)


இந்தக் கதைகளில் கீழ்கண்ட இந்தக் கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்.

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்”

இலங்கை நகரிலிருந்த இனப்படுகொலையில், யுத்தம் என்ற பெயரில் சூறையாடப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இடிபாடுகள் இடையே அப்பா பார்த்த வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள், புரியாமல் இருந்த தருணங்கள், மற்றும் இப்போது இடிபாடு இடையே கிடக்கும் நிலை பற்றியே பேசும் கதை.

சிறுவயதில், பள்ளி விடுமுறை நாட்களில் பட்டணத்திலிருந்து கதை சொல்லியும் அவரது தங்கையும் போவது வழக்கமான ஒன்று. அவர்கள் வீடு யாழ்ப்பாணத்திலிருந்த சண்டிலிப்பாய் என்ற கிராமத்திலிருந்து. விவரம் தெரியாத வயதில் விளையாட்டு. சாப்பாடு, என்று பலவற்றைக் கூறுகிறார்.

பல வகை மாம்பழங்கள் விவரம் எல்லாம் அருமை. பாண்டி, சேலம் கொழும்பு பச்சைத்தின்னி மல்கோவா என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு இருந்த நிலையில் அவள் வீட்டை விட்டுப் போய் விடுகிறாள்.

கதாசிரியரின் பார்வையில் “ஆண்களை விட பெண்களுக்குத்தான் இனமான உணர்வு அதிகமிருக்கலாம்” என்கிறார். மேலும் “யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் பிரியாவின் நிலை என்ன?” என்று உணர்வு பூர்வமாக எழுதுகிறார்.

“அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று அங்கு ஆண்ட அரசு நிர்வாகம் சொல்லாதது ஒரு அவலம்”

கதை சொல்லி தனது இளமை நினைவுகளை, தனது அத்தை மகள் பிரியாவை நினைத்து அழுகிறார், அது அவருக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம் என்று முடிக்கிறார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தமாதிரி பாரதியாரின் “எந்தையும் தாயும் ‘மகிழ்ந்து குலாவி இருந்தது இவ்வீடே … அதன் முந்தையராயிரம் மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது இந்நாடே” என்று மாற்றிப் பாடி தங்கள் கண்ணீர் அஞ்சலி கொடுப்பது மிக மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இதனை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையெனத் தேர்வு செய்கிறேன்.

நன்றி : குவிகம் இதழ்

 


Comments