Story - மூன்றாவது பெண்..!

 


மூன்றாவது பெண்..!


குரு அரவிந்தன் - Kuru Aravinthan

அந்தச் சிறுமி சட்டென்று எனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள், காரணம் அவளது அந்தக் குரலில் பாசம் இழையோடியிருந்தது.

மூத்த மகளாக இருக்க வேண்டும் மற்றப் பிள்ளைகளைவிடச் சற்றுப் பெரியவளாகத் தெரிந்தாள். பத்து வயதிருக்கலாம்.

‘டாட் எனக்கு ஒரு ஸ்சுமூதி’ என்று இங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

அந்தச் சிறுமியின் குரலில் இருந்த கவர்ச்சி போலவே அவளிலும் அப்படி ஒரு கவர்ச்சி இருந்தது. நன்றாக உடை அணிந்து அழகாக, சிரித்த முகத்தோடு, அமைதியாக இருந்தாள்.

அந்தக் குடும்பத்தினர் எனக்கு அருகே இருந்த மேசையில் தான் சுற்றிவர அமர்ந்திருந்தார்கள். தாய் தகப்பன் மூன்று பிள்ளைகள்.

தகப்பன் பிள்ளைகளிடம் ‘என்ன சாப்பிடப் போறீங்க..?’ என்று அவர்களது விருப்பத்தைக் கேட்டார். நியோன் விளக்கு வெளிச்சத்தோடு இருந்த பதாகையில் உணவு வகைகளின் பெயர்களும், அதற்கான படங்களும், விலைப்பட்டியலும் மின்னிக் கொண்டிருந்தன.

அவர்கள் அதை உன்னிப்பாகப் பார்த்து ஆளுக்கொரு உணவைக் குறிப்பிட, தகப்பன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். யாருக்கு என்ன தேவை என்பது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டபின், மனைவியிடம் கேட்டு, மனைவியின் விருப்பத்தையும் அறிந்து, அவர்களுக்கு உணவு எடுப்பதற்காக ‘மக்டொனால்ட்’ உணவக வரிசையில் சென்று நின்றார்.

உணவைப் பெறுவதற்காக வரிசையில் பொறுமையாக தந்தை நிற்பதை இங்கிருந்தே மூத்தமகள் பார்த்த வண்ணம் இருந்தாள். மற்ற இருவரும் தாயும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொண்ட தந்தை அவர்களுக்கான உணவுத் தட்டைக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். தாயார் அவற்றை எடுத்த அவரவர் விருப்பப்படி உணவைப் பங்கிட்டுக் கொடுத்தார். மூத்த மகள் தகப்பனைத் திரும்பிப் பார்த்து ‘தாங்ஸ் டாட்’ என்று சொல்ல, அவர் அவளை அணைத்து முத்தம் கொடுத்தார்.

எப்பொழுதுமே மூத்த மகள் தகப்பனின் செல்லப் பிள்ளையாக இருப்பது வழக்கம் என்பதால் அதை நினைத்து நான் மனதுக்குள் சிரித்தேன். ஊரிலே என்றால் இதெல்லாம் சகஜம், யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் புலம்பெயர்ந்த இந்த நாட்டில் பொது இடத்தில் இப்படிச் செய்தால், அதாவது ஓரளவு வளர்ந்த பெண் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதையும் நானறிவேன்.

இப்படித்தான், எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்து சமீபத்தில்தான் கனடாவில் குடியுரிமை பெற்றிருந்தார். அவரது மகள் படிப்பில் கெட்டிக்காரி என்பதால், பாடசாலையில் நல்ல பெறுபேறு எடுத்து சித்தியடைந்திருந்தாள். தனது தேர்ச்சி அறிக்கையை தந்தையிடம் காட்டிய போது அவர் மகிழ்ச்சி பொங்க மகளைப் பாசத்தோடு அணைத்து ‘படிப்புத்தான் முக்கியம் செல்லம், உன்னுடைய எதிர்காலம் அதில்தான் தங்கி இருக்கிறது. இன்னும் நன்றாய் படிக்கணும்’ என்று சொல்லி மகளின் முன்நெற்றியில் ஒரு முத்தம் ஒன்று கொடுத்துப் பாராட்டியிருந்தார்.

மறுநாள் தோழிகள் பாடசாலையில் சந்தித்த போது ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குப் பெற்றோரிடம் இருந்து பரீட்சையில் சித்தி அடைந்ததற்காக என்ன பரிசு கிடைத்தது என்று பீற்றிக் கொண்டார்கள். ஆளுக்காள் தங்களுக்குக் கிடைத்த பரிசைப் பற்றிச் சொன்னார்கள். இவளைக் கேட்ட போது, ‘அப்பா சந்தோஷத்தில் என்னை அணைத்து எனக்கொரு முத்தம் தந்தார்’ என்று அவள் சாதாரணமாகச் சொன்னாள்.

‘முத்தமா, என்னடி சொல்கிறாய்?’

‘அப்பாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும், எனக்கும் அப்பா என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்றவளை, எல்லோரும் ஆச்சரியத்தோடு பார்க்க, தந்தையின் பாசத்தின் வெளிப்பாட்டைச் சொல்லிக் காட்டியதில் அவள் பெருமையோடு வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

எங்கே, எப்போ, எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக்கூடாது என்பதைக்கூட அவள் அப்போது தெரிந்து வைத்திருக்கவில்லை.

இந்த நாட்டுச் சட்ட திட்டங்கள் பற்றிப் புதிதாகப் புலம் பெயர்ந்த அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு மட்டுமல்ல, அவளது பெற்றோருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. உண்மையாகவே பாசம் என்று வரும்போது, சட்டத்தை யாரும் கணக்கெடுப்பதில்லை. அன்பு, பாசம், காதல் என்பதை எல்லாம் வெளிக்காட்ட வரும்போது, சில சமயங்களில் சில நாடுகளில் சமூகத்தின் கட்டமைபில் சட்டம் என்ற வரையறையொன்று இருப்பதையே சிலர் நினைத்துப் பார்ப்பதில்லை.

எப்படியோ இந்தச் செய்தி அங்கு நின்ற ஒரு மாணவி மூலம் வகுப்பு ஆசிரியையிடம் சென்றடைந்தது. இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டபின் சிறுவர் பாதுகாப்புச் சட்டப்படி ஆசிரியை மௌனம் காக்க முடியாது. நடந்ததை முறையிடாவிட்டால், வேண்டும் என்றே ஒரு குற்றத்தை மறைத்ததாக ஆசிரியர் மீது சட்டம் திரும்பலாம். எனவே அதிபரிடம் அவர் சென்று முறையிட்டார். அதிபரிடம் இருந்து தகவல் உயர் மட்டத்திற்குச் சென்றது. அன்று சற்று நேரம் கழித்து தந்தையின் வேலைத் தளத்திற்குச் சென்ற பொலிஸார் அவரிடம் இதுபற்றி விசாரனை செய்தனர்.

பாசத்தின் வெளிப்பாடாய் நடந்த ஒரு சின்ன விடயம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், அனால் அது சிறுவர் பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகையால் இவ்வளவும் நடந்து முடிந்தது மட்டுமல்ல, அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக அந்தப் பெண்ணும் தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டார். பிள்ளைகளைப் பாதுகாக்கிறோம் என்ற மேலைத் தேசத்து சட்ட திட்டங்கள் காரணமாக, தந்தையின் பாசம் புறம் தள்ளப்பட்டதால், அந்தக் குடும்பமே செய்வதறியாது உடைந்து போய்விட்டது.

மகளிடம் இருந்து பிரிக்கப்பட்டது மட்டுமல்ல, இதற்காகவே காத்திருந்த சமூகம் அவரைக் கண்டபோதெல்லாம் முகம் சுழித்ததாலும் அவர் மனநோயாளியாக்கப்பட்டார்.

உண்மைதான், அனேகமான குடும்பத்தில் மூத்த மகள் மீது தகப்பனுக்குப் பாசம் இருப்பது பொதுவான அனுபவத்தில் தெரிந்ததே! பாசத்தைக் கொட்டுவதற்கு மகனைவிட மகள்தான் எப்பொழுதும் முதலில் நிற்பதும் தெரிந்ததுதானே. இங்கே கனடாவில் மாற்றாந்தாய், மற்றும் மாற்றாந் தகப்பனிடம் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகப் பிள்ளைகளின் நலன் கருதி இப்படியான சட்டங்களை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். சில சமயங்களில் சமூகம் இதையெல்லாம் கண்டும் காணாத மாதிரி நடந்து கொண்டாலும், முறைப்பாடு என்று வந்தால் அப்புறம் நடவடிக்கை எடுத்துத்தான் தீரவேண்டும்.

அருகே உட்கார்ந்திருந்த அந்தக் குடும்பத்தினர் சந்தோஷமாக உணவருந்தினார்கள். தகப்பன் யாருடனோ செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

உணவருந்திக் கொண்டே சிறிது நேரம் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். உணவருந்தி முடித்ததும் மிகுதி எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டு, மேசையைத் துப்பரவு செய்து விட்டு அங்கிருந்து அவர்கள் எல்லோரும் கிளம்பி வெளியே உள்ள வண்டிகளின் தரிப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள்.

இவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நானும் உணவருந்தி முடித்து விட்டதால், வெற்றுப் பெட்டிகளை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வெளியே வந்தேன்.

பொலிஸாரின் வண்டி ஒன்று வாசலில் நிற்க, ஒரு அதிகாரி வண்டியைவிட்டு இறங்கி உள்ளே சென்றார். அவர்களும் உணவு வாங்க வந்திருக்கலாம் என்ற நினைப்போடு, அங்கே தரிப்பிடத்தில் நின்ற எனது வண்டியை நோக்கி நடந்தேன்.

கறுப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ வண்டி ஒன்று அப்போது அவர்களுக்கு அருகே வந்து நின்றது.

‘டாட் பாய்..!’ என்று சொல்லிக் கையை அசைத்து எல்லோருக்கும் காட்டி விட்டு அந்தச் சிறுமி அருகே வந்து நின்ற அந்தக் காரில் ஏறி அமர்ந்தாள். அந்த வண்டி என்னைக் கடந்து சென்ற போது, இதுவரை இருந்த புன்னகை மறைந்து, அவளது முகம் வாடிப்போயிருப்பதை அவதானித்தேன்.

எனக்கு என்ன நடக்கிறது என்று ஒரு கணம் புரியவில்லை. தரிப்பிடத்தில் எனது வண்டிக்கு அருகே அவர்களது வண்டியும் நின்றதால், அருகே முன் கதவைப் பிடித்தபடி நின்ற அந்தத் தாயைப் பார்த்து புன்னகை உதிர்த்தேன். அவரும் சினேகிதமாகப் பதிலுக்குப் புன்னகைத்தார்.

கேட்பதா விடுவதா என்று ஒரு கணம் யோசித்தேன். எனக்குள் எழுந்த கேள்விக்கு விடைதெரியாமல் அங்கிருந்து நகர, மனம் இடம் தரவில்லை. முதலில் தயங்கினாலும் ஆர்வம் காரணமாகத் தாயிடம் கேட்டேன்.

‘எங்கே அவா போகிறா, அவுட்டிங்கா?’ என்று கேட்டேன்.

‘இல்லை, இப்போ அவளை அழைத்துச் செல்வது அவளுடைய ஸ்டெப்பாதர். இன்னிக்கு அப்பாவும் மகளும் மாதத்தில் ஒருக்கால் சந்திக்கிற தினம். அதுதான் இன்று எங்க கூட அவள் வந்தாள்’ என்றாள் அந்தத் தாய்.

‘அப்படியா?’ என்றேன்.

‘அதனாலதான் அப்பாவைப் பார்க்கக் காலையிலே கூட்டிக் கொண்டு வந்து விட்டாங்க, இங்கே சாப்பிட வந்தோம். இப்ப நேரம் முடிஞ்சு போச்சு, அதுதான் வந்து கூட்டிட்டுப் போறாங்க..!’

‘அப்போ அந்தப் பெண்ணு..?’

‘அந்தப் பெண்ணா.. அவள் இவருடைய மூத்த பெண்ணு..! இவள் என்னுடைய மூத்த பெண்ணு..!’

எனக்குப் புரிந்தும் புரியாதது போலிருந்தது.

‘அப்போ, இவள்தான் உங்க மூத்த பெண்ணா?’ என்றேன்.

‘ஆமாம், இவள்தான் என்னோட பெண்ணு, வாறகிழமைதான் இவளோட டேட், வாறகிழமை இவளை நான் இவளோட அப்பாகிட்ட இதுபோல அனுப்பணும்!’ என்று சொல்லிக் கொண்டே அருகே நின்ற தன் மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள் அந்தத் தாய்!

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இரண்டு பெண்களைப் பற்றிச் சொன்னதையே என்னால் உள்வாங்க முடியாமல் இருந்தது. சற்றுத் தள்ளித் தகப்பனுடன் நின்ற அந்த மூன்றாவது சிறிய பெண்ணை ‘உவள் யார்?’ என்று கேட்கவோ, அந்தச் சிறுமியின் உறவு முறையைத் தெரிந்து கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை.

‘அந்தப் பெண் அவருடையது, இந்தப் பெண் என்னுடையது, உந்தப் பெண் ‘எங்களுடையது’ என்றுதான் பதில் வரும். பல்கலாச்சார சூழலில் நாங்களும் சமாளித்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டாலும், மேற்கொண்டு எதுவும் பேசாமல் நான் மௌனமாய் எனது வண்டி நோக்கி நகர்ந்தேன். இந்தக் கதையெல்லாம் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருந்தால், என் மனசு தாங்காதோய்..!

(தமிழில் அ, இ, உ என்ற மூன்று சுட்டெழுத்துக்கள் இருக்கின்றன. அகரம், இகரம், உகரம் என்று சொல்வார்கள். அவள், இவள் என்ற சொற்கள் பாவனையில் இருந்தாலும், இடைப்பட்ட ‘உவள்’ என்ற சொல் பாவனையற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது. எனவே ‘உவள்’ என்ற சொல்லை இச்சிறுகதையில் பாவித்தேன்.)


Comments