ஆக்குவாய் காப்பாய்

 



ஆக்குவாய் காப்பாய்’ கனடியத் தமிழ்த் திரைப்படம்

குரு அரவிந்தன்

தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது.

லூனார் மோஸன் பிக்சர்ஸ் மற்றும் ஆர். புரொடக்ஸன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம் கனடா எஸ். மதிவாசனின் எழுத்து, இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தத் தமிழ்ப்படம் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி யோர்க் சினிமா திரையரங்கில் மதியம் ஒரு மணிக்குத் திரையிடப்பட இருக்கின்றது.

 இதில் கதாபாத்திரங்களாக கிருந்துஜா ஸ்ரீகாந், ஜெயப்பிரகாஸ், டேனிஸ் ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன் சீனிவாசகம், சுரபி யோகநாதன், ஆஸ்லி சுரேஸ்குமார், ஆதியா தயாளன், தனிஸா, சுதர்ஸி இக்னேஸியஸ், ரிஸீத் தலீம், மார்க் டிபேக்கர், டாக்டர் கரு கந்தையா, டாக்டர் கதிர் துரைசிங்கம், டாக்டர் வரகுணன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜீவன் ராம்ஜெயம் மற்றும் தீபன் ராஜலிங்கம் ஆகியோர் ஒளிப்திவு செய்திருக்கிறார்கள். ரியூ ஆர். கிருஸ்ணா இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கின்றார். மகாஜனா கல்லூரியின் பிரபல நாடக நடிகரும், வைத்திய கலாநிதியுமான கதிர் துரைசிங்கம் இந்தப் படத்தில் வைத்தியராகக் கௌரவப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றார்.

இதன் மூலக்கதையைச் எழுத்தாளரும் நடிகருமான சகாப்தன் எழுதியிருக்கின்றார். இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற நாடகம் மனவெளி கலையாற்றுக் குழுவினால் அரங்காடல் நிகழ்ச்சியில் ரொறன்ரோவில் இரண்டு காட்சிகளும், கனடா, மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும், லண்டன் மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் லண்டனில் ஒரு தடவையும் மேடையேற்றப்பட்டன.


மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் நாகமுத்து சாந்திநாதனின் நெறியாள்கையில், நாடகத்தில் சுமுதினி சக்திவடிவேல், தயாபரன் ஆறுமுகம், டாக்டர் கதிர்துரைசிங்கம், சகிலா தவராஜா ஆகியோர் நடித்திருந்தனர். புலம்பெயர்ந்த மண்ணில் கனடியத் தமிழர்கள் நாடகக்கலையைத் தொடர்ந்தும் தக்கவைத்திருப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியது.

கனடாவில் எனது ‘முள்ளுவேலி’ என்ற சிறுகதையை வேலி என்ற பெயரில் மதிவாசன் தயாரித்து, நெறியாள்கை செய்த போது சிறந்த ஈழத்து நடிகரான அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அதில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை நான் எழுதியிருந்தேன். இதைத் தொடர்ந்து ‘சுகம் சுகமே,’ ‘சிவரஞ்சனி’ போன்ற இந்திய – கனடா கூட்டுத் தயாரிப்பான படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுத எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 

‘சுகம் சுகமே’ என்ற படத்தின் சிறந்த திரைக்கதை வசனத்திற்காக ஜனகன் பிச்சேர்ஸாரின் விருதும் கிடைத்தது. சுகம் சுகமே படத்தில் டாக்டர் கதிர் துரைசிங்கமும் நடித்திருந்தார். தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் கனடா நாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments