முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

 


முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு


கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடும் நூல் வெளியீடும்




குரு அரவிந்தன்

கனடா, தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு, இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்திய ‘முதலாம் உலகத் தொல்காப்;பிய ஆராய்ச்சி மாநாடு’ கனடாவில் உள்ள ரொறன்ரோவில் 2024 செப்ரெம்பர் மாதம் 20, 21, 22 ஆகிய தினங்களில் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் இரண்டு நாள் நிகழ்வுகளும் ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. முதல் நாள் பிரதம விருந்தினராக வைத்தியகலாநிதி இ. லம்போதரன் கலந்து கொண்டார். இறுதிநாள் நிகழ்வு கனடா தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றபோது, மூன்றாம் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாண்புமிகு திரு. சித்தார்த் நாத் கனடா இந்தியத்தூதரகத் தலைமைத்தூதர் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வின் போது கண்காட்சி, ஆய்வரங்கம், சிறுவர் பேச்சு போட்டி, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான விநாடி வினா, தமிழ்த்திறன் போட்டிப் பரிசளிப்புகள், சதிராட்டம், நடனம், நடன ஆசிரியை திருமதி அற்புதராணி கிருபாராஜ் அவர்களின் மாணவிகளின் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், கவி ஆசான் சண்முகராசன் சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் அன்பின் ஐந்திணை கவியரங்கம், திருமதி மாலினி பரராஜசிங்கம் அவர்களின் நெறியாள்கையில் பறையிசை, திரு கஜேந்திரன் சண்முகநாதனின் ஒருங்கிணைப்பில் கலாலயக் கலைஞர்கள் வழங்கிய காத்தவராயன் சிந்துநடைக் கூத்து, திரு இராச்குமார் குணரட்ணத்தின் நெறியாள்கையில் தொல்காப்பியம் வில்லுப்பாட்டு, சிறுவர் நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதைவிட முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ‘ஓலைச்சுவடி முதல் இணையத்திரை வரை’ என்ற கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. 

இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான பல போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தமிழில் இடம் பெற்றுப் பரிசுகள் வழங்கப்பட்டதைப் பார்த்துப் பூரித்துப் போனேன் என்று சொன்னால் மிகையாகாது. கடந்த 35 வருடங்களாகக் கனடாவில் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் நாங்களும், பெற்றோரும் கனடிய மண்ணில் தமிழ் மொழியை நிலைநிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனை, எமது இங்கே பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர் மேடையில் நின்று தமிழ் மொழியில் முழங்கிய போது, அதைப் பார்த்துப் பரவசமடைய முடிந்தது. 






இதைவிடக் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் கலைக்கோயில் நுண்கலைக் கல்லூரி மாணவியரின் நடனம், திருமதி கௌசல்யா ராஜகுமார் அவர்களின் சிவசக்தி நாட்டியாலயா குழுவினரின் நடனம், திருமதி தயாளினி ஜீனராஜ் அவர்களின் சலங்கை நர்த்தனாலயா கலைக்கூடக் குழுவினரின் நடனம், திருமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் நடனக்குழுவினரின் நடனம், திருமதி செந்தில்செல்வி அவர்களின் நாட்டியக்குழுவினரின் நடனம் ஆகியனவும் இந்த நிகழ்வின்போது இடம் பெற்றன. 

முக்கிய நிகழ்வாக உலகெங்கும் இருந்து கிடைக்கப்பெற்ற தொல்காப்பிய ஆய்வுக்கட்டுரைகளில் மலருக்குத் தெரிவான ஆய்வுக்கட்டுரைகள் நேரடியாகவும், மெய்நிகர் வழியாகவும் வாசிக்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர், தன்னார்வத் தொண்டர்களின் திட்டமிட்ட கடின உழைப்பையும் மூன்றுநாள் நிகழ்வின் போதும் காணமுடிந்தது. மூன்று நாட்களும் விருந்துபசாரமும் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. ஆய்வரங்கத்தில் ஆய்வுக்கட்டுரை வாசித்தவர்களுக்கும், போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கும் தொல்காப்பியரின் சிறிய உருவச்சிலை விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த மன்றத்தலைவி, முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களும், செயற்குழுவினரும், தன்னார்வத் தொண்டர்களும் கனடா தமிழ் ஆர்வலர்களின் பாராட்டுக்கு உரியவர்கள்.  இந்த மண்ணில் தமிழ் அழிந்துவிடும் என்று எதிர்வு கூறியவர்களுக்கு ‘விழுந்தாலும் எழுந்து நிற்போம்’ என்று இளைய தலைமுறையினர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

தொல்காப்பியம் புலவர்களுக்கும், பண்டிதர்களுக்கும் தான் சொந்தம், அவர்களுக்கு மட்டும்தன் தான் தொல்காப்பியம் புரியும் என்ற தவறான எண்ணக்கருவே தமிழ் நாட்டில் பொதுமக்கள் மத்தியில் இதுவரை காலமும் விதைக்ப்பட்டிருந்ததை இலக்கிய ஆர்வலர்கள் அவதானித்திருப்பீர்கள். திருக்குறள் சென்றடைந்த அளவிற்குத் தொல்காப்பியம் பொது வெளிக்குச் செல்லவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் எமக்குக் கிடைத்த முதல் தமிழ் மொழி இலக்கண நூல்தான் தொல்காப்பியம். தமிழ் மொழிக்கு அடையாளம் தந்து தமிழர் என்ற இனத்தை உருவாக்கிய நூல்தான் தொல்காப்பியம். அதன் பிறகு வந்த சங்க இலக்கியங்கள் அனேகமானவை தொல்காப்பிய விதி முறைகளைப் பின்பற்றியே எழுதப்பட்டன. சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு பலர் தங்கள் இலக்கிய ஆளுமையைத் தொல்காப்பியத்தில் காட்டியதால், பொதுமக்களின் பார்வை தொல்காப்பியப் பக்கம் இதுவரை திரும்பாமலே இருந்தது. கனடாவில் நடந்த தொல்காப்பிய மாநாட்டு மலரில் இடம் பெற்ற கட்டுரைகள் குறிப்பிட்ட ஒரு சிலரின் இந்தத் தவறான எண்ணக் கோட்பாட்டை உடைத்தெறிவதாக இருந்தது. குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல், பரந்த வட்டத்திற்குள் தொல்காப்பியத்தை எடுத்துச் சென்ற பெருமை கனடா தொல்காப்பிய மன்றத்திற்கு உரியது. இதற்கு முக்கிய காரணம் பல தரப்பட்டவர்களைளையும் கொண்டு எழுதப்பட்ட இலகுவான கட்டுரைகள் மூலம் மக்களை இலகுவாகக் கவரக்கூடியதாக இந்தக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களுக்கு தொல்காப்பியமும் புரியும் என்ற முறையில் இந்தக் கட்டுரைகள் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கின்றன. 

தொல்காப்பியம் எல்லோருக்கும் பொதுவானது என்பதை கனடாவில் நடந்த உலகத் தொல்காப்பிய விழா நிரூபித்திருக்கின்றது. உயர் கல்வி கற்கும் பல்கலைக்கல்லூரி மாணவர்கள், தொல்காப்பிய அறிவு கொண்ட பொதுமக்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பல தரப்பட்டவர்களும் இந்த மலரில் அருமையான கருத்தாழம் மிக்க கட்டுரைகளை இலகு நடையில் எழுதியிருந்தனர். உண்மையிலே இது போன்ற மக்களைச் சென்றடையக் கூடிய கட்டுரைகள் தான் எமது இன்றைய சமூகத்திற்குத் தேவையானது. இதைக் கவனத்தில் கொண்டு கனடா தொல்காப்பிய மன்றத் தலைவரும், செயற்குழுவினரும் நன்கு திட்டமிட்டு இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்திருப்பதும், கட்டுரைகள்  அடங்கிய மலரை வெளியிட்டிருப்பதும் வரவேற்கப்;பட வேண்டியது.


மன்றத் தலைவர் முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், செயலாளர் சண்முகராசா சின்னத்தம்பி, பொருளாளர் வ. சுகந்தன், குமரகுரு கணபதிப்பிள்ளை, முனைவர் இல.சுந்தரம், மருத்துவர் விசய் சானகிராமன், முனைவர் மு. இளங்கோவன், முனைவர் இரா. அருள்ராஜ், மற்றும் செயற்குழுவினர் போன்ற, அங்கே நான் அவதானித்த பலரின் தன்னலமற்ற பங்களிப்பு இந்த நிகழ்வு சிறப்பாக நடந்தேற முக்கியமாக அமைந்திருந்தது. இதைவிட தன்னார்வத் தொண்டர்கள், கனடா அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், கனடா கவிஞர்கழகம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் போன்றவற்றின் அங்கத்தவர்களும் பங்குபற்றி மாநாட்டைச் சிறப்பித்திருந்தார்கள். 

கனடாவில் நடந்த உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மகாநாட்டில் முக்கிய அம்சமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்  Power Point  படக்காட்சிகளுடன் கற்றறிந்தோர் சபையில் வாசிக்கப்பட்டன. ஆய்வுக்காகப் பல நாடுகளில் இருந்து வந்திருந்த கட்டுரைகளில் முதற்சுற்றில் 124 கட்டுரைகள் தேர்வாகியிருந்தன. அவற்றில் விழா மலரில் இடம் பெறுவதற்கு ஏற்ற கட்டுரைகளாக 64 கட்டுரைகள் தெரிவாகி சுமார் 800 பக்கங்களைக் கொண்ட மாநாட்டு மலரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் வாழ்வியல், மொழியியல், ஒப்பீட்டியல், இலக்கணம், அறிவியல், உரை என்று ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 

 ‘தொல்காப்பியத் திணைகளில் புதியவரவு ஆறாம் நிலத்திணை’ என்ற எனது கட்டுரையும் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்நாள் வாசிப்பில் இடம் பெற்ற கட்டுரைகளில் எனது கட்டுரை வித்தியாசமான கருப்பொருளைக் கொண்ட, ‘ஆறாம் நிலத்திணை’ பற்றிப் பேசுவதாக அந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கலாநிதி மைதிலி தயாபரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரையில் ‘தமிழ் இலக்கியம் ஆறாம் நிலத்திணையையும் உள்வாங்கிக் கொண்டால், தமிழ் மொழியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கனடா போன்ற பனிப்புல நாட்டுத் தமிழர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆறாம் நிலத்திணை மக்களாகக் காலமெல்லாம் இடம் பிடித்துக் கொள்வார்கள்’ என்று எனது கட்டுரையின் முடிவுரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். 

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு வெளிவந்த விசேட மலரில் சிறப்புக் கட்டுரைகளை எழுதியவர்களின் விபரங்களை இங்கே தருகின்றேன். மூன்றுநாள் தொடர்ச்சியாகக் கனடாவில் நடந்த இந்த முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு வரலாற்றில் பதிக்கப்பட்டாலும், அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லக் கூடியதாக, அவர்கள் பயன்பெறக்கூடியதாக இருப்பது மாநாட்டு மலரில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்தான். அந்த வகையில் இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பயனுள்ள இந்தக் கட்டுரைகளின் தலைப்பையும், அதை எழுதியவர்களின் பெயர்களையும் இங்கே தருகின்றேன். புலவர்களுக்கும், பண்டிதர்களுக்கும் தான் தொல்காப்பியம் சொந்தம் என்ற நிலையை இந்தக் கட்டுரைகள் மாற்றி அமைத்திருப்பதையும், பலதரப்பட்ட மக்களிடம் சென்றடைந்திருப்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்.

தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடுகள் - வரலாற்று நோக்கில் களவேள்வி குறித்த ஆய்வு – திரு. அகத்தியன் சிவமணி, தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: சார்பெழுத்துக் கோட்பாடுகளும் சார்பெழுத்துப் புணர்ச்சிக் கோட்பாடுகளும் - திரு. மனோஸ் இராமா, தொல்காப்பியச் சொல்லிலக்கணக் கோட்பாடுகள் - திரு. ச. குமரவேல், தொல்காப்பியமும் கருநாடக இசையும் - திருமதி அமுதா பாண்டியன், திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ்: முனைவர் புஸ்பா கிறிஸ்டி, தொல்காப்பியரின் குறியியல் கோட்பாடு: முனைவர் ஏ. எழில்வசந்தன், தொல்காப்பியத்தைப் புரிந்து கொள்வதில் சி. கணேசையரின் உரைவிளக்கக் குறிப்புகளின் வகிபாகம்: திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ், தொல்காப்பியத் திணைகளில் புதிய வரவு ஆறாம்நிலத்திணை: திரு. குரு அரவிந்தன், தொல்காப்பிய மெய்ம்மயக்கப் பைத்தான் நிரலாக்க மேம்பாடு: திரு. சீனிவாசன் தணிகாசலம், இயற்கணிதம், கணக் கணிதம் மற்றும் கோட்டுரு அல்லது பரிமாண – அச்சு- இருப்புநிலை வரைபடக் கணிதம் மூலம், தமிழ் எழுத்துக்களின் விளக்கம்: திரு. தீனதயாளன் சுப்ரமணியம், பழந்தமிழர்களின் குலத்தொழில்கள்: முனைவர் ச. சுப்புலெட்சுமி, இலக்கண நூல்களின் திறவுகோல் தொல்காப்பியச் செய்யுளியல்: முனைவர் சண்முக. செல்வகணபதி, தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகளும் கோவை நானூறும்: முனைவர் செ. கற்பகம், தொல்காப்பியத்தில் பறை: திருமதி ஜெயதீபா தனபாலசிங்கம்.


தொல்காப்பியப்பிரதி கட்டமைக்கும் விளிம்புநிலை மக்கள்: கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம், தொல்காப்பியத் தமிழ்ச்சமூகம் ஒரு சட்டப் பார்வை: முனைவர் ப. மோகன்தாசு, தொல்காப்பியர் சுட்டும் நாடக வழக்கம்: பாடல்களும் கோட்பாடும்: முனைவர் ப. கிருஸ்ணமூர்த்தி, வரலாற்று நோக்கில் தொல்காப்பிய இடைச்சொல்லும் பாட்டும் தொகையும்: திரு க. சந்தோஸ், தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் பின்னும் தமிழக மெய்யியல் நிலை: திருமதி வாணிசிறி சிவபாதசுந்தரம்,  அறிவியல் சொல்வும் மெய்ப்பாடுகளும் தொல்காப்பிய மெய்ப்பாடுகளும்: முனைவர் ஜோதி தேமொழி, தொல்காப்பிய உவமவியல் கோட்பாடும் பிற்கால அணியிலக்கணமும்: முனைவர் அ. உமாமகேஸ்வரி, தொல்காப்பியம் பிறப்பியலும் பலம்பெயர் மண்ணில் தமிழ் மொழிக் கல்வியும்: திருமதி சுவந்தி சங்கர், நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்: முனைவர் பால. சிவகடாட்சம், தொல்காப்பியரும் உயிரினக் கொள்கைகளும்: முனைவர் இரா. கார்த்திகேயன், 

The Tolkippiam in a Healthcare Perspective: Dr. Kesavan, Shemankkary, and Mr. Viveganandarajah Thulanchanan,  தொல்காப்பியமும் இக்கால மொழியியலும்: திரு. தணிகைவேல் மாரியாயி, தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் நவீன உளவியலும் - ஒரு ஒப்பீடு: மருத்துவர் இரகுராமன் வரதராஜன், தொல்காப்பியரின் அகப்பொருள் மெய்ப்பாடு: திரு. அரியராசா முத்தையா, தொல்காப்பிய உரையாசிரியர் - இளம்பூரனார்: திருமதி தமயந்தி பிறேம்ராஜ், தொல்காப்பியத்தில் விஞ்ஞானம்: திரு. ஞானநாயகம் சிவா, தமிழ் – யப்பானிய அகத்திணை மரபுகள்: முனைவர் சிவ இளங்கோ, புலம்பெயர் தமிழர் கல்விப் புலத்தில் தொல்காப்பியத்தின் செல்வாக்கு: திருமதி க. லோககீதா, இயற்கை – தொல்காப்பியத்தை முன்னிலைப்படுத்திய ஆய்வு: கலாநிதி சாந்தி கேசவன், கணிதவியல் நோக்கில் தொல்காப்பியம்: செல்வி விவோகா, தொல்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகள்: திருமதி கலாதேவி அரியராசா, இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி: திரு. க. விக்னேஸ்வரன், தொல்காப்பியத்தில் பாலைத்திணையும் பாலைக்கலியில் காஞ்சித் திணையும்: மருத்துவர் துளசி விக்னேஸ்வரன், தெல்காப்பியத்தில் சிறுதானியம் தொலைந்துபோன அருந்தானியம்: மருத்துவர் வரதா கந்தசாமி, யப்பானிய மன்யோசு காதற்பாடல்களுக்கான கவிதைக்கோட்பாடு உருவாக்கம் தொல்காப்பிய பனுவலியல் பின்னணியிலிருந்து: திரு. நி. கனகராசு. 

Diachronic Analysis Of Sociative Case in Tamil: Dr. P. Chandramohan, Insights into the realm of Tholkppiyam: An Economic Perspective Through Expounding the Sangam Age: Dr. T. Chandramouli,

 தெல்காப்பியமும் தமிழ் நூற்காவலர்களும்: திருமதி சசிகலா ஜீவானந்தன், தொல்காப்பியம் முதல் கணினி வரை தமிழ் வரிவடிவம் - மாற்றம், சிக்கல், தீர்வு: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், கணினியில் தமிழ் மொழிச் சிதைவைத் தடுப்பதில் தொல்காப்பியத்தின் பயன்பாடு: திரு. சுகந்தன் வல்லிபுரம், நாட்டுபுறவியல் நோக்கில் தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும்: முனைவர் தே. இந்திரகுமாரி, தொல்காப்பியமும் அரச உருவாக்கமும்: திருமதி சடாச்சரி திருவாதனன், தொல்காப்பியமும் பிராகிருதமும் - ஒரு ஆய்வு: திரு. சிவபாலு தங்கராசா, தொல்காப்பியமும் கல்லாடனார் உரைச்சிறப்பும்: முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தொல்காப்பியர் கூறும் மரபுவழி மாண்புகள்: முனைவர் இரா.ச. குழந்தைவேலன், தொல்காப்பியத்தில் இலக்கியக் கோட்பாட்டுருவாக்கம்: திரு. தருமராசா அஜந்தகுமார், தொல்காப்பியத்திற்குப் புலியூர்க்கேசிகனாரின் உரைவளம்: திருமதி கலைச்செல்வி புலியூர்க்கேசிகன், தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடு – ஓர் ஆய்வு: முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு, தமிழின் உயிர் மற்றும் ஆய்த எழுத்துக்களிலுள்ள இயற்பியல்: முனைவர் நாகலிங்கம் சிவயோகன், தொல்காப்பியமும் தமிழ்மொழியின் செம்மொழித் தகைமையும்: திரு. இராச்குமார் குணரட்ணம், வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல், பொருள், (அகத்.புறத்.இயல்கள்) இளம்பூரனார் உரையின் பதிப்பாண்டு எது?: முனைவர் ஆறுமுகம் மணி, தொல்காப்பிய மரபு: முனைவர் மு. இளங்கோவன், தொல்காப்பியத்தில் இயற்கை உண்மைகள்: முனைவர் சம்பந்தம் ஏகாம்பரம், தொல்காப்பியம் சுட்டும் வண்ணமும் அருணகிரிநாதர் பாடல்களும்: முனைவர் கு. அகிலா, தொல்காப்பியமும் பாணினியமும்: திரு. திருவள்ளுவன் இலக்குவனார், தொல்காப்பியம் சுட்டும் பாவும் பொருண்மையும் - பாக்களின் வளர்ச்சியில் ஆசிரியப்பா: திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை, தொல்காப்பியம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்துவருவதற்குரிய காரணங்கள்: முனைவர் இல.சுந்தரம், மக்கள் பார்வை – தொல்காப்பியத்திலும் இன்றும்: முனைவர் த. சுந்தரராஜ், தொல்காப்பியத்தில் தொடரியல் கோட்பாடும் இன்று அதன் மாற்றமும் வளர்ச்சியும்: முனைவர் வாசுகி நகுலராஜா, தொல்காப்பியத்தில் மரபின் ஆட்சி: திரு. சண்முகராஜா சின்னத்தம்பி.    

இறுதியாக நான் குறிப்பிட விரும்புவது, பலம்பெயர்ந்த மண்ணில் இதுபோன்ற விழாக்கள் எடுப்பதன் மூலம் எமது தமிழ் மொழியைத் தக்க வைப்பது மட்டுமல்ல, எமது செம்மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொண்டு, தங்கள் புகலிட மண்ணில் பெருமையுடன் அவர்கள் வாழவும் இவை வழிவகுக்கும். எமது இலக்கியங்களை நாமே முன்னெடுத்துச் செல்வோம்!


Comments