கனடா – நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்
குரு அரவிந்தன்
கனடா – காங்கேசந்துறை நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற சனிக்கிழமை செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10 மணியளவில் கனடா ரொறன்ரோவில் உள்ள 1160, ராப்ஸ்கொட் வீதியில் உள்ள தமிழர் செந்தாமரை மண்டபத்தில் இடம் பெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் நடேஸ்வரக்கல்லூரியின் பழைய மாணவர்களும், சங்கத்தின் காப்பாளர்களுமான திரு. பி.விக்னேஸ்வரன், திரு. குரு அரவிந்தன், திருமதி ராஜி அரசரத்தினம், திரு. முரளிதரன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
முதலில் தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண், கல்லூரிக்கீதம், அகவணக்கம் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து மன்றத்தின் தலைவர் மார்க் நிர்மலன் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை ஆகியன இடம் பெற்றன. நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றபடி, கல்லூரியின் அவசரமான முக்கியமான தேவைகளுக்கு உதவி செய்வதற்கு பொதுச்சபை இணக்கம் தெரிவித்தது. அதேபோல கனிஸ்ட பாடசாலையின் முக்கிய தேவைகள் சிலவற்றைக் குறிப்பாகக் குடிநீர் வசதிகள் போன்றவற்றைச் செய்து கொடுப்பதையும் பொதுச்சபை ஏற்றுக் கொண்டது.
தொடர்ந்து காப்பாளர்களின் உரை இடம் பெற்றது.
இங்குள்ள புதிய தலைமுறையினருக்கு நடேஸ்வரக்கல்லூரியின் வரலாறு பற்றி அதிகம் தெரியாது என்பதால் குரு அரவிந்தன் அதைச் சுருக்கமாகக் குறிப்பிட்டார். ‘ஒரு காலத்தில் வலிகாமம் வடக்கில் மகாஜனக்கல்லூரி, யூனியன் கல்லூரிகள் போன்று பிரபலமாக இருந்த நடேஸ்வரக்கல்லூரி போர்ச்சூழல் காரணமாகவும், அதிபாதுகாப்பு வலயத்தில் இருந்ததாலும் கட்டாயமாக இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. குடிமக்களும் முற்றாக இடம் பெயர்ந்தார்கள்.
போர்க்காலத்தில் பல இடங்களுக்கும் இன்னல்களுக்கு மத்தியில் இடம் பெயர்ந்து, மீண்டும் பழைய இடமான கல்லூரி வீதிக்கே பாடசாலை வந்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்புதான் அப்பகுதியில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது. வீடுகளும், கோயில்களும் இடிக்கப்பட்டுத் தரைடமட்டமாக்கப்பட்டதால் குடிமனைகள் இருக்கவில்லை. அதனால் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதையே சாட்டாக வைத்துப் பாடசாலையை நிரந்தரமாக மூடிவிட முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனாலும் பழைய மாணவர்களும், அயலவர்களும் ஒன்று சேர்ந்து பாடசாலையை தொடர்ந்தும் நடத்த முடிவெடுத்தார்கள். அதன் பலன்தான் இன்று பாடசாலை அங்கு சிறப்பாக இயங்கத் தொடங்கி இருக்கின்றது. பாடசாலை விளையாட்டு மைதானமும் திருத்தப்பட்டு, அமரர் தனபாலசிங்கத்தின் பெயரில் பார்வையாளர் அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டு இருக்கின்றது. கல்விச் செல்வம் ஒன்றுதான் எம்மிடம் உள்ள நிரந்தரமான செல்வம் என்பதால், மீண்டும் கல்லூரி வழமைபோல இயங்குவதற்குப் பழைய மாணவர்களாகிய நாங்கள் எம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்’ என்று காப்பாளர் குரு அரவிந்தன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இருந்து ‘நடேஸ்வரக்கல்லூரி நம்பிக்கை நிதியக்குழுவில்’ அங்கம் வகிக்கும் திரு. ஏ. சிறிரங்கநாதன் மற்றும் எஸ். சிவசுப்ரமணியம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களா வந்து கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அரசு பாடசாலைக்கு நிதி தந்தாலும், அது போதாது என்பதை அவர்களும் சுட்டிக் காட்னார்கள். வருகை தந்தவர்களுக்கும், மண்டபத்தைத் தந்துதவிய ராஜி அரசரத்தினத்திற்கும் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment