ஆசிரியரைப் பற்றி..
குரு அரவிந்தன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளர். எட்டுச் சிறுகதை தொகுப்புகள், ஏழு நாவல்கள், ஓலிப்புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கதை, வசனம், சிறுவர் இலக்கியம் என இதுவரை நிறையவே படைத்திருக்கிறார். அவருடைய வாசக வட்டம் உலகளாவியது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வருடாந்த மலர்களில் இவருடைய புனைவுகள் பலதடவை வெளிவந்திருக்கின்றன. புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றிருக்கின்றன. தமிழர் தகவல் விருது, யுகமாயினி பரிசு, கலைமகள் பரிசு, உதயன் பரிசு, சி.டி.ஆர் வானொலி பரிசு, ஜனகன் பிக்சேஸ் விருது, விகடன் பரிசு போன்ற பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன், தற்செயலாக குரு அரவிந்தனின் மழலைப் பாடல் குறுந்தகடு கையில் கிடைக்கிறது. தமிழ் நாட்டின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தக் குறுந்தகடு பற்றி வியந்து எனக்கு எழுதியிருக்கிறார். கடும் உழைப்பின் பின்னால் இந்த மழலைப்பாடலை எழுதிக் குறும்தட்டாக வெளியிட்ட குரு அரவிந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நான் சிறுவனாய் வளர்ந்த கிராமத்தில் ஐஸ்கிரீம் அபூர்வமாக எப்போதாவது சாப்பிடக் கிடைக்கும். இதன் சுவையையும் சுகத்தையும் தாண்டி இது சாப்பிடும்போது ஒர் பதற்றம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் முடிந்துபோகும். சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்துவிடும். சுவை இன்பத்தை நீடிக்க முடியாது. அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும்.
குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்தபோது எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது. முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்துவிடும், ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பியிருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன. கனடாவில் குரு அரவிந்தன் இந்த வேகம் குறையாமல் இன்னும் பல வருடங்கள் அவர் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
அ. முத்துலிங்கம் - கனடா.
Comments
Post a Comment