https://www.youtube.com/watch?v=QiUcZMfmwQc&ab_channel=Thaiveedu
அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வாழ்வும், வரலாறும்.
குரு அரவிந்தன்
ஒருவரைப்பற்றி நினைவுகூரும் போது, அவர் பிறந்த நாளில் அதை செய்வதா அல்லது இறந்த நாளில் செய்வதா என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு. ஒருவர் சமூகத்திற்கு ஆற்றிய சேவை இனிக் கிடைக்காது என்பதால் மேலை நாடுகளிலும் அவர் இறந்த நாளையே இதுவரை காலமும் நினைவுகூரும் நாளாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவர் இப்படியான சேவைகளைச் சமூகத்திற்கு செய்வதற்கு அவர் இந்த மண்ணில் பிறந்ததுதானே காரணம், அதனால் அவர் பிறந்த நாளையே மகிழ்ச்சியோடு கொண்டாடுவது நல்லது என்று இன்னொருசாரார் கருத்தை முன் வைக்கிறார்கள். இன்னும் ஒரு காரணம் அவர் இறந்தது துக்கமான காரியம் என்பதால் ஏன் அவரது நினைவை துக்கமாகவே கொண்டாட வேண்டும் என்று கேட்பவர்களும் உண்டு. திடீரென ஒருநாள் வந்து ஒருவரை நினைவுகூருவோம் என்பது முக்கியமில்லை, அதற்குப் பதிலாக அவர் சமூகத்திற்கு விட்டுச் சென்ற சிறந்த பணியை எவ்வாறு நாங்கள் தொடர்கிறோம், அதைத் தொடர்வதற்கு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.
இதை நான் குறிப்பிடதற்குக் காரணம், மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் அவரது நினைவாக நடப்பட்ட கென்ரகி கொபி மரக்கன்று நிழலில் (முநவெரஉமல ஊழககநந வுசநந) நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று (4-9-1935) செப்ரெம்பர் 4 ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் அந்தத் தினம் நினைவு கூரப்படுகின்றது. இந்த டிசெம்பர் மாதம் (24-12-2014) அவர் மறைந்த மாதம் என்பதால், பத்து வருடங்கள் எவ்வளவு விரைவாக ஓடிவிட்டாலும், அவரது நினைவுகள் எம்முடன் தங்கி இருப்பதால் அவரைப் பற்றிய சுருக்கமான எழுதப்பட்ட ஒரு கட்டுரைதான் இது.
இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது சுட்டிக்காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு, அவர் தன்னலம் கருதாது ஆற்றிய பணிக்காகக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.
இந்த வருடம் ஏற்கனவே நடந்து முடிந்த நினைவுகூரும் நிகழ்வுபற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். இந்த நிகழ்வில் உரையாற்றும்படி என்னையும் அழைத்திருந்தார்கள். மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. க. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று கனடாவில் தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார். அடுத்து முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர் செ. சந்திரசேகரி, நெருங்கிய நண்பர் திரு. குமார் புனிதவேல், பழைய மாணவர்களான திரு. செல்வரத்தினம், திரு. முருகையா, திரு. க. முத்துலிங்கம், திரு. ஆர். ரவீந்திரன், திரு. குரு அரவிந்தன், மகன் மணிவண்ணன், மகள் மணிவிழி ஆகியோர் அவரைப் பற்றிய நினைவுரை ஆற்றினார்கள்.
குரு அரவிந்தன் தனது நினைவுரையில் அதிபரின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை எடுத்துரைத்தார். ‘1935 ஆம் ஆண்டு சண்டிலிப்பாயில் பிறந்த இவர், 1952 ஆண்டு ஸ்கந்தாவில் படித்து அதன்பின் உயர்கல்வியை திருச்சியிலும், சென்னையிலும் பெற்றார். அங்கு இவருக்கு விலங்கியல் பாடத்தில் ‘ஹோனேஸ் தங்கப்பதக்கம்’ கிடைத்தது. 1957 ஆம் ஆண்டு மகாஜனாவில் ஆசிரியராக இணைந்தார். 1970 ஏழாலை மகாவித்தியாலய அதிபராகவும், 1971 சோமஸ்கந்தா அதிபராகவும் பொறுப்பேற்றார் 1976 மகாஜனா அதிபராகப் பொறுப்பேற்றார். 1980 நைஜீரியாவுக்குப் பயணமானார். 1986 நைஜீரியாவில் இருந்து கனடா வந்தார். 1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் வகுப்பை நோர்த்யோக்கிலும், 1991 ஆம் ஆண்டு ‘கிரடிட்கோஸ்’ வகுப்புகளையும் ஆரம்பித்து வைத்தார். 1992 ஆம் ஆண்டு நோத்யோர்க்கில் 13 தமிழ் வகுப்புகளை ஆரம்பித்தார். 1994 நோத்யோர்க் கல்விச் சபைக்கான தமிழ் பாட நூல்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். 1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழா கொண்டாடப்பட்டது. 1998 ரொறன்ரோ கல்விச் சபையில் தெற்காசிய பல்கலாச்சார பிரிவின் பொறுப்பை ஏற்றார். 2010 ஆம் அ+ண்டு செம்மொழி மகாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். 2012 தனது ஐந்து நூல்களைச் சர்வதேச நாடுகளில் வெளியிட்டார். 2013 அதிபரைக் கௌரவிக்கும் முகமாக லான்ஸ்டவுனில் உள்ள தமிழ் கூட்டுறவு இல்லத்தினர் அங்குள்ள படிப்பகத்திற்கு ‘அதிபர் பொ. கனகசபாபதி நூலகம்’ என்று அதிபரின் பெயரைச் சூட்டியிருந்தனர். 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். 2015 ஆம் ஆண்டு மொன்றியல் மக்கள் நினைவஞ்சலி செலுத்திய போது மகாஜனாவின் சார்பில் இங்கிருந்து பலர் சென்று அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டோம். தமிழர் தகவல் விருது பெற்ற இவருக்கு, 2015 ஆம் ஆண்டு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து மதிப்பளித்திருந்தது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை அவரது பிள்ளைகள் பெற்றுக் கொண்டனர்.’ குரு அரவிந்தனின் உரையைத் தொடர்ந்து ரதி சாம்பவலிங்கத்தின் நன்றி உரையுடன் பிறந்த தினத்தில் நினைவுகூரும் நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.
அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பெயரில் நலன் விரும்பிகள் ஆரம்பித்து வைத்த நம்பிக்கைநிதியில் இருந்து அவரது துறையான விலங்கியல் துறையில் அதிக புள்ளிகள் எடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த, நிதி உதவி தேவைப்படும் தமிழ் மொழி மாணவர்களுக்கும், மகாஜனக்கல்லூரி மாணவருக்கும் நிதி உதவி செய்யும் திட்டம் முன் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப் படுவது பாராட்டப்பட வேண்டியது.
அதிபர் பல நூல்களை வெளியிட்டு இருந்தாலும், கடைசியாக இவர் ஆக்கியளித்த ‘எம்மை வாழ வைத்தவர்கள், ‘மரம் மாந்தர் மிருகம்’ என்ற நூல்கள் பலராலும் இன்றும் பேசப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழாவின் போது, ‘ஒரு அதிபரின் கூரிய பார்வை’ என்ற நூலும், 1998 இல் ‘பெற்றோர் பிள்ளைகள் உளவியல்’இ 2000 ஆண்டு மாறன் மணிக் கதைகள், 2008 ஆம் ஆண்டு மாறன் மணிக்கதைகள்-2, மனம் எங்கே போகிறது, திறவு கோல், ஆகிய, எங்கள் சமூகத்திற்குப் பலன்தரும் பல நூல்களும் இவரால் வெளியிடப்பட்டன. இதைவிட மகாஜனக்கல்லூரியின் மிகப் பெறுமதி மிக்க 100 ஆண்டு சிறப்புமலர் வெளியிட்டபோது, மலர்க்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அதிபர் அப்போது சர்வதேச இணைப்பாளராக இருந்து, பல பழைய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு சிறப்பாகச் செயற்பட்டார்.
அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் மறைந்த தினத்தை நினைவில் வைத்து வழமைபோல, பலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். அதிபர் மூலம் பலர் எனக்கு அறிமுகமானார்கள். குறிப்பாக தினமும் அவருடன் தொலைபேசியிலோ அல்லது நேரடியாகவே உரையாடிய டாக்டர் கதிர் துரைசிங்கம் குறிப்பிடப் படவேண்டியவர். மகாஜனக் கல்லூரியில் கதிர் அவரது முதலாவது மாணவன் மட்டுமல்ல, எனது அக்கா கௌரியைச் சம்பிரதாயமாகப் பெண்பார்க்க அவருடன் வந்த நண்பரும் ஆவர். நைஜீரியாவிலும் இவர்களின் நட்புத் தெடர்ந்தது. இதைவிட அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்வர்களில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், மகாஜனா க. முத்துலிங்கம் ஆகியோர் அடிக்கடி அவரை நலன் விசாரித்துக் கொள்வார்கள்.
திருமதி சிவஞானம், டாக்டர் கதிர் துரைசிங்கம், திரு. குமார் புனிதவேல், சிவபாலு மாஸ்டர், முனைவர் பார்வதி கந்தசாமி, சு. ராஜரட்ணம், அலக்ஸாந்தர் மாஸ்டர், செல்வா மாஸ்டர், ஞானம் லம்பேர்ட், ஜெசி, திரு எஸ். திருச்செல்வம், கவிஞர் கந்தவனம் மாஸ்டர், ஆர். என். லோகேந்திரலிங்கம், ஆர். ரவீந்திரன், டாக்டர்; செந்தில்மோகன் போன்ற கனேடிய சினேகிதர்கள் அவ்வப்போது வருகை தருவதால், அவரது வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். இவரது பூந்தோட்ட உதவியாளர் சின்னத்தம்பி மாஸ்டரும் குறிப்பிடப்பட வேண்டியவர். காங்கேசந்துறை குருவீதியில் எங்கள் வீட்டை அதிபர் எப்படி ஒரு அழகான பூங்காவாக வைத்திருந்தரோ, அப்படியே கனடாவிலும் வைத்திருந்தார். விலங்கியல் கற்றவர் எப்படி மரங்களைப் பற்றி எழுதலாம் என்றும், விஞ்ஞானம் படித்தவர் எப்படித் தமிழ் கற்பிக்கலாம் என்றும், நானும் இலங்கையில் அதிபராகத்தான் இருந்தேன், என்னைப் பார்த்தால் அதிபராகத் தெரியவில்லையா என்றும் தங்கள் அறியாமையால் கேட்டவர்களும் இங்கே கனடாவில்தான் இருக்கிறார்கள்.
பூந்தோட்டத்தில் மட்டுமல்ல, அதிபர் ஒரு உணவுப் பிரியருமாவார், அதனால் இவர்கள் எல்லோரும் வரும் போது எதாவது சிற்றுண்டி கொண்டு வருவார்கள். இனிப்புப் பண்டம் என்றால் ஒன்றுக்கு மேல் சாப்பிட அவரது பிள்ளைகள் விடமாட்டார்கள். அதனால் ‘இங்கே இருந்தால் சாப்பிட்டு முடித்துவிடுவார், மாமி நீங்க கொண்டு போங்கள்’ என்று பிள்ளைகள் எனது மனைவியிடம் அதை அப்படியே கொடுத்து விடுவார்கள். எங்களுக்கும் அதில் பங்கு கிடைக்கும். உப்புக் காணாது என்றால், எதையும் மறைக்காது முகத்திற்கு நேரே நேரடியாகவே சொல்லிவிடுவார். அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அதைக் குறையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரைப் பிரிந்து பத்து வருடங்கள் எவ்வளவு விரைவாக ஓடிவிட்டன என்பதை இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், எமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகள் தொடங்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்து அதை நடைமுறைப் படுத்தியும் காட்டினார்.
அதிபரின் தந்தையும், எனது தாயாரும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த உறவினர்கள் என்பதால் அவரைச் சின்ன வயதில் இருந்தே எனக்குத் தெரியும். எங்கள் தந்தையை நான் மாணவப் பருவத்தில் இருக்கும் போதே இழந்து விட்டதால், எனது மூத்த சகோதரி கௌரி என்மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரும் உயர்கல்வியை திருச்சி கொன்வென்ரில் பெற்றிருந்தார். அக்கா கௌரியின் கணவராக எனக்கு அத்தானாக இவர் காங்கேசந்துறை, குரு வீதியில் உள்ள எங்கள் வீட்டிற்கு முதன் முதலாக வந்த போது, எப்படிப் பட்டவரோ என்று இவரிடம் மதிப்புக் கலந்த ஒருவித பயம் எனக்கிருந்தது. புரிந்துனர்வுள்ளவராக அத்தான் இருந்ததால் அவர் மீது இருந்த பயம் தானாவே போயிவிட்டது. எங்கள் தந்தையாரும் நடேஸ்வராக்கல்லூரி கனிஸ்டபாடசாலை அதிபராக இருந்ததால், எங்களின் வீட்டை அதிபரின் வீடு என்றுதான் அழைப்பார்கள். அந்த வழக்கம் இவர் வந்ததும் அப்படியே தொடர்ந்தது, எங்கள் படிப்பு முதற்கொண்டு எங்கள் திருமணம் வரை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். இவரது பிள்ளைகளான அப்பு, நணா, பிள்ளை, தேனு ஆகிய நால்வரும் குருவீதி வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார்கள். மணிவண்ணன், மணிமாறன் மகாஜனாவின் பழைய மாணவர்கள். புலம் பெயர்ந்த இந்த மண்ணிலும் கடைசிவரை எங்கள் உறவுப்பாலத்தை இவர் கட்டிக்காத்தார். எங்கள் குடும்பத்தில் மூத்தவராகையால் அவரது வீட்டில் நெருங்கிய உறவினர், நண்பர்கள்; எல்லோரும் ஆங்கிலப் புதுவருடம் பிறப்பதற்கு முன்பு 31 ஆம் திகதி சந்தித்து இரவு விருந்துண்டு அவரிடம் ஆசி பெறுவோம். அவருடைய மறைவால், அந்தப் பாக்கியம்; இப்போது எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது.
இவர் யாழ்ப்பாணம், நெல்லியடி போன்ற இடங்களில் தனியார் வகுப்புகளை எடுத்ததால் பல மாணவர்களும் அறிமுகமானார்கள். வார இறுதிநாட்களில் உயர்வகுப்பு மாணவர்கள் பலர் கூட்டமாக வீட்டிற்கு வருவதால், அக்கா கௌரியின் விருந்தோம்பல் காரணமாக வீடு கலகலப்பாக இருக்கும். குறிப்பாக சுபாஸ், அப்பு (மகாஜனா), கணநாதன், அதிபர் ஜெயரத்தினத்தின் மகன் குமார், ஆறுமுக மாஸ்ரரின் மகன் ரோசா, இ. எம். குமார், பத்மநாதன், சண்முகலிங்கன், தனபாலசிங்கம் மாஸ்டர், சாரதா, அனுசூயா, கோகிலா, மலர்விழி, சசிகலா, டாக்டர் சிவசுப்ரமணியம், மற்று ஆசிரியர்களான திரு, திருமதி சுந்தரராஜன், முருகையா மாஸ்டர், ஆறுமுகராஜா மாஸ்டர் (எனக்குத் தமிழறிவு ஊட்டியவர்), ஆசிரியர் சுந்தரமூர்த்தி ஐயர், ஆறுமுகம் மாஸ்டர், தியாகராஜா மாஸ்டர், கன்ரீன் சங்கரப்பிள்ளை போன்றவர்களின் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றது.
அதிபர் எங்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக இருந்தார். இன்று கனடிய மண்ணில் தமிழ் மொழி தொடர்ந்தும் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். ஆரம்பகாலத்தில் இவரைப் போன்ற ஒரு சிலர் தன்னலம் கருதாது எடுத்த முயற்சியால்தான், எங்கள் தமிழ் மொழி மட்டுமல்ல, பண்பாடு, காலச்சாரமும் இந்த மண்ணில் இன்று நிலைத்து நிற்கின்றது. ‘கனடாத் தமிழரது வரலாற்றுத் தொடக்கத்தில் தமிழரது வாழ்வின் வடிவமைப்பில் ஆளுமை செலுத்திய சிற்பி இவர்’ என்று சான்றேரால் தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்யப்பட்டவர். இவர் நடுவழியில் எங்களைவிட்டுச் செல்லவில்லை. எங்களைத் தயார்படுத்தி விட்டுத்தான் பிரிந்தார். பலர் என்னிடம் கேட்டுக் கொண்டதால், இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். அவர் காட்டிய வழியைத் தொடர்வோம். தமிழர் என்ற ஒரு இனமாய், யாவரும் போற்றும் வண்ணம், எங்களை வாழவைத்த நாட்டையும் மதித்து, இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நிற்போம்.
Comments
Post a Comment