குரு அரவிந்தனின் சிறுகதைகள் - பகுப்புமுறைத் திறனாய்வு
முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா
(முதல் பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை)
குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.
குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை ஒன்றை முதன் முதலில் சிறுகதைகளுக்காக திறக்கப்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) குழுமம் ஒன்றிலேயே காணக் கிடைத்தது. அன்றிலிருந்து குரு அரவிந்தன் அவர்களுடைய சிஷ்யாய் அவருடைய சிறுகதைகளை தேடித் தேடி வாசிப்பதில் நேரத்தை செலவிட்டேன். அவர் கதையை தொடங்கியிருக்கும் பாங்கும் அதன் முடிவில் வைத்திருக்கும் எதிர்பாரா திருப்பமும் என்னை மிகவும் ஈர்த்தது. அனேகமான கதைகள் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்திச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆசிரியரின் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நான் மாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்தளவுக்கு அவரின் படைப்புக்கள் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின என்பதை மறுதலிக்க முடியாது. குரு அரவிந்தன் அவர்களினுடைய 'அப்பாவின் கண்ணம்மா' சிறுகதையானது என்னை மிகவும் ஈர்த்த ஒரு படைப்பாகும்.
அந்த வகையில் நான் எழுத விழைந்த இக்கட்டுரையின் பிரதான நோக்கம் குரு அரவிந்தன் அவர்களினுடைய ஏதேனும் ஒரு இலக்கியத்தில் உள்ள படைப்புக்களை பகுப்புமுறை அடிப்படையில் அலசுவதாகும். அதற்காக நான் சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குரு அரவிந்தன் அவர்களினுடைய தமிழ்ப் புலமையை பகுப்பாய்வு செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் அதில் தவறுகளை காணவே முடியாத அளவுக்கு அவரின் கற்பனை மற்றும் சொல்லாடல் திறன் பரந்து விரிந்து இருப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு கதையின் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் யதார்த்த மற்றும் கற்பனை விடயங்களை ஒரு ரசிகையாய் தானும் கற்றுக் கொள்ள முனைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் செதுக்கப்பட்ட “புதிய வெளிச்சம் தெரிகிறது, முகநூல் காதல், யார் குழந்தை, ஆசை முகம் மறந்து போமோ?” ஆகிய நான்கு சிறுகதைகளும் பகுப்பு முறைத் திறனாய்வு அடிப்படையில் இக்கட்டுரையில் நோக்கப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளில் ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக்கருத்து, கதையில் ஆசிரியர் பயன்படுத்திய மொழிநடைஃஉத்திகள், கதையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரப்படைப்பு, கதையின் சிறப்பம்சங்கள் என்பன ஒவ்வொரு கதையைக் கொண்டு தனித்தனியாக ஆராயப்படுகின்றன.
புதிய வெளிச்சம் தெரிகிறது
குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதைகளிலேயே புதிய வெளிச்சம் தெரிகிறது என்ற சிறுகதையானது ஒரு மைல்கல் என்று கூறுவதே பொருத்தமானது. அந்தளவுக்கு பல சிறப்பம்சங்களை ஆசிரியர் கதையினுள் கையாண்டிருக்கிறார்.
ழூ ஈழ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு நேர்ந்த துன்பங்களும் பின்னர் எவ்வாறு மன உறுதியோடு தனது வாழ்க்கையை வாழத் துடிக்கிறாள் என்பதுமே கதையின் கருவாக அமைந்துள்ளது.
ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக் கருத்து :-
இலங்கையில் ஏற்பட்ட முப்பது வருட கால யுத்தத்தின் போதும் பின்னரும் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்கள் மற்றும் அவலங்களை கச்சிதமாக ஆசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார். யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள், சேதங்கள் என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளதோடு மனிதன் மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், மரஞ் செடி கொடிகள் உட்பட இயற்கை சூழல் முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருந்ததை துல்லியமாக விளக்கி நிற்கிறார்.
முக்கியமாக இக்கதையில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் அவசியம் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தை வாசகர் மனதில் உறுதியாக ஊட்டியிருக்கிறார். அடுத்த தலைமுறையினர் கல்வியின் மூலம் சிறக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எதிர்பார்ப்பு இக்கதையில் தெளிவுற விளங்குகிறது.
ஆசிரியர்களின் குறைகள் மற்றும் அவர்களின் மனக்குமுறல்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் ஆழ்மனதில் கிடக்கும் சொல்ல முடியாத துன்பங்கள் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கதாசிரியரின் ஆதங்கம் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர்கள் மற்றும் தமிழ்ச் சமுதாயம் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இருக்காமல் அவர்களுக்கும் சமூகத்தில் சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கதாசிரியரின் அவா ஏங்கி நிற்கிறது.
பாத்திரப் படைப்பு :-
இக்கதையில் பெயர் குறிப்பிடப்படாத இளம் பெண் கதை முழுவதும் ஆட்சி செய்திருக்கிறார். இப்பாத்திரம் உயிரோட்டமுள்ளதாக படைக்கப்பட்டிருப்பது கதைக்கு உயிர் சேர்க்கிறது.
மொழிநடைஃஉத்தி :-
ஆசிரியர் கதையில் எளிய மொழிநடையை உபயோகித்திருப்பதோடு கதையின் பிரதான கதாபாத்திரமான இளம் பெண் வாசகர்களுடன் நேரடியாக நின்று கதைப்பது போன்றதொரு பாங்கை பயன்படுத்தியிருக்கிறார்.
மேலும் யாழ்ப்பாண பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் உபயோகித்திருப்பது கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. “எத்தனை இழப்புக்களை அவாவும் சந்தித்திருப்பா?”
உவமானம், உவமேயம் மற்றும் வர்ணனை மூலம் கதையை சிறப்புற நகர்த்தியிருப்பதோடு சுற்றுச்சூழல் பற்றிய வர்ணனையையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் கதைக்கும் தலைப்புக்குமான பொருத்தப்பாடு நிரம்ப பொருந்தியிருக்கிறது. யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை புதிய வெளிச்சம் தெரிகிறது எனக் கூறியிருப்பது இதன் பொருத்தப்பாட்டை பூரணப்படுத்துகிறது.
சிறப்பம்சம் :-
இச்சிறுகதையின் மூலம் பல படிப்பினைகளையும் தத்துவங்களையும் வெளிப்படுத்தி வாசகர்களை சிந்திக்கத் தூண்டியிருப்பது சிறப்புக்குரியது. மேலும் கதையின் மூலம் தமிழர்களின் நற்பண்புகள் விபரிக்கப்பட்டுள்ளதோடு தமிழ்ப் பெண்களின் வீரம், தளராத தன்மை, சொந்தக் காலில் நிற்கும் வைராக்கியம் என்பன அழுத்தமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இச்சிறுகதையானது நட்பியல் சார்ந்த புனை கதை வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பை மெருகூட்டுகிறது.
இச்சிறுகதையில் குரு அரவிந்தன் அவர்கள் பயன்படுத்திய கீழ்வரும் வரிகள் என்றும் என் நெஞ்சை விட்டு அகலாது வேரூன்றிய வார்த்தைகளாகும்.
“விழுந்தாலும் நாங்களும் எழுந்து நிற்போம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற மன வைராக்கியம் எனக்குள் இருந்தது.”
முகநூல் காதல்
ழூ முகநூலால் பெண் ஒருவருக்கு கிடைக்கும் ஆணின் நட்பும் முடிவில் இருவருக்கும் காத்திருக்கும் பேரதிர்ச்சியும் இக்கதையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக் கருத்து :-
தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களின் இலகு தன்மை அதேபோல அவற்றினால் ஏற்படும் இடர்பாடுகள் என்பன பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதே போல் முகநூலினால் தற்காலத்தில் ஏற்படும் தொடர்புகள் மற்றும் ஒருவருக்கொருவர் ஏமாற்றும், ஏமாறும் தன்மைகள் இதன் மையக் கருவாக இருக்கும்படி கதாசிரியர் கதையை நகர்த்தியுள்ளார்.
மேலும் அறைக்குள் இருந்தபடியே அகிலத்தை வலம் வர முடியும் என்பதோடு முன்னைய காலத்திற்கும் தற்கால நவீன பரிணாம வளர்ச்சிக் காலத்திற்குமிடையிலுள்ள பாரிய வித்தியாசத்தையும் காட்ட முனைந்துள்ளார்.
பாத்திரப்படைப்பு:-
இச்சிறுகதையில் வரும் உமா, திரு ஆகிய இரு பிரதான பாத்திரங்களும் தமிழில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும் திரைப்படங்கள் மற்றும் சினிமாவை அதிகம் விரும்பக்கூடியவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு தமது எண்ணங்களை வெளிப்படையாக பேசாதவர்களாகவும் கதாசிரியர் வடிவமைத்துள்ளார்.
கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பிரதான பாத்திரங்கள் உயிரோட்டமுடையதாய் நகர்ந்துள்ளமை சிறப்புக்குரியதாகிறது.
மொழிநடைஃஉத்தி :-
எல்லோருக்கும் புரியும்படி எளிய மொழிநடையிலான இலகு தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கதைக்கும் தலைப்புக்கும் இடையிலான பொருத்தப்பாடு சிறப்புற பொருந்தியிருக்கிறது.
பேச்சு வழக்குச் சொற்களுடன் கூடிய ஒரு நடை இழையோடப்பட்டுள்ளது.
இறுதியில் நகைச்சுவை உணர்வு மிக்கதாக கதையை ஆசிரியர் நிறைவு செய்துள்ளமை கதைக்கு வலு சேர்க்கிறது.
சிறப்பம்சம் :-
இச்சிறுகதையானது தற்கால சமூகத்தில் நடக்கும் யதார்த்தத்தினை வெளிப்படுத்தியிருப்பதோடு கதையானது எதிர்பாராத திருப்புமுனையுடன் முடிவடைந்திருப்பது வாசகர்களை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அத்தோடு தற்கால தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்ற படிப்பினையையும் ஆசிரியர் குறிப்பிட முனைவதோடு அழகிய காதல் உணர்வு ஒன்று மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டும் இருப்பது இதன் சிறப்பம்சங்களாகும்.
யார் குழந்தை
பணத் தேவைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு ஆண் அங்கு ஏற்படும் தவறுதலான ஒரு சூழ்நிலையால் ஒரு குழந்தைக்கு அப்பா என்ற பொய் வலைக்குள் சிக்குண்டு தவிப்பதும் பின்னர் அதிலிருந்து விடுபட தான் நிரபராதி என போராடுவதும் இறுதியில் அவருக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சியுமே இச்சிறுகதையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக்கருத்து :-
பணத்திற்காகவும் குடும்ப வருமானத்திற்காகவும் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் செல்லும் ஆண்களின் அவல நிலை எடுத்துக்காட்டப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு வாழ்க்கையால் ஒரு ஆண் தனது குடும்பம், மனைவி, பிள்ளைகள், சந்தோஷம் என அனைத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதையும் ஆசிரியர் இக்கதையின் மூலம் கூற விழைந்துள்ளார்.
மேலும் நவீன விஞ்ஞானத்தின் அல்லது அறிவியலின் வளர்ச்சி பெருமளவில் மனிதர்களுக்கு நன்மை தரக்கூடியது என்ற கருத்தையும் விளக்குவதோடு அரபு நாடுகளில் இருக்கும் கடுமையான சட்ட திட்டங்களையும் அவை மீறப்படும் பட்சத்தில் கிடைக்கும் தண்டனைகளையும் கதாசிரியர் தெளிவுற விரிவுபடுத்தி இருக்கிறார்.
பாத்திரப்படைப்பு :-
இச்சிறுகதையில் வரும் பிரதான பாத்திரமான வெளிநாட்டில் வேலை செய்கின்ற ஒரு ஆண் தான் வேலை செய்யும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிப்பவராகவும் தன்னுடைய கஷ்டங்களை பாராமல் ஏனையோருக்கு உதவுபவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மனிதநேயமிக்கவராகவும் தன் மனசாட்சிக்கு உண்மையாக நடப்பவராகவும் இப்பாத்திரம் அமைந்திருப்பதோடு தன் மனைவிக்கு உண்மையாக இருப்பவராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதான கதாபாத்திரத்தின் மனைவி தன் கணவனுக்கு துரோகம் செய்தவளாகவும் தன் கணவனின் நண்பருடன் தகாத உறவில் ஈடுபட்டு கணவனின் நட்புக்கும் களங்கம் செய்தவளாகவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும் கணவனிடம் பொய் அன்பை காட்டுபவளாகவும் பெற்றோர் நிச்சயம் செய்த திருமணம் ஆகையால் கணவனுடன் புரிந்துணர்வு இல்லாதவளாகவும் காணப்படுகிறாள்.
மொழிநடைஃஉத்தி :-
கதை ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை பிரதான பாத்திரம் நகர்ந்துள்ளதோடு கதையின் இடையிடையே பிரதான பாத்திரம் வாசகர்களோடு நேரடியாக கதைப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதையின் இறுதியில் வினா எழுப்பி வாசகர்களை சிந்திக்கத் தூண்டியிருப்பதோடு அதற்குரிய விடையை வாசகர்களிடமே கேட்டு கதையை நிறைவு செய்திருப்பதும் இச்சிறுகதையில் ஆசிரியர் கையாண்ட உத்திகளாகும்.
வினா போன்றதொரு அமைப்பில் கதைக்குரிய தலைப்பை ஆசிரியர் தேர்வு செய்துள்ளதோடு பேச்சு வழக்குச் சொற்களும் உரையாடல்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
சிறப்பம்சம் :-
கதையின் இறுதியில் எதிர்பாராத திருப்பத்தை வைத்துள்ளதோடு சுவாரஷ்யமான வியக்க வைக்கும் முடிவாகவும் கதை அமையப்பெற்றுள்ளது. அத்தோடு வெளிநாட்டு வாழ்க்கைக்குள்ளும் வெளிப்படும் அழகிய மனிதநேயம் மற்றும் தன்னுடைய இன்னல்களை பெரிதாக கருதாமல் ஏனையோருக்கு உதவி செய்யும் மனப்பாங்கும் கதையின் சிறப்பம்சங்கள் ஆகும்.
ஆசை முகம் மறந்து போமோ?
காதல் தோல்வியினால் மனமுடைந்து போன ஒரு பெண் பல அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் எவ்வாறு திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறாள் என்பதே கதையின் பிரதான அம்சமாகும்.
ஆசிரியர் கூற விழையும் கருத்துஃமையக்கருத்து:-
கடந்த கால வாழ்க்கையை எண்ணி கவலைப்படாது தன் நிகழ்கால வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதையும் கிடைக்காத ஒன்றை நினைத்து வருந்தாமல் இருப்பதை வைத்து வாழ்க்கையை அழகாக்க வேண்டும் என்ற படிப்பினையையும் ஆசிரியர் இச்சிறுகதையினூடாக எடுத்துக்காட்டியுள்ளார்.
அத்தோடு இழந்து போன காதலை நினைத்து கண்ணீர் வடிக்காமல் எதிலும் நன்மை உண்டு என்றெண்ணி திருமணம் செய்து மனநிறைவுடன் வாழ்வதோடு எம் வாழ்க்கையில் அடுத்தவர்களின் தலையீட்டை தவிர்த்து தன் மனம் நினைத்ததை செய்வதே சிறப்பு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாத்திரப் படைப்பு :-
இளம்பெண் - தன் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவளாகவும் தனக்கு கிடைத்த வாழ்க்கையை அங்கீகரித்தவளாகவும் இச்சிறுகதையில் வரும் இளம் பெண் காட்டப்பட்டுள்ளார்.
தனது திருமணத்திற்கு முன்னர் தனது காதல் மீதும் காதலன் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவளாக காட்டப்பட்டுள்ளதோடு காதல் தோல்விக்கு பின்னர் காதலன் மீது அதீத வெறுப்பு கொண்டவளாகவும் இப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காதல் தோல்வியினால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததோடு அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கை உடையவளாகவும் இப்பெண் காட்டப்பட்டுள்ளார்.
துணைப் பாத்திரம் :-
சிறுகதையில் வரும் பிரதான பாத்திரமான இளம் பெண்ணின் கணவரான இவர் அனைத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்பவராகவும் மனைவியின் கடந்த கால மற்றும் நிகழ்கால உணர்வுகளை புரிந்து கொள்பவராகவும் கடந்த காலத்தை பற்றி அலட்டிக் கொள்ளாதவராகவும் செதுக்கப்பட்டுள்ளார்.
மொழிநடைஃஉத்தி :-
சிறுகதையில் கதாசிரியர் பிரதானமாக பாரதியாரினுடைய அதிக கவிதை வரிகளை பயன்படுத்தியுள்ளார். “நேச மறக்கவில்லை நெஞ்சம்- எனில் நினைவு முக மறக்கலாமோ?”
கதையின் தலைப்பை கதைக்குள்ளேயே இருந்து தெரிவு செய்திருப்பதோடு கதையின் தலைப்பை வினா அமைப்பில் சூட்டியிருப்பது பொருத்தமாகிறது.
கதையின் அதிகமான பகுதிகள் வாசகர்களுடன் உரையாடுவது போன்று காட்டப்பட்டுள்ளதோடு உவமான உவமேயங்கள் மற்றும் சூழல் பற்றிய வர்ணனைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பம்சம் :-
தற்கால சமூகத்தில் அதிகமாக நடக்கும் பிரச்சினைகளில் ஒன்றை இக்கதை வெளிப்படுத்தியுள்ளதுடன் படிப்பினை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.
நேர் எண்ணங்களைக் கொண்ட பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டமை இக்கதைக்கு உயிர் சேர்க்கிறது.
மேலும் இச்சிறுகதை ஒரு புத்துணர்வை ஊட்டுவதாகவும் புதிய வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் எழுதப்பட்டுள்ளமை சிறப்புக்குரியது.
மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளும் பிரதான பகுப்பு முறைக் கூறுகளை கொண்டு தனித்தனியாக திறனாய்வு செய்யப்பட்டுள்ளதோடு இக்கதைகளில் காணப்படும் பொதுவான சில அம்சங்களும் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அலசுவதன் மூலம் குரு அரவிந்தன் அவர்களுடைய இலக்கிய அன்பை, இலக்கியத் தொண்டை அளவிடக் கூடியதாக இருக்கும்.
ஒரு சிறுகதையின் அமைப்பானது பொதுவாக 05 பக்கங்கள் தொடக்கம் 07 பக்கங்களுக்குள் உள்ளடக்கப்பட்டு விடக் கூடியதாக இருக்கும். அல்லது அரைமணியில் இருந்து முக்கால் மணி நேரத்துக்குள் ஒரே மூச்சில் படித்து விடக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் மேற்குறித்த நான்கு சிறுகதைகளிலும் கதாசிரியர் தேவையற்றஃ வேண்டா கருத்துக்கள், உரையாடல்களை நீக்கி கதைக் கருவுக்கு ஏற்ற வகையில் கதையின் அளவை வடிவமைத்திருப்பது அருமை. இது ஒரு சிறுகதைக்கே உரிய பண்பாகும்.
குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைகள் எளிய கருப்பொருளை கருவாகக் கொண்டவை. தனிநபர், குடும்பம், சமூகம், சூழல் சார் விடயங்களைக் கொண்டு அவை அமைக்கப்பட்டிருப்பதோடு “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற சித்தாந்தத்திக்கேற்ப நவீன விடயங்களை கதையில் உள்வாங்கியிருப்பது சிறப்புக்குரியது. அதற்காக அவர் பழமையை மறந்து விடவுமில்லை. அதையும் கச்சிதமாக தேவையான இடங்களில் பிரயோகித்திருக்கிறார்.
இவருடைய சிறுகதைகளில் வாழ்க்கையோடு ஒன்றித்துப் போகும் பல விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. யதார்த்த மற்றும் நடைமுறை ரீதியிலான விடயங்கள் உள்ளடங்குமாறு ஒவ்வொரு கதையும் சிறப்பாக ஆக்கப்பட்டுள்ளன.
கதைக்குப் பின்னேயுள்ள கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் சொல்ல விரும்பும் செய்தி என்பன தெட்டத் தெளிவாக விளங்குகிறது.
சுருக்கமாகவும் செறிவாகவும் ஒரே மூச்சில் படித்து விடக் கூடியதாகவும் தன்னளவில் முழுமை பெற்றதாகவும் வாசகரின் புலன் முழுவதும் கதையின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டதாகவும் இருக்கும் வகையில் ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார்.
குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை சொல்லாட்சியானது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்து வைத்திருக்கும் தன்மை கொண்டதாக இருப்பதுடன் இடையில் சோர்வோ, தொய்வோ, சலனமோ இல்லாத வகையில் அமையப் பெற்றிருப்பது அவர் இலக்கிய உலகில் காட்டும் அதீத அக்கறைக்கு சான்றாகிறது.
இவருடைய சிறுகதைகள் ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கையை பற்றியோ அல்லது ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லது ஒரு தனி உணர்ச்சி பற்றியோ எடுத்து கூறுவதாக காணப்படுகின்றன.
சிறுகதைகள் முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப்பெறுதல் வேண்டும். கதையின் தொடக்கத்தில் எந்த உணர்வு காட்டப்படுகிறதோ அதே உணர்வு இடையிலும் முடிவிலும் வளர்ந்து முற்றுப் பெற வேண்டும். இதை உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு (Unity of Impression) என்று குறிப்பிடுவார்கள் திறனாய்வாளர்கள். இப்போக்கு குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகளில் காணப்படுவது மனதுக்கு இதமளிக்கிறது.
குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகளில், கதைத் தலைப்பிலிருந்தே கதையின் உட்பொருளை உணரக்கூடியதாகவும் கதைகளை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதாகவும் தலைப்புகள் அமையப் பெற்றிருக்கின்றன.
இவரின் அனேகமான கதையின் தலைப்புக்கள் கூறும் பொருளை வைத்து அமைந்த தலைப்புக்களாகவும் (முகநூல் காதல், ஆசை முகம் மறந்து போமோ?) முடிவை வைத்து அமைந்த தலைப்புக்களாகவும் (யார் குழந்தை, புதிய வெளிச்சம் தெரிகிறது) காணப்படுகின்றன.
குரு அரவிந்தன் அவர்களுடைய படைப்புக்கள் மற்றொரு படைப்பாளியிடமிருந்து தனித்து இனங்காணப்படுவதற்கான பிரதான காரணம் அவர் கையாளும் மொழிநடை உத்தி அல்லது படைப்பாக்க உத்தியாகும். அந்த வகையில் இவருடைய சிறுகதை நடையானது குரு அரவிந்தன் அவருக்கே உரித்தான தனித்த வெளிப்பாடாகும்.
பாத்திரங்கள் இல்லாத கதைகள் இருக்கவே முடியாது. பாத்திரங்கள் தான் சிறுகதையின் அடிப்படை. அந்த வகையில் குரு அரவிந்தன் அவர்களினுடைய கதைகளில் வரும் பாத்திரங்கள் அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை முறைகளுமே பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இப்பாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு புறம்பாக எந்த ஒரு பாத்திரமும் கதையில் காணப்படவில்லை என்பது சிறப்புக்குரியது.
பெயின் என்ற திறனாய்வாளர் "ஒரு கதை இன்பியல் முடிவினாலோ அல்லது துன்பியல் முடிவினாலோ அழகு பெற்றுவிடாது. இவற்றுள் எது சரியான, பொருத்தமான முடிவாக உணரப்படுமோ அத்தகைய முடிவால் தான் அக்கதை வெற்றி பெற முடியும் என்கிறார்." இதுபோன்றே குரு அரவிந்தன் அவர்கள் கதைக்கு ஏற்றாற் போல வாசகர் மனமறிந்து கதையை நிறைவு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாது கதையின் நிறைவில் எதிர்பாராத திருப்பத்தை (Twist) வைத்து படிப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது வாழ்த்துக்குரியது.
தன்னுடைய கதைகளில் தன் தாய் மண்ணின் வாசனையையும் சூழல் வர்ணனைகளையும் மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
மேற்கூறப்பட்டவைகள் தெரிவுசெய்த நான்கு கதைகளில் மட்டும் காணப்படும் பண்புகள் அல்ல. குரு அரவிந்தன் அவர்கள் தன்னுடைய அனைத்து சிறுகதைகளையும் இவ்வாறான பண்புகளைக் கொண்டே செதுக்கியுள்ளமை அவரின் புலமையை அறைகூவல் விடுப்பதாய் உள்ளது.
அத்தோடு இவருடைய சிறுகதைகளில் எவ்வாறு ஒரு சிறுகதைக்குரிய பண்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோ அதேபோல நான் அவதானித்த சில எதிர்மறையான கருத்துக்களையும் இங்கு எழுத முனைகிறேன்.
இவரின் சிறுகதைகளை உற்று நோக்கினால் கதையின் முடிவில் வரும் எதிர்பாராத் திருப்புமுனையை கதையின் நடுவில் அல்லது ஆரம்பத்திலேயே மறைமுகமாக கொடுத்திருப்பார். சில இடங்களில் வாசகர்கள் இதனை உணரக்கூடியதாக இருப்பதுடன் கதையின் முடிவில் வரும் எதிர்பாராத் திருப்பத்தை மங்கி விடச் செய்யும் ஒன்றாகவும் இது காணப்படுகிறது. இதற்கு 'யார் குழந்தை, முகநூல் காதல்" ஆகிய கதைகள் சாட்சியமளிக்கின்றன.
சிறுகதை என்பது வாசிக்கும் அனைவரையும் தன் உணர்வுகளுக்குள் கட்டுப்பட வைப்பதாக அமைதல் வேண்டும். இவருடைய கதைகளில் அதிகம் பிறந்த மண்ணின் பண்புகள்ஃ நடைமுறைகள் காணப்படுவதால் ஏனைய பிரதேசத்தவர்கள் இக்கதைக்குள் எந்தளவு தூரம் பயணிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.
மேலும் குரு அரவிந்தன் அவர்களினுடைய அநேக கதைகள் இலக்கண வடிவிலே அமைந்திருப்பதோடு கதைத் தலைப்புக்கள் அதிகமாக கதையின் மையக் கருத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் குறியீட்டு முறையான தலைப்புக்களை காண்பது அரிதாக உள்ளது.
அத்தோடு இவருடைய பாத்திரப்படைப்புக்கள் அகிம்சை வழியில் இருப்பதோடு புரட்சிகரமான, துணிகரமான பாத்திரங்களாக படைக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
எது எவ்வாறாயினும் குரு அரவிந்தன் எனும் ஒரு பொக்கிஷம் தன்னுடைய ஆழ்ந்த அறிவாலும் அர்ப்பணிப்பாலும் இலக்கிய உலகை அலங்கரித்துக் கொண்டிருப்பது எமக்கு இறைவன் அளித்த ஒரு வரமே.
குரு அரவிந்தன் அவர்களினுடைய இன்னும் பல இலக்கியங்கள் வெளிவந்து தமிழ் பேசும் மக்களுக்கு அமிர்தம் அளிக்கவேண்டும் என்பதோடு இவரின் புலம்பெயர் இலக்கியங்கள் திறனாய்வு செய்யப்படவும் வேண்டும் என்பதே எனது ஆழ்ந்த அவா.
குரு அரவிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
உசாத்துணைகள் :-
https://www.valaitamil.com/literature_short-story_guru-aravinthan/
https://www.sirukathaigal.com/
Comments
Post a Comment