Story - இரவில் தெரியும் சூரியன்

 




இரவில் தெரியும் சூரியன்
 குரு அரவிந்தன்
‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.
கோவிட் - 19 முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட தைரியத்தில், ‘போனால் என்ன’ என்று உள்மனசு தவித்தது. மூடியிருந்த அமெரிக்க – கனடிய எல்லை திறந்ததால் கனடியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்ற அறிவிப்பும் அப்போதுதான் வந்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் அலஸ்காதான் என்பதால் அதைப்பற்றி அறிந்து கொள்ளக் கணனியில் தேடிப்பார்த்தேன். கனடாவின் வடமேற்குப் பகுதியில்தான் அலாஸ்கா இருந்தது. இன்னுமொரு விடயம் எனது கவனத்தைக் கவர்ந்தது. அது என்னவென்றால் இப்போது ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கக்கூடியளவு பணத்தைவிடக் குறைவான விலையில்தான் அந்தப்பெரிய நிலப்பரப்பை 7.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே கொடுத்து ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அன்று வாங்கியிருந்தது.
இன்னும் சில காரணங்களுக்காக, அதாவது பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், இரவில் தெரியும் சூரியன், பல வண்ணம் கொண்ட நொதேன்லைட், உலகிலே உயிர் வாழும் மிகப் பெரிய திமிங்கிலங்கள், உறங்குநிலைக்குப் போகும் கரடிகள், கரிபோக்கள், பனிக்கட்டி வீட்டில் வாழும் எஸ்கிமோக்கள் என்று மாணவப் பருவத்து ஆசைகளை நிறைவேற்ற அலாஸ்கா செல்வது என்று முடிவெடுத்திருந்தேன்.
ஆனாலும் கோவிட் - 19 காரணமாக கட்டுப்பாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நேரடி விமானப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், ரொறன்ரோவில் இருந்து சிக்காகோ சென்று, அங்கிருந்து அங்கரேய்ச் என்ற இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
அமெரிக்கா செல்வதென்றால், இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்கள்தான் விமானத்தில் பயணிக்கலாம் என்ற செய்தி எனக்குச் சாதகமாக இருந்தது. காரணம் இரண்டு பைஸர் தடுப்பூசிகளையும் நான் ஏற்கனவே எடுத்திருந்தேன். பயணத்திற்கு முன் மூன்று நாட்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். நாசித்துவாரத்திற்குள் குச்சியை விட்டு, அந்தப் பரிசோதனையைச் செய்தார்கள். சொன்னபடியே கோவிட் பாதிப்பு எனக்கு இல்லை என்ற முடிவை மின்னஞ்சல் மூலம் அறிவித்திருந்தார்கள்.
எனது பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்திருந்தேன். விமான நிலையத்திலும், விமானத்திலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதனால் எல்லோரும் முகக் கவசம் அணிந்திருந்தார்கள்.
‘இன்னும் சில நிமிடங்களில் அங்கரேய்ச் விமான நிலையத்தில் தரை இறங்கப் போகிறோம்’ என்ற அலஸ்கா விமானியின் அறிவிப்பைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கரேய்ச் ரெட் ஸ்ரீவன்ஸ் விமான நிலையத்தில் காலடி பதித்தோம். அலாஸ்காவில் அதிக மக்கள் வாழும் இடமும் இதுதான். இரவு நேரம் போய் இறங்குகிறோமே, இடங்களைத் தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வெளியே வந்த போது பகல்போல சூரிய வெளிச்சம் இருந்தது. அப்போதுதான் அலஸ்காவில் சூரியன் இரவிலும் தெரியும் என்பது நினைவில் வந்தது.
குளிருக்குத் தாக்குப்பிடிக்க ஆண்களைவிடப் பெண்களால் முடியும் என்றதொரு எண்ணத்தை அலஸ்காவில் சந்தித்த பெண்கள் உருவாக்கியிருந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து எங்களை அழைத்துச் சென்றவர் ஒரு பெண்மணிதான். வாடகை வண்டி எடுத்த இடத்திலும், பேரங்காடியான வோல்மாட்டில் காசாளராகத் தொழில் புரிந்தவர்களும் பெண்கள்தான். ஊபர் வண்டி ஓட்டியவரும் பெண்தான். எரிபொருள் நிலையத்திலும், உணவகத்திலும் பெண்கள்தான். விமான நிலையத்திலும் பெண் பயணிகள்தான் அதிகமாகக் காணப்பட்டார்கள். நான் சந்தித்த இவர்கள் எல்லோரும் அமெரிக்காவின் பல பாகங்களில் இருந்தும் தொழில் நிமிர்த்தம் இங்கே வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.
கரவன் என்று சொல்லப்படுகின்ற ஆர். வி. வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து எங்கள் அட்டவணைப்படி செல்ல வேண்டிய இடங்கள் எல்லாம் சென்று பார்த்தோம். கோவிட் காரணமாக ஹோட்டலில் தங்குவதைத் தவிர்த்திருந்தோம். குளியலறை முதற்கொண்டு குளிர்சாதனப்பெட்டி வரை எல்லாவசதிகளும் வண்டியிலேயே இருந்தது. இதற்கான தரிப்பிடங்களில் மின்சார, தண்ணீர் வசதிகள் கிடைத்தன. எமக்குத் தேவையான பொருட்களை வோல்மாட்டில் வாங்கி வைத்திருந்தோம். சமையல் வசதிகள் இருந்தாலும், விரும்பிய நேரங்களில் உணவுச் சாலைகளில் உடனடியாகக் கிடைத்த கடல் உணவு வகைகளையும் சாப்பிட முடிந்தது.
வடக்கே உள்ள தெனாலி என்ற இடத்தில் மலைப்பகுதியில் அலாஸ்கா தேசிய பூங்கா இருந்தது. அவர்களது வண்டியில்தான் உள்ளே செல்ல முடியும் என்பதால்,  பஸ்வண்டியில் கொண்டு சென்று இடங்களைக் காட்டினார்கள். சுற்றிப் பார்க்க எட்டு மணித்தியாலம் எடுத்தது. உறங்கு நிலைக்குச் செல்லும் கரடிகளையும், கரிபோ என்று சொல்லப்படுகின்ற மான் வகைகளையும் காணமுடிந்தது. எஸ்கிமோக்கள் என்று நாங்கள் சிறுவயதில் படித்த, பனிக்கட்டிகளால் உருவான வீடுகளில் வாழ்ந்த முதற்குடி மக்களின் தலைமுறையினரை அங்கு சந்தித்து உரையாட முடிந்தது.
இங்கேதான் இந்தக்கதையின் நாயகியை நான் சந்தித்தேன். வண்டியில் எனது இருக்கைக்கு நேரான இருக்கையில் மறுபக்கத்தில் அமர்ந்து இருந்தாள். பதும வயது, பதினாறாய் இருக்கலாம். அவளிருந்த பக்கத்தில் கரிபோக்களைக் கண்டதும், ஓட்டுணர் வண்டியை நிறுத்தினார். ஏழு கரிபோக்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை எல்லோரும் புகைப்படம் எடுத்தார்கள், நானும் எழுந்து நின்று வீடியோ எடுத்தேன். நாங்கள் சற்றும் எதிர்பாரத நேரத்தில், அருகே இருந்த புதரில் இருந்து பெரிய கருங்கரடி ஒன்று வெளிப்பட்டது. மெதுவாக கரிபோக்களை நோக்கி நகர்ந்தது. என்ன நடக்கப்போகிறது என்று எல்லோரும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தோம். கரிபோக்கள் அதைக்கவனிக்காமல் புல் மேய்ந்து கொண்டிருந்தன. கரடி மிக அருகே நெருங்கியிருந்தது. திடீரென ஒரு கரிபோ நிமிர்ந்து பார்த்தது, மறுகணம் அந்த இடத்தைவிட்டுத் துள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கியது. கரடி தான் இலக்கு வைத்த கரிபோவைத் துரத்திப்பிடிக்க, அந்தக் கரிபோ ஒரு குத்துக்கரணம் அடித்து, அதன் பிடியில் இருந்து தப்பிப் பாய்தோடியது.
கரடி கரிபோவைப் பிடிக்கப் பாய்ந்ததைப் பார்த்த, அருகே இருந்த இவள் ‘நோ’ என்று பலமாகக் கத்திக் கொண்டே கண்ணைப் பொத்தி, முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டாள். வன்முறைக்குப் பழக்கம் இல்லாதவளாக இருக்கலாம், பயணிகள் எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.
சற்று நேரத்தால் கைகளை விலத்தி எழுந்து நின்ற என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
‘சொறி, உங்களை டிஸ்ராப் பண்ணீட்டேனா, பாவம் அந்த மான்’ என்றாள்.
நான் எதுவும் பேசாமல் இருந்தேன். கண்களை மூடியிருந்ததால், நடந்தது என்னவென்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘நீங்க பீல் பண்ணலையா?’ என்றவள், எனது முகத்தைப் பார்த்தாள்.
‘இல்லை, இதிலே பீல் பண்ண என்ன இருக்கு? இதுதான் இயற்கை, உணவுச் சங்கிலி என்பது இதைத்தான். எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு’ என்றேன்.
‘என்ன சொல்றீங்க?’ என்றாள்.
‘எங்க நாட்டில மனுஷன் மனுசனை கண்முன்னாலே அடிச்சு, சுட்டு, எரிச்சுக் கொன்று போட்டதை எல்லாம் பார்த்ததால இந்தக் காட்சி எல்லாம் எனக்கு மரத்துப் போச்சு’ என்றேன்.
‘ஏன் என்ன நடந்தது, நீங்க எந்த நாடு?’ என்றாள்.
நான் சொன்னேன்.
அவள் என்ன நினைத்தாளோ அதன் பின் ஒன்றுமே என்னுடன் பேசவில்லை. ஒருவேளை இரக்கமே இல்லாதவன் என்றுகூட நினைத்திருக்கலாம். பேருந்துச்சுற்றுலா முடிந்து நாங்கள் ஆளுக்கொரு திசையாகச் சென்று விட்டோம். பேருந்து நட்பு அத்துடன் முடிந்து விட்டது.
அங்கரேய்ச்சிற்குத் தெற்கே உள்ள சீவாட் என்ற இடத்தில் படகுச் சவாரிக்கு முற்கூட்டியே பதிவு செய்திருந்தோம். றீசுரக்ஷன் குடாக்கரையில் இருக்கும், கினாய் பியோட்ஸ் நேசனல் பார்க் என்ற இடத்திற்குப் படகில் செல்வது இலகுவானது என்பதால், படகில் சென்றோம். ஆறு பயணிகள் பயணிக்கக்கூடிய படகு, சகல வசதிகளோடும் இருந்தது. எங்கள் இருவரோடு நால்வர் அடங்கிய வேறு ஒரு குடும்பமும் வர இருப்பதாகப் படகோட்டி சொன்னார். ஓட்டுனர் சுமார் 23 வயதான இளம் பெண்மணியாக இருந்தார். சற்று நேரத்தால், தகப்பன், தாய், ஒரு மகள், ஒரு மகன் மொத்தம் நாலு பேர் வந்தார்கள், படகுக்கு உள்ளே கபினுக்கு வந்ததும் படகோட்டிக்கும், எங்களுக்கும் ஒவ்வொருவராகக் ‘குட்மோணிங்’ சொன்னார்கள்.
நானும் குட்மோர்ணிங் சொல்லிவிட்டு, நிமிர்ந்து பார்த்தேன். சற்றும் எதிர்பாராத விதமாய் அவளும் அங்கு வந்திருந்தாள். எனது கதையின் நாயகியை மீண்டு இங்கேதான் சந்தித்தேன். அப்புறம் உரையாடும் போதுதான், மிச்சிக்கன் மாகாணத்தில் இருந்து குடும்பமாக அலஸ்காவைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்ததாகச் சொன்னார்கள். தனது பெயர் இஸபெலா என்றாள். கனடாவில் அனேகமான பிள்ளைகள் தாய் தகப்பனைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது வழக்கம். இவள் தகப்பனை ‘டாட்’ என்று முறைசொல்லி அழைத்தாள். ஆனால் தாயையும் தம்பியையும் பெயர் சொல்லி அழைத்தாள். ஒரு பொறுப்புள்ள குடும்பப் பெண்போல, தான் கொண்டு வந்த பையைத் திறந்து அதில் உள்ள சான்விச்சை நப்கினில் வைத்து முதலில் தகப்பனுக்கும் தம்பிக்கும் பரிமாறினாள், அப்புறம் முன்னிருக்கையில் இருந்த தாயாருக்குக் கொடுத்த போது அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். எங்களுக்கு நீட்டிய போது, நாங்களும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லி மறுத்து விட்டோம். அதன் பின் அவள் ‘திஸ் இஸ் போ மீ’ என்று சொல்லித் தனது சான்விச்சை எடுத்து சுவைத்துச் சாப்பிட்டாள்.
சற்று நேரத்தில் தாய் எழுந்து தகப்பனையும் அழைத்துக் கொண்டு, கபினுக்கு வெளியே சென்றாள். பின்பக்கத்தில் இருவரும் கைகோர்த்தபடி நின்று வேடிக்கை பார்த்தார்கள். இருவரும் சேர்ந்தபடி கட்டிப் பிடித்து நிற்க, தாயார் பல கோணங்களில் செல்பி எடுத்தார். படகோட்டி, பெரிய அலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் பயம் கொள்ளாது அலட்சியமாகப் படகைச் செலுத்தினாள். தினமும் போய் வருவதால் அவளுக்குப் பழக்கமாக இருக்கலாம். எங்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எந்த நேரமும் ரேடியோ தொடர்பு கொண்டபடி, எங்கள் படகு எங்கே இருக்கிறது என்பதையும் சொல்லிக் கொண்டே இருந்தாள். திடீரெனப் பெரிய அலை ஒன்று வேகமாக மோதவே தகப்பன் நிலை தடுமாறினார். தவறிக் கடலில் விழுந்து விடுவார் என்ற பயத்தில், பயந்துபோன இவள் ‘டாட் பிளீஸ், உள்ளவாங்க’ என்று கத்தினாள். ‘ஐ ஆம் ஓகே’ என்று அவர் அங்கிருந்தே பதில் சொன்னாலும், அவர் உள்ளே வரவில்லை. எங்களுக்கு வெறுப்பு ஏற்றுவது போல, தாய் அவரது கையை இறுகப் பிடித்தபடியே வெளியே நின்றாள்.
என்னாகுமோ என்று பயந்த இவள் பயந்தபடியே என்னைப் பார்த்தாள். ‘பிளீஸ் அவரை உள்ளே வரச் சொல்லுங்க’ என்றாள்.
‘ரெல் யுவ மம் ரு கம் இன்’ என்றாள் இதைக் கேட்ட படகோட்டி.
‘சீ வோன்ட் லிசின் மீ’ என்றாள் இவள்.
தாய்க்கும் மகளுக்குமான முரண்பாடாக இருக்கலாம். வேறு வழியில்லாமல் நான் எழுந்து கபின் கதவைத் திறந்து, ‘உள்ளே வாங்க, ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்’ என்றேன்.
சற்று நேரத்தால், அவர்கள் உள்ளே வந்தார்கள். தலையைத் துவட்டும்படி பையிலே இருந்த சிறிய டவலை எடுத்துத் தகப்பனுக்குக் கொடுத்தாள் இவள். தாய் மீண்டும் போய் முன் இருக்கையில் உட்காந்தார்.
‘அதிஸ்டம் இருந்தால் திமிங்கிலம் பார்க்கலாம்’ என்றார் படகோட்டிய பெண்.
சற்று நேரத்தால் படகை மெதுவாகச் செலுத்தி, தண்ணீரில் எதையோ தேடினார். படகு மெதுவாக அசைந்தது, திடீரென உணர்ச்சி வசப்பட்டவராய் ‘யு ஆர் லக்கி, ரென்னொக் குளக்’ என்றார்.
இந்த ‘ரென்னொக் குளக், திறியொக் குளக்’ எல்லாம் எனக்கு மனப்பாடமாய்ப் போயிருந்தது. காரணம் வடதுருவ ஐஸ்லாந்துக்குச் சென்ற போதும், இப்படித்தான் கடலில் திமிங்கிலம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டார்கள். அப்பொழுதே எந்தத் திசையில் சட்டென்று பார்க்க வேண்டும் என்பதைப் பழகிக் கொண்டேன். காரணம் ஒரு விநாடி தாமதித்தாலும் திமிங்கிலம் தண்ணீரில் மறைந்து விடும். பொதுவாக 20-25 நிமிடத்திற்கு ஒரு முறைதான் திமிங்கிலம் வெளியே வரும், சட்டென்று கிளிக் செய்தால்தான் தெளிவான படம் கிடைக்கும்.
அவர் சொன்ன திசையைப் பார்த்தோம், தண்ணீரின் சலசலப்பைத் தொடர்ந்து, கறுப்பு வெள்ளை நிறமாக, ராட்சத உருவம் தண்ணீருக்கு மேலே துள்ளிப் பாய்ந்தது. சட்டென்று கமெராவில் சிறைப்பிடித்தேன். படத்தில் கறுப்பும் வெள்ளையுமான அதன் பாதி உடம்பும் அதன் வாலும் வெளியே துருத்திக் கொண்டிருந்தது.
‘ஐ மிஸ்ட் தட், எங்கே பார்கணும் என்று எனக்குத் தெரியலை, அதால என்னால பார்க்க முடியலை, நீங்க படம் எடுத்தீங்களா?’ என்று ஆவலோடு கேட்டாள்.
கமெராவில் பதிந்த படத்தைக் காட்டினேன்.
‘வாவ் அமேசிங், யுஆர் கிரேட்’ என்றாள். அது வெறும் வார்த்தைகள் அல்ல என்பது அவளது கண்களில் தெரிந்தது. எனக்கு உச்சி குளிர்ந்த போலிருந்தது. புகைப்பட ரசிகையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், தெனாலி பயணத்தின் போது, எடுத்த ‘கரடியும், மானும்’ வீடியோவையும் அவளுக்குக் காட்டினேன்.
‘அப்போ அந்த மான் தப்பி ஓடிச்சா’ எதிர்பாராத ஆச்சரியத்தில் அவளது முகம் மலர்ந்தது. முடிவு தெரியாமல் தவித்த அவளுக்கு வீடியோவைப் பார்த்ததும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
‘உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?’ என்றாள். ‘கேளுங்க’ என்றேன்.
‘அதென்ன ‘ரென்னொக் குளக், எனக்குப் புரியலை’ என்று கேட்டாள்.
‘அதுவா படகின் முனையை பன்னிரண்டு மணி என்பார்கள், அப்படிச் சொன்னால் முன்பக்கம் பார்க்க வேண்டும். ஆறுமணி என்றால் பின்னால் பார்க்க வேண்டும்’.
‘அப்போ நைனொக்குளக் என்றால்?’ சந்தேகத்தைக் கேட்டாள்.
‘இடது பக்கம் பார்க்க வேண்டும்’ என்றேன்
‘இப்போது புரியுது, ‘திறீயொக்குளக்’ என்றால் படகின் வலது பக்கம் பார்க்கணும் சரியா?’ என்றாள்.
‘யூ கொட்டிற்’ என்றேன். அவள் வியப்போடு என்னைப் பார்த்தாள்.
‘தாங்ஸ், இலகுவாகச் சொல்லித்தந்திட்டீங்க, நீங்க லெக்சரரா?’ என்றாள்.
எக்ஸிற் கிளேஸர் என்ற பனிமலை இங்கு பிரபலமானது. பனிக்காலத்தில் இருந்து இந்த கிளேஸர் இருப்பதாகப் படகோட்டி சொன்னாள். 1815 ஆம் ஆண்டில் இருந்து வருடத்திற்குச் சராசரி 3 அடிவரை பனி உருகுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். அதன்பின் அருகே உள்ள பியர் கிளேஸர் என்ற கரடியின் பெயருள்ள பனிக்கட்டி சூழ்ந்த கிளேஸர் மலையைப் பார்க்கச் சென்றோம். பல வருடங்களாக உருகாமல் அப்படியே இருக்கின்றது. ஆனால் இப்போது சிறு துண்டுகள் உடைந்து தண்ணீரில் மிதப்பது தெரிந்தது. படகோட்டி படகின் பின் பகுதியில் இருந்த ரெலஸ்கோப்பி ஸ்பூன் மீன்பிடி வலையால் ஒரு பனிக்கட்டியை எடுத்துக் காட்டினாள்.
‘எங்கள் குடும்பத்தை ஒரு படம் எடுத்துத்தர முடியுமா?’ என்று அவள் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. குடும்பமாக அவர்கள் எல்லோரும் பனிக்கட்டியைப் பிடித்தபடி நிற்க நான் படமெடுத்திருந்தேன். 
‘சீக்கிரம் எடுங்க, கை விறைக்குது’ என்றார் தாயார். தாயார் அப்படிச் சொன்னது இவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ இவள் முகத்தைச் சுழித்தாள்.
அவள் தனது வாட்ஸ்அப் இலக்கத்தை தந்தாள், அந்தப் படத்தை அவளுக்கு அனுப்பிவிட்டேன். ‘நீங்களும் பிடிச்சிருங்க, நான் படம் எடுக்கிறேன்’ என்று எங்களைப் பார்த்துச் சொன்ன அவள், தனது செல்போனில் இரண்டு படங்களை எடுத்து எனக்கு அனுப்பி இருந்தாள்.
அதன் பின் மவுண்டன் கோட் என்று சொல்லப்படுகின்ற வெள்ளை நிற ஆடுகளை மலைச் சரிவில் பார்த்தோம். கோல்டன் ஈகிள் என்று சொல்லப்படுகின்ற கழுகுகளைக் கூடுகளில் பார்த்தோம். மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் ஓய்வெடுக்கும் பழுப்பு நிறமான சீல்களைப் பார்த்தோம். தண்ணீரில் கூட்டமாக மிதக்கும் கறுப்பு நிற அலாஸ்கா ஒட்டர்கள், சீஹள் என்ற வெள்ளைநிற, சங்க இலக்கியத்தில் வரும் குருகு போன்ற பறவைகள், நீர்க்காகங்கள், பபின்ஸ், தண்ணீரில் அவ்வப்போது துள்ளிப் பாயும் சில்வர் சமன், பிங்சமன் போன்ற கடல்வாழ் உயிரினங்களையும் பார்த்தோம்.  ரெயில் பயணம்போல, சுமார் ஆறு மணி நேரம் எங்கள் படகுச் சவாரி நடந்தது.
நேரம் நெருங்கியதாலும், அலைகள் வேகமாக அடிக்கத் தொடங்கியதாலும் படகுச் சவாரியை அத்துடன் முடித்துக் கொண்டோம்.
‘யூ ஆர் லக்கி, திமிங்கிலத்தை அருகே பார்க்கக் கிடைத்தது’ என்று படகோட்டி குறிப்பிட்டார். உண்மைதான், எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்து வந்தோமோ அவற்றை எல்லாம் அன்று பார்க்க முடிந்தது.
படகு தரிப்பிடத்தில் நின்றதும், தாய்தான் முதலில் தனது பையை எடுத்துக் கொண்டு படகைவிட்டு வெளியேறி டெக்கிலே இவர்களுக்காகக் காத்து நின்றார். மகளோ பொறுமையாக எல்லா பொருட்களையும் பையிலே மறுபடி எடுத்து வைத்தார். அதன் பின் நாங்களும் எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வெளியேறினோம்.
வெளி வாசல் ஓரம் நின்ற அவள் எங்களைப் பார்த்து நட்போடு விடைபெறும் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
‘உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று மகளிடம் சொல்லி விடை பெறும்போது, ‘எப்படி படகுச் சவாரி இருந்தது, உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?’ என்று வினாவினேன்.
‘எனக்கு ரொம்ம்ப பிடிச்சிருந்தது, நல்லாய் என்ஜோய் பண்ணினேன், ஆனால்...?’
‘ஆனால் என்ன?’ என்றேன் அவசரமாக. அவளிடமிருந்து ஏக்கப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
‘எங்க அம்மாவும் எங்களோட வந்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன்!’ என்றாள்.

Comments