‘தமிழ் ஆரம் - 2024’ சிறப்புமலர்

 





‘தமிழ் ஆரம் - 2024’ சிறப்புமலர் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

எனது பெயர் அர்ச்சயா, இன்று வெளிவர இருக்கும் ‘தமிழ் ஆரம்’ சிறப்பு மலரை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

‘அத்தத்தா என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது’ என்று கலித்தொகையில் ஒரு பாடல் வருகின்றது. அதேபோல, ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்று திருக்குறளும் சொல்கிறது. ஆமாம், இங்கே பிறந்த அப்படி ஒரு மழலைச் செல்வத்தைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் இம்முறை அட்டைப் படமாக்கி இருக்கிறார்கள் இந்தத் ‘தமிழ் ஆரம்’ இதழின் ஆசிரியர்களான எழுத்தாளர்கள்; குரு அரவிந்தனும் மாலினி அரவிந்தனும்.

இந்த இதழ் 22வது சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. கனடா நாட்டிற்குத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த காலத்தில் எமது தமிழ் குழந்தைகளின் தேவை கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தத் ‘தமிழாரம் சிறுவர் மலராகும்.’ அதிபர் பொ. கனகசபாபதி, வள்ளிநாயகி இராமலிங்கம், ம.சே. அலெக்ஸாந்தர், பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஆகியோர் அவ்வப்போது இதன் காப்பாளர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்த மலரை எடுத்துப் பார்த்தால், உள்ளே சிறுவர் பாடல்கள், சிறுவர்களுக்கான கதைகள், சிறுவர் நாடகம், மற்றும் சொல் தேடல், கேள்வி பதில் பயிற்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அமரர் கவிஞர் கந்தவனம் அவர்களால் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘ஓ கனடா’ தேசியப் பண்ணும் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கனடியத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இது போன்ற இதழ்களைப் பெற்றோர்களாகிய நீங்கள் வாங்கி உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்க பேருதவி செய்தவர்களாகப் போற்றப் படுவீர்கள். இளைய தலைமுறையினரில் ஒருவரான என்னைத் தெரிவு செய்து, இந்த இதழை அறிமுகம் செய்ய வாய்ப்பளித்த எழுத்தாளரும், ஆசிரியருமான குரு அரவிந்தன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி.


Comments