கவிஞர் சேரனின் மறைவு

 




கவிஞர் சேரனின் மறைவு தமிழ் கவிதையுலகிற்குப் பேரிழப்பு.

குரு அரவிந்தன்

கவிஞர் சேரன் அவர்களின் மறைவு தமிழ் கவிதை உலகிற்குப் பெரும் இழப்பாகும். 1958 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அளவெட்டியில் பிறந்த உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் நவம்பர் 18, 2026 புதன்கிழமை இரவு 8:26-க்கு ரொறன்ரோவில் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனாவார். மகாகவி உருத்திரமூர்த்தியும், அவரது மகனான சேரனும் மகாஜனக்கல்லூரிப் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் மகாஜனக்கல்லூரி பழைய மாணவன் என்பதால் இவர்களை அறிந்திருந்தேன்.



கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள்தான் கவிஞர் சேரனை எனக்கு அறிமுகம் செய்திருந்தார். ரொறன்ரோவில் நடந்த சில நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் ஒன்றாகப் பங்குபற்றி  உரையாற்றியிருக்கிறோம். ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல் மற்றும் குற்றவியல் துறைகளுடன் இணைந்து பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை, நாடகம் மற்றும் ஆய்வு துறைகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். நான் ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது சங்கத்தின் நிகழ்வில் அவரை அழைத்து உரையாற்ற வைத்திருந்தேன். இதேபோல, கனடா, மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் நிகழ்ச்சிகளிலும் அவரை அழைத்துக் கௌரவித்திருக்கின்றோம்.

கடந்த 33 வருடங்களாகக் கனடாவில் இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தொடர்ந்து நடத்தும் எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் கவிஞர் சேரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் எங்கள் அழைப்பை ஏற்று சில மாதங்களுக்கு முன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியின் ஊடாக கனடாவாழ் 50 எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கள் பற்றியும், எழுத்துப்பயணம் பற்றியும் இதுவரை உரையாற்றிப் பதிவுசெய்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியானது உலகில் வேறெங்கும் நடைபெறாத தனித்துவமான நிகழ்ச்சியாகவும் உள்ளது. கேள்வி நேரத்தின் போது ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதிலளிக்கும் போது, ‘எனது பதில் நீண்டதாக இருக்கும், இந்த நிகழ்ச்சி அதற்கானதல்ல, எனவே வேறு ஒரு சமயத்தில் இதற்குப் பதில் தருகின்றேன்’ என்று பதிலளித்தார்.




சேரனின் மறைவை ஒட்டிய இரங்கல் செய்திகளைப் பொது ஊடகங்களில் பார்த்த போது, சேரனின் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களைவிட, சேரனுடன் முரண்பட்டவர்கள்தான் அதிகமான இரங்கல் செய்தியை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தாங்கள் சேரனின் கொள்கைகளுடன் முரண்பட்டதை அவர்களே குறிப்பிட்டிருந்தனர். முன்பெல்லாம் யாராவது மரணமானால் அவரது நல்ல பக்கங்களையே எடுத்துச் சொல்வார்கள். ஆனால் இப்போது பொது ஊடகங்கள் நிறைந்திருப்பதால், சரியோ பிழையோ எல்லோரும் தங்கள் பக்கத்தையும் எடுத்துச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி எல்லோரும் தங்கள் பங்கிற்கு எதையாவது எழுதத் தொடங்கி விட்டார்கள். இவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சேரன் தனது கொள்கைகளை எதற்காகவும், எப்பொழுதும் விட்டுக் கொடுத்ததில்லை.

ஒரு முறை மகாஜனா முத்துலிங்கம் அண்ணா சேரனுடன் உரையாடும் போது எனது விகடனில் வந்த ‘இதுதான் பாசம் என்பதா?’ என்ற கதையைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்போது சேரன் தானும் அதை வாசித்தாகவும், ஆனால் ‘பச்சைக் கொடி காட்டித் தொடர்வண்டி புறப்பட்டது’ என்ற எழுதியிருப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், இப்போது எங்கே பச்சைக் கொடி காட்டுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு நான் ‘கதை முழுவதையும் நீங்கள் வாசிக்கவில்லை. கதையின் தளம் இந்தியா, இப்பொழுதும் அங்கே பச்சைக் கொடி காட்டித்தான் வண்டி புறப்படுகிறது’ என்று விளக்கம் கொடுத்தேன். தான் கனடாவில் கதை நடப்பதாக நினைத்தாகவும், கதை முழுவதையும் வாசிக்வில்லை என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார். கனடாவில் நடந்த முதலாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடில் நான் வாசித்த ‘ஆறாம்நிலத்திணை’ பற்றிய முழுமையான ஆய்வுக்கட்டுரையை வாசித்துவிட்ச் சிறப்பாக எழுதியிருப்பதாகப் பாராட்டி, நான் முதன்மை ஆசிரியராக இருக்கும் வதனம் இதழில் இதழ்-10 இல் அவரது தந்தை மகாகவி து. உருத்திரமூர்த்தி பற்றி அன்றீனா கெங்காதரன் எழுதிய கட்டுரைக்கு ‘இளைய தலைமுறையினர் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்’ என்று நன்றியும் சொன்னார்.




மகாஜனாவில் உயர்வகுப்பில் படிக்கும் போது எனது ஆசிரியர் தமிழருவி த. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்த உரையாடலின் போது அ.ந. கந்தசாமி, து. உருத்திமூர்த்தி, ஏ.எஸ். முருகானந்தன் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிட்டபோது நான் அவர்களின் இலக்கிய ஆளுமை பற்றி ஓரளவு அறிந்து கொண்டேன். அதன் பின் மகாஜனாவின் நூற்றாண்டு விழாவின் போது ‘மகாஜனாவின் இலக்கிய நவரத்தினங்கள்’ என்று கௌரவித்து அ.ந. கந்தசாமி, மகாகவி து. உருத்திமூர்த்தி, ஏ.எஸ். முருகானந்தன், ம. பார்வதிநாதசிவம், பி. நடராஜன், ஆ. சிவநேசச்செல்வன், சண்முகலிங்கம், திருமதி கோகிலாமகேந்திரன், குரு அரவிந்தன் ஆகிய ஒன்பது இலக்கிய ஆளுமைகளையும் 100 ஆண்டு மலரில் படங்களுடன் பதிவு செய்திருந்தனர். அந்தப்படங்கள் மகாஜனா நூலகத்திலும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக இடம் பெற்றிருக்கின்றது. இந்த இலக்கிய ஆளுமைகளுடன் எனது படமும் இடம் பெற்றிருந்தது எழுத்தாளனான எனக்குப் பெருமையாக இருந்தது. 

தந்தைவழி மகனும் கவிஞராகவே புகழ் பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.


Comments