Story- Sathivirathan - Review by: Ranjani Subramaniam

 




“சதிவிரதன்” நூல் திறனாய்வு

 

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -

 

எழுத்தாளனின்  வெற்றி தரமான இலக்கியப்  படைப்புகளால் நிகழ்கிறது என்பதும்  அவனது ஊடகமொழியின் மூலம் வாசகனின் மனதில் தனது தனித்துவமான  தடங்களைப் பதிக்கிறான் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

அதே சமயம் கலைநயமும்  வசீகரமும் நிறைந்த நவீன  தலைப்புகளால், படைப்பின் வியாபகம் மேலும் உறுதி செய்யப்படுவது, 'சதிவிரதன்' என்ற சிறுகதைத் தொகுப்பின், சிறப்புஅவதானமாகக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தினை தரும் இத்தலைப்பு பதிவிரதை என்னும் சொல்லின் ஆண்பாலாக கதாசிரியரினால் உருவாக்கப்பட்டமை பாராட்டுக்கு உரியது. பொருத்தமான புதிய சொற்களின் ஆக்கத்தினால்  மொழியானது நிச்சயம் வளம் பெறும்.

 

சமூகப் பிரக்ஞை மிகுந்த தனது எழுத்துகளால், வெவ்வேறு கருத்துக் களங்களில் உருவாக்கப்பட்ட பதினேழு கதைகளைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  இலக்கிய அனுபவம் கொண்ட  குரு அரவிந்தன் அவர்கள்.




 

இச்சிறுகதைத் தொகுதியின் கதைக்கருக்களை பொதுவான சில தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.இல்லற உறவுச் சிக்கல்கள் சார்ந்து ஆண் பெண் இருபாலாரின் மனவெளிகளின் ஆழஅகலங்கள்,  பழமைவாத சிந்தனைகள் பற்றிப் பேசும் கதைகள் சில; பால்சமநிலை ஓரினச் சேர்க்கை முதலான  உலகியல்   நகர்வுகளை உள்வாங்கியபடி, புலம்பெயர்வாழ்வின்சிந்தனை விரிவினையும்அடிப்படையாகக் கொண்ட  கதைகள் சில; இலங்கையின் யுத்தகால வன்முறைகளின் தொடர்ச்சியாக இன்றும் சந்திக்கக் கூடிய மனித அவலங்கள் பற்றிய கதைகள் சில; மனிதநேயமும் நன்றியுணர்வும் மனிதர்கள்பால் மட்டுமன்றி விலங்குகள் பாலும் நீட்சியடைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் படைப்புகள் சில. அனைத்து கதைகளின் ஆழத்திலும் படைப்பாளி சந்தித்த  உண்மைச் சம்பவமொன்றின் நிழல் படிந்தே இருக்கிறது என்பதும் அதனூடாக  சமூகத்துக்கு   சொல்ல நினைக்கும் செய்தியும் வாசிப்பின் முடிவில் பெறும் அவதானமாக உள்ளது. 

 

தனது உரையில் ஆசிரியர் கூறுவது போல 'தாயகத்தில் தவறு என்று சொல்லப்பட்ட பல விடயங்களை  புலம் பெயர் மண்ணில் தவறானது என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அதே போல சரியென்று நினைத்த சில விடயங்கள் அந்த மண்ணில் சரியானதாகவும் படவில்லை' என்பதான  முரண்மனநிலை புலம்பெயர் வாழ்வியல் அனுபவம் கொண்ட படைப்பாளிகளின் புனைவுக் கருவுக்கான பெருவரம் என்றே கூற வேண்டும். அத்துடன் புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்குமான கலாசார மற்றும் தலைமுறை இடைவெளிகளும் கதைகளுக்கான கருவினை அட்சயபாத்திரமாக வாரி வழங்குகின்றன.

 

அது போலவே ஆசிரியரது உரையில்  'ஆறாம் நிலத்திணை' என்னும் சொல் 'பனியும் பனிசார்ந்த நிலமும்' என்ற வகைப்படுத்தலையும்  அதன் உரிப்பொருள் பொதுப்பண்பு ஆக 'உருகல் ' என்ற உணர்வினையும் கூறியிருப்பது சிறப்பான கருத்தாக அமைந்திருக்கிறது. கனடா போன்ற உறைகுளிர் நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோரின் மனம், தாம் பிரிந்து வந்த உறவுகளையும் யுத்தத்தின் இழப்புகளையும் மட்டும் நினைத்து உருகுவதில்லை. தாயக மண்ணின் சிறப்பான காலநிலை   பற்றிய  நினைவுகளை ஒப்புநோக்கியும் கனிந்து உருகுவதுண்டு. பிரிவின் துயரில் உறைவதும் உண்டு.

 

 இத்தொகுப்பில் சந்தர்ப்பங்களால் ஆதிக்கம் செய்யப்படும் ஆண்பெண் கற்புநெறி சார்ந்த மனப் போராட்டங்களைக் கூறும் கதைகளாக சதிவிரதன், யார்குழந்தை, சிந்து மனவெளி, வித்தாரம், பனிச்சறுக்கல், நங்கூரி ஆகியற்றைக் கூறலாம். 

 

 இயற்கையின் நியதியை மனிதன் மாற்றியமைக்க முயலும் போது அதன் அனுகூலமற்ற   எதிர் விளைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும் என்பது சதிவிரதன் உணர்த்தும் தத்துவம். வட  அமெரிக்காவில் உறைபனியினால் ஏற்படும் பொருளாதார மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் முகமாக சில விலங்குகளைப் போல மனிதர்களையும் நான்குமாத கால  உறங்குநிலைக்கு அனுப்பும் விஞ்ஞான முயற்சியில் ஈடுபடுகிறார்  இளைஞரான பேராசிரியர் ராம்.  மனைவி உறங்கு நிலையில் இருக்க  கடமையின் நிமித்தம் ஆராய்ச்சி உதவியாளர்களுடன் விழித்திருக்கும் அவர், தனது காமத்தினை வெல்ல முடியாது  தன் உதவியாளரான பெண்ணுடன் உறவு கொள்கிறார். இத்தனைக்கும் பெற்றோரினால் சாத்திர சம்பிரதாயங்களை மீறாது வளர்க்கப்பட்டவர் அவர். ஆனால் காமம் அனைத்தையும் மறக்கடிக்கும் சந்தர்ப்பமொன்றில் தனது ஒழுக்கநெறிகளை மீறுகிறார்.

 

 சந்தர்ப்பம் அமையாதிருக்கும் வரைதான் மனிதன் தர்மங்களைப் பேணும் நல்லவனாக வாழ்வானா  என்ற கேள்வி இங்கு எழுகிறது.சதிவிரதத்தை பேண முடியாத ஆண்சமூகம், இன்றும் பதிவிரதைகளை எதிர்பார்க்கத் தயங்குவதில்லை என்ற முரண்மனநிலையை  மறைமுக எள்ளலுடன் கூறி நிற்கிறது இத்தலைப்பு . 

 

கற்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், கர்ப்பத்தினைச் சுமக்கும் பொறுப்பானது படைப்பு விந்தையினால் பெண்ணுக்கே அளிக்கப்பட்டு இருப்பதால், சாபமும் அவளுக்கே ஆகிறது. வெளிப்படையாக அதம குணங்களை வெளிக்காட்டுபவர்களை விட ஆபத்தானவர்கள் யாரெனில், கண்ணியவான்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் வித்தாரக்கதை பேசும் ஆண்களே என்பது இன்னொரு கதையின் சாரம்.

 

 நடைமுறை வாழ்வில் தாய் கூறாத வரை குழந்தையின் தகப்பன் யாரென்ற உண்மை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் 'யார் குழந்தை' கதையில் சவூதி அரேபியாவின் ரியாட்  நகரில் நடைபெறும் சிக்கலான வழக்கொன்றில், விந்து தொழிற்பாடு இல்லையென்பதால் வேறொரு பெண்ணின் கர்ப்பத்திற்கு அவன் காரணமில்லை என  நீதிமன்றில் உறுதிப் படுத்தப்பட்டு  விடுதலை ஆகிறான் ஒரு  ஆண். ஆனால் அவனுடைய மனச்சிக்கல் இப்போது ஆரம்பிக்கிறது. முன்பு தனது மனைவிக்குப் பிறந்த குழந்தை யாருடையது என அவன்  சந்தேகம் கொள்ளும் சந்தர்ப்பம் புதிய யுக்தி. எனினும் விஞ்ஞானம் எதிர்வு கூற முடியாத சில  காரணிகள் அவனது நிகழ்கால நிலைமைக்கு காரணமாக இருக்கக் கூடும். இதனை  அறிவுபூர்வமாக உய்த்தறிய முடியாத  பாமரர்களால், குற்றமற்ற பெண்களும் களங்கப்படும் சந்தர்ப்பம் அமையலாம். 

 

குற்றம் தம் பக்கமிருக்கும் சந்தர்ப்பம் ஒன்றில், மனைவியை சந்தேகிக்கும் ஆண்வர்க்கத்துப் பிரதிநிதியைக் கொண்ட   சிந்துமனவெளி எனும் கதை குடும்ப உறவுகளில் ஆண்பெண் மனவியலை விரிவான  பகுப்பாய்வுக்கு உள்ளாக்குகிறது.  மனைவிக்கும் அவளை வளர்த்த மாமனுக்கும் இடையிலான உறவினை சந்தேகத்துடன் நோக்கும் கணவனின்  உணர்வுக் கொந்தளிப்புகள் சித்தரிக்கப் பட்ட விதமும் கவித்துவம் நிறைந்த தலைப்பும் படைப்பின் ஆழத்தை அதிகரிக்கிறன. இன்றைய நாளில் உறவுகளாலேயே பாலியல் ரீதியான அத்துமீறல்கள் அதிகமாக நடப்பதையும் கதை குறித்து நிற்கிறது.

 

குடும்பம், சமூகம், பொதுவாழ்வு, நண்பர்கள், உறவினர் என எல்லா மட்டங்களிலும் மற்றும் இனக்கலவரம்,யுத்தநிலை முதலான அனர்த்தங்களிலும் பெண்கள் மிக எச்சரிக்கையுடனும் உள்ளுணர்வின் வழிகாட்டலுடனும் வாழ வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் சில கதைகளின்  கருப்பொருளாக்குகிறார். 

 

 நங்கூரி என்னும் கதையில் இலங்கையின் இனக்கலவரத்தில் காடையர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் கணவனால் நிராகரிப்புக்கு உள்ளாகும் பெண்ணின் பாத்திரம், இத்தகைய எண்ணிலடங்காத சமூக அவலங்களின் ஒரு குறியீடு எனக் கருதலாம். வன்புணர்வின் பின் குற்றமற்ற பெண்களே சமூகத்தில் பல இழிவுகளை எதிர் கொள்கின்றனர். ஆண் தவறு செய்யும் போது கண்டு கொள்ளாத  நமது சமூகம் பெண்களின் விடயத்தில் மிகுந்த 

பாரபட்ச மனநிலையுடனே நடந்து கொள்வது வேதனைக்குரியது.

 

சந்தர்ப்பங்கள் எதிர்பாராத வண்ணம் தாம் கைக்கொள்ள விரும்பும் ஒழுக்க நெறிகளுக்குப்பாதகமாகஅமைந்தாலும்,இச்சிறுகதைகளின்  பெண்பாத்திரங்கள்  தன்னம்பிக்கையும் சமயோசிதமும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தம்மைத் திடப்படுத்திக் கொள்ளும் மனோபாவமும் கொண்டவர்களாக உருவாக்கப் பட்டிருப்பது மிகச் சிறப்பு. கற்பு என்பது உடலால் அன்றி மனதால்  கைக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது நிகழ்காலத்தின் யதார்த்தம். இது பெண்களின் கல்விநிலை மற்றும் புலம்பெயர்வு அவர்களுக்கு அளித்த வரம். 

 

இன்றைய பெண்களின் மனநிலைகளையும் எதிர்பார்ப்புகளையும் உணர்வதற்கு இயலுமை கொண்ட படைப்பாளியாக குரு அரவிந்தன் தன்னை இனம்காட்டுவது சிறப்பான அணுகுமுறை. ஆணாதிக்க சிந்தனைகளை வழிமொழியாத அதேசமயம், நவீன உலகில், பால் சமத்துவம் ஓரினச் சேர்க்கை பற்றிய திடமான கருத்துகளையும் காலத்தின் தேவைக்கேற்ப முன்வைக்கிறார்.

 

 'சிவப்புப் பாவாடை' புலம்பெயர் வாழ்வில் சில பெற்றோர் தமது குழந்தைகளை ஒழுக்கமாக வளர்ப்பதில் கைக்கொள்ளும்  கடினப் போக்கை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், ரசிக்கத்தக்க விதத்தில் வெளிப்படுத்துகிறது. 'வாச்டோக்' போன்ற கண்காணிப்புடன் 'நில் என்றால் மகள் நிற்பாள். அப்படித்தான் என்னுடைய பிள்ளைகளை மிரட்டி வைத்திருக்கிறேன்' என்று பெருமை பேசும் தாயின் கதாபாத்திரம் அருமையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆனால் காலஓட்டத்தில், கண்டிப்புடன் வளர்க்கப்படும் மகள்  ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர் என அறியும் போது அந்த அதிர்ச்சி வாசகரையும் தாக்குகிறது. காரணம் தாயகத்தின்  பாரம்பரியங்களை இறுகப் பற்றியிருக்கும்  நம்மவர்களின் மனநிலை. 

 

தமது பிள்ளைகள் எதிர்பாலினத்தில் ஈர்ப்புக் கொண்டாலே போதும் என்ற மனநிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படும் காலமிது.  பால் சமநிலை, ஒரே பாலின ஈர்ப்பு என்பன   தனிமனித சுதந்திரம் சார்ந்த  நியாயமான எதிர்பார்ப்பு எனினும் தாயகத்தின் பண்பாட்டு வேர்களை உறுதியாகக் பற்றிக் கொண்டிருக்கும்   புலம்பெயர்ந்த  முதல் தலைமுறையினரின் மனநிலை, ஓரினச் சேர்க்கையை ஏற்காது என்பது அனுதாபத்துடன் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இத்தனைக்கும் மனிதவரலாற்றில் இது புதிதானதோ அந்நியமானதோ அல்ல. 

 

நெருங்கிய நட்பில் இருக்கும் புலம்பெயர்ந்த தாய் ஒருவர் தனது மகள் ஓரினச் சேர்க்கையாளராக இன்னொரு பெண்ணையே சட்டபூர்வமாக மணமுடித்து இன்னொரு ஆணின் விந்துதானத்தின் மூலம் குழந்தை பெற்ற பின்பும், அதை வெளிப்படுத்த சங்கடம் கொண்டதால், மகளுக்கு மணமுடிப்பதில் ஆர்வமில்லை என பொய்யாக காரணம் கூறியதையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையிலான உறவில் நுட்பமான சமநிலை பேணப்பட வேண்டும்   என்பதையும் கூறி, அற்புதமாக வடிவமைக்கப்பட்ட  சிறுகதை இது .

 

இது போலவே கல்வியில் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை தம் பிள்ளைகளுக்கு அளிக்காமல் அவர்களது வாழ்க்கை  இலக்குகளைச் சீரழிக்கும் பெற்றோர் பற்றியும் 'விழலுக்கு இறைத்த நீர்' என்னும் கதை பேசுகிறது. சில வாழ்வியல் மாற்றங்களை ஏற்பதற்கு  நமது சமூகம் தம்மைத் தயார் படுத்திக் கொள்ளுதல் அவசியமானது.

 

இதை ஒத்த இன்னுமோர் விசித்திர உணர்வினை 'வர்ணஜாலம்' கதையிலும் காணலாம். தாயகத்தில் சாதியம் கூறி உறவினர்களால் பிரிக்கப்பட்ட  காதல், பின்னாளில் பிறிதொரு  தேசத்தில்  மற்றுமோர்  காதலில், Hair dresser என்ற நவீன மயப்படுத்தப் பட்ட பெயருடன் மனமின்றியேனும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  வெளிநாடும் வெள்ளைத்தோலும் சாதியை மறைக்கும்  மன நிலையில் தாயகத்து உறவுகள் உள்ளது  விந்தையானது. 

 

மனித உறவுகளின் மேன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும்  காலகட்டம் இது.  சமூக பொருளாதார நிலைமைகள் சார்ந்து பெற்ற தாய்தந்தையர்  உட்பட  அனைத்து மட்டத்தினரும்  இந்நிலைமையை எதிர்கொள்கின்றனர்.'சுமை' யில் இக்கருத்து  உணர்வுபூர்வமாக  கூறப்பட்டுள்ளது.

தான் அறியாத வயதில்  இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, தசாப்தங்கள் கடந்த பின் சிறையில் இருந்து மீண்டு வந்த தந்தையை, தனது ஏழ்மை நிலை காரணமாக ஏற்க மறுக்கும் மகளை அவளது பரிதாப நிலை கருதி எம்மால் வெறுக்க முடியவில்லை.

 

இலங்கையின் யுத்தநிலைமையால் இடம்பெயர்ந்தோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிய முடியாத கொடிய நிலைமை இன்றுவரை தொடர்கிறது.யுத்தம் எமது மக்களுக்குத் தந்த கொடூரமான பாதிப்பை விளக்கும் கதை இது.இவ்வாறான நிலைமையில் சிறு ஆறுதல் தருவது 'உறவுகள் தொடர்கதை' என்னும் படைப்பு. பெற்றோருடன் தாயகம் வரும் சிறுமி காணாமல் போன பாட்டியை நினைவு மறந்த நிலையில் முதியோர் இல்லத்தில் காண்பது உணர்வு பூர்வமானது. 

 

மனிதர்கள் விலங்குகள் பால் கொண்டுள்ள பாசத்தைப் போலவே  விலங்குகளும் மனிதர்பால் அன்பு கொண்டுள்ளன. ஆனால் உடல்மொழியாலன்றி  வாய்மொழியால் புரிய வைக்க முடியாத நேசம் விலங்குகளுடையது.அவை தம்மை வெளிப்படுத்த முடியாத  குறை இல்லாத வண்ணம், விலங்குகளின் மனதையும் வார்த்தைகளால் மொழிபெயர்க்கிறார் கதாசிரியர். காட்சியகத்தில் பாதுகாப்பு வேலியைத் தாண்டி, தனது இருப்பிடத்தில் தவறி விழும் சிறுவனைக் காப்பாற்ற முயல்கிறது  'ஹரம்பி' என்ற சிம்பன்சி. அதன் பாசமான அரவணைப்பை உணராத மனிதரால் படுகொலை செய்யப்படுகிறது. தமது வியாபாரத்துக்காக ரிவிக் என்னும் திமிங்கிலத்தை சிறிய நீர்ப்பரப்பில் அடைத்து அதற்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தும் மனிதர்கள் நீர்நிலைக்குள் நடந்த மனித மரணங்களுக்கும் ரிவிக்கையே காரணமாக்குகின்றனர். 

 

'குட்டித் திமிங்கிலம்' என்னும் மற்றுமோர் கதையில் பலராலும் நேசிக்கப்பட்ட நீலத் திமிங்கிலம் இறக்கும் போது அதன் எலும்புக் கூட்டை  வியாபார  நோக்கத்திற்காகப் பெற முயலும் மானுடரின் மனிதநேயமற்ற செயல் கூறப்படுகிறது . அதனைப் பெற்றுக் கொள்வதற்காக தன் பெண்மையை ஆயுதமாக்கும் கடலோர உணவுவிடுதிச் சொந்தக்காரி மேர்லினின் சாகசம் வெறுப்பைத் தருகிறது. 'அட மானுடா நலமா' கதை வித்தியாசமான கற்பனை. இங்கும் ஆண்களைக் கவரும் பெண்மையின் சாகசம் பேசப்படுகிறது. விமானப் பயணத்தின் போது ஈர்ப்புக் கொண்ட ஒரு ஆணும் பெண்ணும்,  விபத்தில் சிக்கி விமானம் காட்டினுள் விழுந்தபோது அறிவு முன்னேற்றம் கொண்ட இனம் தெரியாத  விலங்குக் கூட்டத்தில்  சிக்கிக் கொள்கின்றனர். விலங்குகளைப் போல பட்டி அணிவித்து நடத்தப் படுகின்றனர். காதலும் செய்கின்றனர். இவர்களின் காதல் நடவடிக்கைகளைக் குறைக்க அவ்விலங்குக் கூட்டம் ஆணுக்கு 'நலமெடுத்திருப்பது ' பெண்ணுக்கு பின்பு தெரிய வருகிறது. விலங்குகளுக்கு நலமெடுக்கும் போது எந்தக் குற்ற உணர்வையும் கொள்ளாத மானுடரின் செயல் பற்றி இக்கதையை வாசிக்கும் போது மனவருத்தம் கொள்ளத் தோன்றுகிறது. 

 

அதீத சிக்கல்கள் இல்லாத எளிய மொழிநடை , கதையின் உச்ச நிலைமைகளை விலாவாரியாக சொல்லாமல் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் புலப்படுத்தும் லாவகம், சிலவற்றை வாசகரின் அனுமானத்துக்காக மறைபொருளாக்கல்,நவீன உலகியல் மாற்றங்களுக்கேற்ப கதைக்கருவினைத் தேர்ந்து எடுத்தல்,  தாயகத்துக்கும் புலம்பெயர் தேசத்துக்குமான உறவுப் பாலங்களாக களங்களைத்    தேர்ந்தெடுத்தல், பெண்களின் அக உலகினைப் புரிந்து கொள்ளல் என்பன எழுத்தாளரின் சிறப்பான பண்புகளாகக் குறிப்பிடப் படலாம்.

 

 அதே சமயம் சிவப்புப் பாவாடை ,சதிவிரதன் ,சிந்து மனவெளி,வித்தாரம் ,அட மானுடா நலமா,யார்குழந்தை முதலான கதைகளில் இருந்த சுவாரசியம் , வாசகரின் மனரீதியான உணர்வு  ஒன்றுதல் என்பவற்றை சில கதைகளில் காண முடியவில்லை என்பது எனது எண்ணம். படைப்புகள் எல்லாமே  உன்னதமாக அமைவதும் இயலாத காரியம் என்பதும் புரிகிறது. 

 

நூல் ஆய்வு என்பதோ விமர்சனம் என்பதோ குறைகளை அதிகபட்சமாக முன்னிறுத்தி உரைப்பது என்ற போக்கில் எனக்கு அதிக உடன்பாடு இருந்ததில்லை.  நிறைகளைப் பாராட்டல் எனும் நேர்நிலைச் சிந்தனை  அதிக மகிழ்ச்சியை இருசாராருக்கும் அளிக்கும்.  புனைகதை இலக்கியம் என்பது வாழ்க்கையின் நிஜங்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.  நியாயமான நல்ல படைப்பாளிக்கு தன் ஒவ்வொரு குழந்தையின் பிரசவமும் நாமகரணமும் சிறப்பு வரமாகவே அமையும். அதனை வாசகரும் விமர்சகரும் புரிந்து கொள்ள வேண்டும்.   குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகள் சிலவற்றையே நான் வாசித்திருந்தாலும் அவற்றின் களமும்  உருவும் கருவும் சிறப்பாகவே அமைந்து சமூகத்தை வளப்படுத்தும் பல நல்ல செய்திகளைத் தாங்கி நிற்பதை உணர்ந்திருக்கிறேன்.  எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்புப் படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள்.

 

 


Comments