Tolkappiam- 2nd Research Article by Kuru Aravinthan- Sept 2026

 




கனடாவில் நடந்த 2வது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் எழுத்தாளர் குரு அரவிந்தனால் 20-9-2026 அன்று நேரடியாக வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.

 

 

குறிப்பு எண்: தொ.மா.2143

பெயர்: திரு. குரு அரவிந்தன்

ஆய்வுப் பொருண்மை: மானிடவியலுக்காக

ஆய்வுத் தலைப்பு: ‘வெட்சித்திணையில் ஆநிரைகவர்தல்’ –

குரு அரவிந்தன் -

 

வெட்சித்திணையில் ஆநிரைகவர்தல்

- குரு அரவிந்தன் - குறிப்பு எண்: தொ.மா. 2143 - 2026

 

வரலாற்றுக்காக நாம் தெல்காப்பியத்தைக் கற்ற, கற்பிக்க, கொண்டாட, பரவலாக்க வேண்டும் என்ற தலையங்கத்தில் ‘வெட்சித்திணை’ என்ற தொல்காப்பியர்காலச் சில செயற்பாடுகள் இப்பொழுது நவீன உலகில் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது என்பது பற்றிய மானிடவியலை விளக்குவதற்காக இக்கட்டுரையை வரைகின்றேன். தொல்காப்பியர் தனது நூலில் பொருளதிகாரத்தில் மானிடவியல் சார்ந்த ‘வெட்சித்திணை’ என்ற ஒரு பகுதியை உள்ளடக்கி இருக்கின்றார். தொல்காப்பிய நூலிலிருந்து அந்நூல் எழுதப்பட்ட காலத்திலும் அதற்கு முன்பும் சமூக வாழ்க்கை எங்ஙனம் இருந்தது என்பதைச் சில குறிப்புகளால் அறிந்துகொள்ளலாம். தொல்காப்பியர் காலத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி விரிவாக ஆராயுமுன், முதலில் மானிடவியல் என்றால் என்னவென்று சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

மானிடவியல் என்பது மனித குலத்தைப் பற்றி பலவற்றையும் உள்ளடக்கி ஆராயும் ஒரு துறையாகும். மனிதனை உயிரியல் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இது ஆராய்கிறது. மனிதனின் வாழும் இடம், நிலை, சூழல், வாழ்க்கை முறை, பண்பாடு, சடங்குகள், இனம், மொழி, சமயம் போன்றவற்றினால் வேறுபட்டிருக்கும் மனிதர்களிடையே காணப்படும் வேறுபாடுகளை, இன்று மட்டுமல்ல பழங்காலத்தில் பல்வேறுபகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் எப்படி மனிதன் வாழ்ந்தான் என்பதையும் மானிடவில் முக்கியமாக எடுத்துக் காட்டுகின்றது. தற்காலத்தில் இதை முறையே மனித உயிரியல் அல்லது பௌதிகமானிடவியல் என்றும் சமூகம் அல்லது பண்பாட்டு மானிடவியல் என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். அகராதிகளிலும், ஆய்வுக் கட்டுரைகளில் இருந்தும் இதற்கான மேலதிக விளக்கத்தைத் அறிந்து கொள்ள முடியும்.

இக்கட்டுரை தொல்காப்பியரை முதன்மைப் படுத்துவதால், தொல்காப்பியரின் ‘வெட்சித்திணையில்’ குறிப்பிடப்பட்ட ‘ஆநிரைகவர்தலில்’ மானிடரின் பங்கு எவ்வாறு இருந்தது என்பதையும் அதே மானிடவியலின் அணுகு முறையில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பார்ப்போம். தொல்காப்பியத்தைவிட புறப்பொருள் வெண்பா மாலையிலும், சங்க இலக்கியங்களிலும் வெட்சித்திணை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இரண்டு குழுக்களிடையே சண்டை ஏற்படும் போது ஆநிரை கவர்தல், மண் கவர்தல், கோட்டையைக் கவர்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதில் ‘ஆநிரை கவர்தல்’ என்பது இரண்டு குழுக்களிடையே பொதுவாக நிகழும் ஒரு செயலாக இருந்திருக்கிறது. காஞ்சித்திணையில் இதைப்பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் வெட்சியிலும் வஞ்சியிலும் உழிஞையிலும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இங்கே அவர் குறிப்பிட்ட ‘ஆநிரை கவர்தல்’ என்ற விடயம் பற்றியும், பண்டையமுறை இப்பொழுதும் வேறு வடிவங்களில் தொடர்ந்து வருவது பற்றியும் அடுத்த தலைமுறையினர் ஏன் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் மட்டுமே இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.



மானிடவியல் என்பது எல்லாக் காலத்திலும், எல்லா மனித இனத்தின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வதால், அந்த வகையில் காலம், இடம், பொருள் மாறினாலும் மனித இயல்பை எடுத்துப் பார்க்கும் போது, அனேகமாக மனிதர்களின் செயற்பாடுகளின் தன்மை ஒரே மாதிரியானதாகவேதான் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பொதுவாக இரு குழுக்களிடையே முரண்பாடுகள் ஏற்படும் போது, அதைத் தீர்த்து வைப்பதற்கு தற்காலிகமாக ஏதாவது கருதுகோள் (ர்லிழவாநளளை) அவர்களுக்குத் தேவைப்படும். தொல்காப்பியர் குறிப்பிடும் காலத்தில் இது போன்ற குழுக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளுக்கு ‘ஆநிரை கவர்தல்’ மூலமும் தமது பிரசனைகளுக்குத் தீர்வுகாண முற்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. வேளாண்மையும் கால்நடைவளர்ப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருந்ததால், முல்லை, குறிஞ்சி நிலங்களே இதற்குப் பெரும்பாலும் பொருத்தமாக இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. ஆனால் தொல்காப்பியர் எந்த வகை நிலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தன என்பதை விசேடமாகக் குறிப்பிடவில்லை.

மக்களின் வாழ்வியலை அனேகமான சங்க இலக்கியத் தமிழ் ஏடுகள் அகம், புறம் என இரண்டு நிலைகளில் பகுத்திருப்பதை அவதானிக்க முடியும். அகம் என்பது ஆண், பெண் மற்றும் அவர்களின் தனிப்பட்ட குடும்ப உறவு போன்ற வாழ்க்கை முறை பற்றிக் குறிப்பிடுகின்றது. புறம் என்பது ஏனையவர்களுக்கும் தெரிந்த வெளிப்படையான வாழ்க்கை. இதை தொல்காப்பியர் அகத்திணை, புறத்திணை என வகுத்துள்ளார். மேலும் மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிய புறத்திணையை ஏழு வகையாகத் தொல்காப்பியர் பிரித்திருக்கின்றார். இது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழு திணைகளாகப் பகுக்கப் பட்டுள்ளது. இலக்கியத்தில் திணை என்பதை ஒழுக்கம், பிரிவு என்று பொருள் கொள்ளலாம்.

இது சார்ந்து மூதாதையரின் அக்கால அறநெறி பற்றி இங்கே புறத்திணை இயலில் வெட்சித்திணையிலும் அதன் துறைகளிலும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகின்றார். அக்காலதில் ஆநிரைகள் ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார வளமாக இருந்திருக்கின்றன. எனவே ஒரு குழுவின் அல்லது ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார வளத்தை உடைப்பதையே இந்த ‘ஆநிரைகவர்தல்’ நோக்கமாகக் கொண்டிருந்தது. ஒரு நாட்டு அரசனின் ஆணைப்படி அவனது வீரர்கள் பகை நாட்டிற்குச் சென்று அங்குள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்து அவற்றைக் கவனமாகக் காத்தலையே ஆநிரைகவர்தல் என்பர். காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியில் ஆநிரைகளின் பங்கு குறைவடைந்தபோது, அதே முறையைப் பின்பற்றிக் கோட்டைகளைக் கைப்பற்றுவதிலும், அதன்பின் மண்ணைக் கைப்பற்றுவதிலும் இவர்களின் கவனம் திரும்பியிருந்தது. எனவே ஆநிரைகவரும் தொல்காப்பியர் காலத்துப் பண்டைய வழக்கம் காலப்போக்கில் மெல்லமெல்ல மாற்றமடைந்து மாற்றானின் வேறு பொருட்களைக் கவரும் முறைக்கு வழிவகுத்திருந்தது.  




இப்படியான நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களை யாரென்றும், எதற்காகச் செய்கிறோம் என்றும் அடையாளப்படுத்தியே செய்தார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் குழவினர் ஆநிரைகவரச் செல்வதை ‘வெட்சிப்போர்’ என்று அழைத்தனர். இது ஒரு குறியீட்டுச் சொல்லாக இருக்கிறது. அக்காலத்தில் ஆநிரை கவரச் செல்பவர்கள் வெட்சிப்பூவைத் தலையில் அணிந்து சென்றதால் இதை ‘வெட்சிப்போர்’ என்று அழைத்தார்கள். இதேபோல கரந்தையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆநிரைகவரும் முயற்சியைத் தடுப்பவர்கள் கரந்தை மலர்களைச் சூடுவர் என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். ஆகவே இந்த மலர்களை அணிந்து செல்பவர்கள் என்ன நோக்கத்தோடு செல்கிறார்கள் என்பதை ஊர்மக்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

இக்காலத்தில் நாடுகளும், குழுக்களும் தமக்கெனச் சின்னங்களையும், கொடிகளையும் வைத்துத் தம்மை அடையாளப்படுத்துவது போல, அக்காலத்தில் பூக்களைச் சூடி அவர்கள் தம்மை அடையாளப் படுத்தினர். தொல்காப்பியர் அதைப் பற்றியும் தனது நூலில் குறிப்பிடுகின்றார். வேந்தர்கள் எப்படியான பூக்களைச் சூடினர் என்பதைத் தொல்காப்பியத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பியர் புறத்திணையில் வெட்சித்திணையின் துறைகளைக் கூறும்போது, மூவேந்தரின் ‘குடிப்பூ’ பற்றிக் குறிப்பிடுகிறார். இயற்கையாய் மலர்ந்த மலர்கள் அக்காலத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன. ‘போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மா பெருந் தானையர் மலைந்த பூ’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். அக்காலத்தில் சேர, சோழ, பாண்டியரை மூவேந்தர் எனக் குறிப்பிடுவர். இவர்கள் தம் குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் ‘குடிப் பூ’ என்றும் சொல்வார்கள். சேரர் பனம்பூவையும், சோழர் ஆத்திப்பூவையும், பாண்டியர் வேப்பம் பூவையும் அணிந்ததாக இலக்கியம் குறிப்பிடுகின்றது. இதைப்போலவே குடிமக்களும் சில செய்கைகளின் போது மலர்கள் சூடியிருந்தனர். படைவீரர்கள் பசுக்கூட்டங்களைக் கவரச் செல்லும் போது, வெட்சிப்பூக்களையும், அதைத் தடுப்தற்குச் செல்லும் போது கரந்தைப் பூக்களையும் அணிந்து சென்றனர்.

 

மானிடவியல் சார்ந்து முக்கியமாக தொல்காப்பியர் காலத்தில் நடந்த ‘வெட்சிப்போர்’ பற்றியும் அதைத் தடுப்பதற்காக நடந்த கரந்தைப்போர் பற்றியும் இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகின்றேன். இவை தொல்காப்பியரால் வெட்சியிலும் உழிஞையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தொடக்க காலத்தில் இத்தகைய போர் இரு குழுக்களிடையேதான் நடைபெற்றன. பின்னாளில் நாடு, அரசன் என்று வந்தபோதும் இம்முறையே தொடர்ந்தது. பகைவர் நாட்டின்மேல் போர் தொடுக்க எண்ணும் அரசன் போர் தொடங்கும் முன், அறவோர், பிணியாளர், பெண்டிர் முதலியவர்களைப் போர் நடக்கப் போகும் இடத்திலிருந்து வெளியேற்றுவது வழக்கமாக இருந்தது. மன்னனின் ஆணைப்படி இதைச் செய்ததால், ‘மன்னுறு தொழில்’ என அழைத்தனர். மக்களை அப்படி வெளியேற்றும் போது, கால்நடைகள் தாமாகவே வெளியேற முடியாத காரணத்தால், அரசன் அவற்றைத் தன்படை வீரர்களைக் கொண்டு கைப்பற்றித் தனது நாட்டிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வருவான். போர் தொடங்குமுன், எதிரி நாட்டிற்கு மறைமுகமாக விடுக்கப்படும் எச்சரிக்கையின் செயற்பாடே ‘வெட்சிப் போர்’ ஆகும். தொல்காப்பியர் வெட்சித்திணைக்கு 14 துறைகளைக் குறிப்பிட்டுள்ளார். வெட்சித் திணையிலேயே கரந்தை என்ற பகுதியையும் தொல்காப்பியர் அடக்கியுள்ளார். வெட்சித்திணை ஆநிரைகளை கவர்வது என்றால் கரந்தை அதற்கு மாறாகக் கவர்ந்தவற்றை மீட்பது ஆகும். எனவே அரசர் ஆண்ட காலத்திலும் வெட்சிப்போர் கரந்தைப் போர் போன்றவை முக்கிய இடம் பெற்றிருந்தன.

வெட்சித்திணையின் துறைகள் பதினான்கு என்று  தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அவையாவன, ஆநிரைகளை கவரச் செல்லும் படையினரின் பேரரவம், படைகள் தமது ஊரைக் கடக்கையில் ஊரிடத்து நிகழும் நற்சொல்லைக் கேட்டல், அக்கம் பக்கம் உள்ளோர் அறியாதவாறு செல்லுதல், பகை ஒற்றர்களின் கருத்து கெடுமாறு தாம் பகைவரை ஒற்றறிதல், ஒற்றறிந்த பின் பகைவேந்தனை சூழ்ந்து தாக்குதல், போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல், ஊரின் பசுக்கூட்டத்தைக் கவர்தல், பின்பற்றி வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல், கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல், தம் சுற்றத்தார் இருக்கும் இடத்துக்கு வந்து சேருதல், கவர்ந்து வந்த ஆநிரைகளைத் தம் ஊரில் கொண்டுவந்து சேர்த்தல், வீரர்கள் அப்பசுக்களைத் தமக்குள்ளே பகிர்ந்து கொள்ளுதல், அதன்பின் வெற்றிக் களிப்பில் மதுவுண்டு ஆடுதல், தாம்பெற்ற பசுக்களைப் பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல் போன்ற துறைகளைத் தொல்காப்பியர் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

ஏன் ஆநிரை கவர்தல் அக்காலத்தில் முக்கிய இடம் பெற்றது என்பது பற்றிப் பார்ப்போம். தொல்காப்பியர் காலத்தில் மக்கள் சிறு குழுக்களாக ஆங்காங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை நெய்தல், மருதம், முல்லை, குறுஞ்சி என்று நால்வகை நிலங்களாகப் பிரித்திருந்தனர். தொல்காப்பியர் இந்த நால்வகை நிலங்களையே முதன்மைப் படுத்தியிருக்கின்றார். ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. புவியியல் மாற்றங்கள் காரணமாக பின்நாளில் பாலை நிலம் தோன்றியதால் அதையும் சேர்த்து தமிழர் வாழ்ந்த நிலங்கள் ஐவகை நிலங்கள் என்றனர். இன்று பெருந்தொகையான தமிழர்கள் வடதுருவ நாடுகள் நோக்கிப் புலம் பெயர்ந்ததால், அவர்கள் வாழும் நிலத்திற்கு, அங்கு வாழும் புதிய தலைமுறையினருக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அவர்கள் வாழுமிடம் பனி சூழ்ந்த பகுதியாக இருப்பதால் அதைப் ‘பனிப்புலம்’ என அழைக்கின்றனர். தமிழர்கள் மீண்டும் அடையாளம் அற்று ஆநாதைகளாக வாழ விரும்பாததால், தாங்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகளையே தங்கள் நாடாக ஏற்றுக் கொண்டனர். வடதுருவத்தைத் சேர்ந்த பகுதிகள் என்பதால் இங்கு பெரும்பாலும் பனி சூழ்ந்திருக்கின்றது. இதுவே தமிழர் வாழும் நிலங்களில் ‘ஆறாம் நிலத்திணை’ என்று பெயர் பெற்றது. மக்களின் தேவை அறிந்து, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைத் தமிழ்; இலக்கியம் ஏற்றுக் கொண்டது. இதனால்தான் தமிழ் இலக்கியம் காலத்தோடு இணைந்து தொடர்ந்தும் நிலைத்து நிற்கின்றது.

தொல்காப்பியர் காலத்தில் வேளாண்மையும் அது சார்ந்த மந்தை வளர்ப்பும் முக்கிய இடம் பெற்றிருந்தன. இரு குழுக்களிடையே முரண்பாடுகள் ஏற்படும் போது, ஆநிரைகவர்வதன் மூலம் தங்கள் வீரத்தைக் காட்ட முற்பட்டனர். எனவேதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஆநிரைகள் முக்கிய இடம் பெற்றிருந்ததால் அதையே அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்திலும் தொடர்ந்தார்கள்.

‘வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்

ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்.’ (தொ.பொ.60)

வேந்தனால் விடப்பட்ட முனைஊரகத்துள்ளார் வேற்று      நாட்டின்கண் களவினானே ஆவைக்கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை உடைத்து என்று பொருள்படும்.

வேளாண்மையும், அதனுடன் கூடிய கால்நடைவளர்ப்பும் கொண்ட மக்களுக்குப் போதுமான உணவைக் கையிருப்பாக இருந்ததால் அவர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆனால் குறிஞ்சி, பாலை நிலங்களில் வாழ்ந்தவர்களுக்கு உணவு தட்டுபாடு இருந்ததால், அவர்களில் சிலரின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. எனவேதான் குறிஞ்சி, பாலை நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கும் முல்லை நிலத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளே வெட்சிப்போர், கரந்தைப்போர் என அடையாளம் காணப்பட்டது. காலப்போக்கில் மக்களின் வாழ்விடங்கள் வேந்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், வேந்தர்களின் தலையீடும் பெருகியது. இதனால் செயற்பாடுகள் மாற்றமடையத் தொடங்கின. இதுவரைகாலமும் உணவுக்காக ஆநிரை கவர்ந்து அதை ஏனைய மக்களுடன் பங்கிட்டு வாழ்ந்த வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆநிரை கவர்தல் என்பது மாற்றுக் குழுக்களை வலிந்து போருக்கு அழைக்கும் உத்தியாகவும், மாற்றுக்குடிககளின் பொருளாதாரத்தைச் சிதைத்து அவர்களை அடிமைப்படுத்தும் முறையாகவும் மாற்றம் அடைந்தது.

வெட்சிப்போரில் ஈடுபட்ட வீரர்களை மறவர்கள் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவர்கள் எந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. அதிலிருந்து குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலும் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. சங்ககாலத்தில் இனக்குழுக்கள் வேட்டையாடியும், வேளாண்மை மூலமும் தமது உணவுத் தேவைகளைப் பூர்;த்தி செய்திருக்கின்றனர்.  இக் குழுக்கள் எயினர், மழவர், மறவர், வாள்குடி மறவர் என்றெல்லொம் இனங்காணப்பட்டனர். ஆநிரை கவர்தலில் மழவர்கள் தான் அனேகமாக ஈடுபட்டிருந்ததாக சங்க இலக்கியப் பாடல்கள் சில குறிப்பிடுகின்றன. 

தொல்காப்பியர் காலத்தில் நடந்த வெட்சிப்போர், கரந்தைப்போர் போன்ற நிகழ்வுகள் இப்போது நவீனயுகத்திலும் காலமாற்றத்திற்கு ஏற்ப நடைபெறுவதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். காலப்போக்கில் ஆநிரைகளின் பங்கு குறைந்து தொழில் நுட்பத்தின் பங்கு மேலோங்கியதால், தொழில் நுட்பத்துறை சார்ந்த செயற்பாடுகள் ஆநிரைகளுக்குப் பதிலாக இடம் பெறத் தொடங்கின. இன்று, நாடுகள் தங்கள் எதிரிகள் மீது பொருளாதாரப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா ஈரான் மீதும் வேறு சில நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதனால் அந்நாடுகள் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியாமல் இருக்கின்றது. சீனா, மின்கலங்கள் மற்றும் சூரிய மின்தகடுகள் தயாரிக்கப் பயன்படும் கனிமங்கள் ஜப்பானுக்குக் கிடைப்பதைத் துண்டித்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் ஆநிரைகவர்ந்து ஒரு நாட்டைப் பொருளாதார ரீதியாகப்; பலவீனப்படுத்தியது போல, இன்று நவீன உலகில் இது போன்ற நிகழ்ச்சிகள் அமைந்திருக்கின்றன. இவை பொருளாதார ரீதியாக ஒரு நாட்டைப் பலவீனப்படுத்துவதாக அமைந்து இருக்கின்றது.

 

தொல்காப்பியர் காலத்தில் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணச் சிலர் ஆநிரை கவர்ந்த நிகழ்வு போல, இலங்கையில் இனக்கலவரங்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோது, இந்தியா தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இலங்கையின் அனுமதி இல்லாமல் இந்தியாவின் ஐந்து  ஏஎன் - 32 விமானங்களை இலங்கையின் எல்லையைத் தாண்டி வந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் உணவுப் பொதிகளைப் போட்டுச் செல்லவைத்த சம்பவம் மூலம் தங்கள் பலத்தை இலங்கை அரசுக்குக் காட்ட முற்பட்டது. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக 1987 ஆம் ஆண்டு நடந்த இந்தப் பணிக்கு ‘பூமாலை நடவடிக்கை’ (ழுpநசயவழைn Pழழஅயடயi) எனப் பெயரிடப்பட்டது. இந்திய இராணுவப் பலத்தோடு எதிர்த்துப் போராட முடியாததால் இலங்கைநாடு அப்போது மௌனம் சாதித்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அரசோடு இலங்கை அரசு முரண்பட்டதால், இந்திய விமானங்கள் எல்லை கடந்து வரவேண்டியிருந்தது. தொல்காப்பியர் காலத்தில் வெட்சிப்போரின்போது, ஆநிரை கவரவருபவர்கள் வெட்சிப்பூவைத் தலையிலே அணிந்து தங்களை யார் என்று இனம் காட்டியதுபோல, நவீன உலகில் விமானங்கள் தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்தபடி வந்து தங்களை இனம் காட்டின. எனவே தொல்காப்பியர் காலத்தில் ஆநிரைகவர்தல் எப்படி இடம் பெற்றதோ அதே போன்ற முறையை நவீன உலகிற்கேற்ப நவீன வசதிகளைக் கொண்டு இப்பொழுதும் கடைப்பிடிப்பது கண்கூடு. இச்சம்பவத்தில் ‘கருதுகோள்’ ஒன்றாகவே இருப்பதை அவதானிக்க முடியும். இது போன்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

இன்னுமொரு சம்பவத்தில் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் உரிமைக்காக அகிம்சை முறையில் போராடிய போது, அது பலன்தராததால், இராணுவத்தின் பலத்தை உடைப்பதற்கு ஆநிரை கவர்தல் போலவே, தற்பாதுகாப்பு நடவடிக்கையாக இராணுவத்தின் ஆயுதங்களைக் கவர்ந்து பலம் சேர்க்க முற்பட்டனர். அப்படியான சந்தர்ப்பங்களில் இந்தப் போராளிகள் வெட்சிப்பூவுக்குப் பதிலாக ஒருவகை நச்சுக் குப்பியைக் கழுத்திலே அணிந்து வெட்சிப்போர் புரிந்தனர். ஏதிரியின் கையில் உயிருடன் அகப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகக் கூடாது என்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. தங்களை யாரென்று இதன் மூலம் அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். 1980களில் நடந்த தொடக்ககால போராட்டங்களின் போது போராளிகளிடம் இருந்த ஆயுதங்களில் எண்பது வீதமான ஆயுதங்கள் இப்படி எதிரியிடம் இருந்து கவர்ந்து சென்ற ஆயுதங்களாகவே இருந்தன.

உக்கிரேன் நாட்டுக்கு ஆதரவாக ‘ரஸ்யாவில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு கப்பலும் கனடாவில் கப்பல்துறைக்குள் நுழைவதையோ அல்லது கனேடிய நீர்நிலைகள் வழியாகச் செல்வதையோ விதிமுறைகள் தடைசெய்கின்றன’ என்ற சட்டத்தின் பிரகாரம் கனடா, 2022 ஆம் ஆண்டு தொடக்கம் ரஸ்யாவின் விமானத்தை ரொறன்ரோ விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்கின்றது. இங்கும் ஆநிரைக்குப் பதிலாக விமானத்தைக் கவர்ந்து வைத்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நிகழ்ச்சியின் போது ரஸ்யா கனடாவைத் தாக்கித் தங்கள் விமானத்தைக் கைப்பற்ற முயன்றிருந்தால் அது கரந்தைப் போராக மாறியிருக்கும்.

சமீபத்தில் நடந்த இன்னுமொரு சம்பவம், ஈரான் நாட்டை மிரட்டும் நோக்கத்தோடு அமெரிக்கா தனது கடற்படையை அதன் எல்லைக்கு அனுப்பி வைத்து ஈரானின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் குறிப்பிடலாம். அதனால் அத்துமீறி உள்ளே சென்றால் எப்பொழுதும் போர் தொடங்கலாம் என்று உலகநாடுகள் பயந்து போயிருந்தன. ஈரான் இராணுவம் ‘வெட்சிப்போர்’ புரிந்து 2026 ஆம் ஆண்டு அமெரிக்க விமானத்தைச் சுட்டு வீழ்த்தி அதன் விமானியைக் கைப்பற்றியிருந்தனர். அமெரிக்கா பதிலடியாகத் தனது படைகளை அனுப்பி விமானியை உயிருடன் மீட்டிருந்தது. எனவே இது ‘கரந்தைப்போராக’ மாறியிருந்தது. இங்கே தொல்காப்பியர் குறிப்பிட்ட வெட்சிப் போரும், கரந்தைப் போரும் காலம் மாறினாலும் நவீன காலத்திற்கு ஏற்ப நடந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிகழ்ச்சியின் போது, இரண்டு நாடுகளும் வெட்சிப்பூ, கரந்தைப் பூக்களுக்குப் பதிலாகத் தமது நாட்டுக் கொடிகளையும், சின்னங்களையும் பயன்படுத்தி இருந்தன.

இன்று நவீன உலகில் தொழில் நுட்ப வசதியால் செயற்கை நுண்ணறிவு காரணமாக மனிதன் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பத் தொடங்கி விட்டான். நாடுகளைக் கைப்பற்றுவதைக் கடந்து மாற்றுக் கிரகங்களைக் கைப்பற்றுவதில் மனிதனின் கவனம் திரும்பி இருக்கின்றது. ஆநிரைகளைக் கைப்பற்றுவதில் தொடங்கிய சிந்தனை காலத்தின் மாற்றங்கள் காரணமாக வளர்ச்சி அடைந்து விண்ணைத் தாண்டும் நிலைக்குத் திரும்பி இருப்பதை அவதானிக்கலாம். மனிதனின் செயற்பாட்டு முறைகளில் மாற்றங்கள் இருக்கிறதே தவிர சிந்தனை ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது.

வெற்றி பெற்றவரை போற்றும் நிலையைக் கொற்றவை நிலை என்பர். இது 21 துறைகளைக் கொண்டதாக இருக்கின்றது. இதில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன். ஆ பெயர்த்துத் தருதல், ஆனிரை மீட்டல், வேந்தனைப் புகழ்தல், நெடுமொழி, தன் பெருமையை எடுத்துரைத்தல், காலாட்படையை எதிர்த்து நிற்றல். வாளால் வெட்டப்பட்டுச் சாய்தல், பிள்ளைநிலை, புண்ணொடு வருதல், பிள்ளையாட்டு வாட்போரில் வென்று வந்தவனுக்கு அரசன் நாடு தந்து போற்றல். காட்சி, நடுகல்லுக்குக் கல்லைக் காணுதல், கால்கோள், கல்லைத் தோண்டி எடுத்துக் கொண்டுவருதல், நீர்ப்படை, கல்லை நீராட்டுதல், நடுகல், கல்லைத் தெய்வமாக்கி நடுதல், பெரும்படை, நடுகல்லுக்குக் கோயில் கட்டுதல் போன்றவை இதில் அடங்கும்.

இன்னுமொரு விடயமும் இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். அதாவது தொல்காப்பியர் காலத்தில் வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும் மரணமான முக்கியமானவர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டதையும் குறிப்பிடலாம். இதை ‘வீரக்கல்’ என்றும் குறிப்பிடுவர்.

‘கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று

இருமூன்று மரபிற் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே’ (தொ.பொ.புறம் - நூற்பா-5);

நடுகற்களுக்காகக் குறித்த சில கற்களையே தெரிவு செய்து அதில் பெயரையும், உருவத்தையும் பொறித்தனர். அப்படிச் சிறந்த கற்களை அந்த நாட்களில் தெரிவு செய்த படியால்தான் அவை இன்றும் அழிந்து போகாமல், தமிழரின் பண்பாட்டின் வெளிப்பாடாய், அறக்கோட்பாடுகளுக்குச் சான்றாக எங்கள் கடந்தகால வரலாற்றை எமக்கு எடுத்துக் காட்டி நிலைத்து நிற்கின்றன.

தமிழ்நாட்டில் இப்படியான பல நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக தருமபுரி, செங்கம், தேன்கனிக்கோட்டம், கிருஸ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் போன்ற இடங்கiளைக் குறிப்பிடலாம். நடுகற்கள் வைக்கும் இந்த நடைமுறை இப்பொழுதும் தமிழர் வாழும் இடங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றது. தான் சார்ந்த சமூகத்திற்குத் தன்னைத் தியாகம் செய்து வீரமரணம் எய்தியவர்களுக்கு நடுகல் அமைத்து ‘எம்முயிர் காக்கத் தம்முயிர் தந்தவர்கள்’ என்று அவர்களை மாவீரர்களாகத் தமிழர்கள் வழிபடுகின்றார்கள்.

ஆகவே இங்கே தொல்காப்பியர் காலத்து வெட்சி, கரந்தை முறைகள் எப்படி மானிடவியல் சார்ந்து நவீன முறையில் தொடருகின்றன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்து நடைமுறைகளைத்தான் இவர்களும் நவீன காலத்திற்கு ஏற்ப, பின்பற்றுகின்றார்கள், கருதுகோள் ஒன்றாக இருந்தாலும், கால்நடைகளுக்குப் பதிலாக விமானங்களையும், கப்பல்களையும், நீர்மூழ்கிகளையும் இப்போது பயன்படுத்து கின்றார்கள். அன்று தொட்டு சில விடயங்களில் மனித மனங்களின் சிந்தனைகள் அப்படியேதான் இருக்கின்றன. தொல்காப்பியர் காலத்துப் பண்டைய முறை தொடர்ந்தும் வேறு வழிகளில், வேறு வடிவங்களில் கடைப்பிடிக்கப் படுவதை மானிடவியலை ஆராயும்போது அவதானிக்க முடிகின்றது. காலம் மாறினாலும், இத்தனை வருடங்களின் பின்பும், தொல்காப்பியம் காலத்தோடு எப்படி ஒத்துப்போகிறது என்பதை விளக்குவதாக எனது கட்டுரை அமைந்திருக்கிறது.

2000 வருடங்களுக்கு முன்பே இது போன்ற நிகழ்வுகளை ஏடுகளில் எழுதிவைத்த தொல்காப்பியரை நாம் போற்ற வேண்டும். தொன்மை வாய்ந்த எங்கள் தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தபோது, அதற்கு முக்கிய காரணமாக அமைந்த தொல்காப்பியரின் பங்கு அளப்பரியது. எங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கண உருவாக்கத்திற்குத் தொல்காப்பியரின் தொல்காப்பியமே அடிப்படை நூலாக இருப்பது எமக்குப் பெருமை அளிப்பதாக இருக்கின்றது. தொல்காப்பியம் குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவானது என்பதை அனைவருக்கும் உணரவைக்க, இலகுவான நடையில் தொல்காப்பியத்தை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சொல்லி, அவர்களும் தொல்காப்பியத்தைத் தொடர வழிவகுப்போம். தொல்காப்பியம் தொடர்ந்தும் நிலைத்திருக்க இதுபோன்ற சர்வதேச மாநாடுகளை வரவேற்போம். வாழ்க, வளர்க, தமிழ்மொழி.

உசாத்துணை :

தொல்காப்பியம், பொருள் - கு.சுந்தரமூர்த்தி.

https://tholkappiyam.org/porulathikaram.php

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88

நடுகல் - தமிழ் விக்கிபீடியா

ஆறாம் நிலத்திணை – குரு அரவிந்தன்.

தென்னிந்திய நடுகற்கள்.  – வெ. கேசவராஜ்

 

 

 

 

 


Comments